கண்டிக்கால பாரம்பரிய தாழ்பிரதேச கலைப்பாணி சித்திரங்கள் /
தென்னிலங்கைச் சுவரோவிய மரபு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடக்கம் அந்நூற்றாண்டின் இறுதி வரையில் தெற்குக் கரையோரம் சார்ந்த பகுதியில் காணப்பட்ட விகாரை ஓவியப் பாணியே தென்னிலங்கை மரபு அதாவது தென்னிலங்கைப் பள்ளி எனப்படுகின்றது. இந்நிலப் பகுதி குடியேற்றவாதப் பண்பாட்டுடன் நன்கு கலப்புற்றுக் காணப்பட்ட ஒரு பிரதேசமாகும். இது மரபுரீதியாகக் காணப்பட்ட பௌத்த பண்பாட்டு, சமூக, அரசியல் உறுதிநிலை தகர்வுற்று புதிய பண்பாட்டு மூலம் தோன்றிய ஒரு வலயமாகும். தென் பிரதேச ஓவிய மரபானது அதற்கேயுரித்தான தனித்துவமான ஒரு பாணியின் அறிகுறிகளைக் காட்டியவாறு கண்டிய மரபிலிருந்து மாற்றமடைந்து சென்ற ஒரு கலைப்பாணியாகும். தென் பிரதேச ஓவியங்களின் ஆரம்ப காலம் தொடர்பாக முறைமையாக விவரிப்பது கடினமான ஒரு கருமமாயினும், இவ்வாறான பல்வகைமையைக் காட்டும் பல ஓவியங்களை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இனங்காணக்கூடியதாக உள்ளது. அக்காலப்பகுதியில் கண்டிய மரபைச் சேர்ந்த ஓவியங்கள் தாழ்வான மட்டத்திலேயே காணப்பட்டன. தென் பிரதேச ஓவியங்களின் பல்வகைமைக்கேற்ப, காலத்துக்கு அமைவாக அவற்றை இவ்வாறு எடுத்துக் காட்டலாம்.

1780 – 1850: அம்பலாங்கொடை சுனந்தாராமை புராண தொட்டகடுவை ரஜமகா விகாரை, தெல்வத்தை, தொடந்துவை சைலபிம்பாராமை, முல்கிரிகலை ரஜமகா விகாரை,

1850 இன் பின்னர்: கரகம்பிட்டிய சுபோதாராமை, களனி ரஜமகாவிகாரை.

பெரிதும் விரிவான, கலைத்துவமான முன்வைப்புக்களைக் கொண்ட இலங்கையின் மரபு ரீதியான ஓவிய மரபானது, தெற்குக் கரையோர வலயம் சார்ந்த வகையில் கட்டியெழுப்பப் பட்ட தென் பிரதேச சுவரோவியப் பாணியுடன் முடிவுற்றது.

ஓவியங்களின் விடயப்பொருள்

பௌத்த இலக்கியம், இலங்கையின் பௌத்த வரலாற்றைக் காட்டும் நிகழ்வுகள், அலங்கரிப்பு அம்சங்கள் ஆகிய படைப்புக்களே கண்டிக்கால ஓவியங்களுக்கு அடிப்படையாக அமைந்த விடயப் பொருள்களாகும். தாழ்நாட்டு ஓவியங்களுக்கான விடயப் பொருள்கள் பின்வரும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டன.

 • பௌத்த இலக்கியக் கதைகள்:

1. புத்தர் சரித நிகழ்வுகள்:
உதாரணம்: மாரனைத் தோற்கடித்தல், பட்டாச்சாராக் கதை.

2. ஜாதகக் கதைகள் :
உதாரணம்: தேளபத்த ஜாதகக் கதை, சேரி வாணிஜ ஜாதகக் கதை,

3. சித்தார்த்த குமாரனின் சரித நிகழ்வுகள்:
உதாரணம்: கதாவஸ்து மஞ்சரி, கோசிய கதை, சொரெய்ய வதம். சுவர்க்க லோகம், நரக லோகம்.

