அஜந்தா ஓவியங்கள்

இந்தியாவின் பெரும் கலைக்கூடம் அஜந்தா ஆகும். இது உலக கலை மரபுரிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா பிராந்தியத்தைச் சேர்ந்த அவுரங்காபாத் நகரில் இருந்து 104 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அஜந்தா குகைகளை 1814 இல் ஒரு தொகுதி ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக, ஏறத்தாழ 600 மீற்றர் நீளத்திற்கு செங்குத்தாக எழுந்துள்ள ஒரு மலைத்தொடரில் ஏறத்தாழ 250 அடி உயரத்தில் அரைவட்ட வடிவ அதாவது குதிரை இலாட வடிவில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வகோரா எனும் நதியைச் சார்ந்து பாயும் நீர்வீழ்ச்சி ஏறத்தாழ 80 அடி உயரத்துக்கு அஜந்தா குகைகளுக்கு இடையே வீழ்கின்றது. அந்நீர்வீழ்ச்சி ‘சத்குந்த எனப்படுகிறது.

அரச போசிப்பு / வரலாற்றுப் பின்னணி

அஜந்தா குகை ஓவிய ஆக்கம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் கி.மு. 02 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 – 3 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கி.மு. 2 ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 02 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குகைகள் தேரவாத அதாவது ஹீனயான பௌத்தர்களால் செய்விக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அதன் பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையில் மகாயான பௌத்தர்களால் செய்விக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாதவாகனர், வாகாடர்,

சாலுக்கியர் ஆகிய அரச பரம்பரையினர் இக்குகை ஓவியக் கலைக்கு அனுசரணை வழங்கியுள்ளனர். வாகாடர் அரச பரம்பரையைச் சேர்ந்த ஹரிசேன மன்னன் (கி.பி. 475 – 500) அஜந்தா குகை ஓவிய ஆக்கத்திற்காக பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்னார்.

அஜந்தா குகைகள்

இந்தியக் கலையின் பொற்காலம் எனக் கருதப்படும் குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்ட அஜந்தா குகைகள் மூலம் கட்டடக் கலையின் சிறப்பான பண்புகள் வெளிக்காட்டப்படுகின்றன என்பது விமர்சகர்களின் கருத்தாகும். பெரிய மலைப்பாறையை உட்குடைந்து அதனுள்ளே தனிச்சிறப்பான சிற்பங்கள், தாதுகோபங்கள், கற்றூண்கள் போன்றவை ஆக்கப்பட்டிருப்பதன் மூலம் கலைத்துவ முதிர்ச்சியின் பண்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

அஜந்தா குகைகள் யாவும் பௌத்த சமயத்துடன் தொடர்புடையவை. இக்குகைகள் இலக்கமிடப்பட் டுள்ளன. இங்கு மொத்தம் 30 குகைகள் உள்ளன. 27 தொடக்கம் 30 வரையிலான குகைகள் பூர்த்தி செய்யப்பட்டவையாகும். ஏறத்தாழ 600 யார் நீளமும் 250 அடி உயரமும் கொண்ட அஜந்தா குகைகள், “சைத்திய மண்டபங்கள்”, “விகாரை மண்டபங்கள்” எனவும் இரு பிரிவாகக் கட்டப்பட்டுள்ளன. சைத்திய மண்டபங்கலினுள் சிறிய தூபி காணப்படும். விகாரை மண்டபங்கலினுள் பிக்குகள் தங்குவதற்கான சிறிய அறைகள் காணப்படும்.

சைத்திய மண்டபங்கள்
விகாரை மண்டபங்கள்

முதலாம், இரண்டாம், பதினாறாம், பதினேழாம் (1, 2, 16, 17) இலக்கக் குகைகள் அழகிய ஓவியங்களைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஒன்பதாம், பத்தாம், பதினாறாம், பத்தொன்பதாம் (9, 10, 16, 19) இலக்கக் குகைகள் சைத்தியங்கள்ங்கள் என இனங்காணப்பட்டுள்ளதோடு, மற்றைய இருபத்து நான்கு குகைகளும் விகாரைகளாகும். மண்டபங்களின் சிறப்பம்சம், மண்டலத்தின் அந்தத்தில் சிறிய தாதுகோபமொன்று காணப்படுவதாகும். 28 ஆம் இலக்கக் குகையும் பூர்த்தி செய்யப்படாத ஒன்றாகும். மேலும் இவை ஹீனயான, மகாயான எனவும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. ஒன்பதாம், பத்தாம் (9, 10) இலக்கக் குகைகள் ஹுனயான எனவும் பதினாறாம், பத்தொன்பதாம் (16, 19) இலக்கக் குகைகள் மகாயான எனவும் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

