வெஹெரகல அவலோகிதேஷ்வரர் போதிசத்துவர் விக்கிரகங்கள்
தெய்வீகத்தன்மை, இரக்கத்தன்மை ஆகியவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தும் போதிசத்துவர்களுள் மிக உயர்வான ஒரு வெளிப்பாடு அவலோகிதேஷ்வரர் போதிசத்துவர் சிற்பமாகும். மகாயான நம்பிக்கைகளின்படி, அவலோகிதேஷ்வரரே இரக்க குணத்தின் அதிபதி ஆவார். மேலும் மகாயான பௌத்தர்களிடையே பெரிதும் பிரபல்யம் பெற்றுள்ள பெரிதும் மதிக்கப்படும் போதிசத்துவரும் இவரே ஆவார். சீனாவில் க்வான்-ஷ்னயின் கஸ்கஸ் மற்றும் யப்பானில் க்வான்னோன் எனவும் இப்போதிசத்துவர் அழைக்கப்படுவர். அதற்கமைய ஒட்டுமொத்த மகாயான பௌத்த தேவர்வகைப் பொருள் மிகப் பிரபல்யமடைந்துள்ள போதிசத்துவர்களாகக் காணப்படுவோர் அவலோகீதேஷ்வரர்கள் ஆவர். வெவ்வேறு வடிவங்களுக்கமைய வழிபாட்டுக்கும் பூசிப்புக்கும் உள்ளாகும் அவலோகிதேஷ்வரர் போதிசத்துவர்கள் சகல பிராணிகள் மீதும் கருணையுடன் கவனத்துடன் இருந்து அவர்களது வேதனைகள், அவலக் குரல்கள், இடர்கள் குறித்துக் கவனஞ் செலுத்தி ஆபத்தான காலப்பகுதிகளில் அவர்களை மீட்டும் வல்லமையுள்ள ஒருவராகக் கருதப்படுகின்றார்.
அவலோகிதேஷ்வரர் வழிபாட்டு முறைகளின் ஆரம்பமானது இந்தியாவின் வடமேற்குப் பிரதேசத்தில் இடம்பெற்றமைக்கும் மகாயான பௌத்தத்தின் செல்வாக்குக் காரணமாக இலங்கையிலும் அவலோகிதேஷ்வரர் போதிசத்துவர் வழிபாடு ஆரம்பமாகி பரவியமைக்கும் சான்றுகள் உள்ளன. பேராசிரியர் பரணவித்தான அவர்கள் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டில் இவ்வழிபாடு இலங்கையில் பிரபல்யமடைந்து காணப்பட்டுள்ளது.
அவலோகிதேஷ்வரர் போதிசத்துவர்களுக்குரிய பல்வேறு வடிவங்கள் கலைப்படைப்புக்களில் காணப்படுகின்றன. இது தொடர்பாகப் பௌத்த தரும கிரந்தங்களிலும் இந்து தந்திரயான மண்டலங்கள் மற்றும் சூத்திரங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. மிக எளிமையான தன்மை தொடக்கம், அரச தோரணையில் மலை உச்சியொன்றில் அமர்ந்து அமைதியான கடலில் பூரண சந்திரனின் உடன் அழியத்தக்க விம்பத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல் மற்றும் ஆயிரம் தலைகள், ஆயிரம் கைகள், ஆயிரம் கண்கள் கொண்ட விக்கிரகங்கள் வரையிலான பல்வேறு வகை விக்கிரக முறைகளைக் காண முடிகின்றது. அவலோகிதேஷ்வர போதிசத்துவர் சகல பிராணிகளதும் துன்ப துயரங்களை நோக்குவதிற்காகக் கொண்டுள்ள ஆற்றலே இந்த பல்வேறு வெளிப்பாட்டு முறைகளால் காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அவலோகிதேஷ்வர விக்கரங்கள் பிரதானமாக இரண்டு வகைப்படும் என வண. பெல்லன்விலை விமலரதன குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று திர்-பூசண விக்கரங்களாகும். மற்றையது இராஜகுமார தன்மையுள்ள விக்கரகங்களாகும். நீர்-பூசண என்பது அரச ஆபரணங்கள் அற்ற விக்கிரகங்களாகும். அரச குமாரப்பாங்கு என்பது அரச குமாரனுக்குரிய உடைகளைக்கொண்ட விக்கிரகங்களாகும். இவர் பெருங்கருணையின் பிரதி மூர்த்தியாதலால் இடது கையினால் ஒரு தாமரை மலரைப் பிடித்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
