மொகலாயர் கலை
மொகலாயர் ஓவியக் கலை
இந்தியாவில் மொகலாயர் பேரரசை மையமாகக் கொண்டு கி.பி. 16 – 19 ஆம் நூற்றாண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு கலை மரபாக மொகலாயக் கலை மரபை இனங்கண்டு கொள்ளலாம். மொகலாய ஓவியங்கள் அளவிற் சிறியனவான, சிற்றோவியங்களாகவே (Miniature) காணக் கிடைக்கின்றன. மொகலாயர் ஓவியக் கலை மீது பாரசீக ஓவியக் கலை மரபு பெருமளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. மேலும் அது இந்திய சுதேச ஓவிய பாணிகளின் செல்வாக்கையும் பெற்றுள்ளது. அக்பர் மன்னனின் காலத்தில் இந்துக் கலைஞர்களும் மொகலாய ஓவியங்கள் வரைந்தமையால் இந்து உட்பட வேறு கலை மரபுகளின் செல்வாக்கையும் பெறுவதற்கான பின்னணி உருவாகியது.
மொகலாய ஓவியக் கலையின் வளர்ச்சிக்காக மொகலாயப் பேரரசர்களின் போசிப்பு கிடைத்ததோடு, அது இஸ்லாம் மதத்திலிருந்து விடுபட்டு ஒரு வகை ‘அரச சபை ஓவியங்களாக’ விருத்தியடைந்தன. மொகலாய ஓவியங்களை அக்பர் காலம், ஜஹாங்கீர் காலம், ஷாஜஹான் காலம், அவுரங்கசீப் காலம், மொகலாயருக்குப் பிற்பட்ட காலம் என வெவ்வேறுபட்ட சில காலங்களாகப் பிரித்து நோக்கலாம். மன்னன் அக்பரின் காலத்தில் அவர் தமது இராசதானியின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து வரவழைத்த கலைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ஜஹாங்கீர் மன்னனின் காலமே மொகலாய ஓவியக் கலையின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது. அக்காலத்தில் மொகலாய ஓவியக் கலை ஐரோப்பிய ஓவியக் கலையின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. ஒரு புள்ளித் தூரதரிசனத்தைப் (one point perspective) பயன்படுத்தவும் மொகலாய ஓவியக் கலைஞர்கள் முற்பட்டனர். ஜஹாங்கீர் மன்னனின் காலத்துக்கு முற்பட்ட ஓவியங்கள் சற்றுத் தட்டையான தன்மையைக் காட்டுகின்றன. மொகலாய ஓவியங்களில் பின்வரும் கருப்பொருள்களைப் பெருமளவுக்குக் காணமுடிகின்றது.
- அரசவைக் காட்சிகளும், அரச குடும்பத்தினரது வாழ்க்கையின் சுப நிகழ்வுகளும்
- மன்னர்களின் மிருக வேட்டை
- மன்னர்களின் யுத்தங்களும் படையெடுப்புக்களும்
- மன்னர்களின் மெய்யுருக்கள்
- கற்பனையான கதைகளில் வரும் காட்சிகள்
- விலங்குருவங்கள்
- மலர் வகைகளும் தாவரங்களும்
- வரலாற்றுச் சம்பவக் கதைகள்
மொகலாய ஓவியங்களின் சிறப்பியல்புகளாகப் பின்வரும் விடயங்களை இனங்கண்டு கொள்ளலாம்.
- மொகலாய ஓவியங்கள் அளவிற் சிறியனவாயினும், அவற்றின் ஒவ்வொரு பகுதியும் மிக விரிவாக வரையப்பட்டிருத்தல். (ஆடைகளின் அலங்கரிப்புக்கள் மரங்களின் இலைகள், பிராணிகளின் உடலுறுப்புகள் போன்றவை காட்டப்பட்டிருப்பதை இதற்கான சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
- நீர்வர்ண ஊடகத்தை முதன்மையாகக் கொண்ட ஓவியமரபாக இருத்தல் (opaque).
