இராஜஸ்தானி / இராஜ்புத் (Rajput) ஓவியக் கலை
இராஜஸ்தானி ஓவியக்கலை மரபானது 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரையில் நீண்டு செல்லும் வரலாற்றைக் கொண்ட ஓர் ஓவிய மரபாகும். இராஜஸ்தானி ஓவியங்கள் தனியான ஒரு பாணியைச் சேர்ந்தவை அல்ல மாறாக அது ஒரு தொகுதிப் பிரதேச உப பாணிகளின் சேர்மானத்தினாலானது. அவற்றுள் சில பாணிகளைப் பின்வருமாறு காட்டலாம்.
ஜைப்பூர் பாணி:
இது ஜைப்பூரில் வாழ்ந்த உயர்குடிகளிடன் போசிப்புடன் வளர்ச்சியடைந்தது. 18 ஆம் நூற்றாண்டில் பெரிதும் பிரபல்யமடைந் திருந்த ஒரு கலை பாணியாகும். கிருஷ்ணனினது பாத்திரம் சார்ந்த ஓவியங்கள் இப்பாணியில் பிரபல்யம் வாய்ந்த அம்சமாகும்.
புந்தி பாணி:
இது மொகலாயக் கலையின் செல்வாக்கைக் கொண்ட ஒரு பாணியாகும். பழைமையான இராஜஸ்தானி பாணிகளுள் ஒன்றாகிய இப்பாணியில் ‘ராகமாலா’ ஓவியங்கள் பிரபல்யமான ஒரு கருப்பொருளாகும். அத்தோடு பகவத் புராணத்துக்குரிய ஓவியங்களையும் சுயாதீனக் கருப்பொருள்களின் கீழ் வரையப்பட்ட ஓவியங்களையும் காண முடிகின்றது.
மல்வா பாணி:
இப் பாணி வடிவங்களின் பண்புகளை கொண்ட ஓர் ஓவிய மரபாகும். வர்ணத் தொகுதி கடுமை நிறமானது. பெரும்பாலான ஓவியங்களின் தடித்த புற வரை கோடுகளைக் காணலாம்.
இராஜஸ்தானிக் (ராஜ்புட்) கலையின் பாணி சார்ந்த பண்புகளின் உருவாக்கத்தில் மொகலாய ஓவியக் கலை கணிசமான அளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இதற்கான காரணம் சில இராஜஸ்தானி இராசதானிகள் மொகலாயரின் கட்டுப்பாட்டின் கீழ்க் காணப்பட்டமையாகும். மற்றும் சில இராசதானிகள் மொகலாயரின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுக் காணப்பட்டன. எனவே இராஜஸ்தானி ஓவியங்களுள் மொகலாயக் கலையின் பண்புகளையும் அதற்கு அப்பாற்பட்ட பண்புகளையும் கொண்ட ஓவியங்களும் உள்ளன.
இராஜஸ்தானி (ராஜ்புட்) ஓவியக் கலையின் கருப்பொருள்கள் மொகலாயக் கலையிலிருந்து வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. மொகலாயக் கலையானது மொகலாய மன்னர் களின் அரச மாளிகை வாழ்க்கையுடன் தொடர்புபட்டவையாயினும், இராஜஸ்தானிக் கலை யானது அதற்கு அப்பாற்பட்ட பல கருப்பொருள்களைக் கொண்டமைந்துள்ளது. இந்து இலக்கியத்தில் அதாவது பகவத் கீதை, கீத கோவிந்தம், இராமாயணம், மகாபாரதம், ரசிக பிரிய ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்த வெவ்வேறு நிகழ்வுகள் அவற்றுள் சிறப்பானவை. குறிப்பாக, 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பரம்பிச் சென்ற விஷ்ணு வழிபாட்டு மறுமலர்ச்சி காரணமாக கிருஷ்ணன் (கண்ணன்) கதாபாத்திரம் பரவலாக ஓவியமாக வரையப்பட்டது. மேலும் இந்திய இசையுடன் தொடர்புடைய இராகமாலிகையைத் தழுவி நிர்மாணிக்கப்பட்ட ராக-ராகினி ஓவியங்களும், இராஜஸ்தானி ஓவியங்களின் மற்றுமொரு முக்கியமான கருப் பொருளாகும். அத்தோடு, அரச மாளிகைக் காட்சிகள், உருவப்பட ஓவியங்கள், வேட்டைக் காட்சிகள், இயற்கைச் சூழல், உற்சவ நிகழ்வுகள் போன்ற பல கருப்பொருள்களையும் இனங்காண முடிகின்றது. ஓவிய ஒழுங்கமைப்பு (Composition), வர்ணத் தீட்டல், தூரதரசனப் பயன்பாடு, மனித உருவங்களைக் காட்டல், சூழலை பிரதிநிதித்துவப்படுத்தல் போன்ற பண்புகளின்போது மொகலாயக் கலையின் பண்புகளை ஒத்த பண்புகளை இனங்காண முடிகின்றது. இராஜஸ்தானி (ராஜ்புட்) ஓவியங்களும் கூடப் பெரும்பாலும் காகிதம் மீது நீர் வர்ண (opaque) ஊடகத்தினாலேயே வரையப்பட்டுள்ளன. ஓவியத்தின் ஒவ்வோர் இடைவெளியும் சமமான கவனத்துடன் விவரமாக வரையப்பட்டிருத்தலானது இராஜஸ்தானி ஓவியங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு பண்பாகும்.
இராகமாலா ஓவியங்கள் / இராக – ராகினி ஓவியங்கள்
இராஜஸ்தானி கலையில் காணப்படும் இராகமாலா ஓவியங்கள் தனிச் சிறப்பான ஒரு படைப்புத் தொகுதி ஆகும். சங்கீதத்தில் அடங்கியுள்ள இராகங்களால் உருவாக்கப்படும் இரசத்தை (சுவையை) யாதேனும் இரசனை நிலைக்கு மாற்றுவதே இதன் மூலம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சங்கீதத்தில் முதன்மையான ஆண் இராகங்கள் ஆறு (6) உண்டு. அவற்றை ‘ராகினீ’ எனப்படும் பெண் இராகங்களுடன் ஒட்டுமொத்தமாகக் கருதுகையில் மொத்தம் 36 ஆகின்றது. ஒவ்வோர் இராகத்துக்கும் திட்டவட்டமான பாவ வெளிப்பாடும், பாடுவதற்குரிய காலமும் நேரமும் உண்டு. அந்தந்த இராகத்தினால் ஏற்படுத்தப்படும் பாவ உணர்வை மீண்டும் இரசனைக்கேற்ற வகையில் குறியீட்டு ரீதியில் கட்டியெழுப்புவதே ராகமாலிகை ஓவியங்களில் செய்யப்பட்டுள்ளதாகும். இராகமாலிகை ஓவியங்களின் தன்மையை இனங்காண்பதற்காகப் பின்வரும் இரண்டு ஓவியங்களை முன்வைக்கலாம்.
மாலா ஸ்ரீ ராகினி:
காதலனின் பிரிவுத் துயரத்தினால் துன்புறும் ஒரு யுவதியின் உணர்வுகள் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளன. ஓவிய ஊடகத்தின் கதாநாயகியாகிய யுவதி தாமரை மலரொன்றின் இதழ்களைப் பரித்து கொண்டிருக்கின்றாள். இதுவும் பிரிவுத் துயரை உணர்த்தும் வலிமையான ஒரு குறியீடாகும். அவளது தோழியர் அவளைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஓவியத்தில் மஞ்சள், சிவப்பு போன்ற பிரகாசமான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் இருண்ட வானமும், அங்கு காட்சியளிக்கும் தாரகைகளும் இது இரவு என்பதை உணர்த்தி நிற்கின்றன.
தோடி ராகினி:
இது இராஜஸ்தானி ஓவியக் கலையினால் எடுத்துக் காட்டப்படும் ஒரு பெண் இராக மாகும். இந்த ஓவியத்தின் கதாநாயகி உருத்திர வீணையுடன் காட்டப்பட்டுள்ளார். அவளது வாத்திய இசைப்பைக் கேட்டு அவளின் அருகே வரும் மான் குட்டிகள் அவளைச் சூழ நிற்கின்றன. பொதுவாக தோடி ராகினியினால் இருண்ட மழை மேகங்களைக் கொண்ட சூழலே காட்டப்படும். மரங்களால் சூழப்பட்டுள்ள ஒரு சூழலில் அவள் தனிமையாகக் காட்டப்பட்டுள்ளாள். பெண்ணின் விரக தாபத்தைக் குறியீட்டு வடிவில் உணர்த்துவதற்காகவே இவ்வாறு தனிமைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. நீண்ட பாவாடையும் ‘பர்தா”வும் அணிந்த பாரம்பரியமான ஒரு பெண் பாத்திரமாக ஓவியத்தின் நடுவே உள்ள பெண் காட்டப்பட் டுள்ளாள். நடுவே இருக்கும் பெண்ணே ஒட்டுமொத்த ஓவியத்தின் மையப்பாத்திரமாகவும் அமைகின்றாள்.
கண்ணன் – ராதை ஓவியம்
கண்ணன் – ராதையைக் காட்டும் ஓவியங்கள் இராஜஸ்தானி (ராஜ்புட்) ஓவியக் கலையின் பிரபல்யம் வாய்ந்த கருப் பொருளாகும். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி முதல் பிரபல்யமடைந்த விஷ்ணு வழிபாடே இக்கருப்பொருள் பிரபல்யமடைவதில் செல்வாக்குச் செலுத்தியது. இந்து தத்துவத்தின்படி கிருஷ்ணா என்பது விஷ்ணு தெய்வத்தின் ஓர் அவதார மாகும். ஜயதேவனால் எழுதப்பட்ட கீத கோவிந்தத்தின் கருப்பொருளும் கண்ணன்- ராதை காதல் கதையாவதோடு, அந்நூல் பெரும்பாலான இராஜஸ்தானி ஓவியக் கலைஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியது. இந்த ஓவியங்களில் கண்ணன் – ராதையின் காதல், கண்ணனின் பிள்ளைப்பருவம், கண்ணனின் வீரச் செயல்கள், கண்ணனின் குறும்புத்தனம் ஆகியன கருப்பொருள் களாகின்றன. அவற்றுள் சில கருப்பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- யமுனை நதிக்கரையில் காதலர்களாகக் காட்டப்பட்டுள்ள கண்ணனும் ராதையும்
- கண்ண னும் ராதையும் ஊஞ்சலாடுதல்.
- ராதையைப் போன்று வேடந் தரித்த கண்ணன் ராதையைச் சந்திக்க வருதல்.
- கோபியர் பெண்களைக் குறும்பு செய்யும் கண்ணன்.
- நண்பர்களுடன் இருக்கும் கண்ணனும் ராதையும்
வெவ்வேறு பிரதேச பாணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜஸ்தானி ஓவியர்கள், மேற்படி கருப்பொருள்களை மீண்டும் மீண்டும் வரைந்தமையால் இப்போது ஒரே கருப் பொருளுக்குரிய பல ஓவியங்களைக் காணமுடிகின்றது. எனினும் இந்த ஓவியங்களுள் பொதுவாக இனங்காணத்தக்க பல இயல்புகள் உள்ளன. கதாநாயகனும் கதாநாயகியும் வரையப்பட்டுள்ள விதம் அவற்றுள் ஒன்றாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரும் ஓவியத்தின் நடுப்பகுதியில் அதாவது மையத்தில் காட்டப்பட்டுள்ளனர். மேலும் இருவரது உடல்கள் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளமையையும் பெரிதும் காணலாம். முகத்தைப் பொதுவாகப் பக்கத் தோற்றத்தில் காட்டுவதே பிரபல்யம் பெற்றுள்ளது. முகத்தை நேராகக் காட்டும் ஓவியங்கள் அரிது. கண்ணனின் உடல் கருமை நிறமானதாயினும், இந்த ஓவியங்களின் அவனது உடல் நீல வர்ணத்தில் அல்லது ஊதா வர்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. கண்ணனின் உருவத்தைக் காட்டும்போது கையில் உள்ள குண்டலம், பூமாலை, தலையில் செருகியுள்ள மயிற்பீலி போன்றவை இலகுவாக இனங்காணத்தக்க குறியீடுகளாகும். குழலூதுவதில் திறமைமிக்க கண்ணனின் உருவம் பெரும்பாலும் மேல் அரைப்பகுதி வெறும் மேனியுடனும் கீழரைப்பகுதி கச்சை (தோத்தி) யுடன் காட்டப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் உடலின் மேற்பகுதி சால்வையினாலும், ஆபரணங் களினாலும் அலங்கரிக்கப்பட்டதைக் காண முடிகின்றது. தலையில் தலையணியை அல்லது கிரீடத்தைக் காண முடிகின்றது. ராதையின் உருவம் அழகிய கிராமிய யுவதியாகக் காட்டப்பட் டுள்ளது. அழகிய தோற்றத்தைக் கொண்ட ராதை உருவம் நீண்ட பாவாடை, இறவுக்கை, ‘பர்தா’ ஆகியவற்றுடன் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவளது உடைகள் நுணுக்கமாக மலர்க்கொடி வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களின் பின்னணியாக எளிய கிராமியச் சூழலே பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அச்சூழலில் வாழை, நாகமரம், ஆல மரம் போன்ற மரங்கள் அழகாக வரையப்பட்டுள்ளது. சூழலில் காணப்படும் சகல பொருள்கள் தொடர்பாகவும் கவனஞ் செலுத்தி விரிவான பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது. ஆரம்ப கால இராஜஸ்தானி ஓவியங்கள் பாணி சார்ந்த பண்புகளை வெளிக்காட்டிய போதிலும், பிற்கால ஓவியங்கள் முப்பரிமாண இயல்புகள் வெளிக்காட்டப்படும் வகையில் வரையப்பட்டுள்ளன.