திம்புலாகல மார வீதி ஓவியங்கள்
திம்புலாகல வடமத்திய மாகாணத்தில் தமன்கடுவ மாவட்டத்திற்குரியது. இது ‘தம்மரக்கப்பத’, ‘திம்புலாகல’, ‘உதும்பரகிரி’ போன்ற பெயர்களினால் அறியப்படுகின்றது. திம்புலாகல கற்பாறை உச்சியின் மீது குகை வரிசையொன்றுள்ளது. அவை ‘மாரவீதி’ என்ற பெயரினால் பிரசித்தம் பெற்றுள்ளது. இக்குகை வரிசையிலுள்ள குகைகளின் 01 ஆம் இலக்கம், 02 ஆம் இலக்க குகைகளுக்கு இடையே உள்ள கல் மேற்பரப்பில் வெள்ளை நிறச் சாந்துப் படை மீது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் கறுப்பு நிற வர்ணத்தினைப் பயன்படுத்தி வரையப்பட்ட புற இரேகை ஓவியங்கள் சில இன்றும் காணப்படுகின்றது. இக்குகைகளும் ஓவியங்களும் அங்குள்ள பிராமிய எழுத்துக்களின்படி 7 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2 ஆம் குகையில் 1 ஆம் பராக்கிரமபாகுவின் ராணியான சுந்தர மகாதேவியின் கல்வெட்டொன்று உள்ளது. இந்த ஓவியங்கள் 12 ஆம் நூற்றாண்டிற் குரியவையென செனரத் பரணவிதான கருத்துத் தெரிவித்துள்ளார். விஜேசேகரவும் இவை 12 ஆம் நூற்றாண்டிற்குரியனவென்று கருதுகின்றார். மேலும் அவர் இவ்வோவியரின் பொலனறுவைக் கால ஓவியங்களை விட 50 வருடங்கள் பழைமையானது எனவும் கூறுகின்றார். திம்புலாகல ஓவியங்கள் வரையப்பட்டுள்ள தளத்தின் சாந்தினை ஆய்வு செய்து இவ்வோவியத்தை அனுராதபுரக் கால 5 ஆம் நூற்றாண்டிற்குரியதென்று ராஜா த சில்வா சுட்டிக் காட்டியுள்ளார். உலர்சாந்தின் மீது வரையப்பட்டுள்ள இவ்வோவியங்களின் கலைப்பண்புகள் பொலனறுவைக் காலத்தின் கலைப் பண்புகளை ஒத்தவையாகும்.
மார வீதியின் இலக்கம் 01 குகையினுள்ளேயுள்ள ஓவியத் தடங்களுக்கிடையே தியான முத்திரையில் அமர்ந்திருக்கும் புத்தர் உருவமொன்றும், அதனைச் சூழவுள்ள சிறிய புத்த உருவங்களும் சிறப்பான இடத்தினைப் பெறுகின்றன. இங்கு தியான முத்திரையைக் கொண்டு அமர்ந்துள்ள புத்த உருவம் கூடமொன்றுக்குள்ளே அமர்ந்திருக்கும் நிலையில் காணப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. இரண்டு புறங்களிலும் செதுக்கல் வேலைகளைக் கொண்ட தூண் சோடியும், பின்புற தோரணமும் காணப்பட்டமைக்கு தடயங்கள் உள்ளன. அமர்ந்திருக்கும் புத்தபெருமானைச் சுற்றி மிகப் பெரிய ஒளிவட்டமொன்றுள்ளது. புத்தர் உருவத்தின் இடது பக்கத்தில் உடலின் மேற்பகுதிக்குரிய ஆடையின்றி வணங்கும் நிலையினையுடைய மூன்று மனித உருவங்கள் காணப்படுகின்றன. புத்தர் உருவத்தின் வலது பக்கத்திலும் அழகிய ஆபரணங்களினாலும் சிரசணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட மனித உருவங்கள் 03 காணப்படுகின்றன. மிகவும் மெல்லிய நிற இரேகைகளினால் வரையப்பட்ட புத்த உருவத்தினைக் காட்டுவதற்குச் சிவப்பு வர்ணமும் பின்னணிக்காகப் பச்சை வர்ணமும் பாவிக்கப் பட்டுள்ளன.
