சிந்துவெளி நாகரீகம்
- மெசப்பொத்தேமியா, எகிப்து போன்ற புராதன வரலாற்றுக்குரிய உயர் நாகரீகங்களிற்கு ஒப்பான தரத்தைக் கொண்டதென சிந்துவெளி நாகரீகம் கருதப்படுகிறது.
- ஜோன் மார்ஷல் எனும் தொல்பொருள் ஆய்வு அறிஞரின் நம்பிக்கை சிந்துவெளி நாகரீகம் கி.மு.3250 – 2750 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியைக் கொண்டதென்பதாகும். ஆனால் சிந்துவெளி நாகரீகம் கி.மு.2500 – 1500 இற்கு இடைப்பட்டது என இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
- இந்த நாகரீகம் மொகெஞ்சாதாரோ, ஹரப்பா நாகரீகம் எனவும் அழைக்கப்படும்.
- சிந்தி மொழியில் மொகென் – சொ – தாரோ என்பது “இறந்தவர்களின் கட்டிடம்” என்னும் கருத்தைத் தரும்.
- இது தற்போது பாகிஸ்தானுக்கு உரிய சின்தி கி லர்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- ஹரப்பா தற்பொழுது பாகிஸ்தானில் மேற்கு பஞ்சாப் பிரதேசத்தில் மொன்ரிகோமறி மாவட்டத்தில் ராவ் நதிக் கரையில் அமைந்துள்ளது.
- சிந்துவெளி நாகரீகம் மிக விசாலமான நிலப்பரப்பில் பரந்து இருந்துள்ளது. இந்தப் பண்பாட்டைக் கொண்ட 70இற்கு மேலான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்திற்கு உரிய நகரவாசிகள் உயர்கலை விற்பன்னர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு இங்கு அகழ்வாய்வுகளின் போது கிடைக்கப்பெற்ற பொருட்கள், உபகரணங்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
- இக்கலை ஆக்கங்களுக்கிடையே
♦ கல், உலோகச் சிலைகள்.
♦ கட்டட நிர்மாணங்கள்
♦ முத்திரைகள். (இலச்சினைகள் )
♦ ஆபரணங்கள், உபகரணங்கள்.
♦ விளையாட்டுப் பொருட்கள்
ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
சிந்து வெளி நாகரீகச் சிற்பங்கள்
பூசகர் உருவம்
- பூசகர் உருவம் மொகஞ்சதாரோ நகரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- உடலின் மேற்பகுதி காட்டப்பட்டுள்ளது.
- உயிர்ப்பான ஒருவரைச் சித்தரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
- 19 சென்ரி மீற்றர் உயரமான இது செஞ்சுண்ணாம்பினால் செய்யப்பட்டுள்ளது.
- இது பூசகர் உருவாகும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- உடலின் ஒரு பக்கத்தை மூடியுள்ள சால்வை, பாதி மூடிய கண்கள், பாதி வழிக்கப்பட்ட தலை, தியான நிலை போன்ற இயல்புகள் இவ்வுருவினைப் பூசகர் உரு எனக் குறிப்பிடுவதற்கான காரணமாகும்.
- சால்வை மூன்று இதழ் கொண்ட மலர் அல்லது இலை வடிவ கோலத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- நெற்றி மீது வளையத்துடன் கூடிய நெற்றிப்பட்டி அமைந்துள்ளது.
- தத்ரூபமான படைப்பாக்கமாக அன்றி, மோடிப்படுத்தப்பட்ட ஒரு கலைப்படைப்பாக இது காணப்படுகிறது.
நடன மாதின் வடிவம்
- கலை விமர்சகர்களின் அவதானத்திற்கு உட்பட்ட ஆக்கங்களிடையே ஹரப்பாவில் இருந்து கிடைக்கப்பெற்ற வெண்கலத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நடன மாதின் உருவச்சிலை பிரதான இடத்தைப் பெறுகின்றது.
- அன்று சிந்துவெளி நாகரீகவாசிகள் உலோக வார்ப்புத் தொழில்நுட்பத் திறன் பெற்று இருந்ததற்கு வெண்கலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நடனமாதின் வடிவம் சிறந்த ஒரு சாட்சியாக அமைகிறது.
- உலோக வார்ப்பு முறையில் முழுப்புடைப்பாக ஆக்கப்பட்டுள்ள இதன் உயரம் 4.5 அங்குலமாகும்.
