ரஃபாயெல் சன்சியோ (கி.பி. 1483 – 1520)

மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த சிறந்த ஓர் ஓவியக் கலைஞரான ரபாயெல் சன்சியோ 37 வருடங்கள் மாத்திரமே உயிர் வாழ்ந்தார். கி.பி. 1483 இல் ஊர்பினோ எனும் நகரில் பிறந்த ரஃபாயலின் தந்தை அக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஓவியரும் கவிஞருமான ஜியோவனி சன்சியோ ஆவார். மகன் ரஃபாயலின் முதலாவது ஓவிய ஆசிரியரும் அவரேயாவார். ரஃபாயல் 17 வருட வயதில் அதாவது 1504 இல் பெருஜினோ எனும் ஓவியக் கலைஞரிடம் ஓவியக்கலை கற்றுள்ளார். 1498 – 1500 காலப்பகுதியில் பெருஜினோவுடனிருந்தவாறு சுவரோவியக் கலை மற்றும் ஓவியக்கலை தொடர்பான பரந்த அறிவையும் ரஃபாயெல் பெற்றார். அதற்கமைய ஃபாயல் மீது முதன் முதலில் செல்வாக்குச் செலுத்திய ஓவியக்கலைஞர் பெரோஜினோ ஆவார்.

உரோம புரியில் வத்திக்கான் மாளிகையில் சிஸ்ட்டைன் தேவாலயத்தில் ஓவியம் வரைவதற்காக பெரோஜினோவுடன் வந்த ரஃபாயெல் அங்கு வரைந்த கன்னி மரியாள்’ எனும் ஓவியமே அவரது முதலாவது சுவரோவியமாகக் கருதப்படுகின்றது. குறுகிய காலத்திற்குள் மிக முக்கியமான பல கலைப்படைப்புக்களை ரஃபாயெல் ஆக்கினார். அவர் ஓவியக்கலையில் மட்டுமன்றி கட்டடக்கலையிலும் திறமை காட்டினார். 1514 இரண்டாம் ஜுலியஸ் பாப்பரசர் ரஃபாயெலைத் தமது பிரதான திட்டக் கலைஞராக நியமித்துக் கொண்டார். ரஃபாயெலினால் வரையப்பட்ட, ‘மடோனா அதாவது கன்னிமரியாளையும் குழந்தை இயேசுவையும் காட்டும் பல ஓவியங்கள் உள்ளன. மறுமலர்ச்சிக் காலத்தில் மிகச்சிறந்த மடோனா ஓவியக் கலைஞராக ரபாயெல் கருதப் ஃபுளோரன்ஸ் நகரத்தை வந்தடைந்த ரஃபயெல் மைக்கல் ஆஞ்சிலோ, லியனாடோ டாவின்சி ஆகியோருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றதோடு அதன்மூலம் தமது ஓவியக்கலை அறிவையும் விருத்தி செய்து கெண்டார்.

ரஃபாயெலின் படைப்புக்களை 1504 தொடக்கம் 1508 வரையில் ஃபுளோன்ஸ் நகரில் வரைந்த ஓவியங்கள் எனவும் 1508 இன் பின்னர் உரோமாபுரியில் வத்திக்கான் நகரில் வரைந்த ஓவியங்கள் எனவும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திக் காட்டலாம். 1504 – 1508 காலப்பகுதியில் புளோரன்ஸ் நகரில் வரைந்த ஓவியங்களுள் புனித யுவான், பாரினி நிக்கலஸ்களினால் கன்னிமரியாளைச் சிம்மாசனத்திலேற்றல், குழந்தை புனித யுவான் உடன் குழந்தை இயேசுவும் அன்னை மரியாளும் ஆகிய ஓவியங்கள் முக்கியமானவை. ரஃபாயெல், கி.பி. 1508 இல் வரைந்த ஓவியங்களுள் உரோமாபுரியில் வத்திக்கான் நகரில் ஸ்டன்சா டெலா சிக்னச்சுரா எனும் அறையில் உள்ள எதென்ஸ் குருகுலம், சிஸ்ரைன் அன்னை மரியாள், – பொலக்னொனில் கன்னி மரியாள், இரண்டாம் ஜூலியஸ் பாப்பரசரின் உடல் மேற்பகுதி உருவப்படம் ஆகிய படைப்புக்கள் மிக முக்கியமான ஆக்கங்களாகக் கருதப்படுகின்றன. அவர் இயேசு உயிர்த்தெழுதல் (Transfiguration) எனும் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த நிலையில் 1520 இல் உயிர்நீத்தார்.

