மதுரா நின்ற நிலை புத்தர் சிலை

குப்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளுள் மதுரா நின்ற நிலைப் புத்தர் சிலை மிகவும் சிறப்பானதொன்றாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சிலை தற்போது புதுடில்லி தேசிய அரும்பொருட்சாலையில் காணப்படுகிறது. இச்சிலை செம்மணற் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகாகவும் வியக்கத்தக்கதாகவும் எடுப்பானதாகவும் தேக இலட்சணங்கள் செதுக்கப்பட் டுள்ளன. நீள்வட்ட வடிவமான முகம், ஊஷ்னிய சுருண்ட கேசம், இச்சிலையின் கலைத்துவமான பண்பைப் பிரதிபலிக்கின்றது. தாமரை இதழ்கள் போன்ற பாதி திறந்த கண்கள், கலைத்துவமான இமைகள், நீண்ட செவிகள், வட்டமான கழுத்து என்பன சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

இச்சிலைகளினுடைய காவியுடை மிகவும் மென்மையாக உடலுடன் ஒட்டியவாறு செதுக்கப்பட்டுள்ளது. மதுரா சிலைகளின் செல்வாக்கைப் பெற்று உடல் ஊடுருவித் தெரியும் வண்ணம் இது அமைக்கப் பட்டுள்ளது. அத்துடன் காவியுடையின் உட்புறமாக அணியும் உடையும் இடுப்பில் அணியும் பட்டியும் மிக நுணுக்கமாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. இரு தோள்களையும் மூடியவாறு காணப்படும் காவியுடையின் மடிப்புகள் லயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இடதுகை கீழே தொடங்கவிடப்பட்டுள்ள தோடு வலது முழங்கையில் மடிக்கப்பட்டுள்ளது. சிலையின் அப்பகுதி உடைந்து போயுள்ளது. தலையைச் சுற்றியுள்ள பூங்கொடி அலங்காரத்துடனான ஒளிவட்டம் இச்சிலையின் கலைத்துவப் பண்பை அதிகரிக்கிறது. காந்தார, மதுரா புத்த சிலைகளில் காணப்பட்ட எளிமையான ஒளிவட்ட மானது மிக மென்மையான தாமரை இதழ்கள் மற்றும் கொடி அலங்காரங்கள் கொண்ட பூரணமான கலைப் படைப்பாகக் குப்த கலைஞர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!