- ஓவியத்தின் ஒவ்வொரு பகுதி தொடர்பாகவும் குறிப்பாகக் கவனஞ் செலுத்தி நுணுக்கமாக வரையப்பட்டிருத்தல்.
- மனித உருவங்களை வரையும்போது பெரிதும் இயற்கையான வெளிப்பாட்டுத் தன்மை காட்டப்பட்டிருத்தல். இது குறித்த மன்னனின் அல்லது முக்கியத்தரின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதற்குப் பெரிதும் காரணமாகியிருத்தல்.
- பல – புள்ளித் தூரதரிசனத்தைப் போன்றே ஒரு – புள்ளித் தூரதரிசனத்தையும் காணக்கூடிய தாக இருத்தல்; பல – புள்ளித் தூரதரிசனம் காரணமாகப் பக்கத்தோற்ற உருவங்கள் காட்சியளிக்கும் சந்தர்ப்பங்களில் பொய்கை போன்றவை மேலேயிருந்து பார்க்கும்போது தோற்றுமாப்போன்று வரையப்பட்டிருத்தல்.
- பிராணி உருவங்கள் போன்றவை மிகக் கவனமாகக் வரையப்பட்டிருத்தல்.
- ஒட்டுமொத்தப் படச்சட்டகமும் நிரம்பும் வகையில் ஓவியம் வரையப்பட்டிருத்தல். சில உருவப்பட ஓவியங்கள் தவிர ஏனைய காட்சிகளின்போது பிரதான உருவின் ஒட்டுமொத்த உடலும் தெரியும் வண்ணம் வரையப்பட்டிருத்தல்.
- ஆரம்ப கால மொகலாய ஓவியங்கள் சற்றுத் தட்டையான தன்மையைக் காட்டியபோதிலும், பிற்காலத்தில் முப்பரிமாணத்தன்மை வெளிப்படுமாறு ஓவியங்கள் கட்டியெழுப்பப்பட்டிருத்தல்.
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஓவியம் ஒரு சட்டகத்தினால் சூழப்பட்டு அழகிய கரை இடப்பட்டிருத்தல்.
பாபுர் பேரரசனின் பூங்கா அவதானிப்பு (The Emperor Babur observing a garden)
அரச குடும்பத்தினரின் வாழ்க்கைச் சம்பவங்களை எடுத்துக்கூறுவது மொகலாயர் கலையின் பிரதானமான ஒரு பண்பாக அமைவதோடு இந்த ஓவியத்தில் அவ்வாறான ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்வே காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் இரண்டு பகுதிகளாக வரையப்பட்டுள்ளதோடு,
அதன் மேற்பகுதி கற்றூண்களையும் மாளிகையொன்றினையும் உள்ளடக்கிய நிலத்தோற்றக் காட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாபர் பேரரசனின் மாளிகையே அதன் மூலம் காட்டப்படுகின்றது. கற்றூண்களின் ஊடாகக் கீழ்நோக்கிப் பாயும் சிறு நீரோடையொன்றும் உள்ளது. அது அரச பூங்காவின் நடுப்பகுதியூடாகப் பாய்ந்து செல்கிறது. ஓவியத்தின் நடுப்பகுதியில் வெண்ணிற மலர்களைக் கொண்ட ஒரு பூச்செடி காட்டப்பட்டுள்ளதோடு, பேரரசன் அதன் அருகே நின்றவாறு தமது சேவகர்களுக்குப் பூங்காவை அழகுபடுத்துதற்கான அறிவுறுத்தல்கள் வழங்குவதைப் போன்று காட்டப்பட்டுள்ளது. மன்னன் அழகிய அலங்கரிப்புக் வேலைகளால் அழகூட்டப்பட்ட சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளார். பூங்காவில் இடத்துக்கிடம் பல்வேறு தாவர வகைகள், பூஞ்செடிகள் மற்றும் பெறுமதிமிக்க விருட்சங்களைக் காணமுடிவதோடு, அவ்விருட்சங்களைப் பராமரிக்கும் சேவகர்கள் இருவர் பின்னணியில் காட்டப்பட்டுள்ளனர். பாபுர் இனது பின்னால் நிற்கும் சேவகர்கள், மன்னனின் தலைக்கு மேலாக வெய்யில் மறைப்பொன்றினைத் தாங்கி நிற்பதோடு, மன்னனின் அறிவுறுத்தல்களைப் பெறும் சேவகன் மரியாதை செலுத்துவதை உணர்ந்தும் உடல்நிலையுடன் காட்டப்பட்டுள்ளான்.
