திவங்க சிலைமனை ஓவியங்கள்

பொலனறுவை திவங்க சிலை மனையின் உட்புறச் சுவர் மீது வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் இலங்கையின் மரபு ரீதியான சித்திரக் கலை பாரம்பரியத்தின் விசேடமான ஒரு திருப்பு முனையைக் குறித்துக் காட்டும் நிர்மாணிப்பு களாகும்.

சூள வம்சத்தின்படி இந்த ஓவியங்கள் 1 ஆம் பராக்கிரமபாகு மன்னன் (கி.பி. ! 153-1186) காலத்துக்குரியவையெனக் கருதப்பட்டபோதிலும், 2 ஆம் பராக்கிரமபாகு மன்னனால் (கி.பி. 1236 -1270) மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் காணப்பட்டமையால் திவங்க சிலை மனை இந்த இரு மன்னர்களுடைய காலப்பகுதிக்குரியவையெனக் கூறலாம். இதற்கேற்ப சேனக்க பண்டாரநாயக்க, நிமல் த சில்வா, நந்தா விக்கிரமசிங்க போன்றோர் இந்த ஓவியங்கள் 1213 ஆம் நூற்றாண்டுக்குரியவையெனக் கருதுகின்றனர்.

1886 இல் எஸ். எம். பாரோஸ் என்பவரினாலேயே திவங்க சிலை மனையின் சில ஓவியங்கள் நீர்வர்ணத்தினால் பிரதி செய்தல் இடம்பெற்றது. மீண்டும் 15 வருடங்களுக்குப் பின்பு 1909 களில் எச். சி. பெல் என்பவரினால் இங்கே புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. திவங்க சிலை மனையின் சித்திரங்களின் அழிவைத் தடுப்பதற்காகப் பொருத்தமான கூரையொன்றினை அமைப்பது தொடர்பாகச் செனரத் பரணவித்தான அவர்கள் கவனஞ் செலுத்தியதோடு, ஓவியங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளார். அதற்கேற்ப அவர் திவங்க சிலை மனையின் சுவர்களில் இரண்டு படை ஓவியங்கள் உள்ளனவெனக் கண்டுபிடித்தார். சார்ள்ஸ் கொடக்கும்புர தொல்பொருளியல் ஆணையாளராக இருந்த காலத்தில் திவங்க சிலை மனை ஓவியங்கள் எஸ். எம். செனவிரதன அவர்களைக் கொண்டு புற இரேகை முறையில் பிரதி செய்து வெளியிட்ட போதிலும் அப்போது மரே மற்றும் பெல் இனங்கண்ட ஓவியங்களை விடக் குறைந்தளவு ஓவியங்களே எஞ்சியிருந்தன.

திவங்க சிலை மனையின் ஓவியங்கள் பிரெஸ்கோ சிக்கோ உலர் சுதை (Fresco secco) உத்தி நுட்பத்தையும் சேர்ந்தது என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் திவங்க சிலை மனையின் ஓவியங்களில் பல்லவர் காலக் கலையின் செல்வாக்குக் காணப்படுவதாக நந்தா விக்கிரம சிங்க கூறுகிறார். பல்லவர் கால மரபு கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது எனக் கூறும் அவர் இலங்கைக் கட்டடக்கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை இதன் செல்வாக்கைப் பெற்றுள்ளது எனவும் கூறுகிறார். நுழைவாயில் மண்டபத்திலுள்ள ஓவியங்களின் மோடியானது சிலை மனை ஓவியங்களை விட வேறுபட்டது.

