செய்தித்தாள் காட்டூன் கலைஞர்கள்
- செய்தித்தாள்களை மையமாகக் கொண்டு உருவாகிய சிறப்பான ஒரு படைப்பாக்கக் கலையே கருத்துப்படச் (காட்டூன்) சித்திரக் கலையாகும் (cartoon).
- செய்தித்தாள்களில் கருத்துப்படச் (காட்டூன்) சித்திரத்திற்கு சிறப்பான இடம் காணப்படு கிறது. சிலபோது செய்தித்தாள்களில், ஆசிரியர் தலையங்கத்தை விடவும் கூடுதலான முக்கியத்துவம் கருத்துப் (காட்டூன்) படத்துக்கு வழங்கப்படுவதுண்டு.
- பெருமளவு சொற்களைப் பயன்படுத்திக் கூற வேண்டிய பல கருத்துக்கள் கருத்துப் (காட்டூன்) படமொன்றின் மூலம் இலகுவாக வெளிப்படுத்தப்படும்.
- நடப்புச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு குறைபாடுகளை விகட உணர்வுடன் விவரணப்படுத்துவதே கருத்துப் (காட்டூன்) படத்தின் குறிக்கோளாகும்.
- எவரும் கிரகிக்கத்தக்கதாக இருத்தல் என்பது கருத்துப் படங்களின் சிறப்பியல்பாகும்.
- கருத்துப் படங்களின் வெற்றியும் கவர்ச்சியும், அதில் கலந்துள்ள விகடத் தன்மையின் வலிமையிலேயே தங்கியிருக்கும்.
- உருவங்களின் செயற்பாடு விகடத்தன்மை என்பன வெளிப்பாட்டின் மீது பங்களிக்கும் அம்சங்களாகும்.
- சமூக, அரசியல் நிலைமையை விவரணப்படுத்தும்போது அதற்காகக் குறித்த தனியாள் களின் நடத்தைக் கூறுகளை, கருத்துப் (காட்டூன்) படங்கள் மூலம் மிகச் சிறப்பாக வெளிக் காட்டலாம்.
- சம்பவங்களை எடுத்துக்காட்டுவதற்காக மொழியைப் பயன்படுத்தும் விதமும் வேறுபட்ட தாகும்.
- இலங்கைக் கருத்துப் (காட்டூன்) படப் படைப்பாக்கத்துறையின் முன்னோடிக் கலைஞர் களுள் ,
♦ ஓப்ரி கொலற்
♦ ஜிஃப்ரி யூனூஸ்
♦ டபிள்யூ. ஆர். விஜேசோம
♦ கமிலஸ் பெரேரா
♦ சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்)
ஆகியோர் குறிப்பிடத்தக்க சிலராவர்.
ஓப்ரி கொலற்
- இலங்கைச் செய்தித்தாள் கருத்துப் (காட்டூன்) படக் கலையின் முன்னோடியாக ஓப்ரி கொலற் கருதப்படுகின்றார்.
- சமூக, பொருளாதார துறைகளை விகடத்துக்கு உள்ளாக்கும் வகையில் கருத்துப் (கார்டூன்) படங்கள் படைத்த கலைஞர் இவர் ஆவார்.
- ஓப்ரி கொலற் முதன் முதலாக 1945 இல் த ரைம்ஸ் ஒப் சிலோன் (The Times of Ceylon) எனும் செய்தித்தாளுக்கு கருத்துப் (காட்டூன்) படம் வரைந்துள்ளார்.
- ஓப்ரி கொலற் 43 குழுவைச் சேர்ந்த ஒரு கலைஞர் ஆவார்.
- அவர் வரைந்த 43 ஆம் குழுவின் உறுப்பினர்களைக் காட்டும் கருத்துப் (காட்டூன்) படம் மிகச் சிறந்த ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
ஜிஃப்ரி யூனூஸ் (1932 – 2003)
- கலைஞர் ஓப்ரி கொலற் வழிகாட்டலுடன், அரசியல் கருத்துப் படக் கலைத்துறைக்கு வந்த காத்திரமான ஒரு காட்டூன் படக் கலைஞராக யூனூஸ் விளங்குகிறார்.
- தொடக்கத்தில் “அத்த” எனும் சிங்களச் செய்தித்தாளில் பணியாற்றிய அவர் பிற்காலத்தில் “ராவய” எனும் சிங்கள மொழிச் செய்தித்தாளில் பணியாற்றினார்.
- அவரால் படைக்கப்பட்ட சுவாரசியமான காட்டூன் படப் பாத்திரம் “அப்புஹாமி” ஆகும்.
