கிரேக்க சிற்பக்கலை

கிரேக்கப் பண்பாடு மனிதனை மையமாகக் கொண்டு உருவாகியதாகும். அதாவது மனிதனின் இருப்பை மையமாகக் கொண்டே அகிலத்தின் சகல விடயங்களும் செயற்படுதல் வேண்டுமென கிரேக்கர்கள் கருதினர். இதனை அவர்கள் மானிடவாதம் எனக் குறிப்பிட்டனர். ஆரோக்கியமான தெளிவான மனமும், கூடவே ஆரோக்கியமான எடுப்பான உடலும் இருத்தலே உயர்வானது எனக் கருதிய பண்பாட்டையே அவர்கள் கொண்டிருந்தனர். இப்பண்புகளை அவர்களது சிற்பக்கலைப் படைப்புக்களிலும் காண முடிகின்றது. நிர்வாண மேனியுடன் மனித உருவங்களை உருவாக்குதல் கிரேக்க சிற்பக்கலையின் முதன்மையான ஒரு பண்பாகும். கிரேக்க தேவமண்டலக் கதைகளும் பாத்திரங்களுமே அவற்றுக்கான விடயப் பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளன. மட்பாண்டக் கலையின் அளவுக்கு விருத்தியைக் காட்டாத போதிலும் தொல்சீர் காலத்தில் சிற்பக்கலையில் படிப்படியான வளர்ச்சியைக் காண முடிகின்றது. கி.மு. 650 ஆகும்போது கிரேக்கக் கட்டடக்கலையிற் போன்றே. சிற்பக்கலையிலும் எகிப்தியச் செல்வாக்கைப் பெற்று, மிகக் குறுகிய காலத்திலேயே தமக்கேயுரித்தான ஒரு பாணியில் சிற்பக்கலையை இசைவுபடுத்திக் கொண்டுள்ளனர். கிரேக்கக் கலைஞர்கள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே சலவைக்கற் பயன்பாட்டிலும் இயல்பான அளவிலேயே (Lite Size) சிற்பங்களை வடிப்பதிலும் திறமைகாட்டியுள்ளனர்.

தொன்மைக் காலத்தைச் சேர்ந்த சிற்பக்கலைப் படைப்புக்கள்

கிரேக்க சிற்பக்கலையின் ஆரம்ப காலப் படைப்புக்கள், ‘கொரே, ‘குரே ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. ‘கொரே’ என்பது ஆடையணிந்த நிற்கும் நிலைப் பெண் உருவத்தைக் குறிப்பதோடு, ‘குரே’ என்பது நிர்வாண மேனியுடன் நிற்கும் நிலை ஆண் உருவத்தைக் குறிக்கின்றது. எகிப்திய படைப்பாக்கங்களில் காணப்படும் நேர்நிமிர்ந்த தன்மையையும் ஒரு காலைச் சற்று முன்னோக்கி வைத்திருப்பதையும் இப்படைப்பாக்கங்களிலும் காணலாம். பொதுவில், இத்தொல்சீர் காலச் சிற்பங்கள் – கேத்திரகணித மற்றும் மோடி சார்ந்த இயல்புகளைக் கொண்டமைந்துள்ளன.

கொரே’ எனப்படும் பெண் உருவங்களுள் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட உருவம் கி.மு. 630 காலத்தைச் சேர்ந்தது. அது தொன்மைக் காலத்தின் தொடக்கக் கால கட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்பமாகும். இது இயக்கத்தன்மையேதுமற்ற, நேராக முன்னோக்கி நிற்கின்ற சமச்சீரான உடற் பண்புகளைக் கொண்ட ஒரு படைப்பாகும். இதனை ஒத்த இயல்புகளைக் கொண்ட எனினும், ஆடையில் மடிப்புகளையும் தலையில் சுருட்டைகளில் தொங்கும் தன்மையையும் கொண்ட ஆக்கங்களைச் செய்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக குரோஸ் சிற்பமாகிய சியோஸ் எனும் கி.மு. 520 காலப்பகுதியைச் சேர்ந்த படைப்பாக்கத்தைக் காண முடிகின்றது.

