கட்டடக்கலை நிர்மாணங்கள்

இந்து நதிக்கரை நாகரிகத்தில் விருத்தியடைந்த கட்டட நிர்மாணத் தொழினுட்பம் இருந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. விருத்தியடைந்த நகர அமைப்பு முறை காணப்பட்ட மொஹன்ஜதாரோ, ஹரப்பா, சன்குதாரோ, லோதால் சுக்தஜொன்தாரோ எனும் நகரங்களை அண்மித்த பகுதிகளில் இருந்து பெற்ற சிதைவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. பெறப்பட்டுள்ள சான்றுகளுக்கிணங்க மிகப் பழைமையான நகரம் மொஹன்ஜதாரோ ஆகும். சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் முதலில் தங்கள் ஆட்சிப் பலத்தைத் தெற்கில் அமைத்துப் பின்னர் வடக்கில் இருந்த கிராமிய கலாசாரங்களையும் மீறி வியாபித்து வாழ்ந்ததாகப் பின்னர் உருவான ஹரப்பா எனும் நகரத்தின் ஊடாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்வாறாக நகரமயமாகிய இந்த நாகரிகத்தின் பெரு நகரமாக மொஹன்ஜதாரோவும் அதனைச் சூழ 14 சிறு நகரங்களும், இரண்டாவது பெரு நகரமாக ஹரப்பாவும் அதனைச் சூழ 17 சிறுநகரங்களும் இருந்தமை அறியப்பட்டுள்ளது.

மொஹன்ஜதாரோ, ஹரப்பா எனும் இரு நகரங்களுள் மொஹன்ஜதாரோவே கட்டட நிர்மாணிப்பில் முன்னணி வகித்தது. ஹரப்பாவில் அவ்வாறான அடையாளங்களின் அடித்தளம் மட்டுமே காணப்படுகின்ற ஹரப்பா நிர்மாணிப்புகளில் உபயோகித்த செங்கற்கள் லாகோர் புகையிரதப் பாதை அமைப்பதற்கும் அதனை அண்மித்த வீட்டு நிர்மாணிப்புப் பணிகளுக்காகவும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளமையால் ஹரப்பாவின் சிதைவுகள் பற்றிய சரியான தகவல்களைப் பெற முடியா துள்ளது. இருந்தபோதும் ஒப்பீட்டளவில் இவை இரண்டும் ஒத்த பண்புகளைக் கொண்டிருந்தன. அத்துடன் இவ்விரு நகரங்களும் ஒரே பரப்பளவுடையவை. இவை உள்நகர், புறநகர் எனும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளன. எப்போதும் மேற்குப் புறத்தில் சற்று உயரமான இடத்தில் உள்நகர் அமைந்திருப்பதுடன் கிழக்குப் புறத்தில் புறநகர் அமைந்திருந்தது. (பஷாம் ப.19) இந்நகர் அமைப்பில் காணப்பட்ட பொதுப் பண்புகளை லோதால், சுக்தஜொன்தாரோ போன்ற ஏனைய நகரங்களின் சிதைவுகளிலும் காணக்கூடியதாக உள்ளது. அதாவது இந் நகரங்களின் திட்ட அமைப்பு மொஹன்ஜதாரோ, ஹரப்பா நகரத் திட்ட அமைப்பை ஒத்துள்ளது.

உள்நகர்

உள்நகர் எப்போதும் செயற்கையாக அமைக்கப்பட்ட மேடையொன்றின் மீதே நிர்மாணிக்கப்பட்டது. அது 30 அடி முதல் 50 அடி வரை உயரமாகவும் 100 X 200 யார் அளவு பரப்பளவுடையதாகவும் (1200 அடி நீளம் 600 அடி அகலம்) நீள் சதுர வடிவில் இம்மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த உள்நகரம் நிர்வாக மத்திய நிலையமாக இயங்கியது. குறிப்பாக நகரத்துக்குரிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இங்கே அமைந்திருந்ததால் இந் நிர்மாணிப்பு கோட்டை மதிலின் வடிவத்தைக் கொண்டிருந்தது. உள்நகர அமைப்புக்களில் உயர்ந்த மேடைகள், மதில்கள், காவல் குடில்கள், குளங்கள், தானியக் களஞ்சியம், முக்கியத்தர்களின் வீடுகள் என்பன அடங்கியிருந்தன.

உள்நகரம் அமைக்கப்பட்ட மேடை முகப்பு சுடப்பட்ட செங்கற்களினால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. வெள்ளத்திலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்க சுடப்பட்ட செங்கற்களை சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் உபயோகித்தனர் என்பது மோற்றமர் வில்லரின் கூற்றாகும்.

