பல்லவர் கால கட்டடக் கலை

பல்லவர் காலக் கட்டடக் கலையை பிரதானமாக மூன்று பிரிவுகளினூடாக நோக்கலாம்

  1. இயற்கையான பாறையில் உட்குடைந்து அமைத்த ஆலயங்கள்
  2. இயற்கையான பாறையில் குடைந்தும் செதுக்கியும் அமைத்த ஆலயங்கள் (Carved Temples)
  3. கட்டப்பட்ட ஆலயங்கள் (Structured Temples)
இயற்கையான பாறையில் உட்குடைந்தும் செதுக்கியும் அமைத்த ஆலயங்கள் (Carved Temples)
பஞ்சபாண்டவ ரதம்

பல்லவர் கட்டடக்கலையின் ஆரம்ப கால இயல்புகளாகிய இயற்கையான கல்லில் உட்குடைந்தும் செதுக்கியும் அமைக்கப்பட்ட ஓர் ஆலயமாக பஞ்சபாண்டவ ரதம் கருதப்படுகின்றது. இவை ஒரு தனிக் கல்லில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் ஆகும். இக்கட்டடங்கள் பெரும்பாலும் முதலாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாக நம்பப்படுகின்றது. இவை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்காலத்தைச் சேர்ந்தவை என இனங்காணப்பட்டுள் ஆலயம் தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பண்டைய துறைமுக நகரமாகிய மாமல்லப் புரத்தில் அமைந்துள்ளது. பொதுவாக இந்த நினைவுச் சின்னங்கள் ‘ரதங்கள்’ அல்லது ‘ஆலய ரதங்கள்’ (Temple Cart) எனப்படுகின்றன. எனினும் இந்த நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றினதும் சிறப்பியல்பு காரணமாக ‘விமானம்’ எனவும் வழங்கப்படுகின்றது.

இந்த ஐந்து ஆலயங்களும் முறையே திரௌபதி ரதம், அர்ச்சுனன் ரதம், வீமன் ரதம், தர்மராஜ ரதம், நகுல – சகாதேவ ரதம் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக திரௌபதி ரதம், அர்ச்சுனன் ரதம், வீமன் ரதம், தர்மராஜ ரதம் ஆகிய நான்கு இரதங்களும் ஒரு தனிக் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளதோடு நகுல-சகாதேவ ரதம் சார்பளவில் சிறியக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு சிங்க உருவம், ஒரு யானை உருவம், படுத்திருக்கும் எருது உருவம் ஆகியனவும் இவற்றுடன் இணைந்துள்ளன. பெரிய கல்லின் வலது புறத்தே அமைந்துள்ள மிக உயரமான பகுதியில் மிகப் பெரிய ரதமாகிய தர்மராஜ ரதம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மறு அந்தத்தில் மிகச் சிறிய ரதமாகிய திரௌபதி ரதம் செதுக்கப்பட்டுள்ளது.

திரௌபதி ஆலயம் / திரௌபதி ரதம்

திரௌபதி ரதம் இத்தொகுதியில் உள்ள மிகச் சிறிய மற்றும் எளிமையான ஆலயம் ஆகும். இது துர்க்கா ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. அதாவது இது துர்க்காதேவிக்கு செதுக்கப்பட்டுள்ளது. திரௌபதி ஆலயத்தின் கூரை ஏனைய ஆலயங்களின் கூரையை விட வேறுபட்டது. பண்டைய ஓலைகளால் வேய்தல் முறையை மூலாதாரமாகக் கொண்டு அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது எனக் கருதப்படுகின்றது. இந்த ஆலயம் சதுர வடிவத் திட்டத்துக்கமைய அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரேயொரு அறையுள்ள ஓர் அடுக்கு மாத்திரம் உள்ள ஒரு நினைவுச் சின்னமாகும்.

