நடராஜர் சிலை
நடராசர் என்பது சிவனின் அதாவது ஈசுவரனின் ஒரு வடிவமாகும். தலைமுடியை விரித்து நடனமாடும் நிலையே நடராசர் சிற்பத்தினால் காட்டப்படும் தன்மையாகும். நடனத்தின் அதிபதி அதாவது ‘நடராசர்’ என சிவ தெய்வத்தைக் குறிப்பிடுவதில் தமிழ்ச் கலைஞர்கள் விருப்புக் காட்டியுள்ளனர். இவ்வுருவத்தில் நான்கு கைகள் உள்ளன. பின்னால் அமைந்த வலது கையில் உடுக்கும் பின்னால் அமைந்த இடது கையில் தீச்சுடர்களைக் கொண்ட ‘ஒரு பாத்திரமும் உள்ளன. முன்னால் அமைந்த வலது கையினால் அபய முத்திரையும், சந்தத்தக்கு இசைவாக கீழ்நோக்கி அமைந்த முன்னால் அமைந்த இடது கையினால் கஜஹஸ்த முத்திரையும் காட்டப்பட்டுள்ளன. வலது புற கேசச் சுருளில் நாக கன்னிகை வடிவில் கங்காதேவியன் உடலும், இடதுபுற கேசச் சுருளில் நாகவுருவொன்றுடன் பிறைச்சந்திர உருவும் காட்டப்பட்டுள்ளன. கேசத்தினால் கங்கை நதி காட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஜடா மகுடத்தில் (தலையணியில்) மனித மண்டையோடொன்றும் அதன் மீது ஒரு விசிறியும் அமைந்துள்ளன.
இடது கால், நடனப் பாங்கில் சந்தத்துக்கிசைவாக முன்னோக்கி உயர்த்தப்பட்டுள்ளது. வலது பாதத்தினால் மிதித்துக்கொண்டிருக்கும் குள்ள (வாமன) உருவம் அறியாமையைக் குறித்து நிற்கின்றது. பின் வலது கையில் உள்ள உடுக்கு, அகிலத்தின் ஆக்கத்தையும் பின் இடது கையில் உள்ள தீச்சுடர் அகிலத்தின் அழிவையும் காட்டிநிற்கின்றன. நெற்றியில் முத்து மாலையொன்று உள்ளது.
இடது புறக்காதில் பெண்கள் அணியும் தோடு உள்ளது. வலது புறக்காதில் ஆண்கள் அணியும் காதணி உள்ளது. இது வாலிபத்தையும் வலிமையையும் குறித்துநிற்கும் ஒர கலைப்படைப்பாகும்.
அடிப்பகுதியுடன் வெவ்வேறாக இணைக்கப்பட்ட ஒளிவட்டங்கள் (திருவாசி) உள்ளன. தேவ உருவங்களைச் சூழவுள்ள இந்த ஒளிவட்டம், தீச்சுடர் மாலை போன்று அமைந்துள்ளது, இது வட்டவடிவமானது. எனினும் பெரும்பாலான சிற்பங்களில் இது வில் வளைவு வடிவத்தில் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. ஒளிவட்டத்தின் இரண்டு அந்தங்களும் விக்கிரகம் தாபிக்கப்பட்டுள்ள மேடைமீது அமைந்துள்ள இரண்டு மகர வாய்களிலிருந்து ஆரம்பித்துள்ளன. நடராசர் சிலையை வெண்கலச் சிற்பக்கலையின் தனிச்சிறப்பான ஒர படைப்பாகக் குறிப்பிடலாம். இதனை ஆக்குவதற்காக வெண்கல திண்ம வார்ப்பு நுட்பமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுப் புடைப்புப் பண்புகளைக் கொண்ட ஒரு படைப்பாக்கமாகும். இச்சிற்பத்தின் சமநிலையைப் பேணத்தக்கதாக சிற்பக்கலைக் கோட்பாடுகள் கையாளப்பட்டுள்ளன.
A – கங்கை எனும் நதியைக் குறிக்கும் கேசம்
B – அகிலத்தைப் படைத்ததைக் காட்டும் பின் வலது கையில் உள்ள உடுக்கி
C – முன் வலது கையால் காட்டும் அபய முத்திரை
D – நாகம்
E – கீழே தொங்கும் இடது கையினால் காட்டும் கஜஹஸ்த முத்திரை
F – மேலே உயர்த்தி வைத்துள்ள இடது கால்
G – சந்திரன்
H – மூன்றாம் / கண் நெற்றிக்கண்
I – பெண்கள் அணியும் தோடு
J – அகிலத்தின் அழிவைக் காட்டும் தீச்சுடர்
K – வலது காலினால் மிதித்திருக்கும் அறியாமை எனும் குள்ள உருவம் (முயலகன்)