சற்று உயரத்தே இருந்து அவதானிப்பதைப் போன்றே ஓவியர் இந்த ஒட்டுமொத்த ஓவியத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். எனவே பூங்காவுக்குரிய விவரங்களையும் பின்னணிக்குரிய விவரங் களையும் அதிகமாக உள்ளடக்குவதில் வெற்றி கண்டுள்ளார். ஓவியத்தின் ஒவ்வொரு சிறிய பொருளும் மிகக் கவனத்துடன் வரையப்பட்டுள்ளதோடு, மரங்களின் இலைகள், மலர் வகைகள், உடைகளில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள் போன்றவற்றை நோக்குவதன் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நீர் வர்ண ஊடகத்துக்கே உரிய தன்மைகளுடன், வர்ணங்களின் ஒளி – நிழலை மாற்றி மலர்களையும் புற்றரையையும் கொண்ட நிலத்தை வரைந்திருக்கும் விதத்தின் மூலம் இனங்காண முடிகின்றது. ஒளி பதிந்துள்ள இடங்கள் இள வர்ணத்தினாலும், நிழலான இடங்கள் இருண்ட நிறத்தினாலும் காட்டப்பட்டுள்ளன. வெப்ப வர்ணத்தையும் குளிர் வர்ணத்தையும் கலைஞர் சமனிலையாகப் பயன்படுத்தியுள்ளார்.
அக்பர் நாமா: ‘அக்பர் மன்னனின் தீரச் செயல்’
இந்த ஓவியம் 1586 – 90 காலப்பகுதியில் ‘பஸ்வான்’ எனும் ஓவியரால் வரையப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. காகிதம் மீது நீர் வர்ணத்தில் வரையப்பட்ட ஒரு திகிலூட்டும் செயல் இதன் மூலம் காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தின் பிரதானமான அம்சங்களாக மருண்ட தன்மையைக் காட்டும் இரண்டு யானைகள், அக்பர் மன்னன், சேவகர்கள், ஆறு ஆகியன காட்டப்பட்டுள்ளன. தூரத்தே தெரியும் கோட்டை ஆக்ரா கோட்டை ஆகும். 1561 இல் ஆக்ரா கோட்டைக்கு வெளியே மன்னன் அக்பர் எதிர்கொள்ள நேரிட்ட ஒரு சம்பவமே இந்த ஓவியத்தின் கருப் பொருளாக அமைந்துள்ளது. மன்னன் அக்பருக்குச் சொந்தமான கட்டுப்படுத்த முடியாத ஹாவா’, ‘ரன்பாக்கா’ ஆகிய யானைகளே இங்கு காட்டப்பட்டுள்ளன. மன்னன் அக்பர், ஒரு
குறுக்காக அமைக்கப்பட்டிருந்த படகுப் பாலம், அந்த யானைகளின் நிறை காரணமாக முறியும் சந்தர்ப்பமே இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. யானைகளிரண்டும் வாலை உயர்த்தித் தும்பிக்கைகளைச் சுருட்டி வைத்தவாறு ஓடிச் செல்லும் காட்சியை மிகச் சிறப்பாகவும் நாடக வடிவிலும் காட்டுவதில் ஓவியர் வெற்றிகண்டுள்ளார். கறுப்பு, சாம்பல்நிறம், கபில நிறம் ஆகியவற்றின் வர்ணச் சாயல்கள் மூலம் யானைகளின் முப்பரிமாணத் தன்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பின்னால் இருக்கும் யானையினது முதுகின் மீது இடப்பட்ட சிவப்பு விரிப்பு மீது மன்னர் அமர்ந்துள்ளார். அவர் முன்னே செல்லும் யானையைத் துரத்திச் சென்றுஅதனைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும் விதம் காட்டப்பட்டுள்ளது. யானைகள் ஓவியத் தளத்தில் சாய்வாகக் காட்டப்பட்டுள்ளமையால் அவற்றின் இயக்கத்தன்மையான