மறுமலர்ச்சிக்காலம் (Renaissance Period)

மறுமலர்ச்சி என்பது கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் ஆரம்பித்து, பின்னர் ஐரோப்பாவெங்கும் செல்வாக்குச் செலுத்திய புலமைசார்ந்த மற்றும் கலைசார்ந்த மலர்ச்சி ஆகும். கலை தொடர்பான மலர்ச்சி என்பதால் கருதப்படுவது, கிரேக்க – உரோம தொல்சீர்க் கலையின் எண்ணக் கருக்களும் பெறுமானங்களும் மீளப் பயன்பாட்டுக்கு வந்தமையாகும். மறுமலர்ச்சிக்கலை இயக்கமானது முதன்மையாக 14 – 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப் பட்டது. மறுமலர்ச்சியானது பின்னர் புளோரன்ஸ், உராமாபுரி. மிலன், ஜெனீவா, வெனிஸ் போன்ற நகரங்களை மையமாகக் கொண்டு வியாபித்தது.

இத்தாலியர்கள் நீண்டகாலமாக அபிவிருத்தியடையாத, இருண்ட ஒரு காலப்பகுதியின் பின்னர், மீண்டும் தொல்சீர் விதிமுறைகளின் மலர்ச்சி ஏற்பட்டது எனும் அர்த்தத்திலேயே ‘மறுமலர்சி (Renaissancc)” என்னும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மறுமர்ச்சிக்காலத்தில் சமய, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் அச்சியந்திர உற்பத்தி, விஞ்ஞான விருத்தி, தருக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் சந்தர்ப்பமளித்தல், மத்தியகால கிறித்தவ தேவாலயத்தின்பால் விமர்சனங்களும் சமய மறுசீரமைப்புக்கள் ஏற்பட்டமை போன்ற பல நிகழ்வுகள் செல்வாக்குச் செலுத்தின. இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலம் ஆரம்பிப்பதிலும் அதுவரையில் காணப்பட்ட படைப்பாக்கப் பாணியிலும் நுட்பமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதிலும் அதாவது கலைத்துவ வெளிப்பாடு மாற்றடைவதில் செல்வாக்குச் செலுத்திய சில காரணிகள் வருமாறு: –

  • இத்தாலி பொருளாதார ரீதியில் வளம் மிக்கதாக இருந்தமை.
  • வணிகம் விருத்தியடைந்தமையால் புதிய தனவந்த வகுப்பினர் தோன்றியமை.
  • புதிய தனவந்த வர்க்கத்தினர், கிரேக்க, உரோம இலக்கியத்தையும் கலைகளையும் விரும்பியமை.
  • புதிய தனவந்தர்கள் பாரிய மாளிகைகள் கட்டுவிக்கவும் அவற்றை அழகுபடுத்தவும் முற்பட்டமை.

மேற்படி போக்குகள் புதிய ஆக்க வெளிப்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது மட்டுமன்றி, அக்கலை வெளிப்பாடுகள், அக்கடமிக் வியாபிக்கவும் காரணமாயின.

மறுமலர்ச்சிக் கலையின் பொது இயல்புகள்

காண்பியக் கலைத் துறையில், மறுமலர்ச்சிக் காலத்தில் ஓவியம், சிற்பம், கட்டடக்கலை ஆகிய கலை அம்சங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தெள்ளத்தெளிவானவை. இக்காலப்பகுதியில் மானிடவாதம் (Humanism), தனிநபர்வாதம் (Individualism), இலட்சியவாதம் (Idealism), இயற்பண்பு வாதம் (Naturalism) ஆகிய தத்துவார்த்த அணுகுமுறைகள் முதன்மை பெற்றிருந்தமை அதற்குக் காரணமாயின. மானிடவாதத்தில் ‘மானிடன்’ முதன்மையிடத்தைப் பெறுவதோடு, மற்றைய சகல கட்புலப் பெறுமானங்களும் மானிடரைப் பிரதான அளவீட்டு அலகாகக்கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய தெய்வங்களின் தன்மைகள் கூட, மானிட உருவத்துக்குச் சார்பாகவே தீர்மானிக்கப் பட்டுள்ளன. தனிநபர்வாதத்தில் அந்தந்த மானிடனின் தனிப்பட்ட தனித்துவப் பண்புகள் முக்கியமாயின.

குறிப்பாக, மறுமலர்ச்சி மெய்யுரு (Portrait) ஓவியங்களைக் கருதும்போது இவ்வியல்பைப் பெரிதும் காணமுடிகின்றது. இலட்சிய வாதத்தில் யாதேனும் கட்புலனாகும் நோக்கமானது அதில் காணப்படும் உச்ச பரிபூரணத்தன்மையுடன் வெளிக்காட்டப்பட்டது. இயற்பண்புவாதத்தின்போது இயற்கையை உள்ளது உள்ளவாறாகப் பிரதி செய்வதே எதிர்பார்க்கப்பட்டது.

மறுமலர்ச்சிக் காலத்தில் கிரேக்க – உரோம தொல்சீர் கலையின் விதிமுறைகள் மீளப் பயன்பாட்டுக்கு வந்தன. பண்டைய, கிரேக்க சிற்பங்களைப் பிரதி செய்வதே இக்காலக் கலைஞர்களின் பிரதானமான பிரயோகமாகக் காணப்பட்டது. மேலும் கிரேக்க – உரோம கருப்பொருள்களும் குறியீடுகளும் மீண்டும் பிரபல்யமடைந்தன. உதாரணமாக, ‘போட்டிசெல்லி’ (Botticelli) எனும் கலைஞரால் வரையப்பட்ட ‘வீனஸின் பிறப்பு (The Birth of Venus)” எனும் ஓவியத்தைக் குறிப்பிடலாம். மெய்யுரு ஓவியக்கலையும் மறுமலர்ச்சிக் காலத்தில் பெரிதும் விருத்தியடைந்தது. புதிய தனவந்தர் மற்றும் புதிய வணிக வகுப்புக்களைச் சேர்ந்த தனியாளர்களின் உருவங்கள், ஓவியங்களின் பிரதான விடயப் பொருளாக அமைந்தது.

நிலத்தோற்றக் கலையானது, மறுமலர்ச்சியுடன் விருத்தியடைந்த மற்றுமொரு துறையாகும். இது நாடுதேடல் நடவடிக்கைகள் விருத்தியடைந்த ஒரு காலப்பகுதியாகும். ‘நிலம் தொடர்பாக ஐரோப்பியர்களிடத்தே காணப்பட்ட ஆர்வம் இதன் மீது செல்வாக்குச் செலுத்தியது. இயற்பண்புவாதம் விருத்தியடைந்ததன் விளைவாக இயற்கை உலகினை இயன்ற அளவுக்கு தத்ரூபமாகச் சித்திரிப்பதில் ஓவியர்கள் கவனஞ் செலுத்தினர். இது தூரதரிசனக் கோட்பாடு (perspective) போன்ற உத்திகள் விருத்தியடைவதற்குக் காரணமாகியது. மேலும் மனித உடலை மிகச் சரியாகவும் சிறப்பாகவும் வரைவது தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தப்பட்டது. உடலமைப்பு (anatomy) இயல்புகளையும் அளவுப் பிரமாண (proportion) இயல்புகளையும் கற்றாய்வதில் மறுமலர்ச்சிக்காக கலைஞர்கள் அதிக முனைப்புக் காட்டினர். லியனாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, ரஃபாயல் சன்சியோ ஆகிய கலைஞர்களை மறுமலர்ச்சிக்காலக் கலையின் முன்னோடிகளாக இனங்காணலாம்.

error: Content is protected !!