மௌரிய கலைப் படைப்புக்கள்

சிந்துவெளி நாகரிகத்திற்கு பின்பு இந்தியாவின் கலைப்படைப்புக்கள் சம்பந்தமான சிறப்பான ஒரு காலமாக மௌரியக் காலம் காணப்படுகிறது. வைதீக நெறிக்காலம் மௌரிய காலத்திற்கு முன்பும் சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு பின்பும் கி.மு. 1500 இல் இருந்து ஆரம்பித்ததாக நம்பப்படுகின்றது. கி.மு. 600 வரை நடைபெற்ற வைதீக நெறிக் காலப்பகுதியில் அவர்களுடைய கலைப்படைப்புக்கள் சம்பந்தமான தகவல்களை இலக்கியங்கள் மூலம் அறிய முடியுமாயினும் கட்புலனான சான்றுகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

வைதிக நெறிக் காலத்திற்கு பின்பு கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் உதயமாகும் காலம் இந்திய வரலாற்றின் சமூக, பொருளாதார மற்றும் சமய ரீதியில் மாற்றம் பெற்ற காலமாகக் கருதப்படுகின்றது. இதுவரை இடம்பெற்று வந்த பாரம்பரிய கோத்திர அமைப்பு முறை புதிய அரசியல் திட்டத்தினூடாக 16 பெரும் குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றது. இந்த அரசியல் மாற்றத்தினூடாக வட இந்தியாவில் சமயங்களிலும் மாற்றம் ஏற்பட்டது. வைதீக சமயத்தின் சட்டங்களைக் கைவிட்டு பௌத்த முனைப்ப ஏற்பட்டமையால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் மௌரிய பௌத்த கலைப்படைப்புக்கள் தோற்றம் பெற்றன. கி.மு. 321 இல் இருந்து 185 வரை மௌரிய காலமென கருதப்படுகிறது. சந்திரகுப்த, பிந்துசார போன்ற முக்கியமான அரசர்கள் மௌரிய அரசாட்சியில் இடம்பெற்றுள்ளனர்.

  • சந்திரகுப்த மௌரிய (கி.மு. 324 – 300)
  • பிந்துசார (கி.மு. 300 – 273)
  • அசோக (கி.மு. 273 – 236)

சந்திரகுப்த அரசனுடைய அரசாட்சியின்போது டெரிஸ் அரசன் தோற்கடிக்கப்பட்டு அலெக்சாண்டர் இந்தியாவை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். பிந்துசார அரசின் ஆட்சிக் காலத்தின் பின்பு அசோக மன்னனே மௌரிய ஆட்சிக் காலத்தின் பேரரசனாகக் கருதப்பட்டார்.

தீப வம்சத்தின்படி, அசோக மன்னன் அசோக அல்லது அசோகதர்மன், பியதஸ்ஸி என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டான். அசோக மன்னனுடைய கல்வெட்டின்படி இம்மன்னன் ‘தேவநம்பிய பியதஸ்ஸி” என்னும் பெயரினால் அழைக்கப்பட்டுள்ளார். தனது ஆரம்பகால கொடூரமான செயல் பாடுகளை கைவிட்டு கலிங்க யுத்தத்தின் பின்னர் தர்ம போதனைகளைக் கைக்கொள்ளும் செயற் பாட்டில் ஈடுபட்டான். முதலில் பிராமண மதத்தைத் தழுவி பின்பு பௌத்த மதத்தைப் பின்பற்றியதன் விளைவாக அதன் கொள்கைகளை பல தொடர்பாடல் வழிகளினூடாக வெளிப்படுத்தினார். இத் தொடர்பாடல் வழிகளைத் தழுவி மௌரிய காலத்தின் கலை நிர்மாணங்களை அறிய முடிகிறது. அதன்படி இக்கலைப் படைப்புக்களை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் காட்டலாம்.

(1) தூண் (தம்பம்)
(2) பௌத்த தூபிகள்
(3) குகைகள்
(4) போதிமண்டலங்கள்
(5) நகர நிர்மாணிப்பு (பாடலி புத்திர நகரம்)

பௌத்த கலை நிர்மாணிப்புக்களின் ஆரம்பத்தில் செய்யப்பட்ட இந்த ஆக்கங்கள் இந்தியாவின் புதிய கலாசாரத்திற்கு வழிகோலியது. சிந்துவெளி நாகரிகத்தில் கலை நிர்மாணிப்பிற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிற்பட்ட காலங்களின் கலை நிர்மாணிப்புகளுக்குக் கற்களுக்குப் பதிலாக மரம், களிமண் போன்ற நிரந்தரமற்ற பொருட்கள் பாவிக்கப்பட்டன. அசோக மன்னன் காலத்தில் கலைப் படைப்புக்களுக்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்டமை கலை வரலாற்றில் புதிய தொடக்கமெனலாம்.

error: Content is protected !!