கம்பளைக்காலப் புத்தர் சிலைகள்
கம்பளைக்காலப் புத்தர் சிலைகளின் கலைத்துவப் பண்புகள்
பொலன்னறுவைக் காலத்துக்குப் பின்னர் அதாவது, கி.பி. 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டுக்கு (கி.பி. 1300-1400 இற்கு) இடைப்பட்ட காலப்பகுதியில் பல புத்தர்சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த சில புத்தர் சிலையாக்கப் பண்புகளதும் தென்னிந்தியச் சிலைகளதும் செல்வாக்கைப் பெற்று, புதியதொரு சிலை வடிப்புமுறை தோன்றியுள்ளது என்பது இந்தச் சிலைகளைக் கற்றாய்வதன் மூலும் தெரிவாகின்றது. அதுவரையில் காணப்பட்ட மோடியை விட சிற்சில வேறுபாடு களைக்கொண்ட புத்தர் சிற்பங்கள் அக்காலப்பகுதியில் ஆக்கப்பட்டுள்ளன. புத்தர் சிற்பங்களைச் சூழ மகர தோரணம் இடப்பட்டுள்ளமை இச்சிற்பங்களின் சிறப்பியல்பாகும். தென்னிந்திய சிற்பங்களைச் சூழ இவ்வாறான மகர தோரணத்தைப் பரவலாகக் காண முடிகின்றது. அதன் செல்வாக்குக் காரணமாக இச்சிற்பங்களுடன் மகர தோரணம் இணைந்திருக்க இடமுண்டு எனக் கருதப்படுகின்றது. மேலும் உயரமான சிரசணி இருப்பதும் இக்காலத்திலேயே ஆரம்பமாகின்றது. சிரசணி திரிசூல உருவமுடையது. இச்சிலைகள் யாவும் வெண்கல ஊடகத்தினால் செய்யப்பட்டவை யாகும்.
புத்தர்சிலைகள் பொலனறுவைக்கால முதலே ஆக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. தெதிகமை, கொட்டவெஹெரையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தாலான 08 புத்தர் சிலைகள் இதற்கான உதாரணங்களாகும். இவை முதலாம் பராக்கிரமபாகு (கி.பி. !153-1186) மன்னனால் செய்விக்கப்டப்டவையாக இருக்கலாம் எனக்கருதப்படுகின்றது.
இந்த மோடியைச் சேர்ந்த மேலும் சில புத்தர் சிலைகள், பண்டுவஸ் நுவரை, திஸ்ஸமகாராமை, லாகுலை ஆகிய பிரதேசங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச்சிலைகளின் உருவாக்கத்திற்காக ஏற்கனவே குறிப்பிடப்பட்ட சிலைகள் செல்வாக்குப் பெறப்பட்டுள்ளது என்பது தெளிவு. சிரசணியைத் திரிசூலம் போன்று இடுதலும், மேலும் உயரமான வட்டவடிவ தாமரைப்பீடம் இடுதலும் இக்காலத்தில் ஆரம்பமாகியுள்ளன. குறுகிய கழுத்து. சற்றுக் கொழுத்த உடல், வீராசனத்துடன் கூடிய உடலின் கீழ்ப்பகுதி ஆகியன இச்சிலைக்களின் ஏனைய பண்புகளாகும். மேலும் இதற்கு முற்பட்ட காலங்களில் புத்தரின் முகத்தினால் காட்டப்பட்ட கருணை, இரக்கம் போன்ற பண்புகளைக் கொண்ட ஆன்மீகப் வெளிப்பாடு காணப்படுவதில்லை. முகம் வட்டவடிவமாகக் காட்டப் பட்டுள்ளது. நெற்றி ஒடுக்கமாக அமைந்துள்ளது. கண்கள் சற்றுப் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பண்புக்கு மேலதிகமாக கி.பி. 14-16 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆக்கப்பட்ட இரண்டு மோடிகளைச் சேர்ந்த புத்தர் சிலைகளைப் பின்வருமாறு இனங்காண முடிகின்றது.
