இந்திய நவீன ஓவியக் கலைஞர்கள்

இந்தியாவின் நவீன ஓவியக் கலையின் இயற்கைத் தன்மையை உருவாக்குவதில் 1920 ஆம் தசாப்தம் தொடக்கம் 1950 ஆம் தசாப்தம் வரையிலான காலத்தில் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட சமூக அரசியல் சூழமைவுகளின் மாற்றங்கள் தீர்க்கமான பங்களிப்பைச் செய்துள்ளன. 1922 இல் ரவீந்திரநாத் தாகூர் இனது நெறிப்படுத்தலின் கீழ்க் கல்கத்தாவில் (கொல்கத்தா) நடத்தப்பட்ட ஐரோப்பிய நவீனத்துவ ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி, அவற்றுள் முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும். மேற்கத்தேய நவீன ஓவியக் கலைஞர்களாகிய போல் க்ளீ, கண்டிண்ஸ்கி ஜொஹான்ஸ் இலன் போன்றோர் உட்பட மேலும் பல ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இக் கண்காட்சியானது, நவீனத்துவக் கலையின் பண்புக்கூறுகள் தொடர்பாக இந்திய ஓவியர்களின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணமாகியது.

1930 – 40 ஆம் காலப்பகுதியில் இந்தியா, பிரித்தானிய குடியாட்சியிலிருந்து சுதந்திரம் பெறும் போராட்டத்தை ஆரம்பித்த காலகட்டமாக குறிப்பிடலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குச் சமாந்தரமாக சமகாலப் பிரச்சினைகளை எடுத்துரைக்கத்தக்க தேசியவாதக் கலை மரபொன்று குறித்துச் சில கலைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதற்கு முன்னோடியானவர்களாக வங்காள பள்ளியை சேர்ந்த ஓவியர்கள் காணப்பட்டனர். இது மேலைத்தேய அக்கடமிக் கலைக்கு எதிராக எழுந்த ஒரு முற்போக்குக் கலை இயக்கமாகக் காணப்பட்டது. அபனிந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், முகுல் தே போன்ற ஓவியக் கலைஞர்கள் இப்பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்கள் அக்கடமி விதிகளைப் புறந்தள்ளி, சுதேச இந்திய ஓவியம் வரைதல் முறைகளினது வெளிப்பாட்டுப் பாணிகளதும் செல்வாக்கைப் பெற்றனர்.

இக்கலை இயக்கத்துக்குச் சமாந்தரமாக, நேரடியாக மேலைத்தேய நாடுகளுக்குச் சென்று கல்வி கற்ற இந்திய ஓவியர்களும் படைப்பாக்கத்துறையுடன் இணைந்து கொண்டனர். அவர்களுள் முக்கிய இடத்தைப் பெறுபவர் அம்ரிதா செர் கில் எனும் பெண் ஓவியர் ஆவார். அவர் பிரான்சில் கலைக்கல்வி பயின்றதோடு போல் கொகான், போல் செசான் ஆகிய பின் – மனப்பதிவுவாத ஓவியர்களினது படைப்பாக்கங்களின் செல்வாக்கைப் பெற்றார். எனினும் அவர், இந்தியாவுக்குத் திரும்பி வந்த பின்னர், அவரது படைப்புகளில் இந்தியாவின் மொகலாய பகாரி அஜந்தா ஓவியங்களின் பண்புகள் பெரிதும் செல்வாக்கு செலுத்தியது.மேலும் ரவீந்திரநாத் தாகூர், அபினிந்திரநாத் தாகூர் ஆகியோரது செல்வாக்குப் பெரிதும் தாக்கம் விளைவித்தது. அபினிந்திரநாத் தாகூர் இனது சகோதரராகிய கங்கேந்திரநாத் தாகூர் எனும் ஓவியக் கலைஞரும், சுதேச கலை மரபுகளையும், கன வடிவ வாதக் கலை வெளிப்பாடுகளையும் ஒன்றுடனொன்று கலந்து படைப்பாக்கத்தில் ஈடுபட்ட ஒருவராவார். இதற்கமைய இந்தியாவின் நவீன ஓவியக்கலையானது ஐரோப்பிய நவீனத் துவத்தின் செல்வாக்கு, இந்திய சுதேச ஓவியப் பண்புகளின் செல்வாக்கு ஆகியவற்றின் கலவையாலானது என்பதை இனங்காண முடிகின்றது. சில ஓவியர்கள் நாட்டார் கலைப் பாணிகளின் செல்வாக்கைப் பெற்றதோடு, இதற்கான ஒரு நல்ல உதாரணமாக ஜமினி ரோய் இனைக் குறிப்பிடலாம். இந்திய சுதந்திரப் போராட்டப் பரம்பலுடன் கூடவே, செல்வந்தக் குடும்பங்களுக்கு மாத்திரம் என இருந்த ஓவியக் கலையானது கீழ்மட்டச் சமூகத்திலும் பரம்பியது. இப்பின்னணியிலேயே எம். எவ். ஹூஸைன், எச். தாரா போன்ற ஓவியர்கள் உருவாகினர்.

error: Content is protected !!