பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த சிறப்பான கட்டடக் கலைப் படைப்புக்கள்
கி.பி. 11ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டடங்கள் பலவற்றின் எச்சங்கள் பொனறுவைப் பழைய நகரப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. அனுராதபுர இராசதானியிற் போன்று பரந்து விரிந்த ஒரு பிரதேசத்திலன்றி. ஒழுங்காக அமைக்கப்பட்ட ஒழுங்கமைந்த நகரத் தொகுதியொன்றில் இவற்றைக் காணக்கூடியதாக இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இலங்கையில் காணப்பட்ட சமய மற்றும் அரச கட்டடங்களின் தன்மையையும் பரம்பலையும் விளங்கிக் கொள்வதற்கு பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த இடிபாடுகளாகக் காணப்படும் கட்டடங்கள் பெரிதும் துணையாக உள்ளன.
பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த சமயக் கட்டட நிர்மாணிப்புக்கள்
சமயஞ்சார்ந்த கட்டட இடர்பாடுகளே பொலனறுவையில் அதிக அளவில் காணப்படுகின்றன. சமயம் சார்ந்த அக் கட்டடங்களையும் இரண்டு பகுதிகளாக வகுத்துக்காட்டலாம். அவற்றுள் ஒரு வகை இந்து சமயம் சார்ந்த கட்டடங்களாகும். மற்றையது பௌத்த சமயம் சார்ந்த கட்டடங்கள் ஆகும். எண்ணிக்கை அடிப்படையில் பௌத்த சமயக் கட்டடங்களே அதிகமாக உள்ளன. திட்டமிட்டு ஒழுங்காகக் கட்டியெழுப்பபட்ட பொலனறுவை நகரத்திட்டத்தில் அடங்கியிருந்த பௌத்த சமயம் சார்ந்த கட்டடங்களுள், தலதா வளாகம் (அட்டதாகே, ஹட்டதாகே, நிஸ்ஸங்கலதா மண்டபம், ஏழுமுடி மாளிகை, தூபாராமை, வட்டதாகே), திவங்க (மூவளைவு) சிலைமனை, லங்காதிலக, ஆலாகனைப் பிரிவேனா, பெத்குல்விகாரை (நூலக விகாரை), உத்தராராமய (கல்விகாரை) ஆகியன முதன்மையானவை.