சிவன் ஆலயம் – இல. 02
பொலனறுவைப் புனித நகரில் ”பபலு” விகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள சிவ ஆலயம் இல. 2 ஆனது மிகப் பழைமை வாய்ந்த இந்துக் கட்டடமாகக் கருதப்படுகின்றது. பழைய நகரத்தில் வடகிழக்காக அமைந்துள்ள இக் கட்டடக் கலை அம்சங்கள் முற்றுமுழுதாக இந்து – திராவிட கட்டக்கலைப் பண்புகளைக் காட்டி நிற்கின்றன. இந்த ஆலயம் சோழர் காலத்தில் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகக் கருதப் படுகின்றது. முதலாம் இராசராசனின் பட்டத்து ராணியின் ஞாபகர்த்தமாக இது நிர்மாணிக்கப் பட்டதாக கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டடக்கலைப் பண்புகளின்படி நோக்குகையில் இந்த ஆலயம் ஏனைய இந்து ஆலயங்களில் பொதுவாகக் காணப்படும் அம்சங்களையே கொண்டுள்ளது. அதற்கமைய சிவாலயம் இல. 2 ஆனது அர்த்தமண்டபம், கர்ப்பக்கிரகம், இடை மண்டபம் என்றவாறான கிடைத்தள அமைப்பைக் கொண்டது. இது சிவாலயம் 1 இலும் சிறியது. கிடைத்திட்டத்தின்படி அந்தராழம் நிலமடத்திலிருந்து சற்று
உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் தற்போது காணப்படுவதில்லை. இயற்கைக் காரணங்களாலோ எதிரிகளின் செயலின் காரணமாகவே சிதைவடைந்திருக்கலாம் எனக் கருதப்படு கின்றது. கர்ப்பக்கிரமத்தில் நடுப்பகுதியில் சிவலிங்கம் அமைந்துள்ளது.
சிவ ஆலயம் இல ! இற் போன்றே, இந்த ஆலயத்தைச் சூழவும் பெரிய மதில் காணப்பட்டது. அம்மதிலில் ஆலயத்தினுள் பிரவேசிப்பதற்குரிய இரண்டு வாயில்களும் காணப்பட்டன. இந்த சிவாலயத்தின் மொத்த நீளம் 30 அடி ஆகும். புறத்தே இருந்து பார்க்கும்போது மூன்று மாடங்களைக் கொண்டது போன்று தோற்றுமாறு அமைக்கப்பட்டுள்ளது. மால்கள் கொண்ட சற்று உயரமான அத்திவாரத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஆலயத்தின் முதலாம் மாடி சதுர வடிவானது. அதற்கு மேலாக பிரமிட்டு (கூம்பக) வடிவமான இரண்டு அடுக்குகளைக்கொண்ட கூரை காணப்பட்டது. இரண்டாம் மாடியின் நான்கு பக்கங்களிலும் 12 தூண்கள் உள்ளன. மூன்றாம் அடுக்கு எண்கோண வடிவமுடையது. அதாவது சிகரம் எண்கோண வடிவமுடையது.
சிவாலயத்தை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள எண்கோண வடிவ நிலைக்குத்துத் தூண்களின் உச்சியினது தலைப்பகுதியையும் கூரையையும் இணைக்கும் விமானக் கட்டடக்கலைப் பண்புகள் தென்னிந்திய சோழ கட்டடக்கலைப் பண்புகளைக் காட்டிநிற்கின்றன. இவ்விமானம் நிலமட்டத்திலிருந்து 3 அடி 9 அங்குல உயரத்தில் அமைந்துள்ளது. விமானத்தின் மேற்பகுதி தாமரை மலர் வடிவமுடையது. இது மகாபத்மம் (பெருந்தாமரை) எனவும் அழைக்கப்படுகின்றது. சுவர்களின் உட்புறத்திலோ வெளிப்புறத்திலோ வேலைப்பாடுகள் காணப்படாமையும் ஒரு சிறப்பியல்பாகும் எனினும் வெளிச்சுவர் அமிழ்ந்த தூண்களினால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் 6 தூண்களும் 4 துவாரங்களும் உள்ளன.
இக்கட்டடம் முற்றுமுழுதாக சுண்ணக்கல், கருங்கல் ஆகிய ஊடகங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. கருங்கற்பாளங்களைக்கொண்டு நிறைவு செய்யப்பட்டுள்ளமையானது சோழக் கட்டடக்கலையில் காணப்படும் ஒரு பண்பாகும். இது தற்காலத்திலும் கூட பூசை வழிபாடுகள் செய்யப்படுகின்ற ஓர் ஆலயமாகத் திகழ்கின்றது. கர்ப்பக் கிரகப் பகுதி இன்னமும் மிகச் சிறந்த நிலையில் காணப்படுகின்றது.