அர்ச்சுனன் ரதத்துக்கு அருகில் திரௌபதி ரதம் அமைந்துள்ளது. இந்நினைவுச் சின்னத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு வெளித்தள்ளிய அரைத் தூண்கள் (Pilasters) அமைந்துள்ளன. ஒவ்வொரு கல் சுவரிலும் உள்ள சிறிய அறையில் விக்கிரகங்கள் உள்ளன. ஆலயத்தின் நுழைவாயிலின் இருமருங்கிலும் உள்ள இரண்டு அறைகளிலும் இயல்பான அளவுப் பிரமாணத்தையும் உடல்நிலையையும் கொண்ட இரண்டு பெண் காவலாளிகளின் உருவங்கள் உள்ளன. நுழைவாயில் அற்ற மூன்று சுவர்களிலும் உள்ள ஒவ்வொரு சிறிய அறையிலும் துர்க்காதேவி விக்கிரகம் பொழியப்பட்டுள்ளது. ஆலயத்தின் உள்ளே மற்றுமொரு துர்க்காதேவி விக்கிரகம் உள்ளது.

அர்ச்சுனன் ரதம்

துர்க்கா ரதத்துக்கு அருகே ஒரே அடித்தளத்தில் அர்ச்சுனன் ரதம் செதுக்கப்பட்டுள்ளது. இது துர்க்கா ரதத்தை விடச் சற்றுப் பெரியதாகச் செதுக்கப்பட்டுள்ளது. எனினும் துர்க்கா ரதத்தை விடத் தெளிவான வேறுபாடுகளைக் கொண்டது. அர்ச்சுனன் ரதத்தின் செவ்வக வடிவான முற்புறக் கற்றூண்கள் பல்லவர் கட்டடக் கலையின் மாதிரிப் பண்புகளின் ஆரம்ப கால தன்மையைக் வெளிப்படுத்தி நிற்கின்றன. இரண்டு மட்டங்களைக் கொண்ட கூம்பக வடிவக் கூரை மீது எட்டுப் பக்கம் கொண்ட சிகரம் அமைந்துள்ளது. கூம்பக வடிவக் கூரையில் இரண்டு மட்டங்களிலும் உள்ள வளைவான பகுதிகள் (Barrel Vault) நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனன் ரதத்தின் கற் சுவர்களுடன் இணைந்த அரைத்தூண்களால் (Pilasters) சூழப்பட்ட அறைகளில் பார்ப்போரின் கண் மட்டத்துக்குக் கீழாக சுயாதீனமாக அசைவதைப் போன்ற மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் கலை மரபின் முதன்மையான அமைப்பு சார்ந்த ஒரு பண்பாக இதனைக் குறிப்பிடலாம்.

வீமன் ரதம்

வீமன் ரதம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இந்த ரதம் செவ்வக வடிவமுடையது. கூரை வில் வளைவானது (Barrel Vault). வீமன் ரதத்தின் பிரதான விக்கிரகம் விஷ்ணு ஆனந்த சகாயனன் ஆகும். அதன் நிர்மாணிப்புப் பூர்த்தி செய்யப்படவில்லை. ஒட்டு மொத்தமாக நோக்குகையில் இந்த விமானங்கள் அரைகுறையாகவே பூர்த்தி செய்யப் பட்டுள்ளன. எனவே இந்த நினைவுச் சின்னமானது, பெருமளவுக்கு பல்லவர் கட்டடக் கலையின் மிக அரிதான ஒரு பக்கத்தோற்றம் தொடர்பாகப் பெறுமதிமிக்க தகவல்களைத் தருகின்றது.

தர்மராஜ ரதம்

இந்த ரதத் தொகுதியில் உள்ள மிக உயரமான கட்டடம் இதுவாகும். எனினும் இந்த ஆலயமும் அரைகுறையாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது முதலாவது நரசிம்மவர்மன் ராஜசிங்கன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பு அர்ச்சுனன் ரதத்துக்கு ஒப்பானதாயினும் அதனை விட அளவில் பெரியது. கூடவே அதிக அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டது. இந்த நினைவுச்சின்னத்தின் மாதிரியானது நரசிம்மவர்மன் – காலத்தைச் சேர்ந்த சுயாதீனமாக எழுந்து நிற்கும் ஆலயங்கள் அமைக்கும் பிரபல்யம் வாய்ந்த பாணி மற்றும் அக்காலத் தென்னிந்திய கட்டடக்கலையின் பூரணமாக விருத்திசெய்யப்பட்ட பாணியின் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த ஆலயத்தினுள் சோமஸ்கந்த விக்கிரகம் உள்ளது. அவற்றில் சிவன் பார்வதி மற்றும் அவர்களது மகன் முருகன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சோமஸ்கந்த செதுக்கலில் இருபுறமாக விஷ்ணு உருவமும் பிரம்மா உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்த விக்கிரகமானது பல்லவர் காலத்தில் பல்லவ அரச குடும்பத்தை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நகுல – சகாதேவ ரதம்

