எகிப்திய சிற்ப, செதுக்கல் கலை
இறந்தோரின் பிரதியுருக்களை புதைகுழியின் உள்ளே வைக்கும் வழக்கம் எகிப்திய நாகரிகத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. அவ்வாறான பெருந்தொகையான சிற்பங்களை எகிப்து நாகரிகத்தைச் சேர்ந்த புதைகுழிகளில் காணமுடிகின்றது. அக்காலத்தில் காணப்பட்ட நியமமான விதிமுறைகளைத் தழுவியே இச்சிற்பங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எகிப்தியச் சிற்பங்களின் ஊடகங்களையும் நுட்பமுறைகளையும் கருதும்போது பின்வரும் மூன்று விடயங்கள் முக்கியமானவை.
- சிற்பங்களை நிர்மாணிப்பதற்காக சுண்ணக்கல், மணற்கல் (உருமாறிய பாறை), பலகை ஆகியன பயன்படுத்தப்பட்டிருத்தல்.
- மிகப்பெரிய சிற்பங்களும் மிகச் சிறிய சிற்பங்களும் காணப்படுதல்.
- முழுப்புடைப்பு மற்றும் குறைபுடைப்பு நுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை.
எகிப்தியச் சிற்பங்களின் கலைமோடி இயல்புகள்
- இயற்கைவாதப்பாணி மற்றும் மோடிப் பண்புகளின் கலப்புத் தன்மையுடன் சிற்பங்கள் கட்டப்பட்டிருத்தல்.
- லலித உயிரோட்டமான உடல்நிலைகள் அற்ற, அசைவின்றிய விறைப்பான தன்மை கொண்ட தாக உடல் காட்டப்பட்டிருத்தல்.
- கேத்திரகணித வடிவங்களைக் கொண்ட உடல்நிலைகள் அதிக அளவில் காணப்படுதல்.
- சமச்சீர்ப் பண்புகளைக் கொண்டிருத்தல்.
- பெரும்பாலான சிற்பங்கள் முன்னோக்கிப் பார்த்தவாறு காட்டப்பட்டிருத்தல்.
- நின்றநிலைச் சிற்பங்களின் பாதங்களுள் இடது பாதம் முன்னே இருக்குமாறு நிர்மாணிக்கப் பட்டிருத்தல்.
- பெண் உருவங்கள், உடலுடன் ஒட்டிய முழுமையான ஆடையுடனும் ஆண் உருவங்கள் உடலின் கீழ்ப்பகுதியை மாத்திரம் மறைக்கும் ஆடையுடனும் நிர்மாணிக்கப்பட்டிருத்தல்.
- ஆபரணங்களோ அழகுபடுத்தல்களோ அற்ற எளிமையான தன்மை.
- உணர்வுகள் அற்ற முகத்துடன் திறந்த கண்களுடன் காட்டப்பட்டிருத்தல்.
எகிப்திய நாகரிகத்தில் ஆக்கப்பட்டுள்ள ஏறத்தாழ எல்லாச் சிற்பங்களிலும் மேற்படி இயல்புகள் காணப்படுதல் ஒரு சிறப்பியல்பாகும். எகிப்திய நாகரிகத்தின் பண்டைய, மத்திய, புதிய இராசதானி என்றவாறு குறிப்பிடப்படும் காலப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட தலைசிறந்த சில படைப்புக்கள் இங்கு காட்டப்பட்டுள்ளன. அந்தந்தக் காலப்பகுதியில் படைக்கப்பட்ட ஆக்கங்களின் மோடி சார்ந்த இயல்புகளின் தனிச்சிறப்பை இவற்றின் மூலம் இனங்கண்டு கொள்ளலாம்.
பண்டைய இராசதானியைச் சேர்ந்த சிற்பக்கலைப் படைப்புக்களும் கலைத்துவப் பண்புகளும்
- இயற்பண்புவாத மற்றும் மோடிசார்ந்த இயல்புகளின் சேர்மானத்தினாலான வெளிப்பாடு
- பிரதிநிதித்துவம் மற்றும் பிரதிநிதித்துவமற்ற தன்மையும் கூட்டாகப் பயன்படுத்தப்பட்டிருத்தல்.