- பெண் உடலின் நளினத் தன்மை சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
- பாதி மூடிய கண்கள், கோபம் கொண்ட உடல்நிலையில் நின்று கொண்டு ஒரு கையை இடையின் மீது வைத்து, மறு கை சிறிது மடக்கி காலின் மீது வைக்கப்பட்டுள்ளது.
- மெலிந்த உடல்வாகுடன் நிர்வாணமாக அமைக்கப்பட்ட இப்பெண் உருவச் சிலையானது மிகுந்த கலைச் சிறப்புடையது.
- கழுத்தில் மாலை ஒன்றும், இருகைகளிலும் நிறைந்த வளையல்களும் அணியப்பட்டுள்ளதால் அக்காலத்தில் ஆபரணங்கள் அணிந்தமைக்குச் சிறந்த சான்றாகும்.
- இதில் ஆலயத்தில் நடனமாடும் பெண் காட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
- தற்போது புதுடில்லியில் உள்ள தேசிய தொல்பொருட்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மணற் கல்லினால் ஆன மனித முண்ட உருவம்
- மனித உடலின் அழகை மிக மென்மையாகவும், நுட்பமாகவும் காட்டும் முண்ட மனித உருவமானது சிந்துவெளி நாகரீகத்தின் உயர்தரத்தை உடைய ஒரு கலை ஆக்கமாகும்.
- கிரேக்க ஆக்கங்களில் காணப்படுகின்ற மேன்மைச் சிற்ப இயல்புகள் காணப்படுகிறது.
- இச்சிற்பத்தில் தசைகளின் இயல்புகளைச் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
- 4 அங்குலம் (10 சென்றி மீற்றர்) உயரத்தைக் கொண்ட இச்சிலை சிவப்பு நிற மணற் கல்லில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- ழுழுப் படைப்பு ஆக்கமாக ஹரப்பாவில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
- இச்சிற்பத்தின் மூலம் கட்டுமாஸ்தான ஆண் ஒருவருடைய உடல் இயல்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
- நிர்வாணமாகக் காணப்படும் இவ்வடிவம் சிவனுடைய மூலக்காட்சி நிர்மாணிப்பு எனக் கருதப்படுகின்றது. ஏனெனில் இச்சிற்பத்திற்கு நான்கு கைகள் இருந்ததற்குரிய சான்று காணப்படுகின்றமையாகும்.
- தலை, கைகள், கால்கள் காணப்படவில்லை. தலையும், கை, கால்களும் வேறுவேறு பகுதிகளாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளமை தெரிகின்றது. இப்பகுதிகளை இணைத்துக் கொள்வதற்காகத் துளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
சாம்பல் நிற மணற் கல்லில் செய்த முண்ட மனித உருவம்
- ஹரப்பாவில் இருந்து கிடைக்கப் பெற்ற இந்த முண்ட மனித உருவம் சாம்பல் நிற மணற் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- 10 சென்ரி மீற்றர் உயரத்தைக் கொண்டது.
- இடது காலை மேலாகத் தூக்கியவாறு நடன நிலையிற் காணப்படுகிறது. எனவே இது சிவபெருமானின் நடன வடிவத்தை வெளிப்படுத்தும் நடராஜர் வடிவம் என்பது விமர்சகர்களது கருத்தாகும்.
- உரோம சிற்பங்களில் காணப்படும் இயற்கையான பண்புகள் இந்த முண்டத்தில் வெளிப்படுகிறது.
முத்திரைகள் (இலச்சினைகள்)
- சிந்துவெளி நாகரீகத்தில் இருந்து 2000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட முத்திரைகள் (இலச்சினைகள்) கிடைக்கப் பெற்றுள்ளன.
- இம்முத்திரைகள் வணிகப் பொருட்களில் அடையாளம் (குறியீடுகள்) இடுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இம் முத்திரைகள் நீள்சதுரம், எண்கோணம், சதுர வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
- இந்த முத்திரைகளில் உருவங்களும், எழுத்துக்களும் காணப்படுகின்றன. ஆனால் இவ்வெழுத்துக்களை இன்று வரை வாசித்துக் கொள்ள முடியவில்லை.
- இம்முத்திரைகளின் மூலம் சிந்துவெளி நாகரிக மக்களின் சமய நம்பிக்கைகள் வெளிக்காட்டப்படுகின்றன.
