சிற்பக் கலைஞன் ஹென்ரி மூர்

 • ஹென்ரி மூர் (Henry Moore) 1898 இல் இங்கிலாந்தில் யோக்ஷயர் பிராந்திய காசல் போட் நகரில் பிறந்தார்.
 • கிரேக்க – உலோக கலை மற்றும் மறுமலர்ச்சிக் காலத்தில் காணப்பட்ட மரபுரீதியான சிற்பக் கலைப் படைப்புக்களின் பின்னர் புதியதொரு பாணியில் சிற்பக் கலையை உலகுக்கு அறிமுகஞ் செய்த பெருமை கலைஞர் ஹென்ரி மூரைச் சாரும்.
 • அதுவரையில் காணப்பட்ட கட்புல யதார்த்தத் தன்மையிலிருந்து வேறுபட்ட கருத்து நிலையான உருவங்களைச் சிற்பக் கலையில் அறிமுகஞ் செய்த கலைஞர் என ஹென்ரி மூரைக் குறிப்பிடலாம்.
 • அவரது மனிதச் சிற்பங்கள் இயற்கையான தோற்றம், இயற்கையான பருமன் ஆகிய இயல்புகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றமை தெளிவான ஒரு விடயமாகும்.
 • மனித உருவத்தின் உடல் வடிவம் மிக எளிமையான வகையில் படைக்கப்பட்டிருத்தல் ஒரு சிறப்பியல்பாகும்.
 • பாரிய உடலைக் கொண்ட மனித உருவங்களில் சிறியதாக தலையைக் காட்டுதல் ஹென்ரி மூரின் படைப்புக்களின் தனிச் சிறப்பாகும்.
 • ஆரம்ப காலப் படைப்புக்களில் மனித உருவங்கள் தெளிவாக வடிக்கப்பட்டபோதிலும் பின்னர் படிப்படியாக, எளிமையான வடிவங்களிலும் அவை வரையறுக்கப்பட்டன.
 • ஹென்ரி மூரின் சிற்பங்களின் அடிப்படையான கருப்பொருள் மனித உருவமாகும். அவ்வாறான சிற்பங்களுள்,
  ♦ அரச குடும்பம் (King and Queen)
  ♦ சாய்ந்து படுத்திருக்கும் பெண்

  ஆகியன முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
 • அவரது சிற்பங்களுள் பெரும்பாலானவை பூங்காவில் வைப்பதற்கான சிற்பங்களாகவே ஆக்கப்பட்டுள்ளன.
 • பாரிய அளவுடையதாகப் படைக்கப்பட்ட மனித உருவங்கள் பல பகுதிகளைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளன.
 • சிற்பங்களைப் படைப்பதற்காக பயன்படுத்தும் மூலப்பொருள்களை மாற்றிய அவர், பாரம்பரியமாக பயன்படுத்திய கல்லிற்கு பதில் மரம், உருக்கு போன்ற பொருள்களை பிரதியீடு செய்து கொண்டார்.
 • வெயில், மழை, காற்று போன்றவற்றுக்கும் ஈடுகொடுக்கத் தக்க வகையில் ஊடகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • மூலப்பொருள்களை மாத்திரமன்றி, சிற்பக் கோட்பாடுகள் மற்றும் நுட்பமுறைகளையும் அவர் மாற்றியமைத்தார்.

அரச குடும்பம் (KING AND QUEEN)

