இந்து மதப் பண்பாடுகளுடன் இணைந்த மரச் செதுக்கல்கள்
வரலாற்றுப் பின்னணி
- சங்க காலத்தில் இருந்து மரச்செதுக்கல்கள் இருந்ததாக “மணிமேகலை” எனப்படும் இந்திய வரலாற்று நூல் எடுத்துக்கூறுகின்றது.
- மரம், யானைத்தந்தம், களிமண் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சிலைகள் இருந்ததாக அதிலுள்ள பாடலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதன்படி மரத்தால் ஆன சிலைகள் இருந்திருப்பின் அவை செதுக்கல்களாக இருந்திருக்கும் என எண்ணலாம்.
- பல இலக்கிய மூலங்களில் இந்து மதத்துடன் தொடர்புடைய மரச் செதுக்கல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
- செதுக்குதல், உருவங்களை வரைதல், வர்ணம் தீட்டுதல், அலங்கார வேலைப்பாடுகளின் உபயோகம் தொடர்பாகவும் இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலுமே மரவாகனங்கள் வளர்ச்சியடைந்தன என்பது அறிஞர்களது கூற்றாகும்.
செதுக்கப்பட்ட நிர்மாணிப்புகளும் அவற்றின் உபயோகமும்
- இந்து ஆலயங்களில் பல விழாக்கள் நடைபெறுகின்றன. அந்தந்த விழாக்களுக்குச் சிறப்புப்பெற்ற வாகனங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
- இவ்வாறான அதிக வாகனங்கள் மரத்தால் அமைக்கப் பட்டிருப்பதால் இவை மரவாகனம் என குறிக்கப்படுகின்றன.
- இவை செதுக்கு வேலைப்பாடுகளாலேயே அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்து மதம் பரவலடையத் தொடங்கியதுடன் இலங்கையிலும் கோயில்களில் மரவாகனங்கள் உருவாக்கப்பட்டள்ளன.
- இவை தெய்வங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டவையாகும். தெய்வ உருவங்களை இவற்றில் வைத்து சுற்றுப் பிரகாரத்தில் கொண்டு செல்வர்.
வாகன வகைகள் முக்கியமாக இருவகைப்படும்.
- வடம் எனப்படும் கயிற்றால் இழுத்துச் செல்லப்படும் வாகனங்கள்.
உதாரணம் : தேர், மஞ்சம், கைலாச வகாகனம், சப்பறம் - மனிதர்களால் தூக்கிச் செல்லப்படும் வாகனங்கள்
உதாரணம் : சிங்க வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம், எலி வாகனம் (மூசிக), மயில்வாகனம், குதிரை வாகனம்
செதுக்கல் வேலைப்பாடுகள்
- மரத்தால் செதுக்கி வர்ணமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- விலங்குருவங்களும் பட்சி உருவங்களும் இங்கே உபயோகிக்கப் பட்டுள்ளன.
- யானை, சிங்கம், குதிரை போன்ற உருவங்களும், குள்ள வடிவில் உள்ள மனித உருவங்களும் (முயலகன்), யாழி (பல விலங்குகளை உபயோகித்து உருவாக்கப்பட்டது), காமதேனு (பெண் தலையும் பசுவின் உடலையும் கொண்ட) போன்ற கற்பனை வடிவில் அமைந்த சிறப்பான உருவங்களும் உபயோகிக்கப்பட்டுள்ளன.
- மலர் அலங்காரங்கள் வர்ணங்களிட்டு கவர்ச்சிகரமாக அமைக்கப் பட்டுள்ளன.
தற்போது இலங்கையில் காணப்படும் செதுக்கல்களுடனான சிறப்பான மர வாகனங்கள்
சிங்க வாகனம்
- இதனை யாழ்ப்பாணத்தின் மூளாயிலமைந்த சித்தி விநாயகர் கோயிலில் காணலாம்.