அத்துடன் இம்மேடையச் சுற்றிப் பெருஞ்சுவரொன்று இருந்ததாகக் ஹரப்பாவின் சிதைவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இப்பெருஞ்சுவர் 35 அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்டது. இவ்வாறான பெருஞ்சுவரொன்றுக்கான சான்றுகள் மொஹன்ஜதாரோ நகரத்தில் காணப்படாத போதிலும் உள்நகரைச் சுற்றியமைந்த காவல் அரண்களின் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கமைய சகல உள்நகரங்களும் இவ்வாறான கோட்டைகளின் அடிப்படை அமைப்பைக் கொண்டிருந்ததென கட்டட நிர்மாணிப்புச் சிதைவுகள் தெளிவுபடுத்துகின்றன.

உள்நகரம் அரசியல், சமயக் கட்டட நிர்மாணிப்பு திட்டவமைப்புக்களைக் கொண்டிருந்தது. அத்துடன் இது ஒரே ஒரு வாயிலைக் கொண்டது. இந்நுழைவாயிலுக்கு அருகே அமைந்த படிவரிசையின் உச்சிப் பகுதியில் சிறிய அறையொன்று இருந்தது. உள்ளே பிரவேசிப்பவர்கள் குளித்துச் சுத்தம் பெறுவதற்கு அமைத்த ஒரு குளியலிடம் போன்ற இது சமயம் சார்ந்த ஒரு நிர்மாணிப்பாகக் கருதப்படுகிறது. மொஹன்ஜதாரோவின் பெரியளவிலான குளியல் தடாகமும் சமயத் தொடர்பை வெளிப்படுத்துகிறது. இத்தடாகம் 39 அடி நீளமும் 23 அடி அகலமும் 8 அடி ஆழமும் உடையது. (பஷாம், பக்: 19), இத்தடாகம் நீள்சதுர வடிவ நிலப்பரப்பில் செங்கல் பாவப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தடாகத்தில் நீரைத் தேக்கி வைக்கச் சிறப்பான சாந்து பூசப்பட்டுள்ளது. இத்தடாகத்தில் ஏறி இறங்க வடக்குப் புறமாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. தடாகத்துக்கு நீரை வழங்கவும் இறைக்கவும் தேவையான வடிகாலமைப்புத் தொகுதியொன்றும் தடாகத்துக்கு நீர் வழங்கிய கிணறொன்றும் அதற்கருகிலேயே காணப்பட்டது. இக்கிணற்றுக்குப் பின்புறத்தில் எட்டுச் சிறிய அறைகள் வரிசையாகக் காணப்பட்டன. இவை பூசகர்களின் வீடுகளாக இருந்திருக்கலாம் என பஷாம் குறிப்பிடுகிறார் (பஷாம், பக்: 21).

இப்பெரும் குளியல் தடாகத்துக்கு வடகிழக்கில் பெரிய கட்டடமொன்றின் சிதைவுகள் இனங்காணப் பட்டுள்ளன. இது 230 அடி, 78 அடி நீள அகலங்களைக் கொண்டது. இது மாடிக்கட்டடமாக இருந்தது. நடுவில் நிலா முற்றத்தைக் கொண்ட பல அறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்ட இது பெருமளவிலான மக்கள் குடியிருந்த இடமாகக் கருதப்படுகிறது. இது ஆட்சியாளரின் கட்டடமாக அல்லது அரண்மனையாக இருந்திருக்கலாம் என பஷாம் தெளிவுபடுத்தியிருந்தார். ஹரப்பா லோதால் உள்நகரங்களில் இருந்தும் இவ்வாறான பெரிய கட்டடங்களின் சான்றுகள் கிடைத்துள்ளன. மொஹன்ஜதாரோவில் காணப்படும் இப்பாரிய கட்டடத்துக்கு ஒத்ததாக தெற்குப் புறத்தில் வேறு பாரிய கட்டடங்களும் காணப்பட்டன. அது ஓர் அரச மண்டபம் என அனுமானிக்கப்படுகிறது.

வெளி நகரம்

வெளி நகரம் உள் நகருக்கு மேற்கில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ ஒரு சதுரமைல் பரப்பளவைக் கொண்டது. வெளி நகரம் திட்டமிடப்பட்ட முறையில் அமைக்கப்பட்டிருந்தது. வெளி நகரில் அமைக்கப்பட்ட வீதிகள், வடிகால் அமைப்புக்கள், வீடுகள் என்பன இதனை உறுதிப்படுத்துகின்றன. வெளிநகர்ப் பகுதியின் நிலம் சதுரவடிவமான பகுதிகளாகப் பிரிக்கப்படும் விதத்தில் வலையமைப்புட னான வீதிகளையும், வடிகால் அமைப்பு முறைகளையும் கொண்டிருந்தது. சிந்து நதிக்கரையின் வெளி நகர வீதிகள் மெசப்பொத்தேமிய, எகிப்பதிய சமகால நாகரிகங்களை விட முன்னணிப் பண்புகளைக் கொண்டிருந்தன. இவ்வீதிகள் நெடுக்குத்தாகவும் குறுக்காகவும் சமாந்தரமாகவும் அமைக்கப்பட்டிருந்தன.

