காண்பியக் கலையின் வெவ்வேறு கலைமரபுகளும் கலை இயக்கங்களும்
அக்கடமிக் யதார்த்தவாதம் (Academic Realism)
அக்கடமிக் யதார்த்தவாத மரபு பிரித்தானிய ரோயல் கலைக்கல்லூரியினால் கட்டியெழுப்பப்பட்டது. இம்மரபின் வரலாறு 16 ஆம் நூற்றாண்டின் பிரான்சு அக்கடமி வரை நீண்டு செல்கின்றது. அக்கடமிக் யதார்த்தவாதப் பாங்கு 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானியக் கலைக் கல்லூரியினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. அக்கடமிக்குகளின் கலை மரபின் இயல்புகளை அடிப்படையாகக்கொண்டு கலைப்படைப்புக்கள் ஆக்குவதே இக்கலை மரபின் முக்கிய நோக்கமாகும். அக்கடமிக் மரபின் அடிப்படை அம்சங்களாகிய, தனிச்சிறப்பான அழகியல் விதிப்படி, மனித உடல், அசையாப் பொருள்கள் நிலத்தோற்றக்காட்சி போன்றவை வரையப்பட்டன. மேலும் வரையப்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி, மிக நுணுக்கமாக நிறங்களின் நடு வர்ணத் தொணிகளைக் கட்டியெழுப்புதல், பொருள்களின் கனதி, முப்பரிமாணத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தல், தூரதரிசனக் கோட்பாடு களைப் பயன்படுத்துதல் ஆகியன அக்கடமிக் யதார்த்தவாத மரபின் முதன்மையான ஓர் அடிப்படை அம்சமாகும். பிரித்தானிய ரோயல் கலைக்கல்லூரியின் (Royal College of Art) ஆரம்ப கால அதாவது முதலாவது தலைவராகிய சேர் ஜோசுவா ரெனோல்ட் (Sir Joshua Rcynold) இக்கலை மரபின் முதன்மையான ஒருவராவார்.
19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பிரித்தானிய குறியேற்றவாதப் பின்னணியில் தோன்றிய கலைக்கழகத்தின் ஓவியம் வரைதல் தொடர்பான நம்பிக்கையாக அக்கடமிக் யதார்த்தவாதமே காணப்பட்டது. அச் சங்கத்தின் செயற்பாட்டாளர்களாகிய முதலியார், ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேக்கர, முதலியார் ரியுடர் ராஜபக் ஷ, ஜே.டீ.ஏ. பெரேரா, டேவிட் பென்டர் போன்ற கலைஞர்களின் படைப்பாக்க மரபு. பிரித்தானிய அக்கடமிக் மரபாகும். அமரசேக்கராவின் “பேயோட்டியின் மகள்”, “தொழிலின்மை”, ரியுடர் ராஜபக்சவின் “பச்சை நிறச்சேலை”, ஜே.டீ.ஏ. பேரேராவின் “நடனமாது” போன்ற ஓவியங்கள் இம்மரபைக் சேர்ந்த இலங்கை ஓவியங்களுக்கான சில உதாரணங்களாகும்.
உயிரோட்டமாக ஓவியங்கள் வரைதல், உயிரோட்டமாக ஓவியங்கள் புனைதல், உயிரோட்டமாக ஒவியங்கள் வர்ணந்தீட்டல். உருவப்படங்கள், நிலத்தோற்றக்காட்சிகள், கிராமியக் காட்சிகள் போன்ற அணுகுமுறைகள், அக்கடமிக் யதார்த்தவாதத்தின் கருப்பொருள் சார்ந்த போக்காகும்.
யதார்த்தவாதம் (Realism)
யதார்த்த உலகில் காணப்படும் கருப்பொருள்களை உள்ளவாறாகச் சரியாகவும் இயல்பாகவும் சித்திரித்துக் காட்டுவதை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஒரு கலை இயக்கமே யதார்த்தவாதம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சை மையமாகக் கொண்டு இவ்வியக்கம் செயற்பட்டது. இந்தக் கலை மரபில் நிலத்தோற்றக் காட்சிகள், மனிதரின் வாழ்க்கை போன்றவை கருப்பொருள்களாகக் காணப்படுகின்றன. கூர்பே, டுமியர், மில்லெற் போன்றோர் இமமரபைச் சேர்ந்த முதன்மையான சில கலைஞர்கள் ஆவார். இக்கலைமரபின் ஊடாக மனிதரின் துன்பங்கள், கஷ்டங்களும் உள்ளுணர்வுகளும் வெளிக்காட்டப்பட்டுள்ளன. இக்கலை மரபு மீது ஒல்லாந்தர்களின் கலைப்படைப்புக்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
மனோரதியவாதம் (Romanticism)
பதினெட்டடாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் எழுச்சி பெற்ற ஒரு கலை இயக்கமே மனோரதிய வாதமாகும். ‘மனோரதியவாதம்’ எனும் கருத்து பல்வகைப்பட்டது; சிக்கலானது. பண்டைய பண்பாட்டு எண்ணக்கருக்கள், நம்பிக்கைகள் மற்றும் குறியீடுகளுடன் சமகால அனுபவங்களையும் பாத்திரங்களையும் கலந்து, சமூக மற்றும் வாழ்க்கை அனுபவங்களை மேலும் ஒப்பமாக்கி அழகாகவும் வீச்சுடனும் முன்வைப்பதே இம்மரபின் தன்மையாகும்.
