இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலத்து ஓவியக்கலை

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்களால் வரையப்பட்ட ஓவியங்களே வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்களால் வரையப்பட்ட ஓவியங்களாகக் கருதப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்திய ஓவியங்களை உலகெங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கையிலும் பல பிரதேசங்களில் வரலாற்றுக்கு முந்திய ஓவியங்கள்  உள்ள இயற்கையான கற்குகைகள் (Cave), முகடுகள் (Shelter) உள்ளன. இவை பாறை ஓவியங்கள் அல்லது கல் ஓவியங்கள் (Rock Art) எனப்படுகின்றன. இந்த உருவம் வரையும் மரபானது இந்த  நாட்டின் வரலாற்றுக் காலத்தில் வளர்ச்சியடைந்த செந்நெறி ஓவியப்பாணியுடன் எவ்வித நேரடித் தொடர்பையும் காட்டவில்லை

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதி ஓவியங்களாகக் கருதப்படும் நிர்மாணிப்புகளை தொல்பொருளியலாளர் எச். சீ.வீ. பெல் என்பவரே முதன் முதலில் கண்டுபிடித்தார். அதாவது 1897 இல் ‘கொனத்தேகொட கல்கே’ வேடுவ இனத்தவர்களால் வரையப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். 1910 ஆம் ஆண்டு ஜோன் ஸ்டீல் அவர்களால் வட மத்திய மாகாணத்துக்குரிய பில்லேவ, ஆண்டியாகல, தந்திரிமலைக் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1917 இல் பி. எவ். ஆர். பிறௌனின் என்பவரால் தொரவக்கந்த குகைகளில் உள்ள கற்பாறையைக் குடைந்து வரையப்பட்ட ஓவியங்களும் (Engraving) பல்வேறுபட்ட குறியீடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பீ. ஈ. பீ. ‘தெரணியகல என்பவரால் 1950 இல் கதுருபொக்குண குகையில் பலவித உடல்நிலைகளையுடைய விலங்குருவங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்படி அறிஞர்களின் கருத்துகளுக்கு அமைய இவை கற்கால வாழ்க்கை வாழ்ந்த வேடுவர்களால் அல்லது வரலாற்றுக்கு முந்திய மானிடர்களால் வரையப்பட்டவையாகும். சீ. பீ மற்றும் பீ. இசெட் செலிக்மான் அம்பாறை மாவட்டத்தில் பிகில்லேகொட வேடுவர்களுடனும் 1910 இல் ஜோன் ஸ்டீல் தந்திரிமலை சார்ந்த வேடுவர்களுடனும் கலந்துரையாடி இவ்வோவியங்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

தற்போதைய கண்டுபிடிப்புக்களுக்கமைய குகை ஓவியங்கள் காணப்படும் 54 இடங்கள் இலங்கையின் பல மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அம்பாறை, மொனராகலை மாவட்டங்களிலேயே இவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர அனுராதபுரம், பொலனறுவை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கேகாலை மாவட்டங்களிலும் இம்மரபுக்குரிய ஓவியங்களும் உருவங்களும் காணப்படும் இடங்கள் வியாபித்துள்ளன. தந்திரிமலை, பில்லேவ, ஆண்டியாகல, திம்புலாகல, கதுருபொக்குண, அரங்கொட கல்கே, ரஜகல கன்த , கொனாகொல்ல தொறவக்க, பிஹில்லே கொட, கொனத்தேகொட கல்கே, புஞ்சிகிரி அம்மா கல்கே, உமாகே கந்த, ஹுலன்னுகே, அலுகல்கே, புது கல்கே, குடிம்பிகல, லிகினியாகல, மகுல் மகாவிகாரை, ஹக்பெலிகந்த, வெட்டம்பிகல, பியன்கல எனும் இடங்கள் இவற்றுள் சிலவாகும்.

இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய / வேடுவ சித்திரங்கள் காணப்படும் இடங்கள்

அதிக எண்ணிக்கையான குகைகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய ஓவியங்கள் காணப்பட்டதாகப் பதிவாகியுள்ள போதிலும் தற்போது பெரும்பாலான ஓவியங்கள் சிதைவடைந்த வண்ணமுள்ளன. அல்லது மனிதர்களின் செயற்பாடு காரணமாக அழிந்த வண்ணமுள்ளன. அவற்றுள் நல்ல நிலையில் உள்ள ஒரு சில சித்திரங்களையேனும் காணக்கூடியதாக உள்ள பில்லேவ, தந்திரிமலை, தொரவக்கந்த, வெட்டம்பிகல ஆகிய இடங்களில் காணப்படும் சித்திரங்கள் மீது இங்கு கவனம் செலுத்தப்படுகின்றது.

கருப்பொருள்கள்

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால சித்திரப் படைப்பாக்கங்களின் கருப்பொருள்கள் பிரதானமாக இரண்டு வகைப்பட்டவை.

  • இயற்கை தொடர்பாக உணர்வுகளை ஏற்படுத்தும் உருவங்கள்.

  • இயற்கை தொடர்பான உணர்வுகளை ஏற்படுத்தாத உருவங்கள்

ஆகியனவே அவையாகும். இவற்றுள் முதலாம் வகையைச் சேர்ந்த உருவங்களாக யானை, மரை, மான், சிறுத்தை, உடும்பு போன்ற விலங்கு உருவங்களை இனங்காணலாம். குறித்த உருவினால் காட்டப்படுவது யாது எனத் தெளிவாக இனங்காண முடியாத குறியீட்டு ரீதியான உருவங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவையாகும். இந்த உருவங்கள் மூலம் ஆதி மானிடனின் வாழ்க்கைக்கோலம் தொடர்பான விடயங்கள் காட்டப்படுகின்றன என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.