நகுல சகாதேவ ரதமானது மற்றைய நான்கு ரதங்களும் அடங்கியுள்ள வரிசையைச் சேர்ந்ததல்ல. இது தனியாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதன் முகப்பு தெற்கு நோக்கி அமைந்துள்ளதோடு, ஏனைய ரதங்களின் முகப்பு மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த ரதத்தில் விக்கிரகங்கள் கிடையாது. எனவே நகுல-சகாதேவ ரதம் தொடர்பாகப் பொருள் விளக்கமளிப்பது இலகுவானதல்ல. மேலும் இந்த ரதத்துக்கும் ஏனைய ரதங்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றித் தீர்மானம் எடுப்பதும் முடியாத காரியமாகும். உருவங்கள் அரிதாகக் காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும். எவ்வாறாயினும் தென்னிந்தியக் கட்டடக் கலையின் விருத்தியை விளங்கிக் கொள்வதற்கு இந்தக் கட்டமைப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

கட்டப்பட்ட ஆலயங்கள் (Structural Temples)
கரையோர ஆலயம்

கரையோர ஆலயமானது (Shore Temple) இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிங்கன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. கி.பி.700-728 காலத்தில் தென்னிந்தியாவில் தமிழ் நாடு மாநிலத்தில் ஒரு துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரக் கடற்கரையை அண்மித்ததாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. சுயாதீனமாக எழுந்து நிற்கும் இந்த அமைப்பு சார்ந்த நினைவுச்சின்னமானது பல்லவர்களின் சமய மற்றும் கலை வளர்ச்சி பற்றிய பல மேலதிக தகவல்களையும் தருகின்றது.

இந்த ஆலயத்தின் கட்டடக் கலைத் திட்டத்தின்படி அது ஓர் ஒழுங்மைந்த திட்டத்தின்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்க முடிவதில்லை. இங்கு ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று வழிபாட்டிடங்கள் உள்ளன. முதன்முதலாக ஆலயத்தை நிர்மாணிக்கும்போது, ஏற்கனவே தயாரித்த ஒரு திட்டம் இல்லாமலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுவதாக உள்ளது. அதாவது முதல் நிர்மாணிப்பின் பின்னர் அதனுடன் ஏனைய அங்கங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகின்றது. இந்த எல்லா நிர்மாணிப்புக்களும் ஒரே அரசனின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

ஆலயத்தின் திட்டத்தினுள், மேற்குப் பக்கத்தில் சற்று வடக்காக சிறிய சதுர வடிவ சிவ ஆலயமொன்று உள்ளது. அங்கு ஓர் இலிங்கமும் சோமஸ்கந்தனும் காட்டப்பட்டுள்ளன. பிரதான ஆலயத்தினுள் சிவ இலிங்கமொன்றும் புடைப்பாகச் செதுக்கப் பட்டுள்ள சோமஸ்கந்த உருவமொன்றும் உள்ளன. இங்கு காணப்படும் மூன்றாவது ஆலயம் விஷ்ணுவுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு விஷ்ணுவின் அனந்தசயனம் காட்டப்பட்டுள்ளது.

கரையோர ஆலயத்தின் சிறப்பான கட்டடக்கலை அம்சங்களாக அந்தராளம், கோபுரம் (Proto Gopura) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை பிற்கால தென்னிந்திய ஆலயங்களில் பெரிதும் சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த கட்டடக் கலை அம்சங்கள் மூலம் தென்னிந்திய அமைப்பு தெளிவாக முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக கூம்பக வடிவுடைய மேற்கட்டமைப்பு, அரைத்தூண்களைக் கொண்ட சுவர்கள் ஆகியன இதற்கான உதாரணங்களாகும்.

வாயிற்காப்போன் உருவங்கள், சிங்க உருவங்கள் உட்பட ஏனைய உருவங்களும் இங்கு பரவலாகக் காணப்படுகின்றன.

error: Content is protected !!