திவங்க சிலை மனை ஓவியங்களின் மோடிப் பண்புகளின் சிகிரியா ஓவியங்களின் செந்நெறிக் கால இலட்சணங்களைக் காணமுடிகிறது என சேனக்க பண்டாரநாயக்க சுட்டிக் காட்டியுள்ளார். அத்தோடு திவங்க சிலை மனை ஓவியங்கள் இலங்கையின் மரபுரீதியான பயணப் பாதையை விளங்கிக் கொள்வதற்காகத் தேவையான சகல கட்புலனாகும் பண்புகளையும் கொண்டிருக்கும் எனவும் பண்டாரநாயக்க கூறுகிறார். அதாவது ஒருபுறத்தே திவங்க ஓவியங்கள், அதற்கு 500 வருடத்திற்கு முன்பு அனுராதபுர காலத்தில் வரையப்பட்ட சிகிரியா ஓவியங்களின் தொல்சீர் இயற்கைசார் கலைப்பண்புகளையும், மறுபுத்தே 500 வருடத்தின் பின்னர் வரையப்பட்ட கண்டிய ஓவிய மரபாகிய கண்டியின் ஓவியக் கலை மொழியின் அடிப்படை பண்புகளையும் இவ்வோவியங்களின் மூலம் காண முடிகின்றமை விசேடமானதொரு அம்சமாகும்.

திவங்க சிலை மனை ஓவியங்களில் புத்தர் சரிதை, போதிசத்துவர் பருவம் மற்றும் ஜாதகக் கதைகள் விடயப்பொருள்களாகவுள்ளன. இச்சிலை மனை ஓவியங்களில் பிரதானமாக மூன்று கட்டங்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டு, பிரவேச மண்டபம், அந்தராழம், கர்ப்பக்கிரகம் எனப் பெயரிடப்பட்டுள்ளன. அந்தந்தக் கருப்பொருள்களைக் காட்டுவதற்காக அவ்வெளிகள் பயன்படுத்தப்பட்ட விதம் கீழ் தரப்பட்டுள்ளது.

(1) நுழைவாயில் மண்டபம்

வெஸ்ஸந்தர ஜாதகம், ஆசங்கவதி ஜாதகம், சச ஜாதகம், துண்டில ஜாதகம், விதுர ஜாதகம், குத்தில ஜாதகம், சுல்லபதும ஜாதகம், மைத்திரி பல ஜாதகக் கதைகளுடன் பல ஜாதகம், சாம ஜாதகம், மகா சுதஸ்ஸன ஜாதகம், குச ஜாதகம், உம்மக்க ஜாதகம் போன்ற ஜாதகக் கதைகளுடன் மகாமாயா தேவியின் கனவு போன்ற கருப்பொருள்கள்.

(2) அந்தராழம் மண்டபம் “தேவாராதனை”

(3) கர்ப்ப க்கிரகம் “சங்கஸ்ஸபுரத்திற்கு ஏணியால் வருகை தரல்”

 1. ஆசங்கபவதீ ஜாதகம்
 2. சச ஜாதகம்
 3. விதுர ஜாதகம்
 4. சுன்ன பதும ஜாதகம் மற்றும் மைத்திரி பல ஜாதகம்
 5. தேவாராதனை
 6. தேவலோக விமானம்
 7. தேவாராதனை
 8. சங்கஸ்ஸபுர ஏணிக் காட்சி
 9. சங்கஸ்ஸ புர ஏணிக் காட்சி
 10. தேமிய ஜாதகம்
 11. மகாசுதஸ்ஸன ஜாதகம்
 12. இனங்காணப்படாத ஓர் ஓவியம்
 13. இனங்காணப்படாத ஓர் ஓவியம்
 14. மகாமாயா தேவியின் கனவு எனக் கூறப்படும் ஓவியம்
 15. உம்மக்க ஜாதகம்

இலங்கையின் சித்திரக் கலையில் முதன்முதலாக பௌத்த தத்துவத்துக்கமைய ஓவியங்கள் வரையப்பட்ட இடமாக திவங்க சிலை மனையினைக் குறிப்பிடலாம். அதற்கேற்ப இச்சிலை மனையின் முதலாவது நுழைவாயிலையடையும் பக்தர்கள் புத்தபெருமானின் முற்பிறப்பு வாழ்க்கையைப் பற்றிய ஜாதகக் கதை ஓவியங்களைக் காணலாம். நுழைவாயில் மண்டபம் துவார மண்டபத்திலுள்ள அந்த ஓவியங்களுக்குப் பின்னர் தெய்வீகப் பருவத்தினை காட்டுகின்ற புத்தராவதற்குத் தெய்வத்தினால் அழைக்கப்படுவதைக் காட்டும் அந்தராழத்திலும் பின்னர் புத்தருடைய உலகத்தினை கர்ப்பக் கிரகத்தினுள்ளேயும் காணலாம்.