கதுறுப்பொக்குண வரலாற்றுக்கு முந்திய / வேடுவச் சித்திரங்கள்
ஆண்டியாகலை, பில்லாவை, தந்திரிமலை வரலாற்றுக்கு முந்திய /
வேடுவச் சித்திரங்கள்

கலைப்பாணியும் நுட்பமுறைகளும்

இயற்கையாக அமைந்த கற்குகைகளின் ஒப்புரவாக்கப்படாத உட்சுவர்களில் இவ்வோவியங்களும் கிறுக்கல் உருவங்களும் வரையப்பட்டுள்ளன. அதாவது வரலாற்றுக்கு முந்திய ஓவியங்கள் வர்ணத்தைப் பெறும் படை (Paint Receiving) இல்லாமலேயே வரையப்பட்டுள்ளன. விரலை அல்லது முனை நசிக்கப்பட்ட மரக் குச்சிகளை உபயோகித்து வெளிப்புற இரேகைகள் வரையப்பட்டுள்ளன. சில ஓவியங்களில் வர்ணங்கள் அப்பப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இவற்றுள் வெள்ளை, சாம்பல், சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. அதிலும் வெள்ளை, சாம்பல் ஆகிய வர்ணங்களே பெருமளவில் உபயோகிக்கப்பட்டுள்ளன.

கிறுக்கல் வடிவில் அமைந்த உருவங்களில் வெளிப்புற இரேகை முதலில் வரையப்பட்டு பின்னர் வர்ணப்பூச்சு இடப்பட்டுள்ளமைக்குரிய சான்றுகள் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த தொரவக்கந்த கற்குகை தொடர்பாகச் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டறியப்பட்டுள்ளன.

பாறை ஓவியங்கள் இரு வகைப்படும். முதலாவது வகை இயற்கை உருவங்கள் ஆவதுடன் இரண்டாவது வகை அரூப வடிவைக் கொண்டவையாகும்.

ஒட்டுமொத்தமாக நோக்குகையில், வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதி ஓவியங்கள் வரைய உபயோகிக்கப்பட்டுள்ள நுட்பமுறைகள் நான்காகும்.

  1. இரேகைச் சித்திரங்கள் – Line Drawing
  2. சித்திரங்கள் /ஓவியங்கள் – Painting
  3. கற்சுவர்களைச் சுரண்டிப் பொறித்த உருவங்கள் – Engraving
  4. அச்சுப் பதிக்கப்பட்ட கையடையாளங்கள் – Hand Printing

(1) இரேகை முறையில் சித்திரங்களை வரைதல் (Line Drawing)

இரேகையை மாத்திரம் பயன்படுத்தி வரைந்த சித்திரங்கள் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பெருமளவில் காணமுடிகிறது. அவை வர்ணங்களால் நிரப்பப் படவில்லை . இரேகை வரைவதற்காக அவர்கள் கறுப்பு, வெள்ளை, கபில வர்ணங்களையே உபயோகித்துள்ளனர். ஆண்டியாகல, ரஜகல , ஹுலுகல்கே ஆகிய குகைகளில் இவ்வாறான சித்திரங்களைக் காணலாம்.

(2) சித்திரங்கள் /ஓவியங்கள் (Paintings)

வர்ணம் பூசப்பட்ட சித்திரங்களும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விரல்களால் முனை நசிக்கப்பட்ட குச்சிகளால் இவற்றின் வெளிப்புறக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. பின்பு அதற்கு மத்தியில் விரலால் அல்லது குச்சியால் வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. தந்திரிமலை, பில்லேவ, அலுகல்கே ஆகிய இடங்களில் இதற்கான உதாரணங்களைக் காணலாம்.

(3) கற்சுவர்களைச் சுரண்டி வரைந்த ஓவியங்கள் (Engraving)

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து ஓவியங்களை ஆக்குவதற்காகப் பயன்படுத்தப் பட்டுள்ள மற்றுமொரு பிரதானமான முறையாகக் கற்சுவரை ஆழமாகச் சுரண்டி அவற்றில் உருவங்களை வெளிக்கொணரும் முறையைக் குறிப்பிடலாம். விலங்குகளின் கொம்புகள், என்புகள், உறுதியான கற்துண்டுகள் என்பன இச்செயற் பாட்டுக்காக உபயோகிக்கப்பட்டுள்ளன. தொவக்கந்த, ஊராகந்த எனும் இடங்களில் இவ்வாறான சித்திரங்களைக் காணலாம்.

(4) அச்சுப் பதிக்கப்பட்ட கையடையாளங்கள் (Hand Printing)

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யால, மங்குல் மகா விகாரை வளாகத்தில் உள்ள கற்குகையொன்றின் உட்சுவரில் மஞ்சள், சிவப்பு வர்ணங்களிலான சில கையடையாளங்களைக் காணலாம்.

வர்ண ஊடகங்கள்

பொதுவாகக் கறுப்பு நிறமும் சிவப்பு நிறமுமே முதன்மை பெற்றுக் காணப்படுகின்றன. கறுப்பு நிறமானது கரி மற்றும் மங்கனீசு ஈரொட்சைட்டுக் கனியம் மூலமும் சிவப்பு நிறமானது இரும்பு ஒட்சைட்டுக் கனியம் மூலமும் பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதமுடிகின்றது.

இலங்கையின் வரலாற்றுக்கு முட்பட்ட கால ஓவியங்கள் காணப்படும் முக்கிய இடங்கள்

error: Content is protected !!