நிஸ்ஸங்க லதா மண்டபம்
நிஸ்ஸங்க லதா மண்டபம், மன்னன் நிஸ்ஸங்க மல்லனின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படு கின்றது. நிஸ்ஸங்க மல்ல மன்னன் 1187 தொடக்கம் 1196 வரையிலான குறுகிய காலப்பகுதியில் ஆட்சிசெய்த ஒரு மன்னன் ஆவான். ருவன்வெலி கல்வெட்டின்படி இவன், கலிங்க தேசத்தில் ஆட்சி செய்த காலிங்க ஜயகோப மன்னனின் புதல்வன் ஆவான்.
ஆட்சி செய்த காலம் சார்பளவில் குறுகியதாயினும் அவனது ஆட்சிக் கால நிர்மாணிப்புக்களுள் மிக அழகிய கண்கவர் படைப்பாக, நிஸ்ஸங்க லதா மண்டபத்தைக் குறிப்பிடலாம். தூண்களிலும் ஆசனத்திலும் பண்டைய கால எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள கல்லேடு நிஸ்ஸங்க லதா மண்டபத்தின் பண்டையப் பெருமையைக் காட்டி நிற்கின்றது. நிஸ்ஸங்க கல்வெட்டுக்கு அமைய நிஸ்ஸங்க லதா மண்டபமானது ஒரு பிரித் ஓதல்” மண்டபமாகக் கருதப்படுகின்றது. நிஸ்ஸங்கமல்ல மன்னன் ”பிரித் ஓதலைச்” செவிமடுத்த இடமாகவும் தந்ததாதுவை வந்தனை செய்த இடமாகவும் இது கருதப்படுகின்றது.
நிஸ்ஸங்க லதா மண்டபம் 34 அடி 8 அங்குல நீளமும் 28 அடி 8 அங்குல அகலமுமுள்ள உயரமான மேடையொன்றின் மீது கற்களால் அமைக்கப்பட்ட ஓர் ஆக்கமாகும். அதன் உயரம் 7 அடி ஆகும். அதில் 8 தூண்கள் உள்ளன. தூண்களின் மீது குறைப்புடைப்பு முறையில் கொடி அலங்காரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் தூண்கள் மேலே செல்லச் செல்ல படிப்படியாக ஒடுங்கிச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தூண்களின் உடற்பகுதி தாமரைப் பூக்காம்பு போன்றும், உச்சிப்பகுதி தாமரை மலர் போன்ற வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அழகிய தூண்களை வேறு எங்கும் காண முடியாது. இத்தாமரை தண்டுத் தூண்களின் திவங்க (மூவளைவு) வடிவமும் தனிச்சிறப்பானது. பொலனறுவைக்கால மனித உருவங்கள், காவற்கற்கள், திவங்க விக்கிரக மனை போன்றவற்றில் இந்த திவங்கப் (மூவளைவு) பண்பைத் தெளிவாகக் காணமுடிகின்றது.
மண்டபத்தைச் சுற்றிவர கல்வேலி அமைந்துள்ளது. மண்டபத்தின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி அழகுக்கும் அது காரணமாகியுள்ளது. இக்கல்வேலியில் உள்ள கற்பாளங்களில் செதுக்கல் வேலைப்பாடுகள் கிடையாது. எனினும் கிராதி வேலித் தூண்களின் உச்சியில் போதிகை வெட்டப்பட்டுள்ள மையால் அத்தூண்களின் மீது ஒரு கூரை இருந்திருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகின்றது.
நிஸ்ஸங்கலதா மண்டபத்தினுள் பிரவேசிப்பதற்காக ஒரேயொரு நுழைவாயிலே உள்ளது. கிடைக்கழிக்கூடத்தின் மத்தியில் ஓர் ஆசனம் உள்ளது. அது மலர்ந்த தாமரை மலரை நினைவூட்டுகின்றது. அத்தாமரை மலரின் மீது சிறிய சைத்தியமொன்று அமைந்துள்ளது. இச்சைத்திய அடிவாரத்தில் வணக்க நிலையைக் காட்டும் மனித உருவ வரிசையொன்றும் செதுக்கப்பட்டுள்ளது.