அஜந்தா குகைகளுள் 10 ஆம் இலக்கக் குகையே மிகப் பழைமையானது எனக் கருதப்படுகின்றது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இது ஒரு ஹீனபான குகையாகும். மண்டபத்தின் நீளம் 95 1/2 அடி ஆகும். அகலம் 41 அடி ஆகும். உயரம் 36 அடி ஆகும். பிரதட்சணைப் பாதை என இனங்காணப்பட்டுள்ள பகுதி 6 அடி அகலமுடையது. உள்ளே தூண் வரிசையில் 39 தூண்கள் உள்ளன. இத் தாதுகோப மண்டலத்தின் அந்தத்தில் உள்ள தாதுகோபம் கல்லினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பகுதியின் விட்டம் 15 அடி ஆகும். இவ்வாறாக ஒன்றுக்கொன்று வேறுபட்ட திட்ட அமைப்பைக் கொண்ட குகைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மகாயான குகைகளுள் மிகப் பழைமை வாய்ந்த குகையாக 19 ஆம் இலக்கக் குகை இனங்காணப் பட்டுள்ளது. இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்குகையின் நீளம் 46 அடி ஆகும். அகலம் 24 அடி ஆகும். உயரம் 24 அடி 4 அங்குலம் ஆகும். துவார மண்டபம் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளதோடு, அதனுள் பிரவேசித்த பின்னர் எதிர்ப்படும் மண்டபத்தின் நீளம் 34 அடி ஆகும். மாளிகை வாயில் எனப் பெயரிடப்பட்டுள்ள பிரவேச இடத்தில் பலவிதமான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. புத்தர் உருவங்கள், பல்வேறு காட்டுருக்கள், காதலர்களைக் குறிக்கும் உருவங்கள் போன்றவை அளவுப் பிரமாணப்படி செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் ஒரு பகுதியில் நாக, நாகினி சிற்பமும் தூண் உச்சியில் சிங்கத் தலையும் புதுமைப்பாடான பல்வேறு காட்டுருக்களும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்கள்

அஜந்தா குகைகளில் உள்ள முக்கியமான கலைப்படைப்பு விலைமதிக்கமுடியாதவையான ஓவியங் களாகும். அவ்வோவியங்களுக்கிடையே ஜாதகக் கதைகள், புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியன அடங்கியுள்ளன. பல நூற்றாண்டு காலமாக, பல்வேறு வானிலை மற்றும் காலநிலை நிலைமைகளைச் சகித்தவாறு பல குகைகளில் மீதியாக உள்ள ஓவியங்கள் அக்கலைக் கலைஞனின் திறமையைப் பறைசாற்றி நிற்கின்றன. ஒரு சில குகைகள் தவிர ஏனைய சகல குகைகள் முழுவதிலும் ஓவியங்கள் காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவற்றுள் 13 குகைகளில் இன்னும் கூட ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் 1, 2, 9, 10, 16, 19 ஆம் இலக்கக் குகைகளில் உள்ள ஓவியங்கள் பெரிதும் பாதுகாப்பாக உள்ளன. இவற்றுள் மிகப் பழைமை வாய்ந்த ஓவியங்களாக 9 ஆம் 10 ஆம் இலக்கக் குகைகள் இனங் காணப்பட்டுள்ளன. மேலும் பல படைகளில் ஓவியங்கள் காணப்படுகின்றமையானது காலத்துக்குக் காலம் மாற்றங்களுக்கு உள்ளாகியவாறு இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையைக் காட்டுகின்றது. அதற்கமைய 9 ஆம் 10 ஆம் குகைகளில் உள்ள ஓவியங்கள் கி.மு. 200 தொடக்கம் கி.பி. 200 வரையிலான காலப்பகுதியில் வரையப்பட்டனவாகும் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்தாகும். 16 ஆம் 17 ஆம் இலக்கக் குகைகளிலும் சிறப்பாக அஜந்தா ஓவியங்கள் காணப்படுகின்றன.