திவங்க ஓவியக் கலைஞர் வெளிக்கேற்ப கருப்பொருள்களைத் தெரிவு செய்துள்ளதோடு ஆக்கபூர்வமான தன்மையுடன் நுட்பமுறைகளை உபயோகித்து உருவங்களைச் சித்தரித்துள்ளார். அதற்கேற்ப ஜாதகக் கதைகளில் உருவங்களை மிகச் சிறியதாகத் தொடர்ச்சியான கதைகூறல் முறைக்கேற்ப தொடர் ஓவியங்களாகவும் கதைகளும் அந்தராழத்தில் தேவாராதனை ஓவியம் மனிதவுருவங்கள் இயல்பான அளவுப் பிரமாணங்களிலும் கர்ப்பக்கிரகத்தில் புத்தரது உலகம் இயல்பான அளவை விட பெரிய அளவுப் பிரமாணத்திலும் வரையப்பட்டுள்ளன. இவ்வாறாக வெளியில் கருப்பொருளின் கீழ் உருவங்கள் வரைதலை திவங்க சிலை மனை ஓவியர் பொருளுள்ள வகையில் செய்துள்ளார்.

திவங்க ஓவியர்கள் சில சமயங்களில் உருவங்கள் எளிமையாக ஒழுங்கமைத்துள்ள தோடு மற்றும் சில சமயங்களில் அதற்கான விதிமுறைகளை உபயோகித்துள்ளார். அந்தராழத்திலும் கர்ப்பக்கிரகத்தின் ஓவியங்களின் சுயாதீன தன்மையை மண்டப ஓவியங்களில் காணமுடியாது. ஜாதகக் கதை ஓவியங்களை வரையும்போது விரிவான தன்மையைக் காட்டுவதற்காக மண்டபச் சுவர்கள் வரிசைகளாகப் பதித்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அனுராதபுர, சிகிரியா ஓவியங்களை நினைவூட்டும் கட்புலனாகும் சான்றுகளை உறுதிப்படுத்தும் ஓவியங்களை திவங்க சிலை மனை அந்தராழத்திலும் கர்ப்பக்கிரகத்திலும் காணலாம். மேலும் பிற்காலக் கண்டிய காலத்தில் காணக்கூடிய ஓவியக் கலை மரபின் இலட்சணங்கள் மீதும் திவங்க ஓவியர் செல்வாக்குச் செலுத்தியுள்ளதைக் காண முடிகிறது. திவங்க சிலை மனையின் நுழைவாயில் மண்டபத்தில் காணப்படும் தொடர் ஓவியக் கதை கூறல் தன்மையும் கண்டிய கால ஓவியங்களின் மாதிரி சார்ந்த பண்புகளுடனான தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

நுழைவாயில் மண்டப ஓவியங்கள்

திவங்க சிலை மனையின் நுழைவாயில் மண்டபத்தில் போதிசத்துவரின் சரிதத்தை காண்பிக் கின்ற ஜாதகக் கதை ஓவியங்களைக் காண முடிகிறது. மத்திய கண்டிய கால ஓவியங்களின் அடிப்படை இலட்சணங்களாக தொடர்ச்சியாக ஓவியங்கள் வரைதல் மற்றும் தொடர்ச்சியாக கதை சொல்லல் முறை ஆகியனவும் காணக்கூடியதாகவுள்ளது. (ஏதேனும் கதை யொன்றினை நீளப்பாடாக விபரிக்கக்கூடியவாறு சுவர்களின் மீது கிடையாக ஒழுங்கமைத்தல்) வரிசைகளில் ஓவியங்கள் வரையும்போது ஒரு தளத்தில் உருவங்கள் ஒழுங்கமைக்கப்படுவதோடு சுவர் நீளப்பாடாக மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பக்கப்பாடான உருவங்கள் பின்னணி சிவப்பு / பழுப்பு நிறமாக இருத்தல் என்பன ஜாதகக் கதை ஓவியங்களின் விசேட இலட்சணங்களாகும்.

