பின்மனப்பதிவுவாதம் (Post Impressionism)
ஓவியக்கலை வரலாற்றின் ஒரு தொழினுட்பப்பதமாகிய, “பின்மனப்பதிவுவாதம்” என்பது, பிரித்தானியாவைச் சேர்ந்த கலை வரலாற்றாசிரியரான ரோஜர் பிரை (Roger Fry) என்பாரினால் புனையப் பட்டதாகும். ரோஜர் பிரை, 1910 இல் பிரித்தானியாவில் கிரன்டன் கலைக்கூடத்தில் (Gallery) ”மொனே மற்றும் பின்மனப்பதிவுவாதக் கலைஞர்கள்” எனும் பெயரில் நடத்திய கண்காட்சியொன்றின் பின்னர், இப்பதப்பிரயோகம் கலை வரலாற்றுடன் சேர்ந்துகொண்டது. அக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களுள் வின்சன்ட் வங்கோ, போல் செசான், பொல் கொகேன் ஆகியோரின் படைப்பாக்கங்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. பிற்காலத்தில் இக்கலைஞர்கள் பின்மனப்பதிவுவாதக் கலைஞர்கள் என அழைக்கப்பட்டனர். இக்கலைஞர்கள் பிரதானமாக பிரான்சு நாட்டை முதன்மையாகக் கொண்டே செயற் பட்டனர். பின்மனப்பதிவுவாதம் என்பது ஒரு புறத்தே மனப்பதிவுவாத்தின் நீட்சியாவதோடு. மறுபுறத்தே அது மனப்பதிவுவாதத்தின் குறிக்கோள்களிலிருந்து வேறுபட்டமைந்தது. இக்கலைஞர்கள் 1880-1905 காலப்பகுதியிலேயே செயற்பட்டனர்.
செயற்பட்ட கலைஞர்கள் வின்சன்ட் வன்கோ, போல் செசான். போல் கொகான். ஜோர்ஜ் சரா ஆகியோரே. பின்மனப்பதிவுவாதத்தின் செயற்பாட்டு ஓவியக்கலைஞர்களாவர். ஓவியங்கள் வரைவது தொடர்பாக இவர்களிடையே பொதுக்குறிக் கோளெதுவும் இருக்கவில்லை. அந்தந்தக் கலைஞருக்கே உரித்தான எதிர்பார்ப்புக்களுக்கமைய அந்தந்தக் கலைஞனின் கலை வெளிப்பாடும் கலைத்துவ உத்திகளும் வேறுபட்டுக் காணப்பட்டன.
பின்மனப்பதிவுவாதக் கலைஞர்களது படைப்புக்களின் அடிப்படையான தன்மைக்கள்/ பிரயோகங்கள் கலை வரலாற்றின்படி பின்மனப்பதிவுவாதக் கலைஞர்களின் முன்னோடிகளாக அமைவோர் மனப்பதிவுவாதக் கலைஞர்களாவர். ஏனெனில் பின்மனப்பதிவுவாதக் கலைஞர்களின் அடிப்படையான கவனம் வர்ணங்களின் செறிவை முனைப்பை உறுதிப்படுத்திக்காட்டும் வகையில் ஓவியம் வரைதலிலேயே செலுத்தப்பட்டது. அதற்கமைய பின்மனப்பதிவுவாதக் கலைஞர்களாகிய செசான், கொகான், வங்கோ ஆகியோர் அவர்களுக்கே உரிய வகையில் வண்ணச் செறிவைப் பயன்படுத்தினர். செசான், வர்ணங்களைப் பயன்படுத்தி மரபு ரீதியான ஓவிய வெளியை மாற்றியமைத்தார். வின்சன்ட் வன்கோ, வர்ணங்களின் செறிவைப் பயன்படுத்தி, வடிவங்களையும் வர்ணங்களின் பொதுவான தோற்றத்தையும் திரிபுபடுத்தினர். அதாவது உள் மனத்தின் தன்மைகளை மனப்பதிவாக (Expressionist) முன்வைத்தார். போல் செசான் வர்ணங்களின் செறிவைக் குறியீட்டு ரீதியில் பயன்படுத்தினார். அதாவது கற்பனையான வெளிப்பாடுகளை முன்வைப்பதற்காகவே செசான், வர்ணங்களையும் வடிவங்களையும் தமது ஓவியங்களில் பயன்படுத்தினார். இம்மூன்று கலைஞர்களும் வர்ணங்களின் செறிவை மூன்று விதமாக நோக்கிச் செயற்பட்டமையானது இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் ஐரோப்பாவில் உருவாகிய நவீனத்துவக் கலையின் பின்புலத்தில் பாரிய பங்களிப்பைச் செய்தது.