கொனாகொல்லைச் சுவரோவியங்கள்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கற்குகை யொன்றினுள் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. வரைதற் பாங்குக்கு அமைய, இது பொலனறுவைக் காலத்தை விட பழைமையானது என எஸ். ஏ. சார்ள்ஸ் கூறுகிறார். ஆடையணிகளைப் பொறுத்தமட்டில், பொலனறுவைக் கால திம்புலாகலைப் புள்ளிகொடை ஓவியங்களை ஒத்த இயல்புகளைக் காட்டுவதாக அவர் கூறுகின்றார். இந்த ஓவியங்கள், சிகிரியா ஓவியங்களுக்குப் பின்னர் பொலனறுவைக் காலத்துக்கு முன்னர் வரையப்பட்டவையாக அவர் கூறுகின்றார். கற்பாறையில் காணப்பட்ட ஒரு கல்லேட்டின்படி, இந்த ஓவியங்கள் 3 ஆம் நூற்றாண்டளவில் வரையப்பட்டவையாகும் என தனபால கூறுகின்றார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓவிய மீதிகளில் இரண்டு உருவங்களைத் தெளிவாக இனங்காண முடிகின்றது. அவற்றுள் ஒன்று ஆண் உருவமாகும். மற்றையது பெண் உருவமாகும். ஆண் உருவம் தனது இடது கையில் நீண்ட காம்புள்ள ஒரு மலரைத் தாங்கியிருப்பது காட்டப்பட்டுள்ளது. அது ஒரு தாமரை மலர் என அனுமானிக்கப்படுகிறது. இந்த ஆண் உருவம் ஒரு போதிசத்துவராக, ஓர் அரசராக அல்லது ஒரு தெய்வ உருவமாக அனுமானிக்கப்படுகிறது. பெண் உருவமானது நெகிழ்ச்சியான உடல்நிலையுடன் அஞ்சலி முத்திரையுடன் ஆண் உருவத்தை நோக்கியிருக்கும் வகையில் காட்டப் பட்டுள்ளது. ஆண் உருவத்தின் தலையைச் சூழ ஒளிவட்டம் உள்ளது. ஆண் உருவத்தைப் போன்றே, எதிரில் அபினயம் செய்யும் பெண் உருவமும் அழகிய ஆபரணங்களுடன் காணப்படுகின்றது.

பொருள் விளக்கம்

இந்த உருவங்களை ஒப்பிட்டு நோக்கும் செனரத் பரணவித்தான இது மழையை வேண்டிய பூசையைக் காட்டுகின்றது எனக் கூறுகிறார். மழை பொழிவிப்பதற்காகவே ‘பர்ஜன்ய பூசை நடத்தப்படும். அதற்கமைய ‘பர்ஜன்ய’ தெய்வத்தின் எதிரே நடனமாடும் ஒரு நடன மாதுவின் உருவமே இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது என அவர் கூறுகின்றார்.

error: Content is protected !!