இசுருமுனிய சிற்பக்கலை
வரலாற்றுப் பின்னணி
இசுருமுனிய விகாரை அநுராதபுரம் திசாவாவிக்கு அண்மையில் உள்ள ரன்மசு பூங்காவிற்குத் தெற்கில் அமைந்துள்ளது. இவ்விகாரை இலங்கையில் முதன் முதலில் நிர்மாணிக்கப்டப்ட 5 பாரிய துறவிகளின் உறைவிடங்களுள் ஒன்றாகும். மகாவம்சத்தில் உள்ளபடி இசுருமுனிய விகாரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் எனும் மன்னனால் கட்டப்பட்டது. மகிந்த தேரரிடம் துறவறம் பூண்ட அரிட்ட எனும் இளவரசனின் தலைமையில் குருப்பட்டம் பெற்ற உயர்குலத்து 5(X) குழந்தைகள் குடியிருப்பதற்காகக் கட்டப்பட்ட இது ‘இசரசமண’ விகாரை எனப்பட்டது.
இசுருமுனி செதுக்கல்கள்
பௌத்தர்களின் வணக்கத்தலமாக இருந்த போதிலும் இங்கு காணப்படும் கலை நிர்மாணங்களில் மதத்தை தழுவாதவையும் காணப்படுகின்றன. கீழே காணப்படும் மனித உருவங்களும் விலங்குருவங்களும் அரைப் புடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளன.
- காதலர் சிலை
- அரண்மனைக் காட்சி / அரசகுடும்பம்
- மனிதனும் குதிரைத் தலையும்
- நீராடும் யானைகள்
இசுருமுனிய செதுக்கல்களில் உள்ள உருவங்கள் இந்து மத எண்ணக்கருக்களுடன், குப்த கலை மரபையும் பல்லவர் கலை மரபையும் தழுவி ஒருங்கமைக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
இச்செதுக்கல்களில் காணக்கூடிய கலைப்பண்புகள்.
- தளத்துக்குப் பொருத்தமாக ஒருங்கமைந்திருத்தல்.
- முகமும் உடல்நிலைகளும் பாவங்களை வெளிப்படுத்துதல்.
- இயற்கையாக உள்ள வடிவங்கள் உடல்நிலைகள் என்பன இலயத்துடன் வெளிப்படுத்தப் பட்டிருத்தல்.
- மென்மையாகவும் செம்மையாகவும் அவை பூரணப்படுத்தப்பட்டிருத்தல்.
- புடைப்பு முறையில் செதுக்கல்களைப் பொளிந்திருத்தல்.
காதலர் சிற்பம்
சதுர வடிவக் கல்லில் ஒன்றில் சிறு புடைப்பு முறையில் செதுக்கப்பட்ட இச்செதுக்கல், ஆசனமொன்றின் மீது இளமைத் தோற்றத்துடன் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் காட்சியைக் குறிக்கிறது. ஆண் உருவின் வலக்கால் கீழே தொங்கவிடப்பட்ட நிலையில் உள்ளது. இடக்கால் கிடையாக மடித்து ஆசனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது பெண் அமர்ந்திருக்கும் நிலை காண்பிக்கப்பட்டுள்ளது. வலக்கையால் ஆண் எதையோ பிடித்திருக்கிறார். ஆணின் இடக்கால் மீது அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் கால்கள் பின்னப்பட்ட நிலையில் நிலத்தில் ஊன்றியிருப்பது தென்படுகிறது. பெண் இடக்கையை ஆசனத்தில் ஊன்றி உடலையும் இடப்பக்கமாக சாய்ந்திருக்கிறார். வலக்கை ஒரு வகை முத்திரையைக் குறிக்கிறது. ஆண் உருவின் தோளுக்குப் பின்னால் வாள் ஒன்றும் அதனைச் சுற்றி ஒளிவட்டமும் காணப்படுகிறது.
