அபனீந்திரநாத் தாகூர் (1871 – 1951)
1871 ஆகஸ்ட் 07 ஆந் திகதி பிறந்தது 80 ஆண்டுகள் வாழ்ந்து, 1951 இல் இறந்த அபனீந்திரநாத் தாகூர் ஓவியக்கலையிலும் இலக்கியக் கலையிலும் புகழ்பெற்றிருந்த ஒருவர் ஆவார். சாந்தி நிகேதனத்தில் கட்டியெழுப்பப்பட்ட வங்காளப் பள்ளியின் பிரதான உந்து சக்தியும் கொள்கை வாதியும் இவரேயாவார். இவர் ரவீந்திரநாத் தாகூரினது மருமக்களுள் ஒருவராவார். கீழைத்தேயக் கலைகள் தொடர்பான இந்தியக் கழகத்தின் (Indian Society of Oriental Art) தாபகரும் ஆவார்.
தேசியத்தையும் சுதேசப் பெறுமானங்களையும் முதன்மையாகக் கொண்ட கலைப் பிரயோகங்களை அபனீந்திரநாத் தாகூரினது படைப்பாக்கங்களில் இனங்காணலாம். அவர் மேற்கத்தேய அக்கடமிக் ஓவியக்கலையை பின்பற்றி தமக்கே உரித்தான சுதேச பாணியொன்றினைக் கட்டியெழுப்ப முற்பட்ட முதலாவது ஓவியக் கலைஞராகக் கருதப்படுகின்றார். குறிப்பாக அவர், மொகலாய , ராஜ்புத்தானிய, அஜந்தா போன்ற சுதேச ஓவியங்களினது இயல்புகளின் செல்வாக்குடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டார். மேலும் ஆசியக் கலைகளின் அதாவது, யப்பானிய, சீன, பாரசீக ஓவியங்களின் கலைப் பண்புகளின் செல்வாக்கையும் பெற்று நவீன இந்திய ஓவியக் கலையை விருத்தி செய்வதற்காக முன்னின்று செயற்பட்டார். மேலும் 1905 இல் ஹெவல் இனதும் மாணவர்கள் கல்கத்தா பிராந்தியக் கலைக்கூடங்களில் தலைவர்களாகச் செயற்பட்டனர். தமது குருநாதரின் புதிய ஓவியக்கலை இயக்கத்தை விரிவுபடுத்துவதில் முன்னின்றனர். இந்த புதிய கலைப் பாணியானது, வங்காளக் பள்ளி இந்தியா முழுவதும் பரம்பியது.
அபநீந்திரநாத் தாகூர் வரைந்த, பாரத மாதா , அசோக தேவியும் போதி விருட்சமும், பயண முடிவு, ஷாஜஹானின் மரணம் போன்றவை அவரது பிரபல்யம் வாய்ந்த ஓவியங்களுள் சிலவாகும்.
Journey’s End Nishat
அபநீந்திரநாத் தாகூரினது ராஜபுத்தானிய படைப்புக்களின் சிறப்பியல்புகள்
- மொகலாய மற்றும் ராஜ்புத்தானிய கலைப் பாரம்பரியங்களின் செல்வாக்கைப் பெற்றிருத்தல்.
- யப்பான், சீனா போன்ற ஆசிய கலைப் பாரம்பரியங்களில் இயல்புகளைப் பயன்படுத்தியிருத்தல்.
- பண்டைய ஒவியங்கள் போன்று, ஓவியச் சட்டகத்தை அழகுபடுத்துவதற்காக சில ஓவியங்களில் அழகிய பூங்கொடி அலங்காரங்களைக் கொண்ட கரை அலங்காரங்களைப் பயன்படுத்தியிருத்தல்.
- நீர் வர்ண முறையியல்களை மீளப் பயன்படுத்தியிருத்தல்.
- நிறங்கள் இளஞ்சாயங்களைக் கொண்டிருத்தலும், நிழல் இன்மையும்.
- பெரும்பாலான ஓவியங்கள் சிறிய அளவுடையவையாக இருத்தல்.
- ஓவியங்களின் கருப்பொருள்களாக, இந்திய வரலாற்றுச் சம்பவங்கள், புராணக் கதைகள், மக்கள் வாழ்க்கை ஆகியன பயன்படுத்தப்பட்டிருத்தல்.
