தாராதேவி / மாலா தாரா
மன்னார் மாவட்டத்தில் மன்னார் துறைமுகப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இப்பெண் தேவதை உருவம் 5.4 சென்ரிமீற்றர் உயரமானது. வெள்ளி கலந்த உலோகத்தினால் திண்ம வார்ப்பு முறையில் ஆக்கப்பட்டுள்ளது. இத்தேவதை உருவம் வீராசனத்தில் அமர்ந்துள்ளதோடு, உடலும் தலையும் இடப்புறம் சாய்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. எனினும் இத்தேவதை அதற்கு எதிர்புறமாக அதாவது வலப்புறமாகக் கண்பார்வையைச் செலுத்தியுள்ள நிலை காட்டப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான உடல்நிலையும் காட்டும் அபிநயமும் பூஜா தாராதேவி எனப்படும் விசேட பௌத்த தேவதைக்கே உரியனவாகும். இந்தப் பூஜா தாராதேவி தேவதைகளுள் ஒன்று மாலா தாரா தேவி என, அதாவது வஜ்ர மாலாதேவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேவதை மாலையுடனேயே காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான பூமாலை தாங்கிய உருவ வேலைப்பாடுகளை இந்தியாவின் மத்திய காலக் கலையினுள் இந்தோனேசிய கலையிலும் பெரிதும் காணலாம்.
நெகிழ்ச்சியான கயிறு/வடம் போன்றதொன்றினால் கைகளில் ஏந்தியுள்ள இந்த வெண்கல விக்கிரகத்தில் உள்ள அக்கயிறு ஒரு பூமாலையாகும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்றும் சிலர் அது ஓர பாம்பு எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். எதுவென இனங்காண முடியாதெனினும் நெகிழ்ச்சியான ஒரு பொருளைக் கையில் ஏந்தியுள்ள இந்த உரு அழகுமிக்கது. சோர்டர் இந்த உருவத்தை ஆர்ய ஜங்குலி எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் உள்ள ஜடா மகுடமானது, காதுக்குப் பின்னால், கட்டித் தொங்கும் நாடாக்கள் போன்று காட்டப்பட்டுள்ளது. அந்நாடாக்கள் பின்புறத்தே ஒன்று சேர்க்கப்ட்டுள்ளன. முக்கோண வடிவத்தில் மேல் நோக்கிப் பரம்பியுள்ள ஜடா மகுடத்துக்குக் கீழே நெற்றிப் பட்டையொன்று உள்ளது. கர்ணபரணம் ஒரு மகர குண்டலமாகும். கழுத்துமாலையானது நெற்றிப் பட்டைக்கு ஒப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கைகளில் புய ஆபரணங்களும் கால்களில் சலங்கையும் அணியப்பட்டுள்ளது. உடலின் மேற்பகுதியில் ஆடை கிடையாது. ஆபரணங்களும் கிடையாது. உடலின் கீழ்ப்பகுதி மெல்லிய உடையினால் மறைக்கப்பட்டுள்ளது.