ஒரு தனியாளின் அனுபவங்களை வெளிப்படுத்துதலே மனோரதியவாதத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டுள்ளது. உணர்வு வெளிப்பாடு, உள்ளார்ந்த அறிவின் வெளிப்பாடு, மானிடத்தன்மை வெளிப்பாடு, தொல்சீர் மாதிரிகளையும் விதிமுறைகளையும் தவிர்த்தல், கடந்தகால நற்கருத்துக்களின் (கடந்தகால இலட்சியக் கருத்துக்களின்) அழகை அல்லது லலிதத்தைத் தற்கால மனிதனது எதிர்பார்ப்புக்களுடன் இணைத்தல், இயற்கை தொடர்பான பேரார்வத்தை வெளிப்படுத்தல் போன்ற விடயங்கள், மனோரதியவாதத்தின் எதிர்பார்ப்புக்களாக அமைத்துள்ளன. அறிவையும் அதன் விளைவையும் விஞ்சிச்சென்று உணர்வுகளும் உணர்ச்சிகளும் ததும்புகின்ற நிலைமையையும் மனோரதிவாதப் படைப்புகளில் காணமுடிகின்றது.
எனினும் மனோரதியவாதத்தின் முக்கியமான தொனி, தனிப்பட்ட அனுபவங்களின் பெறுமானங்கள் மீது நம்பிக்கை வைத்தலாகும். மேலும் கடந்தகால மானிட இலட்சியங்களைச் சமகால மனிதனின் எதிர்பார்ப்புக்களோடு தொடர்புபடுத்துதல், அதன் மூலம் சமகாலத் துன்பங்களை மிதப்படுத்திக் கொள்ளல் போன்ற கருத்துக்கள் மனோரதியவாதத்தில் பொதிந்துள்ளன. இதற்கான ஒரு சிறந்த உதாரணமாக,
பிரான்சிஸ்கோ தி கோயா (Francisco de Goya) இனது, மே மூன்றாந் திகதி (The Third of May) எனும் ஓவியத்தைக் குறிப்பிடலாம். ஜோன் கொன்ஸ்ரபில் (John Constable) இனது நண்பகல் (The Haywain 1821) ஓவியத்தையும் வில்லியம் டர்னர் (Willium Terner) இனது அடிமைக் கப்பல் (The Slave Ship) எனும் ஓவியத்தையும் மற்றுமிரண்டு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
மனோரதியவாதமானது ஒரு மரபு சார்ந்த போக்கு அல்ல. மாறாக அது கருத்துக்களின் தொகுதியாகும். மற்றுமொரு விதமாகக் கூறுவதானால் அது ஒரு நம்பிக்கைத் தொகுதியாகும். அது ஓர் உள மனப்பாங்கை அல்லது சில மனப்பாங்குகளையே எடுத்துக்காட்டும். மாறாக இது ஒரு மரபு வடிவமல்ல.
மனப்பதிவுவாதம் (Impressionism)
மனப்பதிவுவாதக் கலை இயக்கமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் (1860 களில்) பிரான்சு நாட்டு பரிஸ் நகரத்தை முதன்மையாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஓர் ஓவியக்கலை இயக்கமாகும். இப்போக்கானது, ஒரு வகையில் நோக்குகையில் புதிய தொல்சீர் வாதத்தினதும் (Neoclassicism) அதன் தொடர்ச்சி போன்று தோற்றும் மனோரதியவாதத்தினதும் (Romanticism) போக்குகளை மறுதலித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூகத்தை வந்தடைந்த யதார்த்தவாதப் (Realism) போக்கின் ஒரு சாயலாகக் கருதப்படுகின்ற பிரான்சுப் புரட்சியுடன் கூடவே வளர்ச்சியடைந்த கலை மரபுகளின் தொடர்ச்சியாகும்.
