பொன் டி கோம் குகை ஓவியங்கள் (Font de Gaume)

பொன் டி கோம் குகை பிரான்சில் கி.பி. 1941 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் ஓவியங்கள் கி.மு. 17,000 காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றது. (மேல் கற்காலம் அதாவது மேல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்). பெரியதொரு குகைத் தொகுதியான இதன் நுழைவாயில் இரண்டு சிறிய துவாரங்களாலானது. குகையின் உள்ளே சுவர்களிலும் உட்கூரையிலும் ஓவியங்க்ள வரையப்பட்டுள்ளன.

குகையின் உள்ளக அமைப்பு

விடயப்பொருள்

இங்கு காணப்படும் பிராணி உருவங்களுள் பைசன் எருது உருவமே மிகப் பிரபல்யமானது. அத்தோடு, மமத்து (Mammoth), குதிரை, காண்டாமிருகம், மான், ஆடு, கரடி, நரி ஆகிய பிராணி உருவங்களும் காணப்படுகின்றன. மனித உருவங்கள் அரிதாகும்.

பைசன் உருவம்
குதிரை
மமத்து மற்றும் ஆடுகள்
மானும் கரடியும்

நுட்பமுறைகள்

இக்குகை ஓவியங்கள், கோட்டு வரைதல்கள் (Line drawing), வர்ண ஓவியங்கள் (Painting), கற்சுவரைச் கீறி அமைத்த உருவங்கள் (Engraving) ஆகிய நுட்பமுறைகளால் ஆக்கப்பட்டவையாகும்.

கற்சுவர்களை சுரண்டி அமைக்கப்பட்ட உருவங்கள் (Engraving)
கல் மேற்பரப்பின்மீது உரியவாறு பைசன் எருது உருவம் வரையப்பட்டுள்ள விதம்

மோடியும் கலைத்துவப் பண்புகளும்

பொன் டி கோம் குகை ஓவியங்களை ஆக்குவதற்காக வரையறுக்கப்பட்ட சில நிறங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள், சிவப்பு, மஞ்சள், கறுப்பு, கபிலம், நரை நிறம் போன்றவை பிரதானமானவை. ஓவியங்களை ஆக்குவதற்காக இரண்டு முறைகள் கையாளப்பட்டுள்ளன. கோடுகளைக் கொண்டு பிராணி உருவங்களை வரைதல் அவற்றுள் ஒரு முறையாகும். அவ்வாறு பயன்படுத்திய கோடுகளின் கருத்து வெளிப்பாட்டுச் சக்தி காத்திரமானது அதன் மூலம் பிராணி உருவத்திற்கு உயிரூட்டப்பட்டுள்ளது.

பொன் டி கோம் குகை ஓவியங்களை வரைவதற்காக ஓவியர் பயன்படுத்தியுள்ள கலைத்துவமிக்க முறை, வர்ணங்களால் பூரணப்படுத்திய முறையாகும். பெரும்பாலும் கல் மேற்பரப்பு மீது உருவத்தை வரைந்து அதனைச் சுற்றிவர சிவப்பு அல்லது கறுப்பு நிறக் கோடு வரைந்து பின்னர் நிறந்தீட்டப்பட்டுள்ளது. விரல்களைப் பயன்படுத்தி நிறம் தீட்டுதல், பிராணி உரோமங்களைக் கொண்டு நிறம் தீட்டுதல், வாயினுள் அல்லது உட்குடைவான பிராணி எலும்புத் துண்டுகளினுள் வர்ணத்தை நிரப்பி அதனை உருவத்தின் மீது தெளித்தல் அல்லது விசிறுதல் மூலம் நிறந்தீட்டல் ஆகிய முறைகள் கையாளப்பட்டுள்ளமை இந்த ஓவியங்கள் தொடர்பான ஆய்வு மூலம் தெளிவாகியுள்ளது.

பெரும்பாலான ஓவியங்களில் வர்ணப் பயன்பாடும் சேர்மானமும் பிராணிகளின் தன்மையும் வெற்றிகரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான உருவங்களினுள் சிலவற்றுள் இரண்டு நிறங்கள் ஒன்றுடனொன்று கலப்பதன் மூலம் முப்பரிமாண இயல்பு வெளிப்படுத்தப் பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. மேலும் இவ்வோவியங்களில் பிராணி உருவங்களைச் சுற்றிவர சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் புறக்கோடு வரையப்பட்டுள்ளது.

பிராணிகளின் உடல்நிலைகளையும் அளவுப்பிரமாணத்தையும் சரியாகக் காட்டும் திறமையை பொன்டிகோம் ஓவியர் கொண்டிருந்தமை ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது. ஒவ்வொரு பிராணியையும் தெளிவாக இனங்காணத்தக்கவாறு அவற்றின் இயல்புகள் விவரமாகக் காட்டப்பட்டுள்ளன.

