பொத்குல் விகாரைச் சிலை
பொலன்னறுவையில் பராக்கிரம சமுத்திரத்திற்கு அண்மையில் பொத்குல் விகாரைக்கு முன்னால் கற்பாறையொன்றில் பொளியப்பட்ட இச்சிலை பொத்குல் விகாரைச் சிலை என்று அழைக்கப்படுகிறது. இயற்கைக் கற்பாறையில் |1 1/2 அடி உயரத்தில் இச்சிலை உயர் புடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பாதத்தில் பாரத்தைத் தாங்கி மற்றைய பாதத்தை சிறிது முன்னால் வைத்து, இலகுவான நிலையில் “திரிபங்க” (மூவளைவைக் கொண்ட) நிலையில் உள்ளது. பொலன்னறுவைக் காலத்து சிலைகளின் கலைப்பண்புகளுடன் இச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உடலின் நளினத் தன்மை இதனால் வெளிப்படுகிறது.
முகத்தில் நீண்ட தாடியும் கீழ்நோக்கி சரியும் மீசையும் கட்டான உடலமைப்பும் ரிஷி ஒருவருடைய எடுப்பான தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இவர் கையில் நுகத்தடி ஒன்றை ஏந்தி நிற்கிறார் எனும் கருத்து நிலவுகிறது. பராக்கிரம சமுத்திரத்துக்கு அண்மித்து பொத்குல் விகாரையை நோக்கி அமைக்கப்பட்டிருப்பதால் இப்பண்புகளுடன் இடைத் தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆடைகள் எளிமையானவை. ஆபரணம் எதுவும் அற்ற வெற்று உடலில் மார்பிற்குக் குறுக்காக பூணூல் காணப்படுகிறது. இடையில் சோடி சமாந்தரக் கோடுகளால் மடிப்புகள் காட்டப்பட்டுள்ளன. நீண்ட ஆடை இடையில் அணியப்பட்டு இடைக்கச்சினால் இறுக்கி அழகாக முடியப்பட்டு உள்ளதால் உதரம் வெளியே தள்ளப்பட்டுக் காட்சியளிக்கிறது. பாதங்கள் வரை உள்ள ஆடை உடலுடன் ஒட்டிய அமைப்பில் உடல் அழகு சிறப்பாக வெளிப்படும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.
பராக்கிரமபாகு சிலை தொடர்பான கருத்துக்கள்
- ஆதி காலத்தில் இது பராக்கிரமபாகு மன்னனுடையது என பொதுவான கருத்தொன்று நிலவியது. இருந்த போதும் அரசன் ஒருவனுடைய உருவத்தை நிர்மாணிக்கையில் ஆபரணங்கள், உடைகள் என்பன அவரை அடையாளப்படுத்த வேண்டும். இவ்வுருவச் சிலையில் எந்தவித ஆபரணங்களும் காணப்படாததால் இக்கருத்து. இப்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
- இது பொலன்னறுவை காலத்தில் “அமாவத்துர”, “தர்மபீரதீபிக்காவ” எனும் இலக்கிய காவியங்களை உருவாக்கிய “குருளுகோமி” ஞானியுடையது எனும் இன்னொரு கருத்து நிலவுகிறது.
- கைகளில் வேத நூல் ஒன்றை ஏந்தியிருப்பதாகவும், அதனால் இது கபில ரிஷியின் சிலை என்றும் மற்றுமொரு கருத்து நிலவுகிறது.
- செனரத் பரணவிதான அவர்களின் கருத்து அரசனொருவன் தலைகீழாக நுகத்தடியொன்றை ஏந்தியிருக்கிறார் என்பதாகும். இருந்தபோதும் அரசன் ஒருவருடைய அங்க லட்சணங்கள் காணப்படாததால் நுகம் போன்ற அக் குறியீடு தலைகீழாக வைக்கப்பட்டிருத்தல் இக்கருத்துக்கு ஏற்புடையதல்ல.
- பொலன்னறுவைக் காலத்தில் அமைக்கப்பட்ட கல்விகாரை சிலைகள் செதுக்கப்பட்ட அதே நுட்பத்திறன் இதிலும் உபயோகித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
- பொத்குல் விகாரைச் சிலை திட்டவட்டமாக யாருடையது எனக் கூற முடியாது. அது மேன்மையான கதாபாத்திரமொன்றை நிரூபிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட உயர்ந்த வகையிலான ஒரு சிலை என அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.