இதனை ஒத்த இயல்புகளைக் காட்டும் ‘குரோஸ் (Kourse) எனும் ஆண்சிற்பங்களுள் மிகப் பழைமைவாய்ந்த ஆக்கம் கி.மு. 620-6000 காலப்பகுதியைச் சேர்ந்ததாகும். ‘மெற்றோப்போலியன்’ அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஆண் உருவத்தினால் தொழிற்பாடற்ற நேராக முன்னோக்கிய தன்மையே காட்டப்படுகின்றது. இதனை ஒத்த தன்மைகள் உள்ள எனினும், உயிரோட்டமான தன்மையையும் பயில்நிலைத் தன்மையை விஞ்சிய நிலையிலான ஒரு ‘குரோஸ்’ சிற்பமாக எதன்ஸ் அரும்பொருளகத்தில் உள்ள கி.மு. 540-520 காலப்பகுதியைச் சேர்ந்த சிற்பப் படைப்பாக்கத்தைக் குறிப்பிடலாம்.

எகிப்தியச் சிற்பக்கலையின் முதன்மையான ஓர் இயல்பாகிய ஒரு காலை முன்வைத்து, கைகளிரண்டையும் தொங்கவிட்டு, நேராக முன்னோக்கி நிற்கும் சமச்சீரான உடல்நிலை இயல்புகளை இந்த குரோஸ் சிலைகளில் தெளிவாகக் காண முடிகின்றமை ஒரு சிறப்பியல்பாகும். எனினும், ஆரம்ப காலம் தொடக்கம் ஈஜியன் சிற்பக்கலைப் படைப்புக்களில் காணப்படாதிருந்த கிரேக்கத்துக்கு உரித்தான சில இயல்புகளையும் காண முடிகின்றது. எகிப்திய சிற்பங்கள் எப்போதும் பின்புறத்தே ஆதாரமாக அமைந்த கற்பாளமொன்றுடனேயே ஆக்கப்பட்டுள்ளன. இக்கற்பாளத்திலிருந்து சிற்பம் முற்றுமுழுதாக சுயாதீனப்படுத்திக் காட்டப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது, இதற்கமைய, எகிப்திய சிற்பங்களை முழுப்புடைப்புச் சிற்பங்களாகவும் கிரேக்கச் சிற்பங்களைச் வட்டச் சிற்பங்க ளாகவும் வேறுபடுத்திக் காட்டலாம். இவற்றுள் கிரேக்கர்களுக்கு மாத்திரமே உரித்தான ஒரு கலைப்பண்பாகிய நிர்வாண தன்மையை ஆரம்பகால முதலே சிற்பங்களில் காணமுடிகின்றது. மேலும் முகத்தில் புன்னகை சேர்க்கப்பட்டுள்ளமையையும் காணமுடிகின்றது. கிரேக்க சிற்பக் கலையின் ஆரம்ப முதலே நிர்வாண ஆண் சிற்பங்கள் பெருமளவுக்குப் படைக்கப்பட்டனவாயினும் தொன்மைக்காலம் முடிவடையும் வரையில் நிர்வாணப் பெண் சிற்பங்களை அவர்களால் உருவாக்கப்படாமை கவனத்துக் குரிய விடயமாகும். மேலும் இச்சிற்பங்கள் யாவும் சலவைக்கல்லினால் செய்யப்பட்டவையாகும்.

தொல்சீர் காலத்தைச் சேர்ந்த சிற்பக்கலைப் படைப்புக்கள்

கிரேக்கத்தில் சிற்பக்கலையானது மிகக்குறுகிய காலத்துள் விருத்தியடைந்தபோது சிற்பக் கலைஞர்கள் வெவ்வேறு உடல்நிலைகளைக் கொண்ட இயக்கநிலை மனித உருவங்களை உருவாக்கினர். மேலும் தொல்சீர் காலத்தின் ஆரம்பத்திலேயே எதன்ஸை முதன்மையாகக் கொண்ட கிரேக்கக் கூட்டரசானது, சனநாயக ஆட்சிமுறையொன்றுக்கு இசைவடைந்திருந்தது. இச்சமூக, அரசியல் மாற்றமானது, கிரேக்கச் சமூகத்தில் சிற்பக்கலைப் படைப்பாக்கங்களிலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