இக்குகையில் காணப்படும் ஓவியங்களுள் பெருமளவுக்கு கவனத்துக்கு உள்ளாகும் சில ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் பைசன் கூட்டம் எனும் ஒவியம் முக்கியமானது. இயல்பான கல் மேற்பரப்பு ஓரளவுக்குச் சமதளமாக்கப்பட்டு பரந்த இடப்பரப்பு தயார்ப்படுத்தப்பட்டு, அதன்மீது ஒரு வரிசையாக பைசன் எருதுக்கூட்டம் வரையப்பட்டுள்ளது.

பைசன் எருதுக் கூட்டங்களைக்காட்டும் ஓவியம்

இங்கு காணப்படும் ஓவியங்களுள், பனிமான் சோடியைக் (Licking Raindeer) காட்டும் ஓவியமானது ஒரு பனிமான் மற்றைய பனிமானின் தலையை நக்குமாய்ப்போன்று காட்டப்பட்டிருத்தலானது சிறப்பானது எனலாம். கல் மேற்பரபபைக் குடைந்து உருவத்தை அமைத்து அதனைச் சுற்றிவரக் கருங்கபில மற்றும் கறுப்பு நிறத்தினால் புறவரைகோடு வரையப்பட்டு அதன் பின்னர், வர்ணம் பூசப்பட்டுள்ளது. பிரதானமாக கபிலம், கபிலம் சார்ந்த மஞ்சள். மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களே பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றின் கலவை மூலம் உருவங்களின் முப்பரிமாண இயல்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு காணப்படும் ஓவியங்களுள் “பைசனும் மானும் (Bison & Deer)” எனப்படும் ஓவியம் பெரிதும் கவனத்துக்கு உள்ளாகிய ஒன்றாகும். இந்த இரண்டு பிராணிகளும் சண்டையிடும் விதம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. பின்னங்கால்களில் உடலின் நிறையைத் தாங்கி கொம்புகளிரண்டினாலும் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டிருக்கும் உடல்நிலை நன்கு காட்டப்பட்டுள்ளது. கறுப்பு நிறமான தடித்த கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பைசன் எருது மற்றும் மான் (Bison and Deer)

இக்குகையினுள் காணப்படும் கோட்டு ஓவியங்கள் சிறப்பான திறன்களைக் காட்டி நிற்கின்றன. அவற்றுள், வேகமாக முன்னோக்கி ஓடுவதுபோன்று சிவப்பு நிறக் கோடுகளால் வரையப்பட்டுள்ள ரைனோசிரஸ் உருவமும் கறுப்பு நிறக் கோடுகளால் வரையப்பட்டுள்ள குதிரை உருவமும் தனிச் சிறப்பானவையாகும்.

காண்டாமிருக உருவம்
குதிரை உருவங்கள்

இக்குகையினுள் விசேடமான மேலும் சில ஓவியங்கள் உள்ளன. இயல்பான தோற்றத்தில் வரையப்பட்ட பைசன் எருது உருவம் அவற்றுள் ஒன்றாகும். அது பைசன் எருதொன்றின் இயல்பான அளவுடையதாகவே வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் குகையின் உட்கூரைத் தளத்தில் காணப்படுகின்றது. பைசனின் சரியான உருவம் வெளிப்படுமாறு புறவரைக்கோடு மிகக் கவனமாக வரையப்பட்டுள்ளது. பிரதானமாக கபில நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்களைக் கலந்து அக்கபில நிற வர்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்து நிலையான தளவுருவங்களைக் கொண்ட பைசன் எருது உருவமொன்றும் கல் மேற்பரப்பின் அமைவுக்குப் பொருத்தமானவாறு வரையப்பட்டுள்ளது.

இது மிகப் பெரிய ஒரு பைசன் எருது உருவமாகும். இது இயல்பான தன்மையைக் கொண்டது. பைசன் எருதின் உண்மையான நீள உயரங்களுக்கமைய இது வரையப்பட்டுள்ள. கறுப்பு நிறத்தில் புறவுருக்கோட்டை வரைந்து பின்னர், உருவினுள் நிறந்தீட்டப்பட்டுள்ளது. தலை சிவப்பு நிறத்திலும் உடலின் பின்பகுதி கபில நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. கொம்புச்சோடி கறுப்பு நிறத்தில் வர்ணந்தீட்டப்பட்டுள்ளதோடு, அதனைப் பின்னணியிலிருந்து வேறாக்கிக் காட்டுவதற்காக, தீட்டிய நிறத்தின் ஒரு பகுதி சுரண்டி நீக்கப்பட்டுள்ளமை இதன் ஒரு சிறப்பியல்பாகும்.

error: Content is protected !!