இலங்கையில் இந்துக்கோயில் ஓவியக் கலை
வரலாற்றுப் பின்னணி
தென்னாசியாவில் இந்துமதக் கோயில்கள் சார்ந்து பயிலப்பட்ட பிரதான கலை வடிவங்களுள் ஓவியமும் ஒன்றாகும். இவை உருவ வழிபாட்டுடனும் புராண இதிகாச சித்திரிப்புக்களுடனான தர்ம போதனையுடனும் தொடர்புபடுத்தப்பட்டே பயிலப்பட்டது. ஓவியத்தின் உருவ, உள்ளடக்கம் மற்றும் பாணி முறைமையானது சிற்பக் கலையுடன் தொடர்புபட்டிருந்தமையை வரலாற்றினூடாக அறிய முடிகிறது. ஓவியத்தின் தன்மைகள் அவை வரையப்பட்ட மேற்பரப்புகள், உத்தி முறைகள், பயன்படுத்தப்பட்ட ஊடகங்கள் என்பவற்றின் மாற்றங் களுக்கேற்ப வேறுபட்டு வந்துள்ளன. குகை, சுவர், கூரை, தரை, திரை (துணி), ஏட்டுச் சுவடி, பலகை, கண்ணாடி, கடதாசி எனப் பரந்துபட்ட தளங்களில் இந்துமதஞ்சார் ஓவியங்கள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. எனவே தளம், ஊடகம், உத்தி முறை என்பவற்றினாலேயே ஓவியங்களின் காலரீதியான நிலைப்புத் தன்மையானது தீர்மானிக்கப் பட்டு வந்துள்ளது. இந்தியாவில் இன்றும் மிகப் பழைய சுவர் இந்து ஓவியங்கள் எல்லோரா, காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஹம்பி, சிதம்பரம், மதுரை, திருவாங்கூர் போன்ற இடங்களிலுள்ள கோயில்களின் சுவர்களில் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் இந்து, புராண, இதிகாச பாத்திரங்கள் அல்லது கடவுளர்களின் வடிவங்களாக இருந்ததால் இவற்றின் உருவாக்கத்தில் பாரம்பரிய விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இவ்விதிகள் ‘சாஸ்திரங்கள்’ என அழைக்கப் பட்டன. சாஸ்திரங்கள் ஓவியத்தின் வகைகள், உருவாக்க முறைகள், உருவத்தின் அங்க இலட்சணங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றன.
இலங்கையில் இன்று கிடைக்கும் கோயில் ஓவியங்களின் வரலாறு என்பது பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இதற்கு முற்பட்ட ஓவியங்கள் பற்றிய எழுத்துக்களும் இலக்கியச் சான்றுகளும் இருந்தபோதிலும் அவற்றைக் கொண்டு ஓவியத்தின் காட்சி தனிக்குணவியல்பு (Visual Character) பற்றிய எந்த முடிவுக்கும் வரமுடியாதுள்ளது. இவ்வோவி யங்கள் பற்றிய காட்சிரீதியிலான தடயங்கள் இல்லாதிருப்பதற்கு மூன்று பிரதான காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
(1) இலங்கையில் இந்துக்கள் செறிந்து வாழ்ந்த வடக்கு, கிழக்குப் பகுதிக் கரையோரங் களில் நிலைப்புத் தன்மை வாய்ந்த கட்டடங்களை உருவாக்கக்கூடிய ஊடகங்கள் காணப்படாமை, சுவர்களின் நீடிக்க முடியாத தன்மை காரணமாக அவற்றிலுள்ள ஓவியங்கள் அழிந்து போயிருக்கலாம். மேலும் திரைச்சீலைகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றில் வரையப்பட்டவை நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமை.
(2) இந்துக்களின் நம்பிக்கையின் பிரகாரம் மங்கிய அழிந்த மற்றும் சேதமடைந்த உருவங்கள் வழிபாட்டிற்கு உகந்தனவல்ல என்பதால் ஓவியங்கள் தொடர்ந்து புனர்நிர்மாணம் செய்யப்பட்டன அல்லது அகற்றப்பட்டன.
