அனுராதபுரக் கால ஓவியங்கள்
அனுராதபுரக் காலத்துக்குரிய ஓவியங்கள் தொடர்பான கட்புல சான்றுகள் பல இடங்களில் கிடைக்கப் பெற்றுள்ளன. அக்காலப் பகுதிக்குரிய சுவரோவியங்கள் காணப்படும் இடங்களாக மிகிந்தலை தாதுகர்ப்பம், வெஸ்ஸகிரிய, மகியங்கனை தாதுகர்ப்பம், சிகிரியா, ஹிந்தகல, கொனாகொல்ல, சித்துல்பவ்வ, திம்புலாகல, கரம்பகல ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.
இவ்வோவியங்கள் அனுராதபுர காலத்தில் தொல்சீர் மரபுக்குரிய ஓவியக்கலை காணப்பட்டமைக்குச் சான்றாக உள்ளன. இந்த எல்லா ஓவியங்களும் தொல்சீர் இயற்கை வாதப் பண்புகளைக் காட்டி நிற்கின்றன. அதாவது ஒரு தனிவர்ண (Mono Chrome) நிறச்சாயங்களைக் கொண்டு இயற்கையை மூலாதாரமாகக் கொண்டு உருவங்களைக் கட்டியெழுப்பும் பாணியே அதுவாகும். அதற்கமைய, சிகிரியா, வெஸ்ஸகிரிய, கொனாகொல்ல, திம்புலாகல, ஹிந்தகல, புள்ளிகொட ஆகிய இடங்களில் உள்ள சுவரோவியங்களில் தொல்சீர் இயற்கைவாதப் பாணி இயல்புகளைக் காணலாம்.