நந்தலால் போஸ் (1882 – 1966)
நவீன இந்தியக் கலையின் முன்னோடிக் கலைஞர்களுள் ஒருவராகிய நந்தலால் போஸ், நவீன இந்தியக் கலையைப் புதியதொரு பாதையில் இட்டுச் செல்வதில் செல்வாக்கைச் செலுத்திய ஓர் ஓவியர் ஆவார். இவர் “நவவேட்கைவாக” இயக்கத்தின் முன்னோடிக் கலைஞராகிய அபினீந்திரநாத் தாகூரின் மாணவர் ஆவார். 1920 இல் நந்தலால் போஸ், சாந்தி நிகேதனத்தின் பிரதான ஆசிரியராக நியமிக்க்பபட்டார். 1927 இல் சாந்தி நிகேதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனத்தின் பொறுப்பு நந்தலால் போஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தமது கருமங்களைச் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததோடு, ஓவியர்களுக்குத் தமது கலைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் அவற்றை விருத்தி செய்து கொள்வதற்கும் தேவையான பல மூலாதாரங்கள் இதன் மூலம் வழங்கப்பட்டன. இதன் விளைவாக சாந்தி நிகேதனம் நவீன கலைப் போக்குகளின் மைய நிலையமாக மாறியது.
நந்தலால் போஸ், இந்திய தேசிய இயக்கத்தின் எதிர்பார்ப்புக்களுடன் இணைவாக படைப்பாக்கத்தில் ஈடுபட்டதோடு, 1930 இல் மகாத்மா காந்தி, கைது செய்யப்பட்டமைக்கு எதிராக ஊன்றுகோலுடன் நடந்துசெல்லும் காந்தியின் கறுப்பு-வெள்ளை லைன்கட் (line-cut) முறை ஓவியமொன்றினை வரைந்தார். நந்தலால் போஸ், பாரம்பரியமாக பிரெஸ்கோ முறையில் ஓவியம் வரையுமாறு இளம் ஓவியக் கலைஞர்களைத் தூண்டினார். களனி விகாரை ஓவியராக சோளியஸ் மெண்டிஸைத் தெரிவு செய்வதிலும், மெண்டிஸ் இனது படைப்பாக்கத்திலும் செல்வாக்குச் செலுத்திய ஒரு கலைஞராக நந்தலால் போஸ் காணப்படுகின்றார். சோளியஸ் மென்டிஸ் தனது இந்திய பயணத்தின் போது சாந்தி நிகேதனத்தில் நந்தலால் போஸ்இன் கீழ் ஓவியங்கலைப் பயிற்சி பெற்றார்.
அஜந்தா ஓவியங்கள் நந்தலால் போஸ்இனது படைப்பாக்கங்களின் மீது பாரிய அளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதோடு, வர்ணத்தொகுதி, மனித உடல்நிலைகள், வர்ணம் தீட்டும் முறைகள், மக்களின் பயன்பாடு ஆகிய அம்சங்களில் இச்செல்வாக்கை இனங்காண முடிகின்றது. போஸ் பிற்காலத்தில் யப்பானிய ஓவியக் கலையின் செல்வாக்கையும் பெற்றார். குறிப்பாக “சுமி-எ” போன்ற நீர்வர்ண ஓவியப் பாரம்பரியங்களும் அதில் அடங்கியுள்ளன. நந்தலால் போஸ் இனது பிரதான விடயப் பொருள்களாக அமைந்தவை இந்தியப் புராணக் கதைகள். இந்தியப் பெண், இந்திய கிராமிய வாழ்க்கை போன்றவையாகும். தற்போது புது டில்லியில் அமைந்துள்ள நவீன கலைகள் தொடர்பான தேசிய கலைக்கூடத்தில் போஸ் இனது பலஓவியங்களைக் காணலாம். நந்தலால் போஸ் வரைந்த ஓவியங்களுள் சிவன் நஞ்சுண்ணல், ராதையில் விரக தாபம், சதி பூசை போன்றவை அடங்கியுள்ளன. மேலும் அவர் பிரதி செய்த பல அஜந்தா ஓவியங்களும் உள்ளன.
நந்தலால் போஸ் இனது படைப்பாக்கங்களின் பொது இயல்புகள்
- அஜந்தா ஓவியங்களின் செல்வாக்கைப் பெற்று, அவற்றின் இயல்புகளை நவீனத்துவ வெளிப்பாடுகளுக்காகப் பயன்படுத்தல் நந்தலால் போஸ் இனது முக்கியமான ஒரு பண்பாகும். குறிப்பாக போஸ் இனது ஓவியங்களில் நிறத்தொகுதி, நிறந்தீட்டல் முறைகள், உருவப்புணர்வு, மனித உருவங்களின் மெய்ந்நிலைகள் போன்றவற்றில் மேற்படி அஜந்தா ஓவியங்கள் உட்பட இந்தியாவின் பண்டைய தொல்சீர் கலையினது செல்வாக்கை இனங்காணலாம்.