கி.மு. 480 நூற்றாண்டளவில் மனித உருவைச் சிற்பமாக வடிக்கும்போது தொன்மைக் கிரேக்கக் காலங்களில் காணப்பட்ட சமச்சீரான விறைப்பான உடல்நிலையை முற்றுமுழுதாக நீக்கி அதற்குப் பதிலாக சந்தத்துக்கு இசைவான விறைப்புத்தன்மையற்ற புதிய உடல் நிலைகள் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய உடலின் நடுக்கோட்டை ‘S” வடிவத்தில் (சற்று S வடிவத்தில்) இடும் நுட்பமுறை அறிமுகஞ் செய்யப்பட்டு, அதற்கமைய மனித உடலின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறான S வடிவத்தை ஏற்படுத்துவற்காக ஒரு காலின்மீது மாத்திரம் உடலின் பாரம் தாங்கப்பட்டுள்ளதோடு, அதன் விளைவாக முழங்கால், இடுப்பு, தோள் ஆகிய இடங்கள் சற்று வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இது தொன்மைக்காலச் சிற்பங்களில் காணப்படாத, எனினும் தொல்சீர் காலச் சிற்பங்களில் மாத்திரமே காணப்படும் ஓர் இயல்பாகும். இந்த S வடிவத்தினை நுட்பமுறையானது பிற்கால இத்தாலியப் பதப் பிரயோகமான கொந்த்ரோபொஸ்ரோ (Cotropposto) எனும் பெயரால் வழங்கப்படுகின்றது. இந்த கொந்த்ரோபொஸ்ரோ நுட்பமுறையின்படி, உடலை அமைக்கும்போது அச்சிற்பம் உயிர்த்துடிப்பான தன்மையைப் பெறுகின்றது. அக்கால கிரேக்கக் கலைஞர்கள், உயிருள்ள பொதுவான மனித உருவத்தையே தமது மாதிரி உருவங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறான இயற்கைவாதப் பாணியைச் சேர்ந்த கலைப்படைப்புக்கள் ஒரு புறத்தே இலட்சியத் தன்மையும் (Ideal) கொண்டமைந்தன. முழுமையான அழகும் எடுப்பான தன்மையும் இக்கலைப்படைப்புக்களில் வெளிக்காட்டப்படுகின்றமையே அதற்கான காரணமாகும் என்பதை இனங்காண முடிகின்றது. இப்பண்புகள் தொல்சீர் கலைப்பண்புகள் எனப்படுகின்றன. எனவே இப்பண்புகளைக் கொண்ட சிற்பங்கள் கிரேக்க தொல்சீர்காலத்தைச் சேர்ந்த சிற்பங்களாகக் கருதப்படுகின்றன.

கிரேக்க விக்கிரகக் கலையின் மற்றுமொரு சிறப்பியல்பு தெய்வ எண்ணக்கருக்களை மனித உருவில் முன்வைத்தலாகும். தொல்சீர்க் காலத்தில் ஆக்கப்பட்ட சியுஸ், அத்தீனா, வீனஸ் ஆகியன இதற்கான உதாரணங்களாகும். இக்காலப் பகுதியைச் சேர்ந்த படைப்புக்கள், இளமையை வெளிப்படுத்து – வனவாகக் காணப்படுகின்றன. சகல அம்சங்களையும் கொண்ட பூரணத்துவமான மனித உருவங்களை உருவாக்குவதில் தொல்சீர் காலக் கலைஞர்கள் கவனஞ் செலுத்தியுள்ளனர். முதன் முதலாக கிரேக்கத்தில் ஆக்கக் கலைஞர்களின் பெயர்களைக் கொண்ட படைப்பாக்கங்களை இக்காலப் பகுதியிலேயே காண முடிகின்றது. அக்கலைஞர்களுள் பீடியஸ், மைரன், பிரக்சிற்றலஸ், பொலிக்லீட்டஸி ஆகியோர் மிக முக்கியமானவர்களாவர். இக்காலப்பகுதியில் சிற்பங்களை ஆக்குவதற்காக, சலவைக்கல், வெண்கலம் ஆகிய ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பிரதானமான தேவாலயங்களில் தெய்வங்களின் சிற்பங்களில் யானைத்தந்தம். தங்கம் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பரிதிவட்டம் வீசுபவர் (Discobolus)