 • இலங்கைப் பௌத்த வரலாற்றைக் குறிக்கும் கதைகள்:
  உதாரணம்: சொலாஸ்மஸ்தானம் (பதினாறு புனிதத் தலங்கள் )
 • நவக்கிரகங்கள்:
  ஒன்பது கோள்கள், இலச்சினைகள், இராசி வட்டம் (ஓரை வட்டம்)
 • இயக்கர் உருவங்கள்
 • அழகிய பூங்கொடி வேலைப்பாடுகள், பிராணிக் காட்டுருக்கள், கற்பனைப் பிராணிக் காட்டுருக்கள்.

ஓவியர்கள்:

தென் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமப்பு குருன்னான்சே, கடொல்கல்லே மகாசித்தரா, கடொல்கல்லே பொட்டே சித்தரா, பத்தேவந்தே தினோ சித்தரா, கராண்டுலே மகாசித்தரா, காலு பியத்தே பவுன், சத்தாகோரளை சித்தர முஹந்தரம் போன்றோர் தாழ் நாட்டு விகாரை ஓவியக் கலைஞர்களுள் அடங்குவார்.

தொழினுட்பம் / நுட்ப முறை:

உலர் சுண்ணாம்புச் சாந்து மீது செயற்கை வர்ணங்கள்.

மோடிப் பண்புகள்:

தென் பிரதேச மரபைச் சேர்ந்த ஓவியங்களில் ஒட்டுமொத்தத் திட்டத்தில் மத்திய கண்டிய மரபின் திட்டத்துடனான நேர்கோட்டுத் தொடர்பைக் காண முடிகின்றது (உதாரணம்: நிரைகளாக வரையும் திட்டம்). எனினும் தென் பிரதேச ஓவியங்களின் மோடிப் பண்புகள், கண்டிய மோடியினது பண்புகளை விட வேறுபட்டதாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் (1747 – 1781) மத்திய கண்டிய மரபில் பயன்படுத்தப்பட்ட இயற்கை உலகை உள்ளதை உள்ளவாறே பிரதிசெய்வதைத் தவிர்த்து பொதுவான நியமமான கட்புல உருவங்களைக் கொண்ட மோடிப்படுத்தற் செயன்முறை, தென்பிரதேச மரபின்போது வேறுபட்டுள்ளது. அதற்குப் பதிலாக இயற்கை உலகை, உள்ளதை உள்ளவாறாகவே காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக தென்பிரதேச சுவரோவியக் கலையானது மோடிப்படுத்தல் மற்றும் இயற்கைத்தன்மையைப் போலச் செய்தல் ஆகிய இரண்டு செயன்முறைகளும் ஒருசேர இடம்பெற்ற ஒரு ஓவியக் கலை மரபாகும் என அறிமுகஞ் செய்யலாம். அதாவது தென் பிரதேசச் சுவரோவிய மரபில் பாரம்பரியமாகக் காணப்பட்டு வந்த, பொது நியமங்களையும், இயற்கை உலகையும் உள்ளதை உள்ளவாறே காட்டுவது தொடர்பாகக் காணப்பட்ட விருப்பையும் காட்டி நிற்கின்றது. மேலும் தென்பிரதேச ஓவிய மரபில் எளிமைத் தன்மையை விஞ்சிச் செல்லும் வர்ணங்களையும் கோடுகளையும் பெரிதும் காண முடிவதோடு, அதன் மூலம் பெரிதும் அலங்காரங்களைக் கொண்ட ஒரு மாதிரி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தென் பிரதேச ஓவிய மரபைச் சேர்ந்த ஓவியங்களில் காணப்படும் மோடி சார்ந்த பண்புகள் சிலவற்றைப் பின்வருமாறு எடுத்துக் காட்டலாம்.