(1) முற்பட்ட காலங்களைச் சேர்ந்த புத்தர்சிலைகளின் செல்வாக்கையும் பர்மா தேச புத்தர் சிலை மோடியின் செல்வாக்கையும் பெற்ற புத்தர்சிலைகள்.
(2) தென்னிந்திய செல்வாக்குப் பெற்ற புத்தர்சிலைகள். ஆகியனவே அவையாகும்.
முற்பட்ட கால புத்தர் சிலைகளின் செல்வாக்கையும் பர்மா தேச (மியன்மார்) புத்தர் சிலைகளின் செல்வாக்கையும் பெற்ற புத்தர்சிலைகள்: உலோக ஊடகத்தினால் செய்யப்பட்ட, சிறிய சிலைகள் இவ்வகையில் அடங்கும். இச்சிலைகளில் மடிப்புக்களின்றிக் காட்டப்பட்டுள்ள காவியுடையின் மூலம் உடலின் வடிவம் ஊடுருவிக் காட்டப்பட்டுள்ளது. உடலுறுப்புக்களின் தன்மையும் தசைகளும் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. உயரமான சிரசணியம் ஆழமான தலைமயிர்ச் சுருள்களும் காட்டப்பட்டுள்ளன. முகத்தில் கருணை மற்றும் இரக்க குணத்துடன் புன்சிரிப்பும் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையிலும் உயரமான தாமரைப்பீடத்தின் மேல் பத்மபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் கடலாதெனியா, ரன்முனுகொடை விகாரைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தர்சிலைகள் முக்கியமானவை. இச்சிலைக்ள, முற்பட்டகால புத்தர் சின பர்மா தேச புத்தர்சிலைகளதும் செல்வாக்கைப் பெற்றுள்ளன என்பது சோர்டரின் கருத்தாகும்.
தென்னிந்தியச் செல்வாக்கைப்பெற்ற புத்தர் சிற்பங்கள்: தென்னிந்தியச் செல்வாக்கைப் பெற்ற புத்தர் சிற்ப நிர்மாணப்பாணியானது பொலனறுவைக் காலத்தில் பிரபல்யமடைந்திருந்த புத்தர் – சிற்ப மோடியினது தொடர்ச்சியாகும். கம்பளைக் காலத்திலும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சிற்பக்கலைஞர்கள் தருவிக்கப்பட்டுள்ளனர். எனவே இக்காலப்பகுதியைச் சேர்ந்த புத்தர் சிற்பங்கள் நிர்மாணிப்பின்போது தென்னிந்திய புத்தர்சிற்பங்களின் செல்வாக்கு குறைவின்றிக் கிடைத்துள்ளது என்பது தெளிவாகின்றது. இம்மோடியைச் சேர்ந்த புத்தர்சிற்பங்கள் பெரும்பாலும் சிற்ப மனைகளினுள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பெரிய அல்லது நடுத்தர அளவுடைய சிற்பங்களாகும்.
இச்சிற்பங்களில் காணப்படும் விசேட பண்புகளுள் காவியுடை இடப்பட்டுள்ள விதம் தெள்ளத் தெளிவாக உள்ளது. இக்காலப்பகதியிலேயே புத்தர் சிலைகளில் மடிப்புக்களுள்ள காவியுடை சேர்ந்துள்ளது. உடலின்மீது சுற்றப்படும் அலங்கரிப்புப் போன்ற அலைவடிவ அல்லது நீரலை போன்ற மடிப்புக்கள் எல்லாச் சிலைகளிலும் இடப்பட்டுள்ளன. மேலும் அமர்ந்த நிலைச் சிற்பங்களில் தியானநிலை முத்திரையும் வீராசன முறையும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நின்ற நிலைப் புத்தர் சிலைகளில் அபய முத்திரை இடப்பட்டுள்ளது. எல்லாச் சிலைகளிலும் வலஞ்சுழியான தலைமுடிச் சுருள்களும் சிரசணியும் காட்டப்பட்டுள்ளன. சிலைக்கு மேலாக, மகர தோரணம் இடுதல், கட்டாயமான ஒரு பண்பாக உள்ளது. முகபாவனை மூலம் புத்தர் பெருமானின் கருணை, இரக்கம், தியான நிலை ஆகியவற்றைக் காணமுடிகின்றத. பெரிய கண்கள், பெரிய மூக்கு, தடித்த உதடுகள் போன்ற பண்புகள் காட்டப்பட்டுள்ளமையால் புத்தர் சிற்பத்துக்குரிய உயரிய் ஆன்மீக வெளிப்பாடு அற்றுப்போயுள்ளது. இச்சிலையின் முகம் தெய்வச்சிலை யொன்றின் முகத்தைப் பெரிதும் ஒத்துள்ளது. இம்மோடியைச் சேர்ந்த சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் கடலாதெனிய மற்றும் லங்காதிலக்கை ஆகியன தனிச்சிறப்பானவையாகும்.
