குப்த கலை மரபுக் கலை நிர்மாணிப்புக்கள்
கி.பி. 320 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் கங்கை எனும் நதிக் கரைக்கு அருகே பாட்டலிபுத்திர நகரத்தை மையமாகக் கொண்டு 1 ஆம் சந்திரகுப்த மன்னன் அரசாட்சிக்கு வந்தான். அதனுடனே குப்த கலை பாரம்பரியமும் ஆரம்பமாகியது. எனினும் இக்கலை பாரம்பரியம் புதிதான ஒரு கலையல்ல; காந்தார, மதுரா கலைகளின் உச்ச வளர்ச்சி அதுவாகும். கி.பி. 4 ஆம் நூற்றாண்டி லிருந்து 7 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் குப்த கலைப் பாரம்பரியம் வளர்ச்சி பெற்ற காலமாகும்.
குப்த காலத்தின்போது சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் கூடவே பௌத்த சமயமும் ஜைன சமயமும் வளர்ச்சி பெற்றமை மற்றும் கிரேக்க, குஷாண கலைகளின் செல்வாக்கு காரணமாக கலைகள் பெரிதும் வளர்ச்சியடைந்தன. சமஸ்கிருத மொழி விருத்தியடைந்தமையும் காளிதாசன் போன்ற பண்டிதர்கள் பல்வேறு துறைகளில் திறமை பெற்று இருந்தமையும் இவ்வளர்ச்சி மீது பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அத்தோடு கணிதம், வானியல் போன்ற துறைகளும் இக்காலத்தில் பல்வேறுபட்ட அம்சங்களின் கீழ் கலை வளர்ச்சியடைவதற்குக் காரணங்களாக இருந்துள்ளன. குப்தர் காலக் கலை வளர்ச்சிக்கு மதுரா, சாரனாத், பாட்டலிபுத்திர போன்ற நகரங்கள் பிரதானமான மைய நிலையங்களாக அமைந்தன.
குப்தர் புத்தர் சிலை ஆக்கங்களின் விசேட இலட்சணங்கள்
பல நூற்றாண்டு கால அனுபவங்களின் வழியே வளர்ச்சியடைந்த குப்தர் கலைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த கலைப் படைப்புக்களில் சாந்தம், மென்மை, எளிமை போன்ற விசேடமான சில பண்புகளை இனங்காணலாம். இலட்சணங்களை இந்த ஆக்கங்களில் காணலாம். குப்த கலை நிர்மாண சம்பந்தமாக இந்திய அறிஞர் ஏ. எல். பஷாம், ‘வியத்தகு இந்தியா” எனும் தமது நூலில் இவ்வாறு கூறுகிறார். ‘பாரூத், சாஞ்சி, மதுரா கலைப் பாரம்பரியத்தில் புலன்கள் தொடர்பான இலௌகீகத் தன்மையும், அமராவதியில் உயிரோட்டமான தன்மையும், பதட்டமான அங்க அசைவுகளும் பிரதான இடத்தைப் பெறுமாயின், குப்தர் செதுக்கல் கலையின் மூலம் வெளிப்படுத்தப் படும் தன்மை சாந்தமும் நித்தியத்தன்மையும் நுணுக்கமான தன்மையும் ஆகும்.”
மதுரா கலை ஆக்கங்களில் காணப்பட்ட உடலோடு ஒட்டிய ஆடையணிகளின் முகம். உடல் ஊடுருவித் தெரியும் தன்மையைக் குப்தர் காலக் கலை அம்சங்களிலும் காணக்கூடிய பண்பாகும். குப்த புத்தர் சிலைகளில் காவியுடை மிகவும் மென்மையாக உடலுடன் ஒட்டியவாறு காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். புத்த சிலைகளில் காணப்படும் மிகவும் உன்னதமான கலைப்பண்பு, ஏனைய பாரம்பரியங்களைச் சேர்ந்த புத்தர் சிலைகளை விஞ்சிச் செல்லும் வகையின் பாவ வெளிப்பாடாகும்.
புத்தபெருமானின் ஆழ்ந்த மன ஒருமைப்பாடு இச்சிலைகளில் மிகத் திறமையாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
குப்த கலைஞர்கள், உள்ளார்ந்த பண்புகளை மிகவும் நுணுக்கமாகப் புத்த சிலைகளின் வெளித் தோற்றத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். புத்த பெருமானின் உயிரோட்டமான தன்மை, கருணை, பற்றற்ற தன்மை, ஞான மகிமை போன்ற பண்புகள் புத்தர் சிலையினால் காட்டப்பட்டுள்ளன.
குப்த கலை சிற்பங்களைச் செதுக்கிய சில கலைஞர்கள் காந்தார, மதுரா, கலைகளின் செல்வாக்கைப் பெற்றுள்ளபோதிலும் தமது படைப்புகளை இந்திய சுயாதீன பண்புகளுடன் ஆக்கியுள்ளனர். காந்தார, மதுரா புத்த சிலைகளில் காணப்படாத அளவுப் பிரமாண இயல்புகள் பற்றிய அறிவுடையவராக குப்த கலைஞர் இருந்துள்ளாரென்பதை அக்காலத்து சிலைகளை ஆராய்வதன் மூலம் தெளிவாகிறது. பூரிப்பான, ஒப்பமான அளவுப் பிரமாணமுடைய உடலுறுப்புகள் சிலையின் அழகியல் பெறுமானத்தை மேலும் அதிகரிப்பனவாக உள்ளன.
தலையில் காணப்படும் உஸ்னிசவும் சுருண்ட கேசமும் புத்தர்சிலையின் அழகை மேன்மேலும் அதிகரிக்கின்றன. தலையைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம் குப்தர் சிலைகளில் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஒளிவட்டம் நுணுக்கமான தாமரை இதழ்களாலும் கொடி அலங்காரங் களினாலும் அலங்கரிக்கப்பட்டிருத்தலும் சில சிலைகளின் இருபுறங்களிலும் வழிபடு நிலையிலுள்ள தேவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதும் சிறப்பியல்புகளாகும்.
குப்த கலை நிர்மாணிப்புக்காக அக்கலைஞர்கள் அதிகளவில் மணற்கற்களையே உபயோகித் துள்ளனர். கூடவே செங்கல், உலோகம் போன்றவற்றினால் அமைக்கப்பட்ட சிலைகளும் காணப்படு கின்றன.