- மேற்கத்தேய அக்கடமிக் பராம்பரியத்தில் காணப்பட்ட இயற்பண்புவாத முப்பரிமாணத்தைக் கட்டியெழுப்புதல், ஒளி – நிழலைக் காட்டல் ஆகியன புறந்தள்ளப்பட்டிருத்தல்.
- கோட்டை மையமாகக் கொண்டு கட்புல வெளிப்பாடு கட்டியெழுப்பப்பட்டிருத்தல்.
பாரத மாதா (Bharat Mata – 1905)
அபனீந்திரநாத் வரைந்த, மிகப் பிரபல்யம் வாய்ந்த கலைப்படைப்பு, “பாரத மாதா” எனும் ஓவியம் ஆகும். நான்கு கைகளைக் கொண்ட ஒரு பெண் உருவமாக ‘பாரதத்தை’ உருவேற்றி வரைக் துள்ளார். குறிப்பாக இந்த உருவம் இந்திய தெய்வங்களின் உருவப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. உருவத்தின் மேன்மையை வலியுறுத்துவதற்காக, பாரதமாதாவின் பின்புறத்தே மூன்று ஒளி வட்டங்கள் இடப்பட்டுள்ளன. நிமிர்ந்து நின்றவாறு சற்று இடப்பறமாக தலையைத் திருப்பி நிற்கும் பெண் உருவமாக இது சித்திரிக்கப்பட்டுள்ளது. ”இப்பெண் உருவம் கையில் ஓலைச்சுவடியொன்றும் ஒரு கைப்பிடி நெற்கதிர்களும் உருத்திராட்ச மாலையொன்றும் மற்றும் வெண்ணிறத் துணித்துண்டொன்றும் உள்ளன. தடித்த மஞ்சளும், செம்மக்கான நிறத்தினாலான உடையை அணிந்துள்ளார். இது ரவி வர்மா வரைந்த தெய்வங்களுக்காகப் பயன்படுத்திய சேலைகளைவிட வேறுபட்டதொன்றாகும். சுதேச இயல்புகளைக்காட்டும் உடைக்கு மேலதிகமாக தலையைச் சூழ ஒரு ‘பர்தா’ வும் காணப்படுகின்றது. கழுத்திலும் கைகளிலும் எளிமையான ஆபரணங்கள் உள்ளன. ரவிவர்மாவினால் வரையப்பட்ட சரஸ்வதி உருவத்துடன் ஒப்பிடுகையில் பாரத மாதாவும் ஒரு தெய்வம் போன்று காட்டப்பட்டுள்ள போதிலும், பாரதமாதா அணிந்திருக்கும் ஆடையணிகள் எளிமையானவையாகும்.
தலையில் அழகிய கிரீடம் கிடையாது. பாரத மாதாவின் உடலும் இந்தியப் பாங்குடன் சற்று இருண்ட தன்மையுடன் காட்டப்பட்டுள்ளது. எனினும் பாரத மாதா திடசங்கற்பத்துடன் சிந்தனைவயப்பட்ட பார்வையுடன் முன்னோகிப் பார்த்திருக்கும் விதத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியம் இந்திய தேசியப் போராட்டத்தின்போது தேசியவாதத்தை உணர்த்தி நிற்கும் ஒரு குறியீடு போன்றமைந்தது. பாரத மாதா இருக்கும் பின்னணியைக் கருதுகையில், அவர் இருக்கும் இடம் எது என்பது தெளிவாகப் புலனாவதில்லை. தெளிவற்றுப்போனது போன்று மஞ்சளும் சிவப்பும் கலந்த பின்னணி இந்த ஓவியத்துக்காக இடப்பட்டுள்ளது. எனினும் பாரத மாதாவினது காலடியில் இரண்டு வெண்ணிறத் தாமரைப் பூக்கள் காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தைச் சூழ மொகலாய ஒவியங்களிற்போன்று அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட கரை இடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நோக்குகைகயில், வெப்ப வர்ணங்களை அதிக அளவில் கொண்டுள்ள இந்த ஓவியம் பார்ப்போரின் கண்களைக் கணப்பொழுதில் கவர்ந்தீர்க்கவல்லது. மேலும் இந்திய தேசியவாத இயக்கங்களுக்கு ஒப்பாக சுதேசத்துவ உணர்வுகளைத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட ஒரு வியத்தகு கற்பனையாக இந்த ஓவியத்தைக் குறிப்பிடலாம். நீர் வர்ண ஊடகத்தினாலான ஓவியம் 1905 இல் வரையப்பட்ட தொன்றாகக்க கருதப்படுகின்றது.