- 20ஆம் நூற்றாண்டில் வட்டுக்கோட்டை சின்னட்டியார் ஆசாரியால் நிர்மாணிக்கப்பட்டது.
கலைத்துவப் பண்புகள்
- மோடிப்படுத்தப்பட்ட உருவமொன்றாகும். மிகவும் நுட்பமான முறையில் செதுக்கப்பட்டுள்ளது.
- துருத்தி நிற்கின்ற உருட்டு விழிகள், சிவந்த முரசுடைய திறந்த வாய், அவற்றில் காணப்படும் சிறிய மற்றும் நெடுத்த பல் வரிசை, முகத்துக்குச் சமாந்தரமாக வளைந்தெழுந்து வில்போல நிற்கும் வால், சீற்றத்தையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்துகிறது.
- அடுக்கடுக்கான மாலைகள், பதக்கங்கள் என்பவற்றையுடைய கழுத்தணி வரிசைகளில் பூவலங்காரங்கள் இடப்பட்டுள்ளன.
- வைத்திழைத்த கண்ணாடி புடைப்பலங்காரங்கள் ஒளிதெறித்து அதற்கொரு புராணிக விண்ணுலகப் பாங்கைத் தருகிறது.
குதிரை வாகனம்
- யாழ்ப்பாண நல்லூர் கந்தசாமி கோயிலில் இதனைக் காணலாம்.
- திருவிடை மருதூர் கோவிந்தசாமி ஆசாரியாரால் 1963-1964 காலப்பகுதியில் செதுக்கப்பட்டது.
கலைத்துவப் பண்புகள்
- நேர்முகத் தன்மையானது. யுத்தம் முதலான செயற்பாடுகளை நோக்கி ஆக்கிரோசமாகப் பாயும் தோரணையுடையது.
- அதன் உடற்பாரத்தை பின்னால் வைத்தல் என்ற பொறிமுறை பேணப் பட்டுள்ளது.
- இது, ஆக்கிரோசம், கம்பீரம் , மிடுக்கு எனும் பண்புகளை வெளிப்படுத்துவதாக உள்ளன. இது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நிர்மாணிப்பாகும்.
மஞ்சம்
- யாழ்ப்பாண இணுவில் கந்தசாமி கோயிலில் இதனைக் காணலாம்.
- இது 1909 – 1910 காலப்பகுதிக்குரிய மஹோற்சவ நாட்களில் ஒன்றான மஞ்சத் திருவிழாவுக்கான விசேட ஊர்தியாகும்.
- இது இழுத்துச் செல்ல இலகுவான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்தியின் தன்மையும் கலைத்துவப் பண்புகளும்
- இவ்வூர்தி மரச் செதுக்கல்களைக் கொண்டது.
- இது அமைப்பு ரீதியாக கீழ்ப்பகுதி, நடுப்பகுதி, மேல் பகுதி என மூன்றாக வகுக்கப்படும்.
- கீழ்ப்பகுதியின் சக்கரங்களுக்கு மேல் அடுக்குகளை உடையது. இது கடவுளர்கள், விலங்குகள், பறவைகள், பூதங்கள் மற்றும் தாமரை, பலாப்பெத்தி முதலியன உடையதாகக் உள்ளது.
- நடுப்பகுதி கடவுளர்களை வைக்கும் பீடத்தோடு ஆரம்பமாகிறது. அதனை தேவாசனம் என்பர். தேவாசனப் பகுதியையும் மேற்பகுதியையும் இணைக்கும் தூண்கள் பவளக்கால்கள் எனப்படும். இந்தப் பவளக் கால்களுடைய வெளிப்பக்கங்களில் தட்டையான, நெடுத்த யாழிகள் சுற்றி வர அமைந்துள்ளது.