பிரான்சின் நகர வாழ்க்கையை ஆராய்தல், வீட்டு வாழ்க்கையை ஆராய்தல் ஆகியனவும் இக்கலை இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பிரதான தேடல்களில் அடங்கியுள்ளன. அத்தோடு, இயற்கை ஒளியின் தெறிப்பின் முன்னிலையில் உருவாகும் ஒளி நிலைமைகளை வர்ணப்பயன்பாட்டின் மூலம் விளங்கிக்கொள்ளல், கலப்பற்ற தூய வர்ணங்களைப் பயன்படுத்தி, தூரிகையைச் சுயாதீனமாகக் கையாள்வதன் ஊடாக அவற்றை வெளிப்படுத்துதல், மறுமலர்ச்சிக் காலந்தொட்டு இருந்து வந்த நியமமான புனைவு உத்திகளிலிருந்து விடுபட்டு, ஒரே புனைவினுள் பொருள்களை ஒழுங்கேதுமின்றி வரைதல் போன்றவை மனப்பதிவுவாத கலைப்படைப்புகளிலும் பரவலாகக் காணப்படும்.
இவ்வாறாக நிஜ உலகின் வெவ்வேறு தோற்றப்பாடுகள் ஒளியுடன் கலந்து கற்றாய்ந்து, துரிதமான தூரிகை வீச்சுக்களையும் தூய வர்ணங்களையும் கொண்டு அவற்றை மீள உருவாக்குதலுக்கு மனப்பதிவுவாதக் கலைஞர்கள் முதன்மையளித்தனர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்களுள் குளோட் மொனே, கமில் பிசாரோ , அல்பிரட் சிஸ்லே , ஓகஸ்தே ரென்வா எட்கா டெகா, மாரி கசாட் போன்றோர் முதன்மையானவர்களாவர்.
பின் – மனப்பதிவுவாதம் (Post Impressionism)
பின் மனப்பதிவுவாதமானது ஒரு வகையில், மனப்பதிவு வாதத்தின் தொடர்ச்சியாவதோடு மற்றுமொரு வகையில் மனப்பதிவுவாதக் கலை. மூலகங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. இக்கலைஞர்கள் 1880 – 1905 காலப்பகுதியிலேயே செயற்பட்டனர்.
வின்சன்ற் வன்கோ , போல் செசான், போல் கொகான், சுரேட் (Suret) ஆகியோர் பின் – மனப்பதிவுவாதத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்களாவர். இக்கலைஞர்கள் தமக்கே உரிய எதிர்பார்ப்புக்களுக்காக வெளிப்பாடு, கலைத்துவ உத்திகளை வேறொருவிதமாகப் பயன்படுத்தினர். அதற்கமைய பின் – மனப்பதிவுவாதக் கலைஞர்களாகிய செசான், கொகான், வன்கோ ஆகியோர் தத்தமக்கே உரிய வகையில் வர்ணங்களின் செறிவைப் பயன்படுத்தினார். செசான் வர்ணங்களைப் பயன்படுத்தி மரபு ரீதியான ஓவிய வெளியை மாற்றியமைத்தார். வின்சன்ற் வங்கோ வர்ணங்களின் செறிவைப் பயன்படுத்தி வடிவங்கள் மற்றும் வர்ணங்களின் பொதுவான தோற்றத்தை விகாரப்படுத்தினார். அதாவது, உள்ளார்ந்த மனநிலையை வெளிப்படுத்திக் (Expression) காட்டினார். போல் கெகான், வரணங்களின் செறிவைக் குறியீட்டு ரீதியில் பயன்படுத்தினார். இம்மூவரும் வரணங்களின் ஊடாக வேறுபட்ட மூன்று முறைகளில் பயன்படுத்தியமையானது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் ஐரோப்பாவில் உருவாகிய நவீனத்துவக் கலையின் பின்புலத்தில் பாரிய பங்களிப்பைச் செய்தது.
கனவடிவவாதம் (Cubism)
இது பிராக், பிக்காசோ ஆகியோரினால் வளர்க்கப்பட்ட ஒரு கலை இயக்கமாகும். யாதேனும் பொருளை வெவ்வேறு கோணங்களில் அவதானித்து, கனவடிவ மாதிரிகள் வலியுறுத்தப்படும் வகையில் கன்வசு மீது மீள் உருவாக்கம் செய்வதே இதன் போது செய்யப்படுவதாகும். ஏனைய கலைப்படைப்புக்களைப் போன்றே, இயற்கையைக் காட்டுவதே கனவடிவவாதக் கலையினதும் பணியாகும். எனினும் அதன் தன்மை, பிரதிநிதித்துவக் கலையின் வெளியின் மீது தூரதரிசனத்துடன் காட்டப்படவில்லை. ஓர்பொருள் அதன் சகல பக்கங்களும் ஒரே தனத்தில் அமையும் வகையிலேயே காட்டப்பட்டது. அதற்கமைய யாதேனும் பொருளின் வெளித்தோற்றத் தன்மையை சிதைத்து அதனைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்திய அமைப்பு, பல தளங்களில் காட்டப்பட்டது. மேலும், முன்னணியில் உள்ள பிரதான உருவங்களுக்கும் பின்னணிக்கும் இடையே முறிக்க முடியாத தொடர்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
கனவடிவவாதக் கலைப் பிரயோகத்தை அதன் தொழினுட்பப் பயன்பாட்டின்படி இரண்டு பகுதிகளாக வகுத்துக் காட்டலாம்.