- நேரிய உடல்நிலையுடனான நின்றநிலை, அமர்ந்த நிலைச் சிற்பங்கள்.
- மிருதுவான உடல்நிலைகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டிருத்தல்.
நார்மேர் தட்டு (Narmer)
திட்டவட்டமான ஓர் ஆள், திட்டவட்டமான ஒரு நிகழ்வு, திட்டவட்டமான காலப்பகுதி ஆகியவற்றைச் சரியாக இனங்காணத்தக்க வகையில் கிடைக்கப்பெற்ற முதலாவது வரலாற்றுக் கட்புல கலைப்படைப்பாக, நார்மேர் பலகத்தைக் குறிப்பிடலாம். கி.மு. 3150 – 3125 இற்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு இதில் காட்டப்பட்டுள்ளது. இதில் காட்டப்பட்டுள்ளவர் நார்மேர் (Narmer) அதாவது மெனஸ் (Menes) மன்னன் ஆவார். அவர், நைல் நதிக் கரையில் மேல், கீழ்ப் பகுதிகள் என்றவாறாக வெவ்வாறாகக் காணப்பட்ட மேல் எகிப்து, கீழ் எகிப்து ஆகிய இரண்டு இராசதானிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவந்த முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி, இரண்டு இராசதானிகளையும் ஐக்கியப்படுத்தி வலிமைமிக்க தனி அரசாக்கியமையே இதன் விடயப்பொருளாக அமைந்துள்ளது.
ஹயிராகொன்போலிஸ் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற இந்த மணற்கல்லாலானலான சிறிய தட்டின் (Slate) இரண்டு பக்கங்களிலும் செதுக்கு வேலைப்பாடுகள் உள்ளன. தட்டின் ஒரு பக்கத்தில் மன்னன் மேல் எகிப்தைச் சேர்ந்த இராசகிரீடத்தை அணிந்திருக்கும் விதமும் மறுபக்கத்தில் கீழ் எகிப்தைச் சேர்ந்த இராச கிரீடத்தை அணிந்திருக்கும் விதமும் காட்டப்பட்டுள்ளது. நார்மேர் மன்னர் மேல் எகிப்துக்கும் கீழ் எகிப்துக்கும் மன்னனாவான் என்பதை இது குறித்து நிற்கின்றது. இப்பலகத்தில் ‘அ’ பக்கத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. நர்மேர் மன்னன் ஓர் எதிரியின் தலையை கையால் பற்றிப்பிடித்து, அவனைத் தாக்கும் விதம் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. அத்தாடு அதன் ஒரு புறத்தே பப்பைரசுச் செடியொன்றில் அமலடந்துள்ள பருந்து உருவம் காணப்படுகின்றது. மேல் எகிப்திய வந்தனைக்கு உள்ளாகிய ஹொரஸ் தெய்வமே பருந்து வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் நிரலில் தப்பிச் செல்லும் எதிரிகள் இருவரின் உருவங்கள் காட்டப்பட்டுள்ளது. பலகத்தின் ‘ஆ’ பக்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் மேற்பகுதியில் ஈட்டியும் கொடியும் ஏந்திய வெற்றிப்படை காட்டப்பட்டுள்ளது. கூடவே மரித்தோர் ஒரு புறத்தில் காட்டப்பட்டுள்ளனர். ஒன்றையொன்று அணைத்தவாறு முகத்தை முகம் பார்த்தவாறு இருக்கும் நீண்ட கழுத்துக்கொண்ட கற்பனைப் பிராணிகளிரண்டின் உருவம் நடுப்பகுதியில் காட்டப்பட்டுள்ளது. அவை இரண்டும் மேல் – கீழ் எகிப்துப் பிரதேச மக்களின் ஐக்கியத்தைக் காட்டி நிற்கின்றன என நம்பப்படுகின்றது. கீழே உள்ள பகுதியில் ஓர் எருது ஓர் எதிரியைத் தாக்குவது காட்டப்பட்டுள்ளது.