அரச குமாரப்பாங்கில் அமர்ந்தநிலை விக்கிரகங்கள் பல இலங்கையில் கண்டுபிடிக்க்பட்டுள்ளன. வெகெரகலையில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 9ஆந் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலத்தாலான அவலோகிதேஷ்வவரர் விக்கிரகத்தை அவற்றுள் மிகச் சிறப்பான விக்கிரகமாகக் குறிப்பிடலாம். திண்ம வார்ப்பு முறையில் ஆக்கப்பட்டுள்ள இதன் உயரம் 49.8 சென்ரிமீற்றர் ஆகும். தேசிய அரும்பொருட்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த விக்கிரகம் உயரிய கலைத்துவப் பண்புகளையும் லலிதப் பண்புகளையும் கொண்ட ஒரு கலைப்படைப்பாகும். போதிசத்துவர் அமர்ந்திருக்கும் மகானுபாவ உடல் நிலையானது, ‘மகாராஜலீலாசனம்’ எனப்படுகின்றது. உயர்த்தி வைத்திருக்கும் வலது கையினால் ‘கடக ஹஸ்தம்’ முத்திரை காட்டப்பட்டள்ளது. அவ்வலது கையை மடித்து வலது கால் மீது வைத்து சற்று வலது புறமாகச் சாயந்து இருக்கும் லலிதாசனப்” பாங்கு காட்டப்படுகின்றது. இக்கையில் செந்தாமரை மலரொன்றும் இருந்திருக்க இடமுண்டு எனவும் கருதப்படுகின்றது. எளிமையான ஆடையணிகளைக் கொண்ட போதிசத்துவர் விக்கிரகத்தில் உடலின் மேற்பகுதி திறந்திருக்குமாறும், கீழ்ப்பகுதி மென்மையான ஆடையினால் எளிமையாக மறைக்கப்படுமாறும் அமைக்கப்பட்டுள்ளது. உடலின் மேற்பகுதியின் ஒருபக்கத்தில் ஒரு துணி நாடா உள்ளது. காதணிகளோ கழுத்தணிகளோ கிடையாது. கைகளில் வளையல்கள் மாத்திரம் உள்ளன. இவ்விக்கிரகம் யோகிநிலையைக் காட்டுமாறு ஆக்கப்பட்டுள்ளது. சந்திரர் விக்கரமகே அவர்கள், யோக அவலோகீதேஷ்வர வகை எனக் குறிப்பிட்டுள்ளார். தலையில் அமைந்துள்ள ‘ஜடாமகுடம் அழகிய செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்டது. மகுடத்தின் முன்புறத்தே உட்குடைவு காணப்படுகின்றது. அதனுள் ”அமிதாப புத்தர்” வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. பொதுவாக அவலோகிதேஷ்வர போதிசத்துவரது ஜடா மகுடத்தில் அவரது ஆன்மீகத் தந்தையாகக் கருதப்படும் அமிதாபய புத்தரின் உருவம் காட்டப்படும். ஒட்டுமொத்தமாக இந்த விக்கிரகத்தில் காட்டப்பட்டுள்ள தலையணிகள் மற்றும் ஏனைய ஆடையணிகளுடன் முனிவரொருவரின் உடையில் காணப்படும் எளிமையான தன்மையும் சேர்க்கப்பட்டுள்ளமையால் போதிசத்துவரின் தெய்வீக சக்தியும், யோகநிலையும் குறிப்பீட்டு ரீதியில் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த விக்ரகம், கி.பி. ஏழாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் செய்யப்பட்ட விக்கிரகங்களை ஒத்தவை எனவும் ஒப்பமான மேற்பரப்பும் முடிப்பும், உடையில் உள்ள நெகிழ்வான அலைமடிப்புக்கள் ஆகியன குறிப்பாக சாழுக்கிய கலைப்பாங்கு இயல்புகளை ஒத்ததாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விக்கிரகத்தின் மூலம் ஓரளவுக்கு ஆரம்பகால சோழக் கலைப்பாங்கின் பண்புகளாகிய உணர்வுபூர்வமான தன்மை, மென்மை போன்றவையும் காட்டப்படுவதாகக் கருதப்படுகின்றது.