ரஃபாயெலினது படைப்புக்களின் சிறப்பியல்புகள்

டாவின்சி, மைக்கல் ஆஞ்சிலோ ஆகிய இரண்டு கலைஞர்களதும் கலைப்பாணிகளின் சேர்மானத்தினாலான ஒரு கலைப்பாணியில் ரஃபாயெலின் படைப்பாக்கங்கள் அமைந்துள்ளன என ஜன்சன் எனும் விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். ரஃபாயலினது வர்ணப் பயன்பாடு மிக மென்மையான தன்மையுடையது. குறிப்பாக டாவின்சியினது ஓவியங்களில் காணப்படும் சவுமொரோ உத்தியை ஒத்தவாறான வர்ணப்பயன்பாட்டை ரபாயெலின் மடோனா ஓவியங்களில் காண முடிகிறது. இளவர்ணங்களில் வர்ணந்தீட்டப்பட்டுள்ள இந்த ஓவியங்களின் மற்றுமொரு சிறப்பம்சம் பின்னணியில் மனங்கவரத்தக்க சூழல் காட்டப்பட்டிருத்தலாகும்.

அவரது அன்னை மரியாளைக்காட்டும் ஓவியங்களில் பெண் உருவத்தின் மென்மையும் அழகும் எளிமையான பூரிப்பு, அடக்கம். உணர்வுபூர்வத்தன்மை போன்றவையும் தெள்ளத் தெளிவானவை. இவ் அம்சத்தைப் பொறுத்தமட்டில் இவர் லியனாடோ டாவின்சியைக் கூட விஞ்சிச் சென்றுள்ளதாகவும் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ரஃபாயெல் வரைந்துள்ள ஒவ்வொரு உடல்நிலையும் உணர்வுபூர்வமான தன்மை, சந்தத்தன்மையையுடைய அழகு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன. இவ்வியல்புகள் அவ்வோவியங்களைப் பார்ப்போரிடத்தே அடக்க உணர்வு மேலிடச் செய்வனவாக அமைந்துள்ளன.

ரஃபேயல் தமது ஓவியங்களில் மனித உருவங்களை நாடகப் பாங்கிலும் லலிதத்துடனும் ரஃபாயெல் வரைந்துள்ளார். தூரதரிசனமும் பொருளுள்ள வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக எதேன்ஸ் நகரில் கலைக்கூட ஓவியத்தின் பின்னணிக் காட்சியானது குறித்த கருப்பொருளின் எடுப்பான தன்மையை முனைப்புறுத்துவதில் பங்களிப்புச் செய்துள்ளது. மனித உருவங்களில் சரியான உடலமைப்பு இயல்புகளையும் நுணுக்கமாக மனித உருவங்களைப் பயன்படுத்துதலையும் இவரது ஆக்கங்களில் காண முடிகின்றது. சிற்பங்களிற் போன்ற முப்பரிமாணத்தன்மை வலியுறுத்தப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பியல்பாகும்.

மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த கலைஞர்களுள் சிறுவர் உருவங்களை வரைவதில் அபார திறமைகாட்டிய கலைஞரும் இவரேயாவார். மென்மையான மழலைத்தன்மை கொண்ட தேவதூதுவர் உருவங்களையும் குழந்தை பாலனின் உருவங்களையும் ரஃபாயலின் ஓவியங்கள் பலவற்றில் காண முடிகின்றது.

எதென்ஸ் நகர கலைக்கூடம்/பள்ளி
Raphael, The School of Athens, Stanza della Segnatura, Vatican Palace, Rome, 1508 11. Fresco

கிரேக்க தத்துவப் பள்ளியை விடயப் பொருளாகக் கொண்ட இந்த ஓவியமானது மறுமலர்ச்சிக்கால ஓவியர்கள் கிரேக்க விடயப்பொருள்கள் மீது காட்டிய ஆர்வத்தைக் காட்டிநிற்கிறது. ஓவியத்தின் மத்தியில் உள்ள இரண்டு உருவங்களுள் அரிஸ்டோட்டல் (வலதுபுறமாக), பிளேட்டோ (இடதுபுறமாக) ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். பெரிதும் பௌதீகங்கடந்த மனப்பாங்குகளைக் கொண்டிருந்த பிளேட்டோவின் கை வானத்தை நோக்கியும் பௌதீகவாத மனப்பாங்குகளைக் கொண்டிருந்த அரிஸ்டோட்டலின் கை பூமியை நோக்கியும் அமைந்துள்ளன. கைகளால் காட்டப்படும் குறியீட்டுரீதியான வெளிப்பாடுகளாலேயே இவர்கள் இருவரது கருத்துக்களின் வேறுபாடு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவ்விருவரதும் உருவங்களை மையமாகக்கொண்டு அவற்றைச் சூழ கிரேக்கத்துடன் தொடர்புடைய வரலாற்றறிஞர்கள், கணித அறிஞர்கள், தத்துவஞானிகள் போன்றோரின் உருவங்கள் பல உள்ளன. ஒட்டுமொத்த ஓவியத்தில் பிரதானமாக இருபதுக்கும் மேற்பட்ட உருவங்கள் இனங்காணப்பட்டுள்ளன. பைதகரஸ், அனக்சிமன்டர், பிளோட்டினஸ். ஹெரக்லீட்டஸ், யூக்கிளிட்டு போன்றோர் அவர்களுள் சிலராவர்.