மென்குரேயும் அவனது அரசியும் (மனைவியும்) (Menkaure and Khamerernebty II)
மென்குரே அதாவது மயிசெரினஸ் மன்னனையும் அவனது மனைவி கமெரனெபிட்டி (mcnkaurc and khamererincbty ii) அரச குமாரியையும் காட்டும் இச்சிற்பம் கிஸால் உள்ள பெரும்பிரமிட்டுக்கள் மூன்றுள் ஒன்றாகிய மென்குரே பிரமிட்டிலிருந்து கிடைக்கப்பெற்றது. பண்டைய இராசதானி யுகத்தில் கி.மு. 2515 காலத்தைச் சேர்ந்த இது 4 1/2 அடி உயரமாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது எகிப்திய சிற்பப் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு முற்றிலும் பொருந்தியமையும் ஒரு படைப்பாகும். இச்சிற்பத்தில் மன்னனும் அவனது மனைவியும் (அரசியும்) காட்டப்பட்டுள்ள போதிலும் பாராக்களின் தலையணி (கிரீடம்) தவிர வேறு ஆபரணங்கள் எதுவும் காணப்படாமை ஒரு சிறப்பாகும்.
ஆணின் உடல் மேற்பகுதியில் ஆடை கிடையாது. இடுப்பைச் சுற்றி குறும் ஆடை உள்ளது. பெண்ணின் ஆடை உடலுடன் ஒட்டிக் காணப்படுகின்றது. இருவரும் சம உயரமுடையோராகக் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் உள்ள பெண் வலது கையால் ஆணின் இடையைச் சுற்றிப் பிடித்துள்ளதோடு இடது கையினால் ஆணின் இடது கையை பிடித்துள்ளார். ஆணின் கைகள் விறைப்பாக உள்ளன. இடது கால் சற்று முன்னாக வைக்கப்பட்டுள்ளது. இருவரும் உடலை நேராக வைத்து முன்னோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. உடலமைப்பு இயல்புகளும் சமச்சீர்ச் சிற்ப இயல்புகளும் இச்சிற்பத்தில் காணப்படுகின்றது. கிரேக்க நாகரிகத்தின் பண்டைய பெருமைமிக்க காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிற்பப் படைப்பாக்கங்களுக்கான செல்வாக்கு இவ்வாறான எகிப்திய படைப்பாக்கங் களிலிருந்து பெறப்பட்டுள்ளது.
ஸ்கிரைப் (Scribe) – எழுதுபவர்
பழைய இராசதானியைச் சேர்ந்த ஐந்தாம் அரச பரம்பரை ஆட்சிக் காலத்தில் ஆரம்பக் கட்டத்தில் அதாவது கி.மு. 2400 காலத்தைச் சேர்ந்த இச்சிற்பம் சக்காரா பிரதேச புதைகுழி மனையொன்றிலிருந்து கிடைத்துள்ளது. ‘ஸ்கிரைப்’ ஒருவர் அதாவது அரச செயலாளர் ஒருவராகச் செயற்படும் பிரமுகர் ஒருவரே இதன் மூலம் காட்டப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. எழுத்து உபகரணங்களைக் கையில் வைத்து, தரையில் அமர்ந்து தமது எஜமான் கூறுபவற்றைக் கவனமாகச் செவிமடுத்து அவற்றை உடனடியாகப் பதிவு செய்து கொள்வதற்காக ஆயத்தத்துடன் கண்களை அகல விரித்து வைத்திருக்கும் விதத்தை தத்ரூபமாகக் காட்டுவதில் இச்சிற்பக் கலைஞர் வெற்றி கண்டுள்ளார். இக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஏனைய படைப்புக்களை விட இப்படைப்பா இயற்கைத் தன்மையையும் தனிப்பட்ட நடத்தைப் பண்புகளையும் தெளிவாக எடுத்துக்காட்டும் ஓர் உயரிய படைப்பாகக் காணப்படுகின்றது.