- மேற்பாகம் விமானம் எனப்படும். இது கோயிலின் கோபுர பண்புகளைக்கொண்டது. இது பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. விமானத்தின் அடுக்குகளின் உள்ளே தெய்வ உருவங்கள் (விக்கிரகங்கள்) காணப்படுவதுடன் வெளியே விலங்குருவங்களும் மலர்கொடி அலங்காரங்களும் காணப்படுகின்றன.
தேர்
- மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்புத் தேரொன்று காணப்படுகின்றது.
- இது நூற்றாண்டுகளைக் கடந்தது.
தேரின் அடிப்படைத் தோற்றமும் கலைத்துவப் பண்புகளும்
- இத் தேர் சிற்பங்கள் இலங்கையில் காணப்படும் காலத்தால் முற்பட்ட மரச் செதுக்கு பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.
- அங்குள்ள தேர்களில் சிவனுக்குரிய தேர் அதிக பழைமை வாய்ந்தது.
- தேர்களில் மூலத்தேர், கட்டுத்தேர் என இரு வகைகள் உண்டு.
- இவற்றின் அடிப்படை அமைவு வட்டச்சுற்றுடையது. இவ்வட்டங்கள் மேலே செல்லச் செல்ல அவற்றின் விட்டங்கள் குறைந்து ஒடுங்குகின்றன.
- இத்தேர்களும் மஞ்சம் போன்று மூன்று பகுதிகளைக் கொண்டது.
- மூலத்தேர் என்பது கீழிருந்து மேலே வரைக்கும் ஒட்டுமொத்தமாக நிரந்தரமாமகப் பொருத்தப்பட்டிருக்கும் அமைப்பை உடையது.
- கட்டுத் தேரானது கீழ்ப்புறத்தை மட்டுமுடையதாகவும் மேற்பக்கம், நடுப்பக்கம் ஆகியன தேரோட்டத்தின்போது மட்டும் தற்காலிகமாகப் பொருத்தப்படுவதாகவும் அமையும்.
- அவ்வாறான தேர்களில் மேற்பாகம் துணியால் சுற்றிக் கட்டப்படும். துணியால் வேயப்படும் பகுதி பல வர்ணத் துணிகள், கொடிகள் ஆகியவற்றுடன் காணப்படுகிறது.
- தேர்களின் அடித்தளமானது புராணக் கதைகள், கடவுளர் விக்கிரகங்கள், யாழிகள், அன்னங்கள், பூத (குள்ளர்) வரிசைகளும் சிருங்கார இரசனையுடைய அலங்கார வேலைப்பாடுகளும் கொண்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காண்க: …………………………………
2. காணப்படும் இடம்: ……………………….
3. காலம்: ……………………………………………….
4. உருவாக்கிய கலைஞர்: ………………
5. கலைப்பண்புகள்: …………………………..
1. இனங்காண்க: …………………………………
2. காணப்படும் இடம்: ……………………….
3. காலம்: ……………………………………………….
4. உருவாக்கிய கலைஞர்: ………………
5. கலைப்பண்புகள்: …………………………..
சுருக்கமான விடை தருக.
மஞ்சம்
1. படத்தில் காணப்படும் மஞ்சம் என்று அழைக்கப்படும் வாகனம் காணப்படும் கோவில் எது?
2. இவ் வாகனம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதி எது?
3. இம் மஞ்சம் எவ் ஊடகத்தினால் நிர்மாணிக்கப் பட்டது?
4. தேவஸ்தானம் என்றால் என்ன?
5. பவளக்கால் என்பது யாது?
6. மஞ்சம், தேர் போன்றவற்றில் விமானம் எப்பகுதியில் அமைந்திருக்கும்?
தேர்
1. படத்தில் உள்ள தேர் காணப்படும் கோவில் எது?
2. தேர்களின் இரு வகைகளும் எவை?
3. மூலத்தேர் என்பது யாது?
4. தேரின் அடித்தளத்தில் காணப்படும் அலங்கார வேலைப்பாடுகள் நான்கு தருக?