ஓவியத்தில் மனித உருவங்கள் கூட்டங்கூட்டமாகக் காட்டப்பட்டுள்ளன. அவர்கள் தத்தமது விடயப் பரப்புகளைச் சேர்ந்த வெவ்வேறு கருமங்களில் திளைத்துள்ளனர். ஓவியத்தில் உருவங்கள் மூன்று மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் பாரிய கட்டடக்கலைக்காட்சி அமைந்துள்ளது. அது கிரேக்கத் தத்துவஞானிகள் குழுமத்தை சூழ அமைந்த ஒளிவட்டமொன்றினை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஓவியம் இரண்டு பகுதிகளாக வரையப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் அரைப்பகுதி மனித உருவங்களுக்காகவும் மேல் அரைப்பகுதி கட்டடக்கலைப் பின்னணிக் காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னணிக் கட்டடம் சரியாக நேர்கோட்டுத் தூரதரிசனப் பயன்பாட்டின் – மூலம் வரையப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் வெவ்வேறு தனியாள் பாத்திரங்கள் ஒரே காலப்பகுதியைச் சேர்ந்தவை அல்ல. அப்பாத்திரங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் வாழ்ந்தவையாகும். எனினும் ர.’ பாயெல் அப்பாத்திரங்களை ஒரே மேடைக்குக் கொணர்ந்து ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியத்தின் வலது புறத்தே உள்ள தூணின் உச்சிப்பகுதிக்கு அருகில்தலை மாத்திரம் காட்சியளிக்குமாறு தனது உருவத்தையும் ரஃபாயல் உட்படுத்தியுள்ளார். பின்னணிக் கட்டடம் கிறித்தவக் கட்டடக்கலையின் அம்சங்களையும் கொண்டுள்ளது. இடது புறத்தே நரம்புக்கருவியொன்றினைக் கையிலேந்தியுள்ள உருவம் அப்பலோ தெய்வமாகும். வலது புறத்தேயுள்ள பெண்ணாகிய தேவ கன்னிகை அத்தீனா ஆவார்.

இது ரஃபாயலினால் வரையப்பட்ட கவிதைக்கலை யுடன் தொடர்புடைய கருப்பொருளொன்றைக் காட்டும் ஓர் ஓவியமாகும். கி.பி. 1511 இல் வரையப்பட்ட இது, அளவிற்பெரிய ஒரு பிரெஸ்கோ ‘ ஓவியமாகும். பர்ணாசஸ் என்பது கற்பனையான ஒரு மலையாகும். அங்கு அப்பலோவும் கவிதைக் கலையுடன் தொடர்புடைய வெவ்வேறு குழுவினரும் கூடியிருக்கும் விதம் ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் மத்தியில் அப்பலோ தெய்வம் வாத்தியக்கருவியொன்றினை இசைத்துக்கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. இது மரபுரீதியான கிரேக்க நரம்புக்கருவிக்குப் பதிலாக வயலினை ஒத்தது. சமகால இத்தாலிய கலைக்கூட ஓவியத்தைப் போன்றே இதுவும் அரைவட்ட மாதிரியொன்றினுள்ளேயே வரையப்பட்டுள்ளது. அப்பலோவைப் பிரதான கட்புல இலக்காக அமைத்து ஏனைய கவிஞர்களைக் குழுக்களாக்கி. அப்பலோ தெய்வத்தைச் சூழ இடப்படுத்தப்பட்டுள்ளது. அப்பலோவைச் சூழ உள்ளோருள் ஒன்பது மியுஸ் தேவதைகள், பண்டைக்காலத்தில் வாழ்ந்த பிரபல்யம் வாய்ந்த ஒன்பது கவிஞர்கள் ஆகியோரைக் காணலாம். ஒன்பது மியுஸ் தேவதைகளும் கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களாவதோடு, கவிதைப் பிரியர்களும் இசைப்பிரியர்களும் ஆவர். அப்பலோவின் இடது புறத்தே, வீர காவியத்துக்கு அதிபதியான ‘கலோபி’ எனும் தேவதை காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தின் வலது புறத்தே நீல நிற நீண்ட மேலங்கியுடன் இருப்பவர் ‘ஹோமர்’ எனும் பிரபல்யமிக்க கிரேக்க கவிஞர் ஆவார். அவரை ஒரு குருடராக ரஃபாயெல் இந்த ஓவியத்தில் காட்டியுள்ளார். இந்த ஓவியத்தின் முகத்துக்காக ‘லஒகுன்’ எனும் கிரேக்கச் சிற்பத்தில் உள்ள பூசகரின் முகத்தோற்றமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் பொதிந்துள்ள துன்பத்துக்குப் பதிலாக குருட்டுத் தன்மையை உணர்துவதற்காக ரஃபாயெல் இங்கு அம்முகத்தைப் பயன்படுத்தியுள்ளார். அப்பலோவின் தலையைச் சுற்றிவர ஒலிவ் இலைகளாலான கிரீடம் அமைந்துள்ளது. மனித உருவங்கள் கூட்டம் கூட்டமாகக்காட்டப்பட்டுள்ள ஓர் ஓவியமாகிய இதில், அந்தந்தக் குழுவினர் தமக்கே உரித்தான தனிப்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிக்கிடப்பது சித்திரிக்கப்பட்டுள்ளது.