(3) நானூறு வருட ஐரோப்பிய காலனிய ஆட்சியும் கிறித்தவ மிசனரிகளின் செயற்பாடுகளும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் அழிக்கப்படக் காரணமாயின.
இன்றுள்ள இந்துக் கோயில் கட்டடங்கள் அநேகமாக பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டனவாகும். இப்பின்புலத்தில் எமக்குக் கிடைக்கும் கோயில் ஓவியங்கள் பற்றிய தடயமானது, கலாகேசரி தம்பித்துரை என்பவரால் எழுதப்பட்ட பிற்காலத்து யாழ்ப்பாணத்துச் சுவரோவியங்கள் என்ற நூலிலிருந்தே கிடைக்கின்றது. 1980கள் வரை பார்க்கக்கூடியதாக இருந்த இவ்வோவி யங்கள் – ஆலய புனருத்தாரணங்கள், மக்களின் வரலாற்றுப் பிரக்ஞையின்மை மற்றும் போர் நடவடிக்கைகள் என்பவை காரணமாக அழிந்து போயின. பெரும்பாலும் இந்துமத உள்ளடக்கத்தினைக் கொண்ட இவை கோயில்கள், மடங்கள், கிட்டங்கிகள், தனியார் வீடுகள் என்பவற்றில் இயற்கை வர்ணங்களைப் பயன்படுத்திச் சுண்ணாம்புச் சுவர்களின் மீது வரையப்பட்டதாக அறிக்கையிடப்படுகின்றது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், சட்டநாதர் கோயில், காங்கேசன்துறை கிட்டங்கி போன்ற இடங்களிலும் யாழ்ப்பாணம் பாங்கசால் வீதிக் கிட்டங்கியில் காணப்பட்ட ஓவியங்கள் பற்றியும் புகைப் படச் சான்றுகள் சிலவற்றைத் தம்பித்துரை தனது நூலில் தந்துள்ளார். இவற்றைவிட பருத்தித்துறை கோட்டடிப் பிள்ளையார் கோயில், பருத்தித்துறை, வல்வெட்டித்துறைக் கிட்டங்கிகளிலும் சுவரோவியங்கள் இருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். இவற்றை விட தாவடி அம்பலவாணர் முருகமூர்த்தி கோயில் வண்ணை வைத்தீஸ்வரன் கோயில், வண்ணை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில், தாவடி வண்ணார் மடம் போன்றவற்றிலும் ஓவியங்கள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.
கலாகேசரி தம்பித்துறை அவர்களால் எழுதப்பட்ட பிற்காலத்து யழ்ப்பாணத்துச் சுவரோவியங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளபடி இந்து கோயில் சித்திரங்களின் முதல் ஓவியராக தாவடியைச் சேர்ந்த முத்தையா துரைசாமி இனங் காணப்படுகின்றார். துரைசாமி அக்காலத்தில் பெயர் பெற்ற மெய்யுரு (Portrait) வரையும் ஓவியராகவும் திகழ்ந்துள்ளார். அவற்றில் காணப்பட்ட ஒளிநிழற்படுத்துகையும் தத்ரூபமும் அவர் ஐரோப்பிய ஓவிய மரபுடன் பெற்றிருந்த பரிச்சயத்தை எடுத்துக் காட்டுகின்றன. நல்லூர் சட்டநாதர் கோயிலில் இருந்த பழனியாண்டவர் ஓவியத்திலுள்ள கூவும் சேவல் மற்றும் மயில் உருவங்கள் வரைதல் மற்றும் தள மேற்பரப்பில் முப்பரிமாணமாக வெளிக்கொணர்ந்த நுட்பத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வோவியங்கள் 1920 ஆம் ஆண்டு காலத்துக்குரியதெனக் கணிக்கப்படுகின்றது,
சட்டநாதர் ஆலயத்திலுள்ள விநாயகர் வடிவம் என்பன மேலும் தாவடி வண்ணார் மடத்திலிருந்த சரஸ்வதி உருவம் என்பதில் தஞ்சாவூர் ஓவியப் பாணியினதும் மேலைத்தேய இயற்பண்புவாதத்தினதும் கலப்பு என்பது புலப்படுகின்றது. இத்தகைய பாணியானது ஓவியர் இராஜா இரவிவர்மாவின் அச்சுப் படங்களின் பாணியமைப்புகள் பரவலடைய முன்னர் தென்னிந்தியாவில் பிரபல மடைந்திருந்த தஞ்சாவூர் வெகுசன பாணியை (Popular Style) ஒத்திருக்கின்றன.