மைரன் எனும் கலைஞனாலாக்கப்பட்ட ‘பரிதிவட்டம் வீசுபவர் (Discobolus) எனும் சிற்பம் கி.மு. 450 அளவில் ஆக்கப்பட்ட தொல்சீர் காலத்தைச் சேர்ந்த ஒரு சிற்பமாகும். பரிதிவட்டம் எறிய ஆயத்தமாக இருக்கும் ஒரு விளையாட்டு வீரனின் உடல்நிலை இச்சிற்பம் மூலம் காட்டப்பட்டுள்ளது. மனித உடலின் சமநிலை தொடர்பான ஒரு சிறப்பான கற்கையாகவும் இச்சிற்பம் கருதப்படுகின்றது. சரியான அளவுப்பிரமாணம், தசைகளின் வலிமை போன்றவை பொதிந்துள்ள இச்சிற்பத்தின் மூலம் பரிதிவட்டத்தைக் கையிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான சக்தியை உண்டாக்கிய உயிரோட்டமான மெய்ந்நிலை காட்டப்பட்டுள்ளது.

உரோமர்களின் எழுத்துவடிவ மூலாதாரங்களின்படி வெண்கல ஊடகத்தில் செய்யப்பட்ட மூல ஆக்கம் பிற்காலத்தில் அழிந்துபோயுள்ளதோடு. உரோமக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பிரதியுருக்கள் பல காணப்படுகின்றன. இப்பிரதியுருக்களுக்கு இடையேயும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றமையால் அவை மூல ஆக்கத்தின் இயல்புகளை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றன என்பது ஐயத்துக்கிடமாகி உள்ளது. ‘பரிதிவட்டம் எறிபவர் எனும் இச்சிற்பத்தின் உரோம பிரதியுருக்கள் மூன்று இது வரையில் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று வெண்கலத்தாலாக்கப்பட்டுள்ளது. அது தற்பொழுது மியூனிக் அரும்பொருளகத்தில் உள்ளது. உரோமாபுரித் தேசிய அரும்பாருளகத்திலும் அவ்வாறானதொரு சிற்பம் உள்ளது. அது சலவைக்கல்லினாலானது. அவ்வாறான மற்றுமொரு சலவைக்கற் சிற்பம் பிரித்தானிய அரும்பொருளகத்திலும் உள்ளது.

பரிதிவட்டத்தை வீச ஆயத்தமாகிய நிலையில் இருக்கும் ஒரு விளையாட்டு வீரனின் உடல்நிலையே இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு உடல்நிலையைக் கருதுமிடத்து அது ஓர் ஆணின், உடல் வலிமை, சக்தி, அசைவியக்கம், உடலின் சமநிலை, சந்தம் (இலயம்) ஆகியனவற்றைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் ஒரு படைப்பாக்கமாகக் காணப்படுகின்றது. தசைகளின் செயற்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் விளையாட்டு உடல்நிலையும் இச்சிற்பத்தினால் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹேர்மீஸ், டயோனீசஸ் சிற்பம் (Hermes and Dionysos)

பிரக்சிற்றேல்ஸ் (Praxiteles) எனும் சிற்பக் கலைஞரினால் ஆக்கப்பட்ட சிற்பங்களும் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது ஹேர்மீஸ் தெய்வத்தின் சிற்பமாகும். கி.பி. 1877 இல் கண்டுபிடிக்கப்பட்ட இச்சிற்பம், கிரேக்க தொல்சீர் காலக் கலைப் பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இது கி.மு 330-320 காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த ஹர்மீஸ் சிற்பம் (உரோம பிரதியுருவொன்றாகக் கருதப்படுகின்றது.) ஒலிம்பியா பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, 7 அடி 1 அங்குலம் அளவு உயரமானது. சலவைக்கல்லில் முழுப்புடைப்பாக வடிக்கப்பட்டுள்ள இச் சிற்பம் இயல்பான மனித உடலின் அளவுடையதாகும்.