திவங்க சிலை மனை நுழைவாயில் மண்டபத்தின் தெற்குப் பக்கத்தின் சுவரில் அசங்கவதீ, சச, விதுர, சுள்ளபதும மற்றும் மைத்திரிபல ஜாதகக் கதைகள் காணப்படுகின்றன. இடப் பக்கச் சுவரில் தேமிய, மஹசுதஸ்ஸன, உம்மக்க ஜாதகத்துடன் ”காலகோல” மற்றும் ”மகாமாயா தேவியின் கனவு” ஆகிய ஓவியங்கள் உள்ளன.

இந்த நுழைவாயில் மண்டபத்தில் காணக்கூடிய ஜாதகக் கதை ஓவியங்களுக்கிடையே தேமிய ஜாதகம், சச ஜாதகம், அசங்கவதி ஜாதகம், சுள்ள பதும் ஜாதகம் ஆகியன பிரதான இடத்தினைப் பெறுகின்றன.

சுவர் கிடையாக மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித விலங்கு, தாவர உருவங்கள் பயன்படுத்தப்பட்டு கதையின் இரண்டு சந்தர்ப்பங்களை வரையும்போது ஒரு மரத்தை அல்லது மலரை இட்டு இடைவெளியைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றைக் காண முடிகிறது. உருவங்களை வரையும்போது இயற்கை சார்ந்த தன்மை காட்டப்பட்டுள்ளது. கள்ளபதும் ஜாதகம், மைத்திரி பல ஜாதகக் கதைகளில் நிகழ்வுகளைக் காட்டும் ஓவியங்கள் உருவங்களால் நிரம்பியுள்ளமையைக் காணமுடிகின்றது. ஓவியங்களின் பின்னணி வெளியானது, மாளிகைகள், விருட்சங்கள் போன்றவற்றால் அழகுபடுத்தப்பட்டிருத்தல் ஒரு சிறப்பியல்பாகும்.

அசங்கவதி ஜாதக்கதை
சுள்ளபதும ஜாதகக் கதை
மைத்திரிபல ஜாதகக் கதை
மைத்திரிபல ஜாதகக் கதை

நுழைவாயில் மண்டபத்தின் தெற்குப் பக்கத்தின் சுவரின் நடு வரிசையில் தேமிய ஜாதகக் கதையின் ஓவிய எச்சங்களைத் தெளிவாகக் காணமுடிகின்றது. தேமிய ஜாதகம் முகப்பக்க” ஜாதகமெனவும் அறியப்படுகிறது. இவ்வோவியத்தின் நடுப்பகுதியில் குதிரை வண்டியினுள்ளே கை, கால்களை அசைக்காது வைத்திருக்கும் தேமிய இளவரசன் காணப்படுகின்றார். மேலும் சுனந்த என்ற குதிரை வண்டிக்காரன் குழி தோண்ட ஆயத்தமாகும் நிலை காணப்படுகின்றது. அக்குதிரை வண்டிக்காரனுக்கு முன்பக்கத்தில் போதிசத்துவர் வடிவத்தில் இருக்கும் தேமிய இளவரசன் காணப்படுகின்றார்.

இந்த ஓவியத்தின் பின்னணிக்காக பழுப்பு நிறம் பாவிக்கப்பட்டுள்ளது. வர்ணப் பயன்பாட்டிற்காக சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களும் (வர்ணத்தொகுதி) அவ்வர்ணங்களின் பேதங்கள் காட்டுவதற்கு சிறிதளவாக பச்சை வர்ணமும் பாவிக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் உருவங்களில் இயற்கையான மோடித் தன்மையை எடுத்துக் காட்டுவதற்காகவும் இரேகையின் அற்புதத் தன்மையை காட்டுவதற்கும் கலைஞர் முயற்சி செய்துள்ளார்.

தேமிக ஜாதகம்

தேமிய ஜாதகக் கதை ஓவியங்களைப் போன்றே சச ஜாதக ஓவியங்களை திவங்க ஓவியக் கலைஞர் மனித உருவங்களையும் சூழலையும் கதையின் அடிப்படையான தொடர்பாடல் அர்த்தம் நன்கு வெளிப்படுமாறு வரைந்துள்ளார்.