இச்சிலைகள் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது என்பது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் உள்ளன. வண. தம்மகித்தி தேரரது, கடலாதெனியக் கல்வெட்டில், இப்புத்தர் சிலையில் தாது இடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் அதன் சிலைப்படைப்பாக்கப் பண்புகளுக்கமையவும் இச்சிற்பம் கம்பளைக் காலத்தைச் சேர்ந்தது என்பது தெளிவாகின்றது. கடலாதெனியா சிற்பப் பண்புகளுக்குப் பெரிதும் ஒப்பான பண்புகள் லங்காதிலக்கச் சிற்பத்தில் காணப்படுகின்றமையால் லங்காதிலக்கச் சிலையும் கம்பளைக் காலத்தையே சேர்ந்தது எனக் கருதலாம். கம்பளைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏனைய புத்தர்சிலைகளை விட வேறுபட்ட பண்புகளை இந்த இரண்டு சிற்பங்களிலும் காண முடிகின்றது.
கடலாதெனிய அமர்ந்தநிலைப் புத்தர் சிலை
கடலாதெனிய அமர்ந்த நிலைச் சிலை செங்கல்லினாலும் சுண்ணாம்பு கலந்த சாந்தினாலும் கட்டியெழுப்பப்பட்டு மேற்புறத்தில் சுண்ணச்சாந்து பூசி நிறந்தீட்டப்பட்டுள்ளது. நிறந்தீட்டப்பட்டுள்ள போதிலும் இச்சிலை இருண்டநிறத்தைக் கொண்டுள்ளது. மகர தோரணமொன்றின் கீழ் அமர்ந்தநிலையில் உள்ள இப்புத்தர் சிற்பம் கைகள் தியான முத்திரையில் வைக்கப்பட்டுள்ளதோடு, வீராசன முறையில் அமர்ந்துள்ள நிலை காட்டப்பட்டுள்ளது. நீரலை போன்ற ஆழமான காவியுடை மடிப்புக்கள் இடப்பட்டுள்ள தோடு, அதன் மூலம் உடலின் வடிவம் ஊடுருவிக் காட்டப்படவில்லை . ஆழமான வலஞ்சுழியான தலைமுடிச் சுருள்களும் உயரமான சிரசணியும் இடப்பட்டுள்ளன.
கண்கள் அதிகந்திறந்த நிலையில் காணப்படுவதாலும் கண்களுக்கும் மூக்குக்கும் இடையிலான இடைவெளி அசாதாரணமான வகையில் குறுகியதாகக் காணப்படுவதாலும் இம்முகத்தினால் பயத்தை ஏற்படுத்தும் தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது. மூக்கு, உதடுகள், நெற்றி ஆகியன பெரிதாகக் காணப்படுவதாலும் சிரசணி பெரியதாக இருப்பதாலும் இந்தப் புத்தர் சிலையின் மானிடத்துவம் தியான நிலை ஆகியன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இச்சிலையினால் கேத்திரகணிதத்தன்மை வெளிக்காட்டப்படுகின்றது. தோள்கள், கைகள், கால்கள், இடுப்பு, மார்பு ஆகியவற்றின் நெகிழ்ச்சியான தன்மைக்குப் பதிலாக கேத்திரகணிதத் தன்மையே வெளிக்காட்டப்படுகின்றது. இப் பண்புகள் காரணமாக சிலையினால் இயல்பான நிலையை விஞ்சிய தன்மை வெளிக்காட்டப்படுகின்றது.