ஹேர்மீஸ் தெய்வம் தமது இடது கையில் குழந்தை தயோனிசஸ் ஐத் தூக்கி வைத்திருக்கும் விதம் இச்சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளது. பருவமடைந்த பின்னர் திராட்சைப் பானத்துக்கு அதிபதியாவதும் இந்த டயோனிசஸ் குழந்தையே. ஹேர்மீஸ் தனது வலது காலில் உடலின் பாரத்தைத் தாங்கி, இடது முழங்கலைச் சற்று வளைத்தவாறு நிற்பதோடு, யோனீசஸ் எனும் குழந்தையை இடது கையினால் தூக்கி வைத்துள்ளார். ஹேர்மீஸ் சிற்பத்தின் வலது கை முறிந்துள்ளதோடு, அக்கை மேலே உயர்த்தப்பட்டிருக்கலாம் என்பதை மீதியாக உள்ள பகுதி மூலம் உணர முடிகின்றது. அக்கையில் ஒரு திராட்சைக் குலையைத் தாங்கியிருந்திருக்க இடமுண்டு என்பது கலை விமர்சகர்களின் கருத்தாகும். ஆண் உடலில் காணப்படும் தசைகளின் தன்மை, ஆளுமை இயல்புகள், அளவுத்திட்ட இயல்புகள் ஆகியன நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன. இடது கையிலிருந்து கீழ்நோக்கித் தொங்கும் ஆடையும் இயல்பான வகையில் காட்டப்பட்டுள்ளதோடு. அது இச்சிற்பத்தின் பாதத்தைத் தாங்குவதற்காகவும் சமநிலையைப் பேணுவதற்காகவும் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாதார அமைப்பு காரணமாக உடலின் விறைப்பற்ற தன்மையும் நெகிழ்ந்த தன்மையும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஹேர்மீஸ் இனது இளமைத் தோற்றத்தை வெளிப்படுத்திக்காட்டியுள்ள அளவுக்கு குழந்தை டயோனீசஸ் இனது உருவத்தின் மென்மைத் தன்மையையோ மழலைத்தன்மையையோ வெளிப்படுத்திக் காட்டுவதில் சிற்பக் கலைஞர் வெற்றி பெறவில்லை என்பதைக் காண முடிகின்றது. இச்சிற்பம் தற்போது கிரேக்கத்தில் ஒலிம்பியா தொல்பொருள் அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

டொரிபோரஸ் (Daryphures)

டொரிபோரஸ் (Doryphores) எனவும் ‘எறிவேல் ஏந்தியிருப்பவர் எனவும் அழைக்கப்படும் இவ் வெண்கலச் சிற்பம் கி.மு. 440 காலத்தைச் சேர்ந்ததாகும். பொலிக்லீட்டஸ் எனப்படும் கிரேக்கச் சிற்பக் கலைஞரே இதனைப் படைத்துள்ளார். அவரது இத்தனிச்சிறப்பான ஆக்கம் பற்றி உரோம எழுத்துமூல மூலாதாரங்களில் பெரிதும் கூறப்பட்டுள்ள போதிலும் பொலிக்லீட்டஸ் இனது மூலப்படைப்பு இன்று கிடையாது. தற்போது நேபள்ஸ் அரும்பொருளகத்தில் உள்ள அதன் உரோமப் பிரதியுரு ( Replical) ஒன்றின் மூலமே அது தொடர்பான கருத்தைப் பெற முடிகின்றது. சலவைக்கல்லினால் ஆக்கப்பட்டுள்ள இப்பிரதியுருவின் மூலம் மூலப்படைப்பின் உண்மையான தன்மை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றது என்பதை நிச்சயமாகக் கூற முடியாதுள்ளது.

தொல்சீர் காலத்தைச் சேர்ந்த படைப்புக்களில் காணப்படும் தெள்ளத்தெளிவான ஓர் இயல்பான நேர்மாறு நிலை நுட்பமுறை மிகச் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ள ஒரு படைப்பாகும். ஆறரை அடி (6 1/2) உயரமான இச்சிற்பத்தில் உடலின் நடுக்கோட்டில் உள்ள வளைவுத்தன்மை நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எந்தப் பக்கத்திலிருந்து நோக்கிய போதிலும் இச்சிற்பத்தின் நளினத்தை நன்கு காணக்கூடியதாக உள்ளது, மேலும் மிகச் சமநிலையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் ஆண் உடலின் எடுப்பான தன்மை, சரியான அளவுப்பிரமாணத்தின்படி செதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெறும் மேனியின் தசைகள் மிக இயல்பான வகையில் காட்டப்பட்டுள்ளன.