நடு வயதைத் தாண்டிய ஒருவரின் தன்மையைக் கொண்ட இந்த உருவம் கால்களை மடக்கி அமர்ந்துள்ளதோடு, ஒரு கையில் பப்பைரசு தாளையும் எழுதுகோலையும் தாங்கியிருப்பது காட்டப் பட்டுள்ளது. இது சுண்ணக்கல்லில் செய்து வர்ணந்தீட்டப்பட்ட ஒரு சிற்பமாகும். படிக வகைக் கற்களால் கட்குழி நிரப்பப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் ஏறத்தாழ 2 அடி (21 அங்குலம்) உயரமான சிறிய அளவுடைய ஒரு சிற்பமாகும். முக்கோண வடிவ மாதிரியைக் கொண்ட இச்சிற்பம் தற்போது பிரான்சு நாட்டு லுவர் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நெஃபர்டிட்டி அரசி (Queen Nefertiti)
எகிப்தியக் கலையில் மிக உயரிய தரமுள்ள படைப்பாக்கங்கள் தோன்றிய புதிய இராசதானிக் காலத்தில் அதாவது ‘அமர்னா காலத்தில்’ ஆக்கப்பட்ட ஒரு சிற்பமாக நெஃபர்டிட்டி மார்பளவுச் சிற்பத்தைக் குறிப்பிடலாம். அக்கெனேட்டன் (Akhonalcn) மன்னனின் அரசியாகக் கருதப்படும் அழகிய நெஃபர்டிட்டி அரசியின் உடலின் மேற்பகுதி இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. நான்காம் அமென்ஹொடப் அதாவது அக்கெனேட்டன் மன்னனின் நோக்கம், பதிய சமயப் பாரம்பரியமொன்றினைத் தோற்றுவித்து அதனைப் பரப்பும் அதேவேளை அதற்கு ஒப்பாக புதிய கலைப் பாரம்பரியமொன்றையும் தாபிப்பதாகும்.
இந்தப் புதிய கலைப்பாரம்பரியத்தின் கலைத்துவப் பண்புகள் அது வரையில் காணப்பட்ட பாரம்பரியமான எகிப்தியக் கலைத்துவப் பண்புகளை விடப் பெரிதும் வேறுபட்டதாகும். ‘அமர்னா’ காலத்தில் படைக்கப்பட்ட ஏனைய சிற்பங்களிற் போன்றே, நீண்டதாக உடலுறுப்புக்களைக் காட்டும் கலைத்துவப் பாணியைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பதை இச்சிற்பத்தில் காணலாம். பாரம்பரியமான எகிப்தியச் சிற்பக் கலையில் அதுவரையில் காணப்பட்ட கரடுமுரடான பெரிய, நெகிழ்வற்ற தன்மைகளை விஞ்சிச் சென்ற மென்மையான விறைப்பற்ற நெகிழ்ச்சியான கலைத்துவ விதிமுறையொன்று இப்படைப்பாக்கத்தின் மூலம் புதிதாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளமையே அது மிகச் சிறந்ததொரு படைப்பாக்கமாக அமைவதற்குக் காரணமாகியுள்ளது. இயற்கைத் தன்மை மற்றும் சரியான அளவுப் பிரமாண மற்றும் விகிதாசாரம் காட்டப்பட்டுள்ளது. அதாவது இச்சிற்பத்தின் முன்னோக்கி நீண்ட கழுத்துடன் சமனிலையாகுமாறு பின்னோக்கி நீண்ட தலையணி இடப்பட்டுள்ளது. எனவே இது சிற்பக்கலைப் படைப்பாக்கக் கோட்பாடுகள் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ள ஓர் சந்தர்ப்பமாகும்.
ஏறத்தாழ 20 அங்குல (50 cm) அளவுடைய சிறியதொரு சிற்பமாகிய இது, கி.மு. 1375-1336 காலத்தைச் சேர்ந்தாகும். சுண்ணக்கல்லினால் ஆக்கப்பட்டுள்ள இச்சிற்பம், மிக அழகாக வர்ணந்தீட்டப்பட்டுள்ளது. வம்சாதிபதியினது மனைவியின் எடுப்பான தன்மை இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. நீண்ட கண்களும் அழகிய புன்னகையும் இச்சிற்பத்துக்கு உயிரேட்டத்தன்மையை ஏற்படுத்தியுள்ளன. மேலம் தலையில் அணிந்துள்ள நீண்ட கிரீடமும், கழுத்தில் அணிந்துள்ள மாலையும் ஒரு பேரரசியின் பொலிவையும் வலிமையையும் காட்டி நிற்கின்றன. கழுத்தில் அணிந்துள்ள மாலைக்கு வர்ணந்தீட்டப்பட்டுள்ளது. தற்போது இச்சிற்பம் ஜேர்மன் நாட்டு பேர்லின் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.