பல்லவர் கால செதுக்கல் கலை

பொதுவான பண்புகள்

பல்லவர் கலையின் பொதுவான கலைத்துவப் பண்புகள் அதிகமாக ஆந்திர, சாதவாகன, இக்ஷவாகு மரபுகளின் சேர்மானமாகும் எனலாம். குறிப்பாக பல்லவர் மனித உடல்களிலும் உருவங்களிலும் இச்சேர்மானத்தை மிக நன்றாகக் காணலாம். மெல்லிய நீண்ட உடல், உயிரோட்டமான தன்மை, இயக்கத்தன்மை ஆகியனவே அவையாகும். பல்லவர் கலையின் பாணியானது பொதுவாக பிரதிநிதித்துவப்படுத்தல் (Reprasentation) ஆகும். அவை இயற்பண்பு வாதத் தன்மைகளைக் கொண்டதாயினும், கண்ணுக்கு புலப்படக்கூடிய இயற்பண்பிலிருந்து விலகிச் சென்றுள்ளன. எனினும் உருவங்கள் முற்றுமுழுதாக பாணி சார்ந்ததாக காணப்படவில்லை. ஒரு வகையில் குப்தர் கால வாயிற்காப்போன் உருவப் பாணிகளின் பண்புகளை ஒத்தவையாகும். பல்லவர் கலை மரபானது கதை கூற முயற்சிப்பதோடு அதற்காக இந்து சமய உலகையும் இந்து இலக்கியத்தையும் துணையாகக் கொண்டுள்ளது.

ஆகாய கங்கையின் இறக்கம் / அர்ச்சுனன் தவம்

ஆகாய கங்கையின் இறக்கம் என்பது பல்லவர் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட பெரிய மனங் கவர் தன்மை கொண்ட ஒரு சிற்பச் செதுக்கல் வேலைப்பாடாகும். முதலாம் மகேந்திர வர்மனின் காலத்தை அல்லது அவனது மகனான மாமல்லனின் (நரசிம்மவர்மன்) காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் இந்த செதுக்கல் வேலைப்பாடு ஆகாய கங்கையின் இறக்கம் அல்லது அர்ச்சுனன் தவம் என இனங்காணப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15 மீற்றர் உயரமும் 30 மீற்றர் நீளமும் கொண்ட இந்தக் கற்செதுக்கல் வேலைப்பாட்டில் பெருந்தொகையான மனித உருவங்களும் கூடவே பிராணி உருவங்களும் வேறு உருவங்களும் அடங்கியுள்ளன. இவை பெருமளவுக்கு இயல்பான அளவுடையனவாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்லின் மத்தியில் உள்ள இயற்கையான வெளியானது கருப் பொருளுடனும் திட்டத்துடனும் மிகப் பொருத்தமான வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருத்தலே இந்தப் பாரிய படைப்பாக்கத்தின் பிரதானமான ஒன்றாக காணப்படுகிறது.

பார்ப்போரின் மனதைக் கவரும் தன்மையுள்ள பாரிய சிற்ப வேலைப்பாடு தொடர்பாக பிரதானமான இரண்டு பொருள் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு விளக்கத்திற்கமைய இது ஆகாய கங்கையின் இறக்கமாகும். இரண்டாவது விளக்கத்தின்படி இது அர்ச்சுனனின் தவத்தைக் குறித்து நிற்கின்றது. இந்த இரண்டு பொருள் விளக்கங்களுக்கும் இந்திய இலக்கியங்கள் மூலாதாரமாக உள்ளன. எவ்வாறாயினும் இது தொடர்பான விமர்சனங்கள் பல்வேறு மூலாதாரங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் இது ஆகாய கங்கையின் இறக்கம் எனும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தக்கவையான உருவக் குறியீடுகள் இதில் அடங்கியுள்ளன. அதாவது பிரதான சிற்ப வேலைப்பாடுகளின் நடுவே அமைந்துள்ள இயல்பான கல் இடைவெளியில் மேலிருந்து கீழாகச் செதுக்கப்பட்டுள்ள நாக உருவங்கள் மூலம் புனித நீர் பற்றிய கருத்து வெளிப்படுத்தப்படுதலாகும்.

இரண்டாவது விமர்சனமாகிய ‘அர்ச்சுனன் தவம்’ கதை பற்றிய குறியீடுகள் தெளிவற்றதாயினும் கூட அது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் உள்ள ஒரு கருத்தாகும். எவ்வாறாயினும் அர்ச்சுனன் தவம் எனும் வெளிப்பாட்டுக்கு மற்றுமொரு பொருள் விளக்கமும் உள்ளது. இதன் மூலம் பகீரதனின் கடினச் செயல் காட்டப்படுகின்றது என்பதே அதுவாகும். இரு கைகளையும் மேலே உயர்த்தியவாறு ஒற்றைக் காலில் உடலின் சமனிலையைப் பேணியவாறு, நடுப்பகுதியில் உள்ள வெளியின் இடது புறத்தே உருவாக்கப்பட்டுள்ள இந்த உருவம் இரண்டு விமர்சனங்களுக்கு கருப்பொருளாக அமைந்துள்ளது.

இந்த சிற்பக் கலைப் படைப்பின் உச்சிப் பகுதியில் உள்ள மனித உடல்கள் இலேசாக மிதந்து செல்லும் உடல்நிலைகளைக் கொண்டவை. குறியீட்டு ரீதியான அர்த்தத்தின்படி இவற்றை தெய்வீக உருவங்கள் என இனங்கண்டு கொள்ளலாம். இங்கு காணப்படும் ஏனைய முக்கியமான அங்கங்களாக பாரிய அளவுடையதாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு யானை உருவங்களையும் ஒரு தெய்வ உருவத்தைக் கொண்ட சிறிய ஆலயத்தையும் குறிப்பிடலாம். இப்படைப்பாக்கத்தின் கலைத்துவ உத்தி இயற்பண்புவாதப் பாணியை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. இது பல்லவர் கலையின் தனிச்சிறப்பான ஓர் அங்கமாகும். இந்த சிற்பச் செதுக்கல் வேலைப்பாட்டின் அடிப்படை அம்சங்களாக அமைபவை மனித, பிராணி மற்றும் கற்பனையான உருவங்களாகும். இது இந்தியக் கலையில் பொதுவாக காணப்படும் ஓர் உண்மையாகும். இந்த ஒவ்வோர் உருவமும் இயற்பண்புவாதப் பாணியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாகும். குறிப்பாக கதை கூறும் நோக்கில் செதுக்கப்பட்டுள்ளதாகக் கூறலாம்.

error: Content is protected !!