 • இயல்பான தத்ரூபமான உருவங்களைக் காட்டுவதற்குப் பதிலாக அரூப நிலையான (Abstract) உருவங்களைப் பயன்படுத்திப் படைத்த ஒரு சிற்பமாக அரச குடும்பம் எனும் சிற்பத்தைக் குறிப்பிடலாம்.
 • இங்கு மனித உருவங்கள் இயற்கையான தோற்றம், இயற்கையான அளவுத்திட்டம் ஆகியவற்றிலிருந்து விலகி ஆக்கப்பட்டுள்ளன.
 • அமர்ந்திருக்கும் நிலையில் ஆக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் ஆண், பெண் உருவங்கள் கலைஞருக்கே உரித்தான பாணியில் படைக்கப்பட்டுள்ளன.
 • மனித உருவங்கள் மிக எளிமையான மற்றும் சில பகுதிகளைக் கொண்டதாகப் புனையப்பட்டுள்ளன.
 • பாரிய உடலும், சிறிய தலையுமாக உருவங்கள் ஆக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.
 • மரபுரீதியான சிற்பக்கலை மூலப்பொருள்களுக்குப் பதிலாக, வெண்கல ஊடகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • வெண்கலத்தைக் கொண்டு வார்ப்பு நுட்பமுறையைப் பயன்படுத்தி இப்படைப்பு ஆக்கப்பட்டுள்ளது.
 • இச்சிற்பம் ஒரு பூங்காச் சிற்பமாகப் படைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்து படுத்திருக்கும் பெண் (Reclining figure)

 • சாய்ந்த நிலையில் இருப்பதைப் போன்று வடிக்கப்பட்டுள்ள இச்சிற்பத்திலும் அரூப நிலைசார் (Abstract) அணுகுமுறை காணப்படுகின்றன.
 • இயற்கையான தோற்றம், இயற்கையான அளவுத்திட்டம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட வடிவங்களைப் பயன்படுத்துதல் ஹென்ரி மூரின் படைப்புக்களின் ஒரு சிறப்பியல்பாகும்.
 • ஊடகம், சிற்பம் வடித்தற் கோட்பாடுகள் ஆகியவற்றை மாற்றியமைப்பதற்காக எடுக்கப் பட்ட ஒரு முயற்சியாக இப்படைப்பைக் குறிப்பிடலாம்.
 • நீண்ட அல்லது துளை கொண்ட வடிவங்கள், சந்தத்துக்கு அமைவாகவும், சமநிலை யாகவும் வெளியுடன் இணைத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • வெண்கல ஊடகத்தில் உலோக வார்த்தல் நுட்ப முறையைக் கையாண்டு நிர்மாணிக்கப் பட்ட படைப்பாகும்.
 • வெளித்துருத்திய, உட்புதைந்த பகுதிகளைக் கொண்டதெனினும் விரிவான தன்மை குறைவான, எளிமையான வடிவங்களை இப்படைப்பில் காணலாம்.
 • மனித உடலின் உடலுறுப்புக்களின் வடிவங்கள் எளிமையாக வடிக்கப்பட்டிருத்தல், மனித உடலின் வடிவத்துக்குச் சார்பாக தலை சிறியதாகக் காட்டப்பட்டிருத்தல் போன்ற ஹென்ரி மூரின் சிற்பக் கலைப் படைப்புக்களின் சிறப்பியல்புகளையும் இதில் காணலாம்.
பயிற்சி வினாக்கள்

1. பெரும்பாலும் பாரிய அளவிலான பூங்காச் சிற்பங்களை வடிவமைத்த கலைஞர் யார்?
2. மரபு ரீதியான சிற்பக் கலையில் இருந்து புதிய பாணியிலான சிற்பக் கலையை உலகிற்கு அறிமுகம் செய்த கலைஞர் யார்?
3. கலைஞர் ஹென்றி மூரின் சிற்பங்களில் காணப்படும் பண்புகளை குறிப்பிடுக?
4. இவரது சிற்பங்களுக்கான ஊடகமாக பயன்பட்டவை எவை?
5. இவரது சிற்பங்களுக்கு உதாரணம் தருக?

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………….
2. கலைப் பண்பு : ………………………..
3. ஒழுங்கமைப்பு : ………………………
4. ஊடகம் : ……………………………………..
5. நுட்பமுறை : …………………………….

1. இனங்காண்க : ………………………….
2. கலைப் பண்பு : ………………………..
3. ஒழுங்கமைப்பு : ………………………
4. ஊடகம் : ……………………………………..
5. நுட்பமுறை : …………………………….

error: Content is protected !!