மொஹன்ஜதாரோவின் வெளி நகர் வீதிகள் வடக்கில் இருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் அமைக்கப்பட்டிருந்தன. அவை 30 அடி அகலமுடையதாகின. எனவே இந்நகரம் 1200 அடி நீளம் 800 அகலமுடைய நிலப்பரப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

எனவே இவ்வாறான 12 காணித்துண்டுகள் வெளிநகரில் காணப்பட்டன. பிரதான வீதிகளுடன் 5 அடியில் இருந்து 10 அடி வரை அகலமான சற்று ஒடுக்கமான வீதிகளும் காணப்பட்டன. வீடுகளின் தலைவாசல் பிரதான வீதிக்குப் பின்புறமாகவும் ஒடுங்கிய வீதிகளுக்கு முன்பாகவும் அமைந்திருந்தன. இவ்வமைப்பு முறை சுகாதாரத்தைப் பேணவும், எதிர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும் தப்பிச் செல்லவும் கூடிய ஓர் உத்தியாக இருந்திருக்கலாமென அனுமானிக்கப்படுகிறது. வீதிகள் செங்கல் பாவித்துச் செய்யப்பனிடப்பட்டிருந்தன. அவற்றின் இரு புறத்திலும் வடிகால் அமைப்புத் தொகுதி காணப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர் வடிந்தோட அமைத்த களிமண் குழாய்கள் இவ்வடிகால் அமைப்புடன் இணைக்கப்பட்டன. இவ்வடிகால்கள் சுத்தப்படுத்தக் கூடியவாறு களிமண் தகடுகளால் மூடப்பட்டிருந்தன. அழுக்கு நீர் இறுதியாக சுத்தமான நீராக மாற்றும் பாரிய களிமண் குழாய்களின் வழியே நிலத்துடன் சேர்க்கப்பட்டது. அவைகள் கிணறுகளுக்கு ஒத்திருந்தன. இங்கு சூழல் நேய நகர்ச் சமூகமொன்றில் காணப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக முறையொன்று இருந்ததாக இனங்காண முடிகிறது. கழிவுநீர் வடிந்தோடிய வடிகால் அமைப்புகளும் மதகுகளும் காணப்பட்டன. இம்மதகுகள் மேவிச் செல்லும் முறையில் அமைக்கப் பட்டிருந்தன.

வெளி நகரங்களில் சிறந்த திட்டமிடலுடன் காணப்பட்ட இன்னொரு வகையான நிர்மாணிப்பு வீடுகளாகும். செல்வந்தரின் வீடுகள், பொது மக்களின் வீடுகள், தொழிலாளர்களின் வீடுகள் என பல வகைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. செல்வந்தர்களின் வீடுகளும் நடுத்தர மக்களின் வீடுகளும் அவற்றின் நடுவே நிலா முற்றம் இருக்கும் விதத்தில் அமைந்தன. செல்வந்தரின் வீடுகள் மாடி வீடுகளாக இருந்தன. நிலமாடி பொதுவாக 30 அடி நீள அகலமுடையதாக இருந்தது. சில வீடுகள் இவற்றை விட பெரியவையாகக் காணப்பட்டன. பண வசதியுடையவர்கள் இங்கே வாழ்ந்துள்ளனர். பெருந்தொகையானோர் இவற்றின் படிக்கட்டுகளும் யன்னல் கதவுகளும் மரத்தால் ஆக்கப்பட்டிருந்ததாக அனுமானிக்கப்படுகின்றது. வீடுகளுக்குள் கிணறும் குளியலறையும் அமைக்கப்பட்டிருந்தன. கட்டடங்களின் தரையில் செதுக்கல் வேலைப்பாடுகளைக் கொண்ட களிமண் தகடுகள் பதிக்கப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. பொதுமக்களுடைய வீடுகள் 40 அடி நீளம் 15 அடி அகலம் கொண்டவையாக இருந்தன. 6 அறைகள் உள்ள வீடுகளும் காணப்பட்டன. அவையும் கிணறு, அடுப்பு என்பனவற்றைக் கொண்டிருந்தன.

