ருவன்வெலிசாய தாதுகோபம்

அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த ருவன் வெலி தாதுகோபம், கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அது துட்டகைமுனு மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. இது அனுராதபுரக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய தாதுகோபமாகும். எனவே அது அப்போது மகா தாதுகோபம் மகா தூபி எனவும் வழங்கப்பட்டது. மேலும் ஜேத்தவன தாதுகோபம், அபயகிரி தாதுகோபம் ஆகியவற்றுக்குச் சார்பாக இது இலங்கையின் மூன்றாவது இடத்தைப் பெறும் தாதுகோபமாகும். எனவே இலங்கையின் பெருந்தாதுகோபங்கள் மூன்றில் இதுவும் அடங்குகின்றது.

மகாவிகாரை வளாகத்தொகுதியினுள் அமைந்துள்ள இப்புனித தாதுகோபத்தினுள், புத்தர் பெருமானின் உடல் தாதுக்கள் அடக்கஞ் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதாவது புத்தர் பெருமானின் உடல் தாதுக்களுள் ஏறத்தாழ 1/8 பகுதி இங்கு அடக்கஞ் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தாதுகோபத்தின் வரலாறு தொடர்பான பல கதைகள் உள்ளன. ருவன்வெலி தாதுகோபம் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் ஒரு தெலம்பு மரம் காணப்பட்டதாகவும் நிர்மாணிப்புப் பணிகளுக்காக அம்மரம் தறிக்கப்பட்டதாகவும் அவ்வாறு தறித்த பின்னர் அமமரத்தில் இருந்த ஒரு தேவதையின் வேண்டுகோளுக்கமைய அவளது பெயர் அதாவது சுவர்ணமாலி எனும் பெயரும் அதற்குச் சூட்டப்பட்டதாகவும் கர்ண பரம்பரைக் கதையொன்று கூறுகின்றது. கல்வெட்டுக்களில் இத்தாதுகோபம் ‘ரத்னசேத்திய’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதுகோபத்தின் கட்டுமானப்பணிகள் பூர்த்தியாக முன்னர் மன்னர் துட்டகைமுனு உயிர்துறத்தமை யால் அவரது சகோதரனான சத்தாதிஸ்ஸ மன்னன் மீதியாக இருந்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்து, யானை மதில், வெண்சாந்து வேலை ஆகிவற்றையும் பூர்த்திசெய்துள்ளார். பண்டைய தாதுகோப நிர்மாணிப்புக்கமைய, இதன் மூல வடிவம், கோல், குடை ஆகியவற்றைக் கொண்டமைந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. இந்தாதுகோபத்தின் விட்டம் 370 அடி ஆகும். உயரம் 300 அடி ஆகும். தாதுகோபத்தின் அத்திவாரம் ஏறத்தாழ 17.5 அடி ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களால் இத்தாதுகோபப் புனர் நிர்மாணப் பணிகள் செய்யப்பட்டதோடு பல்வேறு அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தாதுகோபமொன்றில் காணப்பட வேண்டிய அம்சங்களாகிய பிரதட்சணைப் பாதை, பேசா வளையங்கள், கர்ப்பக்கிரகம், சதுரக்கோட்டம், கலசம், கலசந்தாங்கி, சூடாமணிக்கம், யானை மதில், வாகல்கடை, உட்பட நுழைவாயில் அம்சங்களும் (கொரவக்கல், காவற்கல், சந்திரவட்டக்கல் போன்றவை) இத்தாதுகோபத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தாதுகோபம் அமைந்துள்ள சதுரவடிவ மேடையில் (சலபத்தல மலுவ) நான்கு பக்கங்களிலும் நான்கு சிறிய தாதுகோபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாதுகோபத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள வாாஹல்கட எனும் அமைப்புக்கள் அழகிய பூங்கொடிகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தாதுகோபத்தின், மூன்றாவது மேடை மீது (பேசாவ) யானை உருவங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாதுகோப புனர்நிர்மாணிப்புக்களின்போது அது நீக்கப்பட்டுள்ளது. கல்லில் செதுக்கப்பட்ட அவ்வாறான 131 யானைத்தலைகள் இருந்ததாக தொல்பொருளியல் விற்பன்னர் ஸ்மீதர் கூறுகின்றார். (அபயகிரி தாதுகோபத்தில் மூன்றாம் மேடையில் காணப்பட்ட அவ்வாறான யானை உருவங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன). தாதுகோபத்தின் மணல் மேடையைச் சூழவும் யானை மதில் உள்ளது. ஏறத்தாழ 9 அடி உயரமானதும் 344 யானை உருவங்களைக் கொண்டதுமான அம்மதில் ருவன்வெலி தாதுகோபத்தில் காணப்படும் தனிச்சிறப்பான ஒரு கட்டடக்கலைப் படைப்பாகும்.

துட்டகைமுனு மன்னனின் உருவச்சிலை, விகார மகாதேவியின் உருவச்சிலை, பாத்திய திஸ்ஸ மன்னனின் உருவச்சிலை, ருவன்வெலி தாதுகோப மாதிரியுரு போன்ற பல ஆக்கங்கள் தாதுகோபத்தைச் சூழவுள்ள மேடையில் காணப்படுகின்றன.

வாகல்கடம்
பளிங்கினாலான சிகரம்
error: Content is protected !!