இப்புத்தர் சிற்பத்திற்கு மேற்புறத்தே காணப்படும் மகரதோரணத்தில் தெய்வங்களான விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய தெய்வ உருவங்களும் அத்தெய்வங்களின் மனைவிமாரும் வாகனங்களும்
1. இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்விகாரையின் வித்யாதரக் குகையில் தோரணங்களுடன் காட்டப்பட்டுள்ள தெய்வங்களின் வளர்ச்சிநிலையினைக் காட்டுவதாக உள்ளது. புத்தர் சிலைகளுடன் இந்துப் பண்புகள் தெள்ளத்தெளிவாக ஒன்று கலந்துள்ளமையை கடலாதெனியா, புத்தர் சிலைச் தோரணங்களில் காண முடிகின்றது.
இலங்காதிலக்க விகாரையில் உள்ள அமர்ந்தநிலை புத்தர்சிலை
லங்காதிலக்க விகாரை உள்ள இந்தப் பெரிய புத்தர்சிலை தியான நிலை முத்திரையுடன் வீராசன முறையில் அமர்ந்தநிலையில் உள்ளது. தாமரை வடிவ அணையொன்றின் மீது அமர்ந்திருக்கும் புத்தர்பெருமானின் பின்புறமாக மற்றுமொரு அணை உள்ளது. மகரதோரணமொன்றின் கீழ் அமர்ந்த நிலையில் உள்ள இச்சிலை செங்கல் மற்றும் சுண்ணச்சாந்து கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலைக்கு வர்ணந்தீட்டியுள்ளமையால் அது பிரகாசத்தைப் பெற்றுள்ளது. ஆழமான வலஞ்சுழியான தலை முடிச்சுருள்களும் உயரமான சிரசணியும் இடப்பட்டுள்ளன. பார்ப்போரின் மனதில் கௌரவம் கலந்த அச்சத்தை ஏற்படுத்தும் தன்மையுள்ள திறந்த கண்களைக்கொண்ட இச்சிலையின்மேல் கண்ணிமைகள் சற்று உயர்ந்த நிலையில் உள்ளன.
கண்டிக்காலப் பொதுப்பண்புகளுக்கு அமைவாக, காவியுடை போர்த்தப்பட்டுள்ளது. ஒன்றன் மீதொன்றான மடிப்புக்கள் நீரலைகள் போன்று அமையுமாறு செய்யப்பட்டுள்ளது. நேராக அமைந்த காதுச் சோணைகள், தெள்ளத்தெளிவாகக் கோணவடிவில் கிடையாக அமைந்துள்ள தோளில் அளவுக்கு மேலாக வெளிப்படுத்தப்பட்டுள்ள காவியுடை மடிப்புக்கள், சிலையினதும் மகர தோரணத்தினதும் அழகிய அலங்கரிப்புக்கள் ஆகியன மத்திய காலத்துக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய மோடிப்படுத்திய பண்புகளாகும்.
கடலாதெனியா புத்தர் சிற்பத்தைப் போன்றே, இச்சிற்பத்துடன் கூடவே காணப்படும் மகரதோரணத்தில் இந்து தெய்வங்களான விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய தெய்வங்களும் அவற்றின் மனைவிமாரும் வாகனங்களும் காட்டப்பட்டுள்ளன. 12 ஆம் நூற்றாண்டுப் புத்தர் சிலைகளினால் காட்டப்படும் இந்து தெய்வங்கள் இங்கு பெரிதும் வளர்ச்சியடைந்து புத்தர் பெருமானின் பாதுகாப்புக்காக தேவர் வரிசையாக இடப்பட்டுள்ளமை இக்காலத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றமாகும். இதற்கமைய இக்காலத்தை அடையும்போது பௌத்த – இந்து பண்புகள் தெளிவாக ஒன்று கலந்துள்ளமையை கடலாதெனியா, லங்காதிலக்க, புத்தர்சிலைகளிலும் அவற்றின் தோரணங்களிலும் காணமுடிகின்றது.