- நந்தலால் போஸ்இனது ஓவியங்களின் வர்ணப்பேதப் பயன்பாடு, உருவங்களில் ஒளி- நிழல் காட்டுதல், அண்மை-சேய்மை வெளிகளைக் காட்டுதல் போன்றவை காணப்பட்ட போதிலும். அது ஐரோப்பிய கலைக்கல்லூரிக் கலையின் விதிகளுக்கு அமைவாகச் செய்யப்படவில்லை. கோடானது போஸ் இனது ஓவியங்களின் காத்திரமான ஒரு கட்புல அடிப்படை அம்சமாகும். இவர் நிறந்தீட்டலைத் தவிர்த்து கோடுகளால் கட்டியெழுப்பிய பல ஓவியங்களும் உள்ளன.
- இந்திய ஓவியக்கலையில் நீர்வர்ண ஊடகப் பயன்பாட்டை விருத்தி செய்வதில் நந்தலால் போஸ் இனது ஓவியங்கள் சிறப்புப் பெற்றன. குறிப்பாக ‘Wash-techniques’ அதாவது தன் வரைந்த தளத்தை நீரினால் கழுவி ஆக்கம் படைக்கும் பாரம்பரியம் விருத்தியடைவதற்கு இவரது படைப்பாக்கங்கள் காரணமாயின.
- யப்பானிய ஓவியக் கலையின் செல்வாக்குடன் இயற்கையில் காணப்படும் பொருள்களை அதாவது மலர்கள் மரஞ்செடிகொடிகள், பல்வேறு பிராணிகள், நிலத்தோற்றங்கள் நந்தலால் போஸ் ஓவியங்களாக வரைந்துள்ளார்.
- நந்தலால் போஸ் இனது பெரும்பாலான படைப்புக்களில் கண்களுக்கு இதமான மென்மை நிறத் தொகுதியே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே நிறத்தின் கிட்டிய நிறப் பேதங்களை பெரும்பாலான ஓவியங்களில் காணலாம்.
- இந்தியத் தொல்சீர் மற்றும் கிராமியக் கலையின் இயல்புகளை நந்தலால் போஸ் மிகச்சிறப்பாக உள்வாங்கியுள்ளார்.
- இவர் இந்திய தேசியவாத இயக்கத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு இணையாக படைப்பாக்கத்தில் ஈடுபட்ட ஒரு கலைஞர் ஆவார்.
- குறியீட்டுத்தன்மை, ஆத்மீகத்தன்மை ஆகியன போஸ்இனது ஓவியங்களில் தெள்ளத்தெளிவாகக் காணப்படும் இயல்புகளாகும்.
சிவபெருமான் நஞ்சுண்ணல்
(Slva drinking World Poison, National Gallery of Modern Art, New Delhi)
இது இந்துப் புராணக் கதையொன்றில் இடம்பெற்றுள்ள ஒரு சந்தர்ப்பத்தைத் தழுவி வரையப்பட்ட ஓர் ஓவியமாகும். சிவபெருமான் உலகில் உள்ள பிராணிகள் குறித்து அனுதாபத்துடன் நச்சுக் கடலை பருகும் சந்தர்ப்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. சிவபெருமான் நஞ்சைப் பருகாது தொண்டையினுள் வைத்திருந்ததாக, அதன் விளைவாக சிவனின் கழுத்து நீல நிறமாக மாறியதாகவும் இந்துப் புராணக் கதைகளில் இடம்பெற்றுள்ளது. அதன் விளைவாக சிவபெருமானுக்கு ‘நீல கண்டன்’ அதாவது நீல நிறக் கழுத்துடையோன் எனும் பெயரும் வழங்கப்படுகின்றது.