சமகாலக் கோயில் ஓவியங்களின் காட்சிப் பண்பில் பெருஞ் செல்வாக்குச் செலுத்தியவராகப் பெரியதம்பி சுப்பிரமணியம் காணப்படுகிறார். இவரால் கோயில்களிலும் தேவாலயங்களிலும் சுவரோவியங்கள். திசைச்சீலைகள், கூரை, முகப்பு ஓவியங்கள், மெய்யுருக்கள் என்பன எண்ணிலடங்காதவை,
யாழ்ப்பாண கோவில் ஓவியக்கலையின் முன்னோடியாகத் தொழிற்பட்ட நாராயண சுவாமி தென்னிந்தியக் கலைஞரொருவர் எனவும் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கிடைக்காத போதிலும் அவர்களின் ஓவியங்களை வல்வெட்டித் துறை முத்துமாரியம்மன் கோயிலில் காணலாம். அவ்வோவியங்கள் 1966, 1967ம் காலப்பகுதிக்குரியவை. இவ்வோவியங்கள் ரெம்பரா ஓவிய வகைக்குரியவை. இவர் ஓவியக் கலைஞர் மட்டுமன்றி கோயில் இராஜகோபுர நிர்மாணிப்புக்களையும் செய்ததாகக் கருதப்படுகின்றது. அவரால் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயிலில் வரையப்பட்ட ஓவியங்களுள் விநாயகர், முருகன் தொடர்பான புராணக் கதைக் காட்சிகள் காணப்படுகின்றன. அத்துடன் இக்கோயிலுடன் தொடர்புடைய வரலாறும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
சுர சங்காரம் மேற்கத்தேய கலை மரபைத் தழுவி வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு முப்பரிமாணத் தன்மை, ஆழம் எனும் பண்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கீழைத் தேய கலை மரபுக்கமைய கதை கூறும் பண்புடன் இவ்வோவியம் தீட்டப்பட்டுள்ளதையும் காணக் கூடியதாக இருக்கின்றது, இரேகைகளை விட வர்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முப்பரிமாணத் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தூரநோக்கு பண்புகளுடன் ஆழத்தைக் காட்டவும் முனைந்துள்ளார்.
கோயிலில் உள்ள அசுராசுர சங்காரம் எனும் ஓவியத்தில் விநாயகர். பாம்பு வடிவில் உள்ள அசுரரை இரண்டாகப் பிளந்து வெளிப்படும் காட்சியே இதுவாகும். இங்கு விநாயகரின் செயல். அதன் பின்னணி என்பன மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய ஓவிய கலைஞரான இராஜா ரவிவர்மாவின் சாயலைக் கொண்டுள்ளது. கற்பனை வடிவில் அமைந்த உருவங்களும் காட்சிகளும் முப்பரிமாண, தூர நோக்கு இயல்புகளை காட்டுவனவாக தளம் பயன்படுத்தப்பட்டுள்ள மையைக் காண முடிகிறது. இங்கு முப்பரிமாண இயல்பும் பின்னணி காட்சியமைப்புக் காட்டப்பட்டுள்ள விதமானது, குடியேற்ற நாடாகிய இஙல்கையின் சுதேசக் கலையில் காணப்பட்ட பொதுவான இயல்புகளை ஒத்ததன்மையைக் காட்டி நிற்கின்றது.