- அவர்களது வாழ்க்கைப் பாங்கு, பண்பாட்டு இயல்புகள், கலைத்திறன்கள், தொழில்நுட்பத்திறன்கள் போன்றவை பற்றிய தகவல்களையும் அவை தருகின்றன.
திமிளுடன் கூடிய எருது உருவம்
- சிந்துவெளி நாகரீகத்தில் எருதுவடிவத்தைக் கொண்ட முத்திரைகள் 25 இற்கும் மேற்பட்டவை கிடைக்கப்பெற்றன.
- அவற்றிடையே கலையம்சத்துடன் கருத்தை வெளிப்படுத்தும் முத்திரையானது திமிளுடன் கூடிய எருது வடிவ முத்திரையாகும்.
- இதில் எருதின் இயல்புகள், சிறப்புக்கள் இயற்கைத் தன்மையுடன் நிர்மாணிக்கப்பட்டு உள்ளமையைக் காணலாம்.
- சிவபெருமானின் வாகனம் நந்தி எனும் கருத்தையே இது குறியீடாகக் கொண்டு உள்ளதெனக் கருதப்படுகிறது.
- கழுத்தில் காணப்படும் மடிப்பு மடிப்பான சுருக்கமானது மேலும் அழகை வெளிக்காட்டுகிறது.
- சில எருது வடிவ முத்திரைகளில் எருதைச் சுற்றி வாசனைப் புகைப்பொருட்கள் காணப்படுவதால் எருது பூசைக்குரியது என மதித்து, வழிபட்டு பூசை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- இம்முத்திரைகளைத் தவிர தனிக் கொம்பு எருது, குறுங்கொம்பு எருது வடிவக் குறியீடுகளைக் கொண்ட முத்திரைகளும் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளமை பதிவாகி உள்ளது.
- எருது உருவம் ஒரு பக்கத்தை மாத்திரம் காட்டும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு வலிமை, எடுப்பான தன்மையும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
பசுபதி (சிவ) முத்திரை
- இந்த முத்திரை கொம்புத் தெய்வம் என இனங்காணப்படுகிறது.
- இவ்வுருவின் தலையில் இரு கொம்புகளுடன் கூடிய தலையணி ஒன்றுள்ளது.
- ஆசனத்தின் கீழ் மான்கள், சுற்றிவரக் காண்டாமிருகம், புலி, யானை, எருது வடிவங்கள் காணப்படுகிறது.
- இது சிவபெருமானின் மூலத்தை புலப்படுத்துவதாக ஜோன் மார்ஷல் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
- சிவனின் ஒரு வடிவமாகிய பசுபதி (உயிர்களின் அதிபதியும், விவசாயத்துக்கான அதிபதியும்) இதன் மூலம் காட்டப்பட்டுள்ளது.
- தெய்வ உருவம் முன்புறத்தோற்றத்திலும், ஏனைய பிராணிகளின் உருவங்கள் பக்கத் தோற்றத்திலும் படைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்
1. மொகஞ்சாதாரோ என அழைக்கப்படுவதற்கான காரணம் யாது?
2. சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பங்கள் மூன்று தருக?
3. பூசகர் உருவத்தில் காணப்படும் ஆடையில் காணப்படும் வடிவம் யாது?
4. பூசகர் உருவத்தின் ஊடகம் யாது?
5. நடன மாதின் ஊடகம், நுட்பமுறை பற்றி குறிப்பிடுக ?
6. சிவப்பு மணற்கல்லில் ஆன ஆண்முண்ட சிலையின் சிறப்பு யாது?
7. நாட்டியக்காரன் உருவம் யாரை சித்தரிப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்?
8. திமிளுடன் கூடிய எருது முத்திரை எதனைச்சித்தரிக்கிறது?
9. கொம்புத்தெய்வத்தை காட்டும் முத்திரையில் சுற்றி காணப்படும் விலங்குருவங்கள் யாது?
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இம் முத்திரையானது ……………………………………….. அல்லது பசுபதி என அழைக்கப்படுகின்றது.
2. இது …………………………………. காலத்தைச் சேர்ந்தது.
3. இவரது தலையில் ………………………………………….கூடிய தலையணி ஒன்று காணப்படுகின்றது.
4. இவர் அமர்ந்துள்ள ஆசனத்தின் கீழ் …………………………………. உருவம் காணப்படுகின்றது.
5. இவ் உருவம் சிவபெருமானைக் குறிப்பதாக ஆய்வாளர் ………………………………………….. கூறுகின்றார்.