எகிப்திய ஓவியக்கலை
புதைகுழிகள் மற்றும் ஆலயங்களுடன் இணைநத வகையிலேயே எகிப்திய ஓவியக் கலை தோன்றியுள்ளது. பெரும்பாலான எகிப்திய ஓவியங்கள் பிரமிட்டுக்களிலேயே காணப்படுகின்றது. இறந்த மன்னர்கள் மற்றும் உயர் வம்சத்தோர் தாம் வாழ்ந்திருந்த காலத்தில் மதித்த சந்தர்ப்பங்கள் அவர்களது விருப்பு வெறுப்புக்கள் போன்றவற்றை அவர்களது புதைகுழிகளில் ஓவியமாக வரைவது ஒரு கட்டாயமான அம்சமாக இருந்துள்ளது. அதற்கமைய பாராலோக்களின் நாளாந்த வாழ்க்கைத் தகவல்களே எகிப்திய ஓவியங்களின் முதன்மையான விடயப் பொருளாக அமைந்துள்ளது. அத்தோடு பாராலோக்களின் ஏவலர்கள், சேவகர்கள் சார்ந்த கமச் செய்கை, கால்நடை வளர்ப்பு, வேட்டைக் காட்சிகள், பூசைப் பொருள்களைக் கையிலேந்திய ஊர்வலங்கள், போசன உபசரணை போன்ற சமகால மக்களின் சமூக வாழ்க்கை தொடர்பான பல தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எகிப்திய ஓவியங்களின் ஊடகங்களும் நுட்பமுறைகளும்
- உலர் சாந்தின்மீது வர்ணந்தீட்டுதல். (சுவரோவியங்கள்)
- இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இருண்ட மஞ்சள், சிவப்பு, கறுப்பு போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்.
எகிப்திய ஓவியங்களின் கலைப்பாணி இயல்புகள்
- ஓவியங்கள் நிரைகளாக வரையப்பட்டிருத்தல்.
- மனித உருவங்கள் கலைத்துவப்பாணி சார்ந்த இயல்புகளுடன் நேராக முன்புறத்தை அல்லது ஒரு பக்கத்தைக் காட்டுமாறு வரையப்பட்டிருத்தல். (தலையும் கால்களுயும் ஒரு பக்கமாகத் திருப்பி வரையப்பட்டிருத்தலும் தோள்களும் மார்பும் முன்னோக்கியதாக வரையப்பட்டிருத்தலும்.)
- தாவர உருவங்களும் விலங்கு உருவங்களும் உயிரோட்டமான இயற்கையான இயல்புகளுடன் வரையப்பட்டிருத்தல்.
- இருபரிமாண இயல்புகளைக் காட்டும் வகையில் வர்ணந்தீட்டும்போது பெரும்பாலும் தட்டை முறையில் வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்,
- எகிப்திய ஓவியங்களில், அவ்வோவியங்கள் பற்றி விவரிக்கும் வகையில் (ஹயரொகிளிபிக்ஸ் – Hieroglyphics) அதாவது பட அட்சரங்கள் (பட எழுத்துக்கள்) பயன்படுத்தப்பட்டிருத்தல்.
மீடம் வாத்துக்கள் (Gecse of Meidum)
இந்த ஓவியம் கி.மு. 2630 காலத்து எகிப்திய பண்டைய இராசதானி யுகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாக்கமாகும். மீடம் எனுமிடத்தில் ‘மஸ்டபா’ வகையைச் சேர்ந்த ஒரு கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியத்தின் விடயப்பொருள், ஆறு வாத்துக்களாகும். இந்த ஆறு வாத்துக்களும் ஒரு பக்கத்துக்கு மூன்று வாத்துக்களாக ஒன்றன்பின் ஒன்றாக செல்லுவது சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்து வாத்துக்களுள் மூன்று வாத்துக்கள் ஒரு திசையை நோக்கியும், மற்று மூன்று வாத்துக்கள் எதிர்த்திசையை நோக்கியும் செல்கின்றன. இவற்றுள் நான்கு வாத்து உருவங்கள் சோடி சோடியாகவும், மீதி இரண்டு வாத்துக்கள் தனித்தனியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது உருவங்களை வரையும்போது முன்னால் இருக்கும் வாத்து தலையைக் கீழ்நோக்கி வைத்துள்ளது போன்று சித்திரிக்கப் பட்டுள்ளது. கூடவே உயிரோட்டமான தன்மையையும், இவ்வாத்துக்களின் மெய்ந்நிலைகளை ஒழுங்குமுறையாகவும் காட்டுவது குறித்து ஓவியர் கவனஞ் செலுத்தியுள்ளார்.
பறவை உருவங்களுக்கு நிறந் தீட்டுவதற்காக தட்டை முறை அதாவது இருபரிமாண முறை கையாளப்பட்டுள்ளதாயினும் வாத்துக்களின் இயல்பான தன்மையைக் காட்டுவதனூடாக உயிரோட்டமான தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது எகிப்திய மனித உருவ சித்திரிப்பில் இடம்பெறாத ஓர் இயல்பாகும்.