இலாவகமான ஒரு உடல்நிலையைக் காட்டும் இச்சிற்பத்தில் இடது கால் இலாவகமாக பின்னே கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, வலது காலில் உடலின் பாரம் தங்கப்பட்டுள்ள தன்மை காட்டப்பட்டுள்ளது, வலது கை சுயாதீனமாக வைக்கப்பட்டுள்ளது.

வீனஸ் டி மெலோ (Venus de Mcla)

கேத்திரகணித காலத்துக்குரிய நேரிய முன்னோக்கிய நெகிழ்ச்சியற்ற தன்மையை விட வேறுபட்ட இயல்புகளைக் காட்டும் இச்சிற்பம் பெண் உடலின் நளினத்தையும் அழகையும் நன்கு வெளிக்காட்டும் உடல்நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. முற்றுமுழுதான நிர்வாணமாக அல்லாமல் உடலின் மேற்பகுதியும் மாத்திரம் நிர்வாணமாகக் காட்டப்பட்டுள்ளது. உடலின் கீழ்ப்பகுதி சந்தத்துக்கியைந்த அலை மடிப்புள்ள ஆடையுடனும் வடிக்கப்பட்டுள்ளது. தொல்சீர்க் காலத்துக்குரிய நேர்மாறுநிலை (contrapposto) நுட்பமுறை மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டுள்ள ஒரு பெண் உருவச் சிற்பக்கலைப்படைப்பாக வீனஸ் சிற்பம் கருதப்படுகின்றது. உடலின் நடுக்கோட்டில் உள்ள வளைவுத்தன்மை நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ள இப்பெண் சிற்பத்தின் நளினத்தன்மையை எந்தவொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போதும் நன்கு காணக்கூடியதாக உள்ளது.

எகிப்திய கடலில் அமைந்துள்ள மெலோ தீவிலிருந்து 1820 இல் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க தொல்சீர் காலத்துக்குரிய கலைத்துவப் பண்புகளைக் கொண்டமைந்துள்ள தோடு அதன் அடிப்பகுதியில் செதுக்கப்பட்டிருந்த வாசகத்திற்கமைய இது கி.மு. 150-125 இடைப்பட்ட கிரேக்க பண்பாட்டுக் காலத்தைச் (Helenistic) சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. எனினும் தற்போது அவ்வாசகத்தைக் கொண்ட பகுதி காணாமற் போயுள்ளது.

வீனஸ் எனும் பெயரில் பிரபல்யமடைந்த அப்ரோடைட்டு தேவதை. கிரேக்க தேவ மண்டலத்தில் அன்பையும் அழகையும் குறித்து நிற்பதோடு, அதற்கு அதிபதியுமான தேவதை ஆகும். கிரேக்க சிற்பக்கலைப் படைப்புக்களுள் தலைசிறந்த ஒரு படைப்பாக இது கருதப்படுகின்றது. பிரான்சு நாட்டு லுவர் அரும்பொருட்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அன்ரியோச் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த அலெக்சாண்டரோஸ் எனும் (Alexandros of Antioch) கலைஞரினாலே இச்சிற்பம் வடிக்கப்பட்டது என நம்பப்படுகிறது.

கெலனிஸ்ரிக் பாணி (Hcllenistic Style)