உடல்நிலைகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த, அரச சேவகர்கள் சிலர் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நீரில் பாயும் விதமும் மற்றும் சிலர் கவிழ்ந்துள்ள படகுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் விதமும் காட்டப்பட்டுள்ளது. மாளிகை அருகே இருப்போரும் கூட குறித்த நிகழ்வைக் கண்டு பதட்டத்துடன் இருக்கும் நிலைமையும் காட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு சற்று உயரமான ஒரு கோணத்திலிருந்து தோற்றுமாப்போன்று வரையப்பட்டுள்ளது. எனவே ஓவியத்தைப் பார்ப்போருக்கு ஒட்டுமொத்த ஓவியமும் நன்கு காட்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்கத்தன்மை கொண்ட உடல்நிலைகளையும் பதட்டமடைந்தோரின் உணர்வு வெளிப்பாடுகளையும் ஓவியர் நன்கு வெளிக்காட்டியுள்ளார். ஓவியத்தின் சகல பகுதிகளும் மிகக் கவனமாக வரையப்பட்டுள்ளமையை இனங்காண முடிகின்றது.
மொகலாயர் கட்டடக் கலை
தாஜ்மகால்
இந்திய மொகலாய கட்டடக் கலைப் படைப்புக்களுள் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக தாஜ்மகால் கருதப்படுகின்றது. ஷாஜஹான் எனும் மொகலாய மன்னன் தனது மனைவியாகிய மும்தாஸ் இனது நினைவாக இதனைக் கட்டுவித்துள்ளார். ஆக்ரா நகரில் யமுனா நதிக்கு அருகே தாஜ்மகால் அமைந்துள்ளது. சலவைக்கல்லினால் அமைக்கப்பட்டுள்ள அழகுமிக்க ஒரு கட்டடமாகிய தாஜ்மகால் கண்கவர் பூங்காவொன்றினையும் கொண்டமைந்துள்ளது. மன்னன் ஷாஜஹான் 1632 இல் தனது மனைவியாகிய மும்தாஜின் நினைவாக இதனை நிர்மாணிக்கும் பொறுப்பைக் கட்டடக் கலைஞரிடம் ஒப்படைத்தார். உஸ்தாத் ஈசா என்பவரே இதனை நிர்மாணித்த கட்டடக் கலைஞராகக் கருதப்படுகின்றார். மத்தியில் அழகிய கோள வடிவ கும்மட்டம் (Dome) அமையுமாறு இக்கட்டடம் திட்டமிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் கட்டட நிர்மாணக் கலையின் பிரதானமான ஒரு பண்பாகும். கட்டடத்தின் நான்கு மூலைகளிலும் உயரமான நான்கு தூண்களில் அமைந்த நான்கு உத்திரங்கள் உள்ளன. தாஜ்மகாலினுள் பிரவேசிப்பதற்காகப் பாரிய வில்வளைவும் நுளைவாயில் ஒன்றும் உள்ளது. அதன் இரு மருங்கிலும் அதே மாதிரியமைப்பைக் கொண்ட இரண்டு சிறிய திறவல்கள் உள்ளன. நடுக்கோட்டினால் இக்கட்டடத்தைச் சமச்சீரான இரண்டு பகுதிகளாகப் பிரிக்கத்தக்கதாக இருபக்க அங்கங்களும் சமநிலையாக இடப்பட்டுள்ளன. தாஜ்மகாலின் மொத்த உயரம் 240 அடி (73 மீற்றர்) ஆகும். இங்கு ஓவியங்களோ சிற்பங்களோ காணப்படவில்லையெனினும் அழகிய அலங்கார வேலைப்பாடுகளையும் அட்சரக்கோலங்களையும் கொண்ட சட்டகங்களையும் காண முடிகின்றது. இந்த வெண்ணிறக் கட்டடத்தின் முன்னே அழகிய நீர்த்தடாகம் உள்ளது.