மகாமாயா தேவி கண்ட கனவு

இந்த ஜாதகக் கதை ஓவியங்களுக்கு மேலதிகமாக இந்த நுழைவாயில் மண்டபத்தில் மகாமாயா தேவியின் கனவு, புத்தரின் பிறப்பு ஆகிய சம்பவங்களைக் காட்டும் ஓவியங்களும் உள்ளன.

அந்தராழத்தில் காணப்படும் ஓவியங்கள்

அந்தராழ ஓவியங்களின் விடய கருப்பொருள் தேவாராதனை ஆகும். தேவலோகத்திலிருக்கும் போதிசத்துவருக்கு மனிதனாகப் பிறந்து புத்தராகுமாறு தெய்வத்தினால் செய்யப் படும் அழைப்பு இவ்வோவியத்தின் கருப்பொருளாகும் என செனரத் பரணவித்தான அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். அந்தராழத்தினுள் வரையப்பட்டுள்ள தேவாராதனை ஓவியம் இயற்கை வாதப் பண்புகளைக் கொண்டுள்ளது. அந்தராழச் சுவர்கள் முழுவதும் இயல்பாக மனித உருவங்களின் அளவுப் பிரமாணத்தில் தெய்வ உருவங்கள் வரையப்பட்டுள்ளன. நமஸ்காரம் செய்யும் முறையில் கைகளை வைத்திருக்கும் வகையில் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. சில உருவங்கள் திரிபங்க நிலையைக் காட்டுகின்றன.

சிவப்பு, கபில, மஞ்சள் சார்ந்த இசைவான வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. உருவங்களைச் சூழத் திட்டவட்டமான கோடுகள் காணப்படுகின்றன. அவை நெகிழ்ச்சியான லய ரீதியான கோடுகள் அடக்கமான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. செனக்க பண்டாரநாயக்க இதனை பின் தொல்சீர் பாணி (LatcClassic Style) எனக் குறிப்பிட்டுள்ளார். திவங்க ஓவியங்கள் அனுராதபுர சிகிரிய ஓவியங்களின் இரேகை மற்றும் வடிவங்களை நினைவூட்டுபவையாக உள்ளன.

கர்ப்பக்கிரகத்தில் காணப்படும் ஓவியம்

கர்ப்பக்கிரகத்தின் வடக்குச் சுவரில் காணப்படுகின்ற ஓவியத்தின் மூலம் புத்தபெருமான் தேவலோகத்திற்கு வருகை தந்து, தாய்க்கு உபதேசம் செய்து மீண்டும் சங்கஸ்ஸ புரத்துக்கு வருகை தரும் சந்தர்ப்பம் ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திரனால் அமைக்கப்பட்ட தங்க ஏணியில் புத்தபெருமான் சங்கஸ்ஸபுரிக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தைக் காட்டும் வகையில் இந்த ஓவியம் திட்டமிடப்பட்டுள்ளது. வரிசைகளில் சித்திரம் வரையும் முறையினை விட வேறுபட்ட இது ஒரு விசாலமான ஓவியமாகும். புத்தர் உருவத்துக்கு ஞாபகச் சின்ன வடிவம் வழங்கப்பட்டுள்ளது. ஓவியத்தில் மூன்று ஏணிகளைக் காணலாம். சித்திரத்தின் மத்தியில் காணப்படுகின்ற ஏணியில் புத்த பெருமான் அமர்ந்துள்ளார். வலது பக்கத்திலுள்ள சிறிய ஏணியிலிருந்து புத்தபெருமானுக்குக் குடை பிடிக்கும் சக்ர தேவனும் இடது புற சிறிய ஏணியில் புத்தபெருமானுக்கு பூசிப்பதற்காக மலர் ஒன்றினைக் கொண்டிருக்கின்ற பிரம்மனும் காட்டப்பட்டுள்ளனர். இவ்வுருவங்களை, புத்தபெருமானை விடச் சிறியதாக வரைதல் மூலம் புத்தர் உருவத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதான பாத்திரத்தை முதன்மைப்படுத்திக் காட்டுவதற்காக ஏனைய பாத்திரங்களைச் சிறிதாகக் காட்டப்பட்டுள்ளமை இந்த ஓவியத்தில் காணக்கூடிய ஒரு விசேட பண்பாகும்.

error: Content is protected !!