- பகுப்புக் கனவடிவ வாதம்
- தொகுப்புக் கனவடிவ வாதம்
பகுப்புக் கனவடிவவாத முறையின்படி, ஓவியம் வரையும் போது ஓவியத்தின் கருப்பொருளாக அமையும் பொருளானது சிறு பகுதிகளாக உடைந்த ஒரு பெரிய அலகாகவே காட்டப்படும். பகுப்புக்கனவடிவ ஓவியங்கள் ஒருதனி வர்ணத்தினாலானது. அதாவது அவை பெரும்பாலும் வெப்ப சாம்பல் நிறத்தை அல்லது இருண்ட கபில நிறத்தைக் கொண்டவையாகும்.
கனவடிவக் கலை இயகத்தின் தொகுப்புக் கட்டத்தில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இழையமைப்புக்களும் வேறுபட்ட வடிவங்களும் வேறுபட்ட வர்ணங்களும் ஓவியங்களில் அடங்கியிருந்தன. ஓவியத்தின் மேற்பரப்புத் தன்மையை மாற்றுவதற்காக, மணல், மரத்தூள் போன்றவற்றுடன் சாயத்தைக் கலந்து சொரசொரப்பான மேற்பரப்புகள் கட்டியெழுப்பப்பட்டன. பிக்காசோ, இச்செயன்முறையின்போது கொலாஜ் (ஒட்டுச்சித்திர ) முறையில் கலைப்படைப்புக்களைக் கட்டியெழுப்பத் தொடங்கினர்.
மீயதார்த்தவாதம் (Surrealism)
அறிவுக்கெட்டாத , தருக்கத்துக்கெட்டாத மூலங்களிலிருந்து தோன்றிய கற்பனையான அம்சங்கள் இக்கலை இயக்கத்தின் பொதுவான இயல்பாகும். மிகைப்படுத்திய யதார்த்தமும் விநோதத்தன்மையையும் (fantasy) இங்கு வலியுறுத்தப்படும்.
கீழைத்தேயவாதம் (Orientalism)
கீழைத்தேயவாதம் என்பது ஒரு சித்திரம் வரையும் பாணி அல்ல. மாறாக, கீழைத்தேயவாதம் என்பது, மேற்கத்தேய எழுத்தாளர், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், ஓவியர்கள் போன்றோர். கீழைத்தேயம் தொடர்பாகக் கட்டியெழுப்பிய ஒரு கருத்தாகும். கீழைத்தேய உலகின் அழகையும் வியத்தகு தன்மையையும் மறைக்கப்படுகின்ற விடயங்களையும் விபரிப்பதற்காகவே இக்கருத்தை மேற்கத்தேயக் கலைஞர்கள் பயன்படுத்தினர்.
அரேபியாவை முதன்மையாகக்கொண்டே இக்கருத்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதாவது மத்திய ஆசியாவில் காணப்படுகின்ற, மேற்குலகைவிட வேறுபட்ட தன்மை பற்றிய கருத்தே கீழைத்தேயவாதம் எனக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இது ஒட்டுமொத்த ஆசிய வலயத்தின் மீது செலுத்தப்படும். பொதுமைப்பாடான பார்வையாக உருவெடுத்துள்ளது.
கீழைத்தேயவாதக் கண்ணோட்டமானது பழைமையை மதித்ததோடு மற்றுமொரு போது விஞ்ஞானபூர்வ மற்ற தன்மை, மூடநம்பிக்கைகள் மற்றும் கிரியைகள், சடங்குகள் போன்றவை குறித்து மனோரதிய ரீதியில் நோக்கியது. அதாவது மேற்கத்தேயத்தைச் சேர்ந்தவையான விஞ்ஞானம், தொழினுட்பம், தருக்கம், கைத்தொழில்மயம் போன்றவை கீழைத்தேயவாதத்தில் மதிக்கப்படவில்லை. அதற்கமைய கீழைத்தேயவாதக் கருத்துக்களில் ஐரோப்பியம் (மேற்கத்தேயம் ) விஞ்ஞான பூர்வமானதாக நோக்கப்பட்ட அதேவேளை ஆசியா மூடநம்பிக்கை சார்ந்ததாக நோக்கப்பட்டது.