குகை இலக்கங்களும் அவற்றில் காணப்படும் ஓவியங்களும்

முதலாம் (1) இலக்க அஜந்தா குகை ஓவியங்கள்

(1) சம்பெய்ய ஜாதகம்
(2) மகாஜனக்க ஜாதகம்
(3) மாறனைத் தோற்கடித்தல் (இயமனைத் தோற்கடித்தல்)
(4) பத்மபாணி போதிசத்துவர்
(5) அவலோகதேஸ்வர போதிசத்துவர்
(6) சவத்புர அற்புதம்
(7) காளைச்சண்டை
(8) தாமரைத் தடாகத்தில் இருக்கும் யானை
(9) அரச குமாரி
(10) அன்ன உருவங்கள்
(11) பாரசீக மன்னரொருவரைச் சந்தித்தல்
(12) நீராடல் காட்சி

இரண்டாம் (2) இலக்க அஜந்தா குகை ஓவியங்கள்

(1) அரச நீராடல்
(2) விதுர பண்டித்த ஜாதகம் (ஊஞ்சலாடும் அரசகுமாரி)
(3) மகாமாயாதேவி
(4) கவலையுடன் இருக்கும் பெண்
(5) நடனக்காரிக்குத் தண்டனை வழங்க ஆயத்தமாகும் அரசன்

பத்தாம் (10) இலக்க அஜந்தா குகை ஓவியங்கள்

(1) சாம ஜாதகம்
(2) ஜத்தந்த ஜாதகம்
(3) அரசனின் அரசமர வழிபாடு

பதினாறாம் (16) இலக்க அஜந்தா குகை ஓவியங்கள்

(1) அசித்த தபசிக்கு சித்தார்த்த குமாரனைக் காட்டுதல்
(2) போதிசத்துவர் துசித்த தேவலோகத்திலிருந்து மகாமாயாதேவியின் கருவில் தரிப்பதற்கு மண்ணுலகுக்கு வருதல்
(3) ஹஸ்தி ஜாதகம்
(4) மரணிக்கும் குமாரி (இவள் ஜனபத கல்யாணி எனவும் கருதப்படுகின்றது.)

பதினேழாம் (17) இலக்க அஜந்தா குகை ஓவியங்கள்

(1) ஜத்தந்த ஜாதகம்
(2) மகாகபி ஜாதகம்
(3) ஹங்ச ஜாதகம்
(4) வெஸ்ஸந்த ஜாதகம்
(5) தன்னை அலங்கரித்துக் கொள்ளும் குமாரி
(6) புத்தர் பெருமான கிம்புள்வத்புரக்கு வருகை தரல்
(7) அப்சார உருவம்
(8) சீகலாவதானம்
(9) மயிற் குடும்பம்
(10) மகிச ஜாதகம்
(11) குரங்குக் கூட்டமும் மான் கூட்டமும்
(12) மத்ஸ்ஸ (மீன்) ஜாதகம்
(13) மாத்து போசக ஜாதகம்
(14) சங்கஸ்ஸ புரத்தில் தரும போதனை செய்தல்
(15) இந்திரனும் பரிவாரத்தினரும்

அஜந்தா குகை ஓவியங்களுள் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஓர் ஓவியமாக முதலாம் இலக்கக் குகையில் உள்ள பத்மபாணி போதிசத்துவர் ஓவியத்தைக் குறிப்பிடலாம். அவ்வோவியத்தின் முகத்தில் கருணை இயல்பு நன்கு காட்டப்பட்டுள்ளது. கையில் நீலோற்பல மலர் ஒன்று உள்ளது. ஏனைய உருவங்களை விடப் பெரிய அளவுடையதாக இந்த உருவம் வரையப்பட்டுள்ளதோடு, அதிக கோடுகள் மூலம் தலையில் கிரீடம் காட்டப்பட்டுள்ளது. முகத்தின் கவலையுணர்வையும் சாந்தத் தன்மையையும் கலைஞர் நன்கு வெளிக்காட்டியுள்ளார். பின்னணியில் பல்வேறு உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பெண் உருவங்கள், ஆண் உருவங்கள், பறவை உருவங்கள், குரங்கு உருவங்கள், கின்னரர் உருவங்கள் போன்றவை அடங்கியுள்ளன.