கி.மு. 323 இல் அலெக்சாண்டருடன் ஆரம்பிக்கும் கிரேக்க பேரரசுச் சிற்பக்கலைப் படைப்புக்கால ஆட்சியானது அவனுக்குப் பின்னரும் தொடர்ச்சியாகக் காணப்பட்டது. இந்த மெசிடோனிய பேரரசுக்காலமே கிரேக்க கொலனிஸ்ரிக் காலம் எனப்படுகின்றது. கிரேக்கர்கள் தமது மக்களை ஹெலனிஸ் (பண்பாட்டாளர்கள்) என அழைத்தனர். மேலும் கிரேக்க பண்பாட்டை அவர்கள் ஹெலனிஸ்ரிக்குப் (Helenistic) பண்பாடு என்றே அழைத்தனர். அந்த அர்த்தத்தில் இக்காலப்பகுதியில் உலகெங்கும் பிரபல்யமடைந்த கிரேக்கக் கலையைக் குறிப்பதற்காக ஹெலனிஸ்திக்குக் கலை (பண்பாட்டுக்கலை) எனும் பதப்பிரயோகம் புழக்கத்துக்கு வந்தது. குறிப்பாக, கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிக்கு கி.மு. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கும் இடையே கிரேக்க பண்பாட்டைக் குறிப்பதற்காகக் ”ஹெலனிஸ்திக்கு” எனும் பெயர் மரபுரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மசிடோனிய பேரரசின் கீழ் இருந்த காலப்பகுதிகளில் அப்பேரரசின் கீழ் காணப்பட்ட. எனைய நாடுகளான சிரியா, எகிப்து, துருக்கி, பேர்சியா போன்ற சிற்றாசிய மற்றும் கீழைத்தேய நாடுகளில் கிரேக்கக்கலை பரம்பியது. அதே அளவுக்கு அக்கீழைத்தேய விடயப்பொருள்களும் கிரேக்கக் கலையுடன் இணைந்து கொண்டன. அது வரையில் தொல்சீர் கலையில் காணப்பட்ட சில இயல்புகள் இக்காலப்பகுதியில் பெரிதும் மாற்றமடைந்தது. கிரேக்க சிற்பக்கலையில் இந்த நிலைமையை மிகத் தெளிவாகக் காணலாம். அக்காலப்பகுதியில் காணப்பட்ட தெய்வத்தின் அழகிய எடுப்பான உருவத்துக்குப் பதிலாக சாதாரண மனித வாழ்க்கையைச் சிற்பமாக வடிக்கும் போக்கு ஆரம்பமாகியது. வயோதிபர்கள் மற்றும் போர்க்களத்தினுள் நுழைந்த சிப்பாய்களின் கஷ்டங்கள். துன்பங்களைச் சிலையாக வடித்திருப்பதைக் காண முடிகின்றது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த சிற்பங்கள் மூலம் ஒரு போது இலட்சியத்தன்மையையும் மற்றுமொரு போது மனித வாழ்க்கையின் உணர்வுகளும் வெளிக்காட்டப் பட்டுள்ளன.

தொல்சீர் காலத்தைச் சேர்ந்த கிரேக்க கலைப்படைப்புக்களும் கூடவே கிரேக்கப் பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்த தலைசிறந்த கலைப்படைப்புக்களும் அழிந்து போயுள்ளனவெனினும் உரோமர்களால் சலவைக்கல்லினால் ஆக்கப்பட்ட அச்சிற்பங்களின் பிரதியுருக்கள் (Replica) பலவற்றை இன்றும் காண முடிகின்றது. சிறகுகொண்ட வெற்றி (Vinged Victory), லாகூன் (Laocoon) போன்ற சிற்பங்களை கிரேக்கப் பண்பாட்டுக்கால கலைத்துவ உத்திகளைக் கொண்ட குறிப்பான சிற்பங்களாக இனங்காணலாம்.

லாகூன் சிற்பம் (Laycoon an his Sons)

எட்டு அடி உயரமான இச்சிற்பம் தற்போது உரோமாபுரியில் வத்திக்கான் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பர்கமோன் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உரோமப் பிரிதியுருவே வத்திக்கானில் காணப்படுகின்றது எனவும் இதன் மூலச் சிற்பம் கி.மு. 150-80 காலப்பகுதியில் ஆக்கப்பட்ட தொன்றாகவும் கருதப்படுகின்றது.

கிரேக்க கெலனிஸ்ரிக் காலத்தின் இறுதிப்பகுதியைச் சேர்ந்த மிகச் சிறந்த மிக விவரமான ஒரு சிற்பமாக லாகூன் சிற்பம் கருதப்படுகின்றது. லகூனும் அவரது புத்திரர்களும் (Laiocoon and his Sans) பிரமாண்டமான ஒரு கடற்பாம்பிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக எடுக்கும் முயற்சியே இதன் மூலம் காட்டப்படுகின்றது. லாகூன் ஒரு டுரோஜன் பூசகர் ஆவார். தெய்வத்தின் சாபம் காரணமாக சமுத்திரத்திலிருந்து வெளிப்பட்ட பிரமாண்டமான ஒரு பாம்பு, அப்பூசகரையும் அவரது இரண்டு புத்திரர்களையும் பற்றிப் பிடித்திருக்கும் விதம் மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.