Inside of Stanza della Segnatura
அல்பா மடோனா

ரஃபாயெல் வரைந்த மடோனா ஓவியங்களுள் பிரபல்யமான ஓவியம் இதுவாகும். வட்டவடிவ அமைப்பொன்றினுள்ளேயே இது வரையப்பட்டுள்ளது. அன்னை மரியாள், குழந்தை இயேசு, புனித யுவான் ஆகிய மூன்று பாத்திரங்களும் இந்த ஓவியத்தின் விடயப் பொருள்களாக உள்ளன. மிகைப்படுத்தல், ஒளிவட்டம், தேவ கன்னிகைகள், ஒளிக்கற்கைள் போன்றவற்றை நீக்கி நிஜ உலகில் மனிதப் பாங்கில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. மிக நுணுக்கமாக நோக்குகையில் மெல்லிய கோட்டினால் காட்டப்பட்டுள்ள மறைவான மூன்று ஒளிவட்டங்கள், உருவங்கள் மூன்றினதும் தலையைச் சூழ இடப்பட்டுள்ளதெனக் காணலாம். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த ஓவியத்துக்காக கண்கவர் தன்மையை மென்மையான வர்ணத்தொகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதானமான மூன்று பாத்திரங்களும் இத்தாலியில் கிராமப்புறச் சூழலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளன. தைல வர்ண ஓவியமாகிய இதன் மூலப்படைப்பு மரப்பலகையொன்றின் மீது வரையப்பட்டிருந்தது. எனினும் தற்போது காணப்படும் ஓவியம் கன்வசு மேற்பரப்பில் வரையப்பட்டுள்ளதொன்றாகும்.

இந்த ஓவியத்தில் அன்னை மரியாளினதும் புனித யுவான் இனதும் கவனம் மூங்கிலில் செய்யப்பட்ட சிலுவையின் மீதே பதிந்துள்ளது. சிலுவையின் கீழ்ப்பகுதி புனித யுவானினால் பிடிக்கப்பட்டுள்ளதோடு, மேற்பகுதி குழந்தை இயேசுவினால் தாங்கிப்பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை இயேசுவின் முகத்தில் சிந்தனைவயப்பட்ட உணர்வு காட்டப்பட்டுள்ளதோடு சிலுவையினால் எதிர்காலத்தில் செய்யவுள்ள உயிர்த்தியாகம் நினைவூட்டப்படுகின்றது. அன்னை மாரியாளின் உடல்நிலை, கிரேக்கச் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ள உடல்நிலையை ஒத்ததாகும். அணிந்திருக்கும் ஆடைகள் உரோமானிய உடைகளை ஒத்தவையாகும். கி.பி. 1510 இல் வரையப்பட்ட இந்த ஓவியத்தின் விட்டம் 37 1/4 அங்குலமாகும். ஓவியத்தின் பின்னணியில் புற்றரையைக் கொண்ட சூழுலில் மிகத் தூரத்தே அமைந்த சில வீடுகள் உள்ளன. இது பின்னணிக் காட்சியைக் காட்டுவதற்காக வெளியின் தூரதரிசன உத்தியை ரஃபாயல் பயன்படுத்தியுள்ள விதத்தைக் காட்டுவதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மனித உருவங்கள் மூன்றும் பிரமிட் மாதிரியொன்றுள் காட்டப்பட்டுள்ளன. கவுமொரோ இயல்புகள் உள்ளடங்குமாறு தைல வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம், அமெரிக்காவில் வொஷிங்கடன் நகரில் தேசிய கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!