நந்தலால் போஸ் மேற்படி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஓவிய வெளி முழுவதிலும் நிரம்புமாறு சிவபெருமானின் உருவம், அமர்ந்திருக்கும் நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவர் தமது இரு பாதங்களும் ஒன்றுடனொன்று தொடுகையடையும் வகையில் அமர்ந்து, தலையை இடதுபுறமாகத் திருப்பி, விஷம் வலது கையினால் உண்ணுவது ஓவியத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளது. சிவபெருமானின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்ட உணர்வு காணப்படுகின்றது. தலையைச் சூழ நீல நிற மற்றும் நரை நிறக் கலப்பினாலான ஒளிவட்டம் உள்ளது. உடலின் கீழ்ப்பகுதியில் மஞ்சள் நிற ஆடை ந்துள்ள சிவபெருமானின் உடலின் மேற்பகுதி ஆடைகளின்றி வெறும் மேனியாகக் காணப்படுகின்றது. கழுத்திலும், தலையிலும் புயங்களிலும் உள்ள அணிகலன்கள் காரணமாக உருவம் மேலும் அழகு பெற்றுள்ளது. தலையில் சிவபெருமானின் குறியீடொன்றாகிய பிறைச்சந்திரன் அடையாளம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட புராணக் கதையின்படி, சிவபெருமானின் கழுத்து நீல நறமாக மாறுவதை நந்தலால் போஸ் இந்த ஓவியத்திலும் காட்டியுள்ளார். சிவபெருமானின் உருவத்தை நோக்குகையில், அங்கு அஜந்தா ஓவியங்களின் செல்வாக்கைத் தெளிவாக இனங்காணலாம். சிவபெருமானின் உருவத்துக்காக போஸ் பிரகாசமான உடல் நிறத்தைப் பயன்படுத்தியுள்ளதோடு, ஐரோப்பிய உடலமைப்பு இயல்புகளுக்குப் பதிலாக, பண்டைய தொல்சீர் இந்தியக் கலையின் இயல்புகளைக் கொண்டு அழகிய உடற்பாங்கை சிவபெருமானுக்கு வழங்கியுள்ளார். உருவத்தின் புற எல்லை தெளிவான ஒரு கோட்டினால் குறிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் வலிமையையோ நளினப் பாங்கையோ வலியுறுத்துவதை தவிர்த்து உலகப் பிராணிகளின்பால் காட்டும் அனுதாப உணர்வே இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாரம்பரியமான கருப்பொருள்களிலிருந்து அப்பாற்பட்ட புதுமைப்பாடான ஒரு வெளிப்பாடாக இதனைக் கருதலாம். சிவபெருமானின் உருவத்தின் பின்னே, நாகத் தலைகளை நினைவூட்டும் வகையிலான உருவத்தொடரொன்று உள்ளது. இது சிலவேளை கழுத்தில் பாரம்பரியமாக இடப்படும். நாக உருவத்தின் குறியீடாகவும் இருக்க இடமுண்டு.
ராதையின் விரகதாபம்
(Radha’s Vihara, National Gallery of Modern Art, New Delhi 1936)
மிக பிரபல்யம் வாய்ந்த இந்துப் புராணக் கதைகளுள் ஒன்றாகிய ராதா-கிருஷ்ணா கதையில், தனது காதலனின் பிரிவினால் வாடும் ராதையே (ராதா) இந்த ஓவியத்தின் விடயப் பொருளாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த ஓவியம் மூன்று பெண் உருவங்களாலானது. ஓவியத்தில் ராதையின் உருவம் மத்தியிலும் அவளது தோழியர் இருவரதும் உருவங்களும் இரு புறங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஓவியத்தில் பிரதானமான மூன்று தளங்களை இனங்காணலாம். முன்னணியில் மரங்களும் இடையணியில் பெண் உருவங்களும் பின்னணியில் மீண்டும் மரங்களைக் கொண்ட சூழலும் காட்டப்பட்டுள்ளன. மரங்கள் மோடிப்படுத்தப்பட்டுக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ஓவியத்திலும் கேத்திரகணித தளவடிவங்கள் வலியுறுத்தப்படும் வகையிலான கட்புல மொழி பயன்படுத்தப்பட்டுள்ளன. முப்பரிமாணத் தன்மையைப் புறந்தள்ளி, தட்டையான நிறப்பூச்சு முறையே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் வெப்பவர்ணங்களும் குளிர் வர்ணங்களும் ஒன்றுக்கொன்று அருகிலும் ஒன்றுடனொன்று பொருந்தும் வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்கள் மட்டுமன்றி மனித உருவங்களும் மோடிப்படுத்தப்பட்டுள்ளன. ராதை கட்டிலின் மீது சாய்ந்திருப்பதோடு, அவள் மேலிருந்து தோன்றுவதைப் போன்று அதாவது பறவைக் கண் பார்வையில் (bird eye view) வரையப்பட்டுள்ளது. ராதையின் இரு புறங்களிலும் பக்கத் தோற்றத்தில் காட்சியளிக்கும் வகையில் அவளது தோழிகள் வரையப்பட்டுள்ளனர்.
ஒவியத்தின் முன்னணிக்கும் பின்னணிக்கும் இடையே ஆழம் காட்டப்பட்டுள்ள போதிலும் அது ஐரோப்பிய அக்கடமிக் தூரதரிசனக் கோட்பாட்டினைவிட வேறுபட்ட ஒரு பிரயோகமாகும். ராதையின் பக்கத்தில் தாமரை மலர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, அவளது தோழியர் இருவரும் தாமரை மலர்களையும் தாமரை இலைகளைக் கொண்டு வந்து ராதையைத் தேற்ற முயற்சி செய்கின்றமை காட்டப்பட்டுள்ளது. பண்பாட்டுக் கவிதைக் காலத்தில் தாமரை மலர்களும் இலைகளும் உடலின் வெப்பத்தைத் தணிக்கும் பொருள்களாகக் கருதப்பட்டுள்ளது. ராதையின் தோழிகள் இந்திய சேலைகளை அணிந்துள்ளார். ஓவியத்தின் சில பொருள்களை வலியுறுத்திக் காட்டுவதற்காக கடும் மஞ்சள் நிற மற்றும் நீல நிறக் கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.