லாகூன் சிற்பத்தின் விடயப்பொருள் மிகச் சிக்கலானது. பாம்பின் பிடிக்குள் அகப்பட்ட மூவரினதும் இயக்க நிலைகளைக்காட்டும் மூன்று மனித உருவங்கள் சலவைக்கல் ஊடகத்தினால் வடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்றுக்கு மேற்பட்ட மனித உருவங்களைச் சிற்பமாக வடித்தலானது, ஒரு தனியான மனித உருவைச் செதுக்குவதை விட கடினமான, சவாலான ஒரு செயலாகும். ஒரு பெருஞ் சவாலான இச்செயலின்போது இக்கலைஞர் தந்தையின் முதுமையையும் புத்திரர்களின் இளமையையும் வயோதிபத் தந்தையின் தைரியத்தையும் வலிமையையும், பாம்பிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக எடுக்கும் முயற்சியையும் நன்கு வெளிப்படுத்திக்காட்டியுள்ளார். இச்சிற்பத்தின் மூலம் நாடகப் பண்புகளும் வெளிக்காட்டப்படுகின்றன என்பது விமர்சகர்களின் கருத்தாகும். உணர்வுபூர்வமான பாவவெளிப்பாட்டைக் கொண்ட இச்சிற்பம் நோவு. அச்சம். திகில் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு படைப்பாகும். வலிமைமிக்க ஒருவராகிய இப்பூசகர் பாம்பிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக எடுக்கும் முயற்சியும் இரண்டு புத்திரர்களது எத்தனமும் ஒருங்கே சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளன. தொல்சீர். இயற்கைவாதப் பாணிக்கு இசைவாக, உள்ளுணர்வுகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

மரணிக்கும் கோல் (Wounded and Dying Gaul)

முதலாம் அற்றலஸ் மன்னன், தாம் கோல் படையினருக்கு எதிராகப் போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூர்வதற்காக பல வெண்கலச் சிற்பங்களைச் செய்வித்தான். அவை கிரேக்கப் பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்த சிறப்பான கலைப் படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. அப்படைப் பாக்கங்களுள் மரணிக்கும் கோல் எனும் சிற்பம் தனிச்சிறப்பானது. இது கி.மு. 230 -220 காலத்தில் செய்யப்பட்ட ஓர் ஆக்கமாகும். அதன் மூலச் சிற்பம் அழிவுற்றுள்ளதோடு, இன்று காணப்படுவது உரோமர்களால் சலவைக்கல்லினால் ஆக்கப்பட்ட ஒரு பிரதி உரு (replica) ஆகும்.

இச்சிற்பம் உடலை நீட்டிவைத்திருக்குமாறு சாயும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது இச்சிற்பத்தை ஆக்கிய கலைஞர், கோல் இனத்தவர் தொடர்பான தெளிவான விளக்கத்துடன் இச்சிற்பத்தைப் புனைந்துள்ளதாகக் கருதமுடிகிறது. கோல் இனத்தவரின் தனிச்சிறப்பான இயல்புகளாகிய, சொசொரப்பான தலைமயிர், மீசை உட்பட உடற்பாங்கும் நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன. முறுக்கு களைக் கொண்ட கழுத்துமாலை கோல் இனத்தவர் அணியும் ஓர் ஆபரணமாகும். கிரேக்க கலைக்கேயுரிய மனித உடலின் இயல்புகள் இச்சிற்பத்தில் ஓரளவுக்கே கலந்துள்ளதாயினும், யதார்த்த வாதப் பண்புகளே பெருமளவுக்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன. ஆளின். இயல்பான அளவுடையதாகச் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில், முகத்தினால் காட்டப்படும் வேதனை சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கோல் இனத்தவன் வலிமை மிக்க ஓர் இளைஞன் என்பது அவனது தசைகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!