ஹிந்தகலை ஓவியங்கள்
கண்டி மாவட்ட உடபலாத்த பகல கோரணையில் ஹிந்தகலை எனும் கிராமத்தில் ஹிந்தகலை விகாரையில் வெவ்வேறுபட்ட சில காலப்பகுதிகளைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அனுராதபுரக் கால ஓவியங்கள் சிலைமனைக் கூரைக்கு மேலாக உள்நோக்கிச் சாய்வாக அமைந்துள்ள, நெற்றி வெட்டப்பட்ட மேற்பரப்பில் உள்ளன. இந்த ஓவியங்களுள் 11-17 அடி அளவுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் அனைத்தும் அழிந்து போயுள்ளன.
ஹிந்தகலை விகாரையில் காணப்படும் ஒரு கல்லேட்டின் படி, இவை 5-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என எச். சி. பி. பெல் கூறுகின்றார். இந்த ஓவியங்கள் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என செனரத் பரணவித்தான கூறுகிறார். ருவன்வெலிசாயவின் `வாகல்கடம்’ இற்போன்று மிக மெல்லிய சாந்து இடப்பட்டுள்ளமையால், சிகிரியா ஓவியங்களைவிட ஹிந்தகலை ஓவியங்கள் பழைமையானவை அதாவது கி.பி. 4 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என எல். ரீ. பீ. மஞ்சு ஸ்ரீ கூறுகின்றார்.
இலங்கைச் சுவரோவியக் கலையின் மிகப் பழைமைவாய்ந்த புத்தர் உருவம் ஹிந்தகலையிலேயே காணப்படுகின்றது. மேலும் கதையில் முதன்மை பெறும் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஒரு காட்சியினுள் காட்டப்பட்டிருத்தல் தொடர்பான இலங்கையின் மிகப் பழைமை வாய்ந்த சான்றையும் ஹிந்தகலையிலேயே காண முடிகின்றது. இங்கு காணப்படும் புத்தர் உருவங்கள் இரண்டும் மனிதனின் இயல்பான அளவை விடப் பெரியவையாகும். இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள புத்தர் உருவம் பண்டைய புத்தர் – சிலைகளில் காணப்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. கண்கள், பெரிதும் சிகிரியா ஓவியங்களில் உள்ள கண்களை ஒத்தவை. கழுத்தின் உருளைத் தன்மையைக் காட்டுவதற்காக வளைவான மூன்று கோடுகள் இடப்பட்டுள்ளன. கீழுதடு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
பொருள் விளக்கம்
இரண்டு புத்தர் உருவங்களுள் இடது புறத்தே உள்ள உருவம் கைகளில் பிச்சைப்பாத்திர மொன்றினை எடுக்க ஆயத்தமாகும் பாங்கு காட்டப்பட்டுள்ளது. அருகே பிச்சைப் பாத்திரத்தை வழங்குபவர் நின்றிருக்கிறார். வலது புறத்தே உள்ள புத்த உருவம் தரும் போதனை செய்யும் பாங்கு காட்டப்பட்டுள்ளது. புத்தர் தேவலோகம் சென்று, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான தாய்த் தெய்வத்துக்குத் தரும போதனை செய்யும் விதம் வலது புறத்தே உள்ள பகுதியில் காட்டப்படுகின்றது என ஆனந்த குமாரசுவாமி கூறுகிறார். மேலும், இந்த ஓவியத்தின் இடது புறத்துடனான பகுதி தபஸ்ஸு, பல்லுக்கா ஆகிய இரு வணிகர்கள் புத்தருக்குத் தேன் வழங்குவது காட்டப்பட்டுள்ளது என அவர் கூறுகிறார். அங்கு காட்டப்பட்டுள்ள தேவர் உருவங்கள் நால் வகைத் (சத்தரவரம்) தேவர்களுடையது எனக் கருதப்படுகின்றது. ஓவியத்தின் ஒரு மூலையில் காளைகள் பூட்டிய ஒரு மாட்டு வண்டியும் மற்றும் சில காளைகளும் காட்டப்பட்டுள்ளன.
பெருமளவுக்கு அழிந்து போயுள்ள இந்த ஓவியத்தின் தெளிவான ஒரு பிரதி கொழும்பு அரும்பொருளாக சுவரோவியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தர் ‘தவ்திசா’ தேவ லோகத்தில் தரும போதனை செய்தலும் தபஸ்ஸு, பல்லுக்கா ஆகிய இரு வணிகர்களும் புத்தருக்கு தானம் வழங்குவதையும் குறிப்பதாக இந்த ஓவியத்தை 1918 இல் பிரதி செய்த டபிள்யு. எம். பெர்னாந்து கூறுகின்றார். சக்ர தேவன் புத்தரைச் சந்திப்பதற்காக இந்திரசாலைக் குகைக்கு வந்த சந்தர்ப்பமே இந்த ஓவியத்தினால் காட்டப்படுகின்றது என செனரத் பரணவித்தான கூறுகின்றார்.