இலங்கையின் பாரம்பரிய வேடமுகக்கலை
வரலாற்றுப் பின்னணி
- உலகின் பல்வேறு நாடுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலும் வரலாற்றுக்கு முந்திய, விவசாயத்தில் ஈடுபட்ட காலங்களிலும் வேடமுகம் உபயோகிக்கப்பட்டது.
- மழை, உணவு (வேட்டையாடல், பயிர்ச்செய்கை) வியாதி (பாதுகாப்பு) போன்ற அன்றாட கருமங்கள் பலவற்றுக்காக வேண்டி கிரிகைகள் செய்வதிலும் அச்சந்தர்ப்பங்களில் வேடமுகங்களை அணிவதிலும் ஈடபட்டனர்.
- வேட்டையாடி வாழ்ந்த கோத்திர மக்கள் விலங்குகளை பீதியடையச் செய்யவும் விலங்குகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும் என எண்ணி வேட முகங்களை அணிந்தனர்.
இலங்கையில் பிரபல்யமடைந்துள்ள பிரதேசங்கள்
- தென் மாகாணத்தின் அம்பலாங்கொடை பிரதேசம் பாரம்பரிய வேடமுகக் கைத்தொழலுக்குப் பிரசித்திபெற்றது.
- பெந்தர, மிரிஸ்ஸ, ரைகம் கோரளை, மதுகம எனும் பகுதிகளிலும் இக்கைத்தொழில் காணப்படுகின்றது.
மூலப்பொருட்கள்
- வேடமுக நிர்மாணிப்புக்காக கடல் மாங்காய், தேமா போன்ற மரங்களை பழைமையான கலைஞர்கள் உபயோகித்துள்ளனர்.
வேடமுக நிர்மாணிப்பு
- மரக்குற்றியை வெட்டி பட்டை உரித்து துண்டுகளாக்கப்படும் செயற்பாடே முதற் படிமுறையாக அமைகிறது. இது “கனகெப்பீம” என கூறப்படும்.
- பின்னர் மரப்பலகையின் வைரமான பகுதிகள் வெட்டி தட்டையாக்கப்படும். இது ‘பாயம் பேகீம்” எனப்படும்.
- இவ்வாறு அமைத்துக்கொள்ளப்பட்ட பலகைமீது முகமூடியின் பருமட்டான வடிவம் குறிக்கப்படும். பின்னர் முகத்தின் அளவுக்கு அப்பலகை செதுக்கி, குறைத்து செப்பனிடப்படும்.
- பின்னர் செதுக்குவதற்கும் வர்ணமிடுவதற்கும் இலகுவான விதத்தில் மரப்பலகையில் பால் வடியும் தன்மையை அகற்றுவதற்காக இளவெயிலில் உலர வைக்கப்படும். இது “கிரி ஹிந்தவீம” (பால் உலரவிடல்) எனப்படும்.
- முகத்தின் வடிவம் வெளிக்கொணரப்பட்டு கண் போன்ற மென்மையான பகுதிகளைக் குறித்தல் “லக்குணு கெப்பீம்” எனப்படும்.
- மனிதன் ஒருவனுடைய முகத்துக்கு ஏற்றவாறு உட்பக்கமாக குடைந்து அகற்றப்படும். ஆதிகாலத்தில் நீண்டகால பாவனைக்காக இது மீண்டும் மூன்று மாதங்களுக்கு புகைக்கூட்டில் இட்டு உலரவிட்டனர்.
- பின்னர் முகத்தக்குத் தேவையான ஏனைய அங்கங்களான தலைமயிர், தாடை, மீசை, பல், கிரீடம் போன்றவை தனியாக நிர்மாணிக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன.
வேடமுகங்களைச் சித்தரித்தல்
- வேடமுகங்களின் சித்தரிப்புப் பணி ஆரம்பிக்க முன் அவற்றில் வெள்ளை நிறத்தில் பூச்சு பூசப்படும். வெண்களி அல்லது “மகுலு மெட்டி” எனப்படும் ஒருவகை வெண்களி மண்ணைக் கரைத்து வடித்து தயாரிக்கப்படும் இப்பூச்சு “அல்லியாது” என்றழைக்கப்படும்.
- இந்நிர்மாணிப்பில் ஈடுபடும் கலைஞர்கள் மஞ்சள் வர்ணத்தை ‘ஹிரியல்” (ஒருவகை மண்) மூலமும் சிவப்பு நிறத்தை ‘சாதிலிங்கம் (ஒருவகை மண்) மூலமும் வெள்ளையை ‘மகுலு மெட்டி” எனப்படும் ஒருவகை வெண்களி மூலமும் பெற்றுக்கொண்டனர். போவிட்டியா, கீ கரிந்திய, ஆவாரை, பயற்றை ஆகிய கொடிகளில் இருந்து ஊதா, பச்சை வர்ணங்களைப் பெற்றனர். (தற்காலத்தில் வேட முகங்களை வர்ணமிடுவதற்கு பெரும்பாலும் செயற்கை வர்ணங்கள் உபயோகப்படுகின்றன.)
- ஆதிகாலத்தில் வர்ணம் பூசப்பட்ட பின்னர் நீண்டகால பாவனை, ஈரலிப்புத்தன்மைக்கு ஈடுகொடுத்தல், பளபளப்பான மேற்பரப்புத் தன்மையைப் பேணல் எனும் நோக்காகக் கொண்டு “தொரண” எனப்படும் எண்ணை வகைத் தாவரத்தில் இருந்து பெறப்பட்ட என்ணெயும் “ஹல்” எனப்படும் தாவரத்தில் இருந்து பெறப்படும் குங்கிலியமும் கொண்ட கலவை பூசப்படும்.
வேடமுக வகைகள்
- பாரம்பரிய சாந்திக் கிரிகைகளுக்காகவும் கிராமிய நாடகங்களுக்காகவும் பாரம்பரிய வேடமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இவ்விரண்டு நோக்கங்களுக்காக அமைக்கப்படும் வேடமுக வகைகள்
- அரச முகம்
- இராட்சத முகம்
- இயக்கர் முகம்
- நாகக் கன்னி முகம்
- சன்னி முகம்
- கோலம்’ எனப்படும் முகம்
பயிற்சி வினாக்கள்
1. வேடமுகம் உயோகம் ஆரம்பமான யுகம் எது?
2. வேட்டையாடி வாழ்ந்த கோத்திர மக்கள் வேட முகம் அணிந்தமைக்கான காரணங்கள் இரண்டினை எழுதுக.
3. விவசாய யுகத்தில் வாழ்ந்த மனிதன் வேடமுகம் அணிந்ததற்கான காரணங்களை எழுதுக.
4. வேடமுகக் கைத்தொழிலுக்கு இலங்கையில் பிரபல்யமான இடம் எது?
5. முகமூடிக் கைத்தொழிலுக்கு பயன்படும் மூலப்பொருட்களினை தருக.
6. முகமூடி வகைகள் இரண்டினையும் எழுதுக.
7. வேட முகங்களில் ஐந்தின் பெயர்களை எழுதுக.