நிறந்தீட்டுவதற்காகக் கறுப்பு, வெள்ளை, கபில நிறங்களின் பல்வேறு சாயல்கள் வெளிப்படுமாறும், கோடுகள் மூலம் நுணுக்கமாக விவரங்கள் வெளிப்படுமாறும் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் வாத்துக்களின் நுணுக்கமான உடல் இயல்புகள் குறித்து ஓவியர் கவனஞ் செலுத்தியுள்ளார். இயற்கையான இயல்புகளைக் காட்டுவதற்காக நிறங்கள், கோடுகள் மூலம் முப்பரிமாணத் தன்மை வெளிப்பட்டுள்ளதாகவும் இதனை இனங்காணலாம். எகிப்திய ஓவியங்களின் பொதுவான இயல்பாகிய பக்கப் பார்வை விதி இங்கும் கையாளப்பட்டுள்ளது.
பறவை வேட்டை (Fowling Scene)
தீபஸ் இல் நெபாமுன் கல்லறையிலிருந்து (The Tomb of Nebainun) கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம் கி.மு. 1580 – 1350 க்கு இடைப்பட்ட காலப் புதிய இராசதானி யுகத்தைச் சேர்ந்த ஒரு ஓவியமாகக் கருதப்படுகின்றது. இங்கே வரையப்பட்டுள்ள ஓவியங்களுள் ஒன்றான இந்த ஓவியச் சட்டகத்தில் பல சம்பவங்கள் திரட்டாக வரையப்பட்டுள்ளன. அதன் மூலம் ஓவியத்தின் உயிரோட்டமான தன்மை காட்டப்படுகின்றது. வமிசாதிபதி ஒருவர் ஓடமொன்றில் ஏறி கையில் உள்ள வளைதடி (Boomerang) எனும் ஆயுதத்தைக் கொண்டு, நைல் நதிக் கரையில் பப்பைரசு புல்லில் இருக்கும் பறவைகளை வேட்டையாடும் விதம் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. ஓடத்தில் பெண்கள் இருவர் உள்ளனர். அவர்கள் வமிசாமிபதியின் மனைவியும் மகளுமாக இருக்கலாம். வமிசாமிபதியின் கையில் மூன்று பறவைகள் உள்ளன. அவரது மனைவி தாமரைப் பூக்கட்டொன்றுடன் அருகே நிற்கின்றாள். ஓடத்தில் அமர்ந்திருக்கும் மகள், அவரது ஒரு காலைப் பிடித்தவாறு தாமரைப் பூவொன்றினைப் பறிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. அவர்களது பூனை மேலே பாய்ந்து ஒரு பறவையைப் பிடிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. வேட்டை நாய் அதன் கால்களினால் இரண்டு பறவைகளையும், வாயினால் மற்றுமொரு பறவையையும் பிடித்து வைத்துள்ளது. பப்பைரசுப் பற்றைகள் ஒரு கோலத்தில் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியத்தில் இருண்ட மஞ்சள், பழுப்பு, சிவப்பு, வெள்ளை , கறுப்பு போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாவரங்களும் விலங்குகளும் மிக இயல்பான வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஓவியம் பிரித்தானியா அரும்பொருட் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது,
தீபசுவில் நெபாமுன் புதைகுழியில் (Tomb of Nebamun, Thebes) காணப்படும் இந்த ஓவியம், இசைக்கலைஞர்களும் நடனமாதுக்களும் விருத்திகளுக்கு இன்னே ஆடிப்பாடும் காட்சியைச் சித்திரிக்கின்றது. அமர்னா கலை ஓவியக் கலையின் நுட்பமுறை மற்றும் கற்பனாரீதியான வேறுபாடுகளைக் காட்டும் ஒரு கலைப்படைப்பாக இது கருதப்படுகின்றது 18 ஆம் அரச பரம்பரையின் கி.மு. 1350 காலத்தைச் சேர்ந்ததாகும். எகிப்திய ஓவியக் கலையில் காணப்பட்ட நியாயமான விதிமுறைகளிலிருந்து வேறுபட்ட ஒரு சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. ஒரு பக்கமாகத் திரும்பிய தன்மைக்குப் பதிலாக மிக நெகிழ்ச்சியாக தன்மை பயன்படுத்தப்பட்டுள்ளத. குழல் ஊதும் உருவம் முற்றுமுழதாக முன்னோக்கியதாகவும் கூடவே இருக்கும் மறையை உருவம் சற்றுத் திரும்பியதாகவும் காட்டப்பட்டுள்ளது. நடனமாடும் பெண் உருவங்கள் மிக நெகிச்சியான சந்தத்துக்கிசைவான உடல்நிலை களில் காட்டப்பட்டுள்ளன. அவரக்ள் ஆடையின்றி, ஆபணரங்களுடன் மாத்திரம் சித்திரக்கப்பட்டுள்ளனர்.