சோவேக் குகை ஓவியங்கள் (Chauvet Cave Paintings)
இக்குகை பிரான்சு நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் ஓவியங்கள் கி.மு. 32,000 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. (மேல் கற்காலம் அதாவது மேல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்) குகையில் நுழைவாயில் சிறியதாயினும், உட்புறத்தே பாரிய மண்டமொன்று அமைந்துள்ளது. சுண்ணக்கல்லினாலானதாகையால் உட்புறம் அழகிய துருத்தல்களைக் கொண்டமைந்துள்ளது. இக்குகையின் உட்புறச் சுவர்களிலும் உட்கூரையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
கருப் பொருள்
சோவேக் குகை ஓவியங்கனின் விடயப் பொருள்களாக பிராணி உருவங்கள், இனங்கானப்படாத குறியீடுகள், அடையாளங்கள் ஆகியன காணப்படுகின்றன. இங்கு மானிட உருவங்கள் கிடையாது. கற்காலப்பகுதியைச் சேர்ந்த ஏனைய குகைகளில் தாவரவுண்ணிப் பிராணிகளின் உருவங்கள் மாத்திரமே காணப்படுகன்றனவாயினும் இக்குகையில் குதிரை. ரைனோசிரஸ், பைசன் எருது, மான், யானை போன்ற தாவரவுண்ணிப் பிராணிகளின் உருவங்களோடு ஊனுண்ணிப் பிராணிகளான சிங்கம், கரடி, ஹைனா (Hyna) போன்றவற்றின் உருவங்களும் காணப்படுகின்றன. இக்குகையில் ஏறத்தழ நூறு பிராணி உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இங்கு காணப்படும் பிராணி உருவங்களுள் மானிட உருவங்கள் அரிதாகவே காணப்பட்டபோதிலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிறு பிள்ளையொன்றின் உள்ளங்கை சுவட்டு அடையாளமானது உலகின் பழமைவாய்ந்த ஒருமைச் சுவடாகக் கருதப்படுகின்றது.
நுட்பமுறைகள்
வெறும் (Bare) பாறை மேற்பரப்பு மீது கனியப் பொருள்களைக் கொண்டு தயாரித்த வர்ணங்களால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வர்ணப்பூச்சை வாங்கும் படை (Paint receiving layer) பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்குகையில் காணப்படும் ஓவியங்களுள் கோட்டு வரைதல்கள், வர்ணச் சித்திரங்கள். கல் மேற்பரப்பைச் சுரண்டி ஆக்கப்பட்ட உருவங்கள், அச்சுப்பதித்த கை அடையாளங்கள் ஆகியவற்றைக் காண முடிகின்றது.
கலைத்துவப் பண்புகள்
சோவே குகை ஓவியங்களில் வர்ணம் தயாரித்தல், வர்ணங்களைக் கையாளல், கோடுகளைப் பயன்படுத்தல், திரடாக்குதல் போன்றவற்றை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்துவதற்காக இயற்கைவாத (கட்புல அவதானிப்பு) பாணி கையாளப்பட்டுள்ளது என்பது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த ஓவியங்களில் தெள்ளத்தெளிவான சில பண்புகளைக் காணமுடிகின்றது. ஓவியம் வரைவதற்காக குகையினுள் மிகப் பொருத்தமான கல் மேற்பரப்பைக் கொண்ட இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கரடுமுரடான கல்மேற்பரப்பானது, தீக்கல்லால் அல்லது பிராணிகளின் என்புத்துண்டுகளால் அல்லது பிராணிகளின் கொம்பினால் சுரண்டி ஒப்பமாக்கப்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது.
சோவே குகை ஓவியங்களில் பெரும்பாலும் தனித்தனியான உருவங்களுக்குப் பதிலாக பிராணிகளின் உருவங்களைக் கூட்டங்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு உடல்நிலைகளைக் கொண்டவையாக வரையப்பட்டுள்ள இந்த பிராணிக் கூட்டங்கள் உயிரோட்டமான தன்மையைக் கொண்டவை. குகைச் சுவர்களின் மீது பிராணி உருவங்களைத் திரட்டாக வரையும் திறன் வெளிப்படுத்தப் பட்டுள்ளமை இந்த ஓவியங்கள் மூலம் தெளிவாகின்றது.
கோடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை இந்த ஓவியங்களில் காணப்படும் ஒரு சிறப்பியல்பாகும். வர்ணங்கள் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. உருவங்களில் முப்பரிமாண இயல்பு, விவரமான தன்மை, அசைவு, உயிரோட்டம், வேகம் போன்ற இயல்புகளை வெளிப்படுத்து வதற்காகக் கோடுகள் காத்திரமான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சோவே குகை ஓவியங்களின் தனிச்சிறப்பான மற்றுமோர் இயல்பாகும். தடிப்பான வர்ணப் பகுதிகளைத் தொட்டந்தொட்டமாக இட்டு. உருவத்தின் வெவ்வேறு இயல்புகள் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக கோடுகளின் மூலம் அவ்வியல்புகளை வெளிப்படுத்துவதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஒவ்வோர் உருவத்தைச் சூழவும் கறுப்பு நிறப் புறக்கோடு வரையப்பட்டுள்ளது. அதன் மூலம் உருவங்களின் முப்பரிமாண இயல்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களுக்காக வரையறுக்கப்பட்ட நிறங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் அவற்றுள் தெள்ளத்தெளிவாக இடம்பெற்றுள்ளன. தேவைக்கேற்ப மஞ்சள் நிறமும் விருப்புக்கேற்ப வெவ்வேறு வர்ணச்சாயல்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களின் மற்றுமொரு சிறப்பியல்பு கட்புல அவதானிப்புக்கு முதன்மையிடம் வழங்கப்பட்டுள்ளதாகும். குறிப்பாக, ஒரே வரிசையில் நிற்கும் பிராணி உருவாகள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்குமாப்போன்று வரையப்பட்ட பிராணி உருவங்கள் ஆகியவற்றில் இவ்வயல்பை தெளிவாகக் காணமுடிகின்றது. இங்கு காணப்படும் ரைனோசிரஸ் உருவ வரிசை ஒரு தனிச்சிறப்பான படைப்பாகக் கருதப்படுகறது. அதன் முதல் வரிசையில் ஒரு ரைனோசிரஸ் மாத்திரமே காட்டப்பட்டுள்ளது. பின் வரிசைகளில் உள்ள ரைனோசிரஸ் கூட்டத்தில் கொம்புகள் தூரச் செல்லச் செல்ல சிறியதாகிச் செல்லும் விதத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக வரையப்பட்ட குதிரை உருவ வரிசையொன்றும் இக்குகையில் காணப்படுகின்றது.
இவ்வாறான ஓவியங்களுக்கு மேலதிகமான விசேடமான பிராணி உருவங்களையும் இங்கு காண முடிகின்றது. ”கரடியும் குட்டியும்’ அடங்கியுள்ள ஓவியத்தின் வெளிப்புறக்கோடு கபில நிறத்தில் வரையப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் புள்ளி அடையாளங்கள் மூலம் கரடியின் இயல்பான தன்மைகள் காட்டப்பட்டுள்ளன.