அசோகா தேவியும் போதி விருட்சமும் (Asoka’s Queen – 1910)
இது அபனீந்திரநாத் தாகூர் இனால் 1910 இல் வரையப்டப்ட ஒரு நீர்வர்ண ஓவியமாகும். தாகூர் பல வரலாற்றுக் கதைகளைத் தமது ஓவியங்களுக்கான கருப்பொருள்களாகக் கொண்டுள்ளனார். இந்த ஓவியமும் அவ்வகையைச் சேர்ந்த ஒன்றாகும். கி.மு. மூன்றாம் நாற்றாண்டில் பாரதத்தில் வாழ்ந்த அசோக மன்னனின் ஓர் அரசி ஸ்ரீ மகா போதி விருட்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் விதம் இந்த ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்வரசி போதி விருட்சத்தை (அரச மரத்தை) அழிப்பதற்கென சூழ்ச்சிசெய்ததோடு, அது சார்ந்த ஒரு நிகழ்வே இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. அரசி, போதிக்கிரகத்தின் கற்தூண் ஒன்றின் பின்னால் ஒளிந்திருந்து வாயில் கையை வைத்தவாறு கூர்மையான பார்வையடன் போதி விருட்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். அவரது சிந்தனை வயப்பட்ட உடல்நிலையும் சுருங்கிய கண் புருவங்களும் போதி விருட்சத்தை அழித்தல் தொடர்பாகக் கோடிட்டுக் காட்டுகின்றன. அசோக தேவி வெண்ணிற ஆடை அணிந்துள்ளதோடு, கைகளிலும் கழுத்திலும் தங்க ஆபரணங்கள் அணிந்துள்ளார்.
ஐரோப்பிய முறையில் ஒளி-நிழல் அல்லது முப்பரிமாணத் தன்மை கட்டியெழுப்பப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உருவத்தைச் சூழவும், மெல்லிய கோடொன்று இடப்பட்டு, குறித்த பொருள் முன்தள்ளப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது. கற்தூண்களில் உள்ள தாமரை மலர்ச் செதுக்கு வேலைப்பாடுகள் ஆபரணங்களின் இயல்புகள் போன்றவை கோடுகளை முதன்மையாக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
ஓவியத்தின் அதிக அளவு வெளியானது, முன்னணியில் அசோக்கா தேவியின் உருவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஓவியத்தின் இடதுபுற ஓரத்தில் போதி விருட்சத்தின் ஒரு கிளைப்பகுதி மாத்திரம் காட்டப்பட்டுள்ளது. அதற்கு மேலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ள குடையும், கிளைகளில் காட்டப்பட்டுள்ள போதிவிருட்சத்தின் கணிக்கையாகப் படைக்கப்பட்ட ஆபரணங்களும் போதி விருட்சம் தொடர்பான கௌரவத்தையம் விருப்பத்தையும் காட்டும் ஒரு குறியீடாகும். போதி விருட்சத்தின் முன்புறத்தே பூக்கள் கொண்ட ஒரு செம்பு உள்ளது. விருட்சத்தின் கிளைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்புக் கலந்த கபில நிறம் காரணமாக, அது தூரத்தே அமைந்த ஒரு பொருளாயினும் கூட தெளிவாக முனைப்புற்றுக் காட்சியளிக்கின்றது. அசோக்கா தேவி கையை வைத்துக் கொண்டிருக்கும் கற்தூணில் உள்ள நாக உருவம் மற்றுமொரு முக்கியமான குறியீடாகும். அவரது சூழ்ச்சி சார்ந்த உடல்நிலைப் பாங்கை மேலும் முனைப்புறுத்துவதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கபில் நிறம் மற்றும் அது சார்ந்த நிறச் சாயல்கள் காரணமாக உருவாகியுள்ள நிறத்தொகுதியானது ஒரு தனி வர்ண (Monochrome) ஓவியத்துக்கு ஒப்பான வர்ணப் பொருத்தப்பாடாக அமைந்துள்ளமை இங்கு காண முடிகின்றது. மேலும் இது பண்டைய இந்திய தொல்சீர் ஓவியக்கலைச் செல்வாக்கையும் காட்டி நிற்கின்றது.