பத்மபாணி போதிசத்துவர் ஓவியம்

பத்மபாணி உருவத்தின் உடலின் கீழ்ப்பகுதி கோடிட்ட உடையினால் மறைக்கப்பட்டுள்ளது. காதணிகளும் கழுத்தணிகளும் உருவத்துக்கு அழகூட்டுவதாக அமைந்துள்ளன. இவ்வுருவின் வலது புறத்தே உள்ள மனித உருவம் மலர் சாத்தும் உடல்நிலையில் காட்டப்பட்டுள்ளதோடு அதன் கீழாக மேலும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. அவர்கள் குமாரிகள் என்பது விமர்சனர்களின் கருத்தாகும். சித்தார்த்த குமாரனும் யசோதா தேவியுமே இங்கு காட்டப்பட்டிருப்ப தாகவும் ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள எல்லா உயிர்கள் மீது போதிசத்துவர் கருணை காட்டுவதையே இது குறிக்கின்றது எனும் ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மனித உருவங்களை வரையும் நுட்பத்திறன்களை வெளிக்காட்டும் வகையிலான இந்த ஓவியம் “திரிபங்க” (மூ வளைவு) உடல்நிலையில் வரையப்பட்டுள்ளது. இருண்ட பச்சை நிறம், சிவப்பு நிறம், நீல நிறம் ஆகியன இந்த ஓவியத்தின் அழகை முனைப்புறுத்திக் காட்டுகின்றன. இந்த ஓவியம் உலர் சுதை (சாந்து) மீது வரையப்பட்டுள்ளது.

புத்தர் பெருமான் கிம்புள்வத்புரவுக்கு வருகை தருதல்

புத்தர் பெருமான் கிம்புள்வத்புரவுக்கு வருகை தருதல்” எனும் இந்த ஓவிய அளவுப் பிரமாணம் குறித்துக் கவனஞ் செலுத்தி வரையப்பட்ட ஓர் ஓவியமாகக் கருதப்படுகின்றது. புத்தரின் உருவம் ஏறத்தாழ 12 அடி உயரமாக வரையப்பட்டுள்ளது. மேலேயிருந்து தெய்வமொன்று குடை பிடித்துக் கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. அரசமாளிகை தூரத்தே உள்ளதுபோன்று தூரதரிசன இயல்புகளுடன் காட்டப்பட்டுள்ளது. உப்பரிகையில் இருக்கும் யசோதராதேவி ராகுல குமாரனுக்குத் தந்தையைக் காட்டும் சந்தர்ப்பமே இதன் மூலம் காட்டப்படுகின்றது என்பது விமர்சகர்களின் கருத்தாகும். புத்தர் பெருமானின் மேன்மை, பெருங்கருணை, ஆன்மீகப் பண்பு போன்றவற்றைக் காட்டுவதற்காக இந்த உருவம் பெரியதாக வரையப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது. மேலும் புத்தரின் தலையைச் சூழ பச்சை நிறமான ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. உணர்வு வெளிப்பாட்டைப் பொறுத்தமட்டில் இந்த ஓவியம் முக்கியமாக ஓர் இடத்தைப் பெறுகின்றது.

யசோதராதேவியின் மனவெழுச்சியையும் ராகுல குமாரனின் ஆச்சரிய உணர்வையும் காட்டுவதில் ஓவியன் வெற்றி பெற்றுள்ளான் என்பது விமர்சகர்களின் கருத்தாகும். இந்த ஓவியத்தை வரைவதற்காக பச்சை, கபிலம், மஞ்சள், வெள்ளை ஆகிய வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தேவ கன்னிகை உருவங்கள்

17 ஆம் இலக்கக் குகையில் காணப்படும் மற்றுமொரு ஓவியம் தேவ கன்னிகை உருவங்கள் ஆகும். தேவ கனின்னிகையினது தலையணி அழகானது. அது மலர்களாலும் முத்துக் கோர்வைகளாலும் அழகு படுத்தப்பட்டுள்ளது. கண்கள் பாதி திறந்த நிலையில் உள்ளன. நாடி, கீழ்உதடு, மூக்கு ஆகிய பகுதிகள் மீது அதிக ஒளி விழுவது காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் அணியப்பட்டுள்ள இரத்தினக் கற்கள் அல்லது முத்துக்கள் கொண்ட கழுத்தணி தேவ கன்னிகை உருவத்துக்கு மேலும் அழகூட்டுவதாக அமைந்துள்ளது. இடது கையில் கைத்தாளம் போன்ற ஒரு பொருளும் உள்ளது.

அஜந்தா குகைகளிலுள்ள ஏனைய சிறப்பான ஓவியங்கள்
அலங்கரித்துக் கொள்ளும் குமாரி
தூணில் சாய்திருக்கும்குமாரி
தேவ கன்னிகை உருவங்கள்
மரணிக்கும் குமாரி
error: Content is protected !!