களனி தாதுகோபம்
இலங்கையில் மாயா ரட்டையைச் சேர்ந்த களனி கங்கைக் கரையில் களனி தாதுகோபம் அமைந்துள்ளது. தமது மூன்றாவது விஜயத்தின்போது புத்தர் பெருமான் வருகைதந்த ஓர் இடம் என்ற வகையில் புனிதத்துவம் பெற்றுள்ள களனி, சிறப்புப்பெற்றுள்ள பதினாறு புனிதத்தலங்களுள் ஒன்றாகும். புத்தர் பெருமான் புத்தர் நிலையை அடைந்து 8 ஆம் ஆண்டில் மணி அக்கிக்க எனும் நாக அரசனின் அழைப்பின் பேரில் களனிக்கு வருகை தந்ததாகவும் அங்கு மணி ஆசனத்தில் அமர்ந்து மணி அக்கிக்க மன்னன் உட்பட நாகர் கோத்தினருக்கு தர்ம உபதேசம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. சூலோதர, மகோதர ஆகியோருக்கு இடையே மணி ஆசனம் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்த்து வைத்தமையால் அவர்கள் அதனைப் புத்தர் பெருமானுக்குப் பூசையாக வழங்கினர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் உத்திய குமாரனினால் களனி புனர்நிர்மாணஞ் செய்யப்பட்டமையால், இது அக்காலத்துக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. மணி ஆசனத்தை அடக்கஞ் செய்து மணி அக்கித்த மன்னனினால் இத்தாதுகோபம் கட்டுவிக்கப்பட்டதாக, வம்சக் கதைகளில் இடம்பெற்றுள்ள தகவல்களை இதன் மூலம் அனுமானிக்க முடிகின்றது.
புத்தர் பெருமான் அமர்ந்திருந்த ஆசனத்தை ஒரு நுகரவுப் பொருளாகக் கருதி அதனைத் தாதுகோபத்தில் அடக்கஞ் செய்ததாக வம்சக் கதைகளில் இடம்பெற்றுள்ளது. மேலும் புத்தபெருமான் தர்ம உபதேசம் செய்த மணி மண்டபத்தை மூடும் வகையில் தாதுகோபம் நிர்மாணிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. மேலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் இத்தாதுகோபம் வ்ெவவேறு மன்னர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. களனி விகாரை, பொலனறுவைக் காலத்தில் காலிங்க மாகனினால் தகர்க்கப்பட்டதோடு, தம்பதெனியாவில் ஆட்சி செய்த இரண்டாம் பரகும்பா மன்னனினால் அது இயல்புநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இம்மன்னனினால் தாதுகோப மேடையில் கற்பாளங்கள் பதிக்கும் வேலை செய்யப்பட்டது. கி.பி. 14-15 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புற்றிலங்கிய களனி தாதுகோபம் மீண்டும் போர்த்துக்கேயர்களாலும் அதன் பின்னர் ஒல்லாந்தர்களாலும் அழிக்கப்பட்டது. கண்டிக் காலத்தில் கி.பி. 1780 இல் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனாலேயே அது மீளக் கட்டியெழுப்பப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட தாதுகோப வடிவத்தையே அதாவது தானியக்குவியல் வடிவத்தையே இப்போது நாம் காண்கிறோம். இத்தாதுகோபத்தின் மூல வடிவம் எவ்வாறானது எனத் திட்டவட்டமாகக் கூறுவதற்குச் சான்றுகளேதும் கிடையாது. புதிய நிர்மாணிப்பின்படி தாதுகோபத்தின் உயரம் சுமார் 90 அடி ஆகும்.