சாரணாத் புத்தர்சிலை
குப்த காலத்தில் சாரானாத் பள்ளியினால் ஆக்கப்பட்டுள்ள சாரானாத் புத்தர் சிலை மிக உன்னதமான ஒரு கலைப் படைப்பாகும். சூனார் என்னும் பிரதேசத்திலிருந்து பெற்ற ஒரு வகை முருகைக்கல்லினால் இது ஆக்கப்பட்டுள்ளது. சிலையின் வெளிப்புறத்தின் அமைப்பு முக்கோண வடிவத்தைக் கொண்டுள்ளதுடன் , ஒளிவட்டத்தினுடைய வட்டத் தன்மையும் ஆசனத்தின் செவ்வக வடிவமும் இச்சிலையில் சமநிலைத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இது 05 தாளம் உயரமுடையது. இச்சிற்பக் கலைஞர்கள் புத்தர் சிலை செதுக்குவதற்குரிய அளவுப் பிரமாணங்கள் தொடர்பான நூல்களைக் கற்றிருந்தனர் என்பது இதிலிருந்து புலனாகின்றது.
பத்மாசன முறையில் அமர்ந்து காணப்படும் இச்சிலையின் கைகளால் தர்மச்சக்கர முத்திரை காட்டப்பட்டுள்ளன. பரணஸ், இசிபத்தனயின் மிகதாயில், ஐந்து சீடர்களுக்குப் புத்தபெருமான் தர்ம போதனை செய்யும் சந்தர்ப்பமே இதன் கருப்பொருளாக அமைந்துள்ளது. இச்சிலையின் முகம் நீள்வட்ட வடிவமுடையது. சுருண்ட கேசமுடைய உஸ்னிசவுடன் தலை காணப்படுகிறது. பாதி திறந்த கண்கள், வில்போன்ற இமைகள், மாம்பழ வடிவமுடைய, பூரித்த உதடுகள் ஆகியன புத்த பெருமானின் கருணை, அன்பு, இரக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவுள்ளது. சற்றுச் சாய்வான தோற்றங்களைக் கொண்ட உடலின் மேற்பகுதி எடுப்பான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.
இரு தோள்களும் மூடப்பட்ட நிலையில் காட்டப்பட்ட காவியுடை மடிப்புகளின்றி மெல்லியதாகக் காணப்படுகின்றது. உடல் ஊடுருவித் தெரியுமாறு செதுக்கப்பட்டுள்ள போதிலும் தசைகள் காட்டப்பட வில்லை. எனினும் உடல் அழகு தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது, கைகளால் காட்டப்பட்டுள்ள தர்ம சக்கர முத்திரையும் பாதம் அமைக்கப்பட்டுள்ள பத்மாசன முறையும் காவியுடையின் எளிமை காரணமாக முன்னிறுத்தப்பட்டுள்ளன. உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களின் மென்மைத் தன்மையைக் காட்டுவதற்காக கலைஞன் எடுத்துள்ள முயற்சி இதனூடாகப் புலப்படுகின்றது. சாரானாத் புத்தர் சிலையின் நுணுக்கமான செதுக்கல்களைக் கொண்ட ஒளிவட்ட மானது அச்சிலையின் எளிமையான தன்மையுடன் இழையமைப்பு ரீதியில் சமநிலைத்தன்மையைப் பெறுவதோடு அழகியல் இரசனையையும் வெளிப்படுத்துகின்றது.
இச்சிலையின் மேலே ஒளிவட்டத்தின் இருபுறங்களிலும் இரண்டு தேவ உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் புத்த பெருமான தேவாதிதேவன் என்பது காட்டப்பட்டுள்ளதோடு சிலையின் சமநிலைத் தன்மையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. சாரானாத் புத்தர் சிலையில் ஆசனத்தின் மத்தியில் தர்மச் சக்கர குறியீடு காட்டப்பட்டுள்ளதோடு, அதன் இருபக்கங்களிலும் ஆறு உருவங்கள் சமநிலையாக அமையுமாறு ஆக்கப்பட்டுள்ளன. பரணாஸ், வாரனசி, இசிபத்தன மிகதாய என்பதனைக் குறியீடாகக் காட்டுவதற்கு மான் உருவங்கள் இரண்டும் செதுக்கப்பட்டுள்ளதோடு குழந்தை உருவம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ளோர் ஐந்து பக்தர்கள் ஆவர் என விமர்சகர்கள் அனுமானிக் கின்றனர். எனினும் பெண் உருவமும் சிறு பிள்ளை உருவமும் யாருடையவை என்பது பற்றிய கருத்து விளக்கங்கள் கிடையாது.