டபிள்யூ. ஆர். விஜேசோம (1925 – 2006)
- 1930 களின் ஆரம்பத்திலிருந்து காட்டூன் படக் கலைத்துறையில் பிரபல்யம் பெற்ற ஒரு கலைஞர் விஜேசோம ஆவார்.
- 1950 ஆம் தசாப்தத்தில் ‘தரைம்ஸ் ஒப் சிலோன்’ (The Times of Ceylon) எனும் செய்தித்தாளில் காட்டூன் படங்களை வெளியிட்டு புகழ் பெற்றிருந்தார்.
- அவர் ”புஞ்சி சிஞ்ஞோ ” எனும் பெயரில் படைத்த காட்டூன் படங்கள் பொதுமக்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தன.
- தேசிய உடை தரித்தவராக தொடக்கத்தில் படைக்கப்பட்ட ‘புஞ்சி சிஞ்ஞோ’ பாத்திரம் படிப்படியாக உடல் மெலிந்து முள்ளுந் தோலுமாகி கந்தல் உடை அணிந்து இறுதியில் இன்றைய வாழ்க்கை நிலையை நினைவூட்டுவதாக உள்ளது.
கமிலஸ் பெரேரா (1939)
- இவர் சமகால காட்டூன் படக் கலைஞர்களுள் ஜனரஞ்சகமான ஒரு கலைஞராவார்.
- இவர் படைத்த ஜனரஞ்சகமான பல கருத்துப்படப் பாத்திரங்கள் உள்ளன.
- அவற்றுள் ‘கஜமேன்’ பாத்திரம் மிகப் பிரபல்யமானது.
- அதுதவிர சிரிபிரிஸ், தக்கொத் பத்மாவதி, மகோடிஸ் துமா, பட்டோ, டிக்கா, தொங்சேதங், சிமோனா, லபயா, கொட்டிங் அய்யா, ஸ்வீட்டீ, செல்லங்சேன போன்றவை பெரிதும் பிரபல்யம் பெற்றுள்ளன.
சி. சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) 1924 – 1996
- 1924 – 1996 வரையில் வாழ்ந்த சி. சிவஞானசுந்தரம் பிரபல்யம் வாய்ந்த தமிழ்க் கருத்துப் (காட்டூன்) படக் கலைஞராகக் கருதப்படுகின்றார்.
- அவர் சித்திரக்கலை தொடர்பாக பம்பாய் சேர். ஜே. ஜே. கலைக்கல்லுரியில் (Sir J. J. School of Arts) பயிற்சி பெற்றார்.
- இந்தியாவில் இருந்த காலத்தில், திரு. ராஜா ரவிவர்மா அவர்களிடம் சித்திரம் வரைவதில் பயிற்சி பெற்றார்.
- அவர் ‘லோக்கசத்த’ எனும் மராட்டிய மொழிச் செய்தித்தாள், பிலிட்ஸ் (Blitz), கொன்ச் (Conch) ஆகிய ஆங்கிலச் செய்தித்தாள்கள், பல தமிழ்ச் செய்தித்தாள்களிலும் காட்டூன் படக் கலைஞராகச் செயற்பட்டுள்ளார்.
- 33 வருட காலம் சிரித்திரன்’ எனும் செய்தித்தாளை வெளியிட்டதோடு, அச்செய்தித் தாளுக்குக் காட்டூன் படங்கள் வரைந்தமையால், சிரித்திரன் சுந்தர்’ எனும் பெயரில் பிரபல்யமடைந்தார்.
- அவரால் படைக்கப்பட்ட சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான் போன்ற பாத்திரங்கள் ஜனரஞ்சகமானவை.
பயிற்சி வினாக்கள்
1. இலங்கைக் கருத்துப் (காட்டூன்) படப் படைப்பாக்கத்துறையின் முன்னோடிக் கலைஞர்கள் ஐவரைத் தருக?
2. 43ம் குழுவைச் சேர்ந்த காட்டூன் கலைஞர் யார்?
3. “அப்புஹாமி” என்னும் காட்டூன் சரிதையை வரைந்தவர் யார்?
4. ‘புஞ்சி சிஞ்ஞோ” எனும் பெயரில் படைத்த காட்டூன் படங்கள் வரைந்த கலைஞர் யார்?
5. “கஜமேன்” என்னும் காட்டூன் சரிதையை வரைந்தவர் யார்?
6. காட்டூன் கலைஞர் சி.சிவஞானசுந்தரம் வெளியிட்ட செய்தித்தாள் எது?
பின்வரும் காட்டூன் சித்திர காதாப்பாத்திர பெயர்களையும் அவற்றை வரைந்தவர்களையும் குறிப்பிடுக.