தொழிலாளர்களது வீடுகள் மிக எளிமையாகக் காணப்பட்டன. இவ்வாறு வரிசையாக அமைந்த தொழிலாளரின் வீடுகளின் சிதைவுகள் ஹரப்பா உள்நகர் வடக்குப் பகுதியில் கிடைத்துள்ளன. சமாந்தரமான முறையில் வரிசையாக அமைக்கப்பட்ட இச்சிறிய வீடுகள் இரு அறைகளைக் கொண்டிருந்தன. மொஹன்ஜதாரோவில் இவ்வகையான ஒரு வீடு 20 x 12 அடி அளவுடன் காணப்பட்டது. இருந்தபோதும் ஹரப்பாவில் இவ்வகையான வீடுகள் சற்றுப் பெரியவையாகக் காணப்பட்டன. இவ்வீடுகளின் வரிசைகளுக்கிடையில் 3 அடி 4 அடி அகலமுடைய ஒடுக்கமான வீதிகள் காணப்பட்டன. இவ்வீடுகளுக்கு அண்டிய பகுதிகளில் பத்து உலைகளினதும் சிதைவுகளும் உலோகம் உருக்கும் பாத்திரமும் கண்டுபிடிக்கப்பட்டமையால் இவ்வீடுகள் உலோகத் தொழிலில் ஈடுபட்டோர்களுடையவை என அனுமானிக்கப்படுகின்றது. ஹரப்பாவில் இவ்வீடுகள் தானியங்களை குற்றுவதற்காகப் பயன்படுத்திய செவ்வக வடிவமுடைய செங்கல்லாலான நிலத்தருகிலேயே கண்டு பிடிக்கப்பட்டன. வீடுகளுக்கு வடக்கில் 11 அடி விட்டமுடைய செங்கல் பதித்து அமைத்த 18 மேடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மேடைகள் தானியங்களைக் குற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன என்றும் அண்மித்த வீடுகள் தானியங்களைக் குற்றும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களினது வீடுகள் என்றும் கருதப்படுகின்றது.

சிந்து நதிக்கரை நாகரிகத்தில் கட்டட நிர்மாணத் தொழினுட்பப் பொருளாகப் பெரும்பாலும் செங்கல் (சுடப்பட்ட) பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வெயிலில் சுடப்பட்ட செங்கல்லும் பயன் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அரிமரம், களிமண் என்பனவற்றையும் மூலப்பொருள்களாக உபயோகித்துள்ளனர். செங்கல்லை நேராகவும் குறுக்காகவும் பதித்து நிர்மாணிப்புகளைச் செய்தனர். வடிகால் அமைப்பிலும் மதகுகளிலும் மேவும் முறையிலும் உபயோகித்தனர்.

வெளிநகரில் மாடிவீடுகள், குளியலறையுள்ள வீடுகள், வீதிகள், வடிகால் தொகுதிகள், சிறந்த வடிகாலமைப்பு முறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய சுகாதார, உடனலக் காப்புச் சேவை காணப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. விளக்கு கம்பங்களமைந்த அகன்ற வீதித்தொகுதிகள், வீடுகள் போன்றவை திட்டமிட்டு அமைக்கப்பட்டமையானது. சிந்து நதிக்கரை நாகரிகத்தின் மேம்பட்ட அரசியல் ஒழுங்கமைப்பின் ஒரு சிறப்பியல்பாகும். அத்துடன் லோதால் நகரை அண்டிய பகுதியில் இறங்கு துறைகளதும், களஞ்சியசாலைகளினதும் சிதைவுகள் காணப்படுதலானது விருத்தியடைந்த வணிக நகரமைப்பைக் கொண்டதற்கான சான்றாக உள்ளது. அது சிந்து நதிக் கரை நாகரிகத்தில் காணப்பட்ட விவசாயப் பொருளாதாரத்திலும் வேறுபட்ட வணிகப் பொருளாதார முறையினைக் காட்டுவதாக அமைகின்றது.மேற்குறிப்பிடப்பட்ட சிந்து நதிக்கரை நாகரிகத்தின் சகல கட்டட நிர்மாணிப்பும் அச்சமூகப் பின்னணியின் சமய, அரசியல், பொருளாதார நிலைமையை எடுத்துக் காட்டுபவையாக அமைகின்றன. அத்துடன் தொழினுட்பம், கலைத்திறமை, சமூக நிலைப்பாடு என்பனவும் வெளிப்படுகின்றன. அத்துடன் அக்கட்டட நிர்மாண முறை பயன்பாட்டை நோக்காகக் கொண்டது. சிதைவுகள் அலங்கார வேலைப்பாடுகள் அற்றவையாகும்.

error: Content is protected !!