வெட்டம்புகல

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பளாண்டுவைப் பிரதேசத்தில் கிவுலேயாயை எனும் கிராமத்தில் இக்குகை அமைந்துள்ளது. இக்குகையின் ஏறத்தாழ 40 மீற்றர் நீளமான உட்புறச் சுவர் முழுவதிலும் வெவ்வேறு வடிவ, மனித உருவங்களும் விலங்கு உருவங்களும் கேத்திர கணித தளவடிவங்களும் பெருமளவில் காணப்படுகின்றன. அதாவது இங்கு பெருந்தொகையான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் யானை உருவங்களே பெருமளவில் உள்ளன. எல்லா யானை உருவங்களும் வெள்ளை, நரை, மஞ்சள், கபிலச் சிவப்பு ஆகிய நிறங்களால் வர்ணந் தீட்டப்பட்டுள்ளன. இந்த வர்ணங்கள் தடிப்பாகப் பூசப்பட்டிருப்பதும், சில வர்ணங்கள் வேறு வர்ணங்களோடு கலக்கப்பட்டிருப்பதும் சிறப்பம்சங்களாகும். இவ்வாறு வர்ணந் தீட்டப்பட்டுள்ள உருவங்களில் புற வரைகோடு கிடையாது. இரண்டு தந்தங்களைக் கொண்ட யானை உருவமே இங்கு காணப்படும் சிறப்பான உருவமாகும். இந்த யானை உருவம் கபில நிறத்தைக் கொண்டு வர்ணந் தீட்டப்பட்டுள்ளது. ஒரு யானை உருவத்தின் காலடிகள் வரியாக (வட்ட வடிவத்தில்) வரையப்பட்டுள்ளது. இந்த உருவத்துக்கு வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

கேத்திரகணித உருவங்களுள் தெளிவாக இனங்காணத்தக்க வெளிப்பாடுகளாகக் காணப்படுபவை இயற்கையாக நீர் நிரம்பியுள்ள இடங்களைக் காட்டி நிற்கும் உருவங்களாகும். நீரைக் குறிப்பதற்காக நரைநிறப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காட்டில் இயல்பாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் பற்றிக் காட்டில் வாழும் குழுவினரிடையே தொடர்பாடுவதே இதன் நோக்கமாக இருந்திருக்க இடமுண்டு. கோடுகளில் வரையப்பட்டுள்ள இந்த உருவங்களை வரைவதற்காக வெண்ணிறமும் நரைநிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோடுகளின் தடிப்பைக் கருதும் போது வர்ணந் தீட்டுவதற்கு சிலபோது விரல்கள், சற்றுத் தடித்த மரக்குச்சிகள் போன்ற பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகின்றது. மேலும், அம்பும் வில்லும் மாத்திரம் வெண்ணிறக் கோட்டினால் வரையப்பட்ட ஒரு ஓவியமும் இங்கு உள்ளது. மான் எனக் கருதத்தக்க ஓரு உருவமும் இங்கு காணப்படுவதோடு அதன் கொம்புச் சோடி தெளிவாக வரையப்பட்டுள்ளது. அது சிவப்பு சார்ந்த மஞ்சள் (Reddish Yellow) வர்ணத்தினால் வர்ணந் தீட்டப்பட்டுள்ளது.

அதிக வேலைப்பாடுகளையுடைய வட்ட வடிவங்கள்
யானை
யானைக் கூட்டமொன்று
அம்பும் வில்லும்
இரு மனித உருவங்கள்
error: Content is protected !!