உருவங்களை வரையும் முறைகள்:

 • கட்புல உருவங்களைக் கட்டியெழுப்புவதற்காக இயற்கையை மூலாதாரமாகக் கொள்ளல். (இயற் பண்புவாத அணுகுமுறை)
 • ஓவியம் வரைவதற்காக, மரபு ரீதியில் காணப்பட்ட நியமங்கள் ஓரளவுக்குக் கைவிடப் பட்டிருத்தல்.
 • சமகால பண்பாட்டு உருவங்கள், ஓவியங்களில் உள்ளடக்கப்பட்டிருத்தல். (பண்டைய இலக்கியக் கதைகளை வரையும்போது அதனுடன் சமகால உருவங்கள் தொடர்பு படுத்தப்பட்டிருத்தல்)
 • ஐரோப்பிய பண்பாட்டு இயல்புகள் சுதேசக் கலையுடன் ஒன்று கலக்கப்பட்டிருத்தல்.
 • பின்னணி அலங்கரிப்புக்காக, மரபுரீதியானவை அல்லாத, மலர் அலங்கரிப்புக்கள் பயன்படுத்தப் பட்டிருத்தல் (ரோசா, திராட்சை போன்றவை).
 • மனித உருவங்களை வரைவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உடல்நிலைகளின் தொகை உயர்வாக இருத்தல்.
 • ஆறு, அருவி, ஓடை, வயல்வெளிகள் போன்றவை மேலே இருந்து பார்க்கும்போது தோற்றுமாப்போன்று வரையப்பட்டிருத்தல்.
 • பிரதான கதையுடன் நேரடித் தொடர்பற்ற மலர்க் காட்டுருக்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்.

நிறப் பயன்பாடு:

வர்ண பேதங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல், பல வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல், மலைநாட்டு மரபில் காண்பது அரிதான நீலம், பச்சை ஆகிய வர்ணங்கள் பயன்படுத்தப் பட்டிருத்தல்; பின்னணியானது கறுப்பு நிறத்துக்கு மாத்திரம் வரையறைப்பட்டுவிடாது, கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருத்தல், புறவரைக் கோடுகளுக்காகக் கறுப்பு அல்லது கபில வர்ணம் பயன்படுத்தப்பட்டிருத்தல்.

தளத்தை ஒழுங்கமைத்தல்:

வெளியானது அதிக அளவில் உருவங்களால் நிரப்பப்பட்டிருத்தலும், தொடர்ச்சியாகக் கதை சொல்லும் முறையைக் கையாளலும், தென்பிரதேச பள்ளியில் காணப்படும் ஒரு பண்பாகும். பொதுவாக. தென்பிரதேச ஓவிய மரபைச் சேர்ந்த விகாரைகளில் காணப்படும் ஓவியங்களின் முன்வைப்புக்கு அமைய அவற்றை தொடர் ஓவியங்கள் எனவும் கூரை ஓவியங்கள் எனவும் பிரித்துக் காட்டலாம்.

தொடர் ஓவியங்கள்:

அதிக அலங்கரிப்புக்களுடனும் உருவங்களுடனும் தொடர்ச்சியாகக் கதை சொல்லும் முறையில் வரைதல்
– சாதகக் கதைகள், வரலாற்று நிகழ்வுகள், நரகலோகம்.

கூரை ஓவியங்கள்:

உட்கூரையைப் பகுதிகளாகப் பிரித்து வரையப்பட்ட ஓவியங்கள்:
– நவக்கிரகங்கள் (ஒன்பது கோள்கள்), இலச்சினங்கள், இராசி வட்டம் (ஓரை வட்டம்)

மேற்குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டுள்ள தென் பிரதேசச் சுவரோவியங்களைப் பெருமளவுக்குக் காணக்கூடிய இடங்களுள் கத்தலுவைப் பூர்வாராமை, தெல்வத்தை ரஜமகாவிகாரை, கரகம்பிட்டிய சுபோதாராமய, முல்கிரிகலை ரஜமகாவிகாரை ஆகியன முதன்மையானவை.

error: Content is protected !!