மார வீதி இலக்கம் 02 குகையினுள்ளே காணப்படுபவை சச ஜாதகம் மற்றும் வெஸ்ஸந்தர ஜாதகம் என நம்பப்படும் சித்திரப் பகுதிகள் சில உள்ளன. இலக்கம் 02 குகையினுள்ளே யுள்ள சச ஜாதக ஓவியத்தில் இந்திரனால் சந்திரனில் முயலின் உருவத்தினை வரைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பம் மிகவும் சிறப்பாக ஓவியமாக்கப்பட்டுள்ளது. கறுப்பு வர்ண புற இரேகைகளால் மட்டும் காட்டப்பட்டுள்ள இந்திரனின் உருவம் இலயத்துடன் கூடிய உடல்நிலையில் வரையப்பட்டுள்ளது. உண்மை யான மனித உருவத்தின் அளவுப் பிரமாணத்தினை விட சற்று உயரம் குறைவாக நேரியதாக வரையப்பட்டுள்ளது. முகம் மற்றும் சரீரம் மிகவும் மனம் கரவத்தக்கவாறு வரையப்பட்டிருப்பது கலைஞனின் திறமையை வெளிக் காட்டுகின்றது. தலையில் அணிந்துள்ள கிரீடம் (கூம்பு) போன்றுள்ளது. மாலை, வளையல்கள் போன்ற ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்திரனின் இடது தோளின் மீது பூணூல் தரித்துள்ளது போன்று வரையப்பட்டுள்ளது. வலது கையினால் தூரிகை போன்ற ஒரு பொருளைக் கொண்டு முயலின் உருவத்தினை வரைவதற்கான முயற்சி ஓவியமாக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் வர்ணப் பாத்திரம் போன்றதொன்று காணப்படுகின்றது. இப்பொழுது மீதியாகவுள்ள பகுதிகளில் வர்ணங்கள் எதனையும் காண முடிவதில்லை. கறுப்பு, சாம்பல் வர்ணங்களினால் வரையப்பட்ட புற இரேகைகளை மாத்திரம் காணக்கூடியதாகவுள்ளது. பரணவிதான அவர்கள் இது சச ஜாதக ஓவியமெனவும் முயல் உருவம் இந்திரனால் வரையப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இக்குகையிலுள்ள யானை உருவமும் மனித உருவமுள்ள ஓவியமும் மிகவும் சிறப்பான ஒரு படைப்பாகும். யானை உருவம் மீண்டும் மீண்டும் ஒன்றின்மேல் ஒன்றாக வரையப் பட்டதுபோன்று காட்சியளிக்கிறது. அவற்றிடையே இராஜகுமாரன் போன்ற ஓர் ஆண் உருவம் வலது கையினால் யானையின் தும்பிக்கையினைப் பிடித்துக் கொண்டு இருக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. யானைப்பாகன் கீழே இறங்கக்கூடியவாறு யானை குனிந்து நிற்பது போன்று காட்டப்பட்டுள்ளது. மேலே உயர்த்தி வைத்துள்ள தும்பிக்கையின் மூலம் யானை உருவம் முழந்தாளிடுவது போன்ற தன்மையைக் காண முடிகின்றது. இவ் வோவியத்தின் மூலம் வெஸ்ஸந்தர ஜாதகக் கதையில் வெள்ளை யானைகளைத் தானமாக வழங்கும் நிகழ்வு வரையப்பட்டுள்ளது என நந்ததேவ விஜேசேக்கர கருத்துத் தெரிவித் துள்ளார். இதன் மூலம் லிச்சவி அரசன் சித்தார்த்த குமாரனுக்கு யானையை வழங்கும் நிகழ்வு காட்டப்படுவதாக பரண வித்தான கூறுகின்றார்.