கட்டடங்களின் வாயிற் பகுதி அங்கங்கள்
இலங்கையின் பண்டைய கட்டடங்கள் சார்ந்தவையாகக் காணப்படும் நுழைவாயில்கள் சிறப்பான கலைத்துவ அம்சங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. மதம்சார்ந்த மதம் சாரா கட்டடங்களில் சந்திரவட்டக்கல், காவற்கல், கொரவக்கல் படிவரிசை ஆகியவற்றோடு இணைந்ததாக வாயிற்பகுதி அங்கங்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இவ்வாயில் அங்கங்கள் எளிமையானவையாகக் காணப்பட்டன. பின்னர் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகளைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டன. இப்பகுதிகள் கட்டடத்தின் அழகுக்காக மட்டுமன்றி, கம்பீரமான தோற்றத்துக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியக் கட்டடக் கலைஞர்களை விட சிறப்பானவாறும் கலைத்துவமுடையவாறும் திட்டமிடப்பட்டுள்ள இந்த வாயில் அங்கங்கள், இலங்கைக் கட்டடக் கலையின் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகும்.