ஆண் உருவின் இடுப்புக்குக் கீழே மட்டும் அளவில் சிறிய ஆடையொன்று காணப்படுகிறது. பெண்ணின் ஆடை காற் பாதங்கள் வரை உள்ளது. இரு உருவங்களினதும் கை கால்கள் கழுத்து என்பன ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தலையணிகளும் காணப்படுகின்றன. தெய்வீகத்தன்மை கலந்த காதல் உணர்வை முகமும் உடல்நிலைகளும் வெளிப்படுத்துகின்றன,
இந்நிர்மாணிப்பு பற்றி பல கருத்துகள் நிலவுகிற போதிலும் பேராசிரியர் செனரத் பரணவித்தான அவர்களின் கருத்தே பிரபல்யம் அடைந்துள்ளது. இவ்வுருவங்கள் சாலிய இளவரசனுடையதும் அசோக மாலாவினதும் என்பது அவருடைய கரு தொடர்புடைய ரன்மசு பூங்கா இதற்கு அண்மையில் அமைந்திருப்பதால் அவர் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிர்மாணிப்புப் பற்றி நிலவும் வேறு கருத்துகள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- சிவ பார்வதி என்பது
- மஞ்சு ஸ்ரீ எனப்படும் போதிசத்துவரின் வேடம் என்பது
- படைவீரனும் அவனது காதலியும் என்பது
இச்சிலைகளில் அலங்காரமான ஆடை அணிகலன்கள், உயிர்ப்புடன் காணப்படும் நிறைவான உடல், காதலுணர்வின் வெளிப்பாடு எனும் சிறப்பான கலைப்பண்புகளைக் காணக்கூடியதாக இருக்கிறது தளத்துக்குப் பொருத்தமான வகையில் உருவங்களை ஒருங்கமைத்திருத்தல், செம்மையாக்கி பூரணப்படுத்தி யிருத்தல், சந்தத்துடன் கூடிய வடிவங்கள், உடல்நிலைகளின் வெளிப்பாடு எனும் பல சிறப்பியல்புகளையும் காணக்கூடியதாக இருக்கின்றன. இது கி.பி. 4 – 5 ஆம் நூற்றாண்டுகளில் பிரபல்யம் அடைந்த குப்த கலை மரபின் செல்வாக்கைத் தழுவிய சிறந்த நிர்மாணிப்பொன்றாகக் கருதப்படுகிறது.
அரச குடும்பம் (அரண்மனைக்காட்சி)
அரச குடும்பம் எனப்படும் இச் செதுக்கலின் மத்தியல் ஆண் உருவம் ஒன்று காணப்படுகிறது. இது சற்றுப் பெரிதாகவுள்ளது. அதன் இரு புறத்திலும் சிறியதாக பெண் உருவமொன்றும் இரு ஆண் உருவங்களும் உள்ளன. அதன் பின்னால் மிகச் சிறிய அளவில் ஆண், பெண் இரு உருவங்கள் பொளியப்பட்டுள்ளன. பெரிய அளவிலான ஆணின் உருவத்தில் இடக்கால் மடிக்கப்பட்டு, ஆசனத்தில் வைத்திருப்பதையும் மடித்த வலக்கால் இடக்கால் தொடை மீது வைத்திருப்பதையும் காணலாம். இடது புறத்தில் இருக்கும் பெண்ணினது தொடை மீது இடது கை வைக்கப்பட்டுள்ளது. உடல் சற்று இடப்புறமாகச் சாய்ந்துள்ளது. வலது கையினால் முத்திரையொன்று காட்டப்படுகிறது. இந்த பிரதான உருவத்தை விட அளவில் சிறியதாகக் காட்டியுள்ள பெண் உருவத்தின் நிலையில் கிரீடம் உள்ளது. கழுத்திலும் கைகளிலும் ஆபரணங்கள் உள்ளன. பிரதான ஆண் உருவத்துக்கு வலப்புறமாக ‘ஸ்வஸ்திக்க முறையில் கைகளை மார்புமீது காட்டியிருக்கும் ஆண் உருவம் ஒன்று உள்ளது. அது முன்னர் குறிப்பிட்ட ஆண் உருவத்தைவிட அளவில் சிறியது. அவ்வாண் உருவத்தின் தலையிலும் கிரீடம் போன்ற அணிகலனொன்று உள்ளது. ஒட்டுமொத்தமாக இப்படைப்பில் ஆபரண அலங்காரங்கள் குறைவாகவே உள்ளன, அவ்வுருவத்தின் பின்னால் சாமரை தாங்கியிருக்கும் உருவம், பிரதான உருவத்துக்குச் சாமரை வீசுவது காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே இடது புறத்தே உள்ள பெண் உருவத்துக்கும் பின்னே அப்பெண்ணின் சேவகி எனக் கருதத்தக்க பெண் உருவமொன்று சிறியதாகக் காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த சிற்பம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களில் காணப்படும் பிரபுத்துவம் மற்றும் அரச ஆடையணிகள் காரணமாக இது அரச குடும்பமொன்றைக் குறிப்பதாகவும், அது துட்டகைமுனு மன்னனின் குடும்பமாகும் எனவும் பேராசிரியர் செனரத் பரண வித்தான அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பிரதான ஆண் உருவத்தினால் துட்டகைமுனு மன்னனும் பெண் உருவினால் இராணியும் கைகட்டி நிற்கும் உருவத்தினால் சாலிய குமாரனும் காட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சிற்பம், ஏறத்தாழ நான்கு அடி நீளமான அரைவட்ட வடிவக் கற்பாளமொன்றில், செதுக்கல் முறையில் குறை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அரைவட்ட வடிவக் கற்பாளத்தின் மீது உருவங்கள் நான்கு பொளியப்பட்டுள்ளது. தளத்தில் நடுப்பகுதியில் அரச தோரணையில் அமர்ந்திருக்கும் உருவம் பெரியதாகவும் அதற்குச் சார்பாக இராணி மற்றும் சாலிய எனக் கருப்படும் உருவங்கள் சிறியவையாகவும் பொளியப்பட்டுள்ளன. அழகிய ஆடையணிகளையும் பூரித்த அங்கங்களையும் கொண்ட இவ்வுருவங்களின் உடல்நிலைகள் சந்தத்திற்கு இசைவான தன்மையைக் காட்டிநிற்கின்றன. முகத்தினாலும் உடலங்கங்களினாலும் பால் உணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. இது நுணுக்கமாகவும் ஒப்பமாகவும் வடிக்கப்பட்டுள்ள ஒரு சிற்பமாகும்,
மனிதனும் குதிரைத் தலையும்
இசுருமுனி விகாரை அமைந்த குளத்துக்குப் பின்னால் உள்ள கற் சுவரில் இச்செதுக்கலைக் காணலாம். இங்கு காணப்படும் ஆண் உருவத்தின் இடக்கால் முழுங்காலில் மடித்து ஆசனத்தின் மீது கிடையாக வைக்கப்பட்டுள்ளது. வலக்கால் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவ் வலது முழங்கால் மீது வலக்கையை நீட்டியிருக்கிறார். இடக்கையை ஆசனத்தின் மீது ஊன்றியிருக்கிறார். இவ்வுருவம் நிமிர்ந்து நேராகப் பார்க்கும் இயல்பைக் கொண்டுள்ளது. இந்த உடல்நிலை ராஜ லீலாசனம் எனக் கூறப்படுகிறது. காதுகளில் வளையல் வடிவத்தில் ஆபரணம் உள்ளது. தலையணியொன்றும் காணப்படுகிறது. இடுப்பில் சிறிய ஆடையொன்று காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக இச்செதுக்கல் எளிமையான தன்மையைக் கொண்டுள்ளது. அவரது வலக்கையின் மேற்பாகத்தில் சுற்றிவிடப்பட்ட கயிறு குதிரையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செனரத் பரணவித்தான அவர்களின் கருத்துப்படி மனிதனும் குதிரைத் தலையும் கொண்ட செதுக்கல் மழையையும் அக்கினியையும் அடையாளப்படுத்துவதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மனிதன் மழைக்கு அதிபதி எனும் கருத்தையும் குதிரைத்தலை சூடான அக்கினியை அடையாளப்படுத்துகின்றது எனும் கருத்தையும் பரணவித்தான அவர்கள் முன்வைத்துள்ளார்.
இந்நிர்மாணிப்புப் பற்றிய வேறு கருத்துக்கள்
- படைவீரன் ஒருவன் என்பது
- கபில ரிஷி என்பது (ஆனந்த குமாரசுவாமியின் கருத்து)
இவ்வுருவில் காணப்படும் எடுப்பான தோற்றம், எளிமை, மனித உருவம் நீளமான தன்மையைக் கொண்டிருத்தல் போன்ற பண்புகளைக் கொண்டதால் இது கி.பி. 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதி பல்லவர் கலை மரபைத் தழுவியது எனக் கருதப்படுகிறது.
நுணுக்கமாகவும் ஒப்புரவாகவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது அரைப்புடைப்பு முறையில் செதுக்கப் பட்டுள்ளது. மேற்சட்டையின்றிக் காணப்படுகிறது. தடிப்பான உதடுகளையும் நீளமான மூக்கையும் கொண்டுள்ளது. கழுத்தில் மாலையும் கைகளில் வளையல்களும் பாதங்களில் சலங்கை போன்ற ஆபரணமொன்றும் காணப்படுகிறது.
யானை உருவங்கள்
இசுருமுனிய விகாரையின் குளத்தருகே அமைந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளைக் கொண்ட கற் சுவரில் ஒரு பக்கத்தில் இரு யானைகளும் ஒரு குட்டி யானையும் காணப்படுகிறது. உயிர்ப்புடன் யானை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை மிகத் தெளிவாக நிர்மாணிக்கப் பட்டுள்ளதுடன் குளத்தை நோக்கி முன்னே வரும் விதத்தில் சிறு புடைப்பு முறையில் பொளியப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் இன்னொரு யானை உருவம் உள்ளது யானையின் தலை, தும்பிக்கை, வால், உடல் என்பன தத்துரூபமாகக் காணப்படுகின்றன. இந்த யானை தும்பிக்கையை உயர்த்திய நிலையில் உள்ளது. எல்லா யானைகளினதும் அசைவுகள் சந்தத்துடனும் சுறுசுறுப்பான தன்மையுடனும் காணப்படுகின்றன. இதனை ஒத்துள்ள யானைக் கூட்டமொன்று இசுருமுனிய விகாரைக்கருகில் உள்ள ரன்மசு பூங்காக் குளத்திலும் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த யானை உருவங்கள் காணப்படும் பாறைச் சுவரில் இவை புடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளன. குளத்தில் இறங்கி யானைகள் நீராடும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளின் பல மெய்நிலைகள் அதாவது, நீராடும் விதமும், தும்பிக்கையை உயர்த்தி நீர் தெளிக்கும் விதமும் சிறு புடைப்பு முறையில் பொழியப்பட்டுள்ளன. இவை தத்துரூபமாகவும் சுறுசுறுப்புத்தன்மையைக் கொண்டதாகவும் உள்ளன. இந்த யானை உருவங்களுள் திரும்பியிருக்கும் தன்மை கொண்ட யானை உருவங்களும், முன் பக்கத் தோற்றமுடைய யானை உருவங்களும் காணப்படுகின்றன. முன்பக்கத் தோற்றமுடைய யானைகள் முற்குறுக்க இயல்புகளைக் கொண்டுள்னன. நுணுக்கமாகவும் ஒப்பமான தன்மையுடனும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இயற்கை வடிவங்கள் உடல்நிலைகள் என்பன வெளிக்கொணரப்பட்டுள்ளன. இது இந்திய பல்லவ கலை மரபைத் தழுவியுள்ளதெனவும் மகாபலிபுர ‘கங்கையின் இறக்கம் செதுக்கலில் உள்ள யானை உருவங்களுக்கு ஒத்த